வாங்க இங்கிலீஷ் பேசலாம் 103

புரொபஸர், கணேஷ், கிளி Captain Flint ஆகியோர் புரொபஸரின் வீட்டில் புரொபஸரின் மனைவி மீனாட்சியுடன்
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 103

புரொபஸர், கணேஷ், கிளி Captain Flint ஆகியோர் புரொபஸரின் வீட்டில் புரொபஸரின் மனைவி மீனாட்சியுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
Hijack எனும் சொல் எப்படி ஆங்கிலத்தில் தோன்றியது என மீனாட்சி விளக்குகிறார். வழிப்பறி செய்பவர்கள் hi Jack  என சொல்வதில் இருந்து hijack  தோன்றி
இருக்கலாம் என அவர் சொல்கிறார். அப்போது கணேஷ் Jack என்றால் என்ன எனக் கேட்கிறான். 

மீனாட்சி: Jack என்றால் ஓர் ஆள். அதாவது ரொம்ப சாதாரணமான ஆள். 
புரொபஸர்:  ஆனால் அது மட்டுமல்ல.  பதினெட்டாவது நூற்றாண்டில் இங்கிலாந்தில் அடித்தட்டு பணியாளர்களை jack என அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது. 
Jackhammer  என்றால்  பெரிய சுத்தியல். தொழிலாளிகள் பயன்படுத்துவது. Jackknife கேள்விப்பட்டிருக்கிறாயா?
கணேஷ்: மடக்கு கத்தி தானே?
புரொபஸர்:  ஆமா. பத்தொன்பதாவது நூற்றாண்டில் தான் இச்சொல்லும் உருவானது. கப்பலில் வேலை செய்யும் எளிய மனிதர்கள் இத்தகைய கத்தியைப்  பயன்
படுத்தியதால் அவர்களுடன் சம்பந்தப்படுத்தி knife Jackknife ஆனது. Cheapjack தெரியுமா?
கணேஷ்:  ம்ஹும்...
புரொபஸர்:  கொஞ்சம் பழைய வார்த்தை, லோக்கல் என்று அர்த்தம். அதாவது  நடைபாதையில் மலிவு விலையில் விற்கப்படும் பொருட்களை Cheapjack
என்பார்கள். ஏனெனில்…
கணேஷ்: Jack எனும் எளிய மக்கள் அதை வாங்குவதால்.
புரொபஸர்:  கரெக்ட். மரம் வெட்டுபவர்களை lumberjack என அமெரிக்க ஆங்கிலத்தில் அழைத்தார்கள். Lumber என்றால் மரம். Jack மீண்டும் தொழிலாளி. அதே
போல் புகைபோக்கி, கோபுரம் போன்ற உயரமான இடங்களில் ஏறி பழுதுசெய்பவர்களுக்கு steeplejack என பெயர். 
கணேஷ்: ஏன் steeple?
புரொபஸர்: steeple என்றால் கோபுரம்.
மீனாட்சி:  இன்னொரு jack உனக்கு நினைவு வரவில்லை.  பொழுதுபோகாத போது நீ கையில் எடுக்கும் ஜேக்.
கணேஷ்:  இல்லையே.
மீனாட்சி மேஜை டிராயரைத் திறந்து சீட்டுக்கட்டு ஒன்றை எடுத்து கலைத்து அடுக்குகிறார்.
கணேஷ்: ஆமாம் இந்த jack. இதுவும் சாதாரண ஆள் - கூலியாள் - என்ற பொருளில் தான் உருவானதா?
மீனாட்சி: ஆமாம்.
கணேஷ்: ஆனால் சீட்டில் பார்க்க அப்படி இல்லையே. ஏதோ பணக்கார ஆள் மாதிரி ஆடையணிந்திருக்கிறான்.
மீனாட்சி: ஆனால் ஜேக் தானே உள்ளதிலேயே மதிப்பு குறைவான  சீட்டு.
கணேஷ்: ஆமா... இல்ல. 
Captain Flint: ஆமாவா இல்லியா? ஏதாவது ஒண்ணு சொல்லு.
கணேஷ்: நேத்து டிவியில வடிவேலு பார்த்திபன் ஜோக் பார்த்தியா?
Captain Flint: ஹி... ஹி...
கணேஷ்:  ஷட் அப்.  நீங்க சொல்லுங்க மேடம்.
மீனாட்சி: அரசவையிலே ரொம்ப குறைவான மதிப்பு கொண்ட  ஆள் எனும் பொருளில் தான் இந்த சீட்டுக்கு jack என பெயர் வருகிறது. ஆனாலும் அரசவை
வேலையாள் என்பதால் அந்த தோற்றம். இதுக்கு இன்னொரு பெயர் உண்டு தெரியுமா?
கணேஷ்: Knave?
மீனாட்சி: யெஸ். Knave என்றாலும் வேலைக்காரன், பொறுக்கி என்பதான பொருள்கள்தாம்   ஆரம்பத்தில் இருந்தன.
கணேஷ்: அதெப்படி வேலைக்காரன் பொறுக்கியாக முடியும்?
புரொபஸர்:  ஆக்சுவலி, Knave எனும் சொல்லுக்கு scoundrel என்ற அர்த்தம் தான் முதலில் இருந்தது. தமக்கு கீழ் வேலை பார்க்கும் படிப்பறிவற்ற, எளிய
மக்களை பொறுக்கி என வெள்ளை முதலாளிகள் நினைத்ததால் அந்த மாதிரி பொருள் வந்து விட்டது. 
மீனாட்சி: பின்னர் சீட்டுக்கட்டிலும் கீழ்நிலை சீட்டுக்கு Knave என பெயர் வைத்தார்கள். ஆனால் சீட்டின் விளிம்பில் ஒற்றை எழுத்தால் அதன் தகுதியை
குறிக்கும் பழக்கம் ஏற்பட்டது போது ஒரு சிக்கல் விளைந்தது.
கணேஷ்:  என்ன?
மீனாட்சி: King சீட்டுக்கு K என எழுதினார்கள். அப்போது Knaveக்கு என்ன போடுவது? Kn எனப் போட்டுப் பார்த்தார்கள். அது ரொம்ப குழப்பத்தை ரெண்டு
சீட்டுகளுக்கும் நடுவில் ஏற்படுத்தியது. அப்போது தான் 1864இல் Hart எனும் ஒரு சீட்டுக்கட்டு பதிப்பாளர் ஒரு ஐடியா பண்ணினார். எளிய மக்கள் இடையே
Knave சீட்டை jack என கொச்சையாய் அழைக்கும் வழக்கம் பிரசித்தமாய் இருந்தது. Hart இந்த கொச்சை சொல்லை Knaveக்கு பதிலாய் பயன்படுத்தினார். இப்போது ஒற்றை எழுத்தால் அடையாளப்படுத்துவது எளிதாயிற்று. J என்றால் knave அல்லது jack ஆயிற்று.
கணேஷ்: ஆக, அமெரிக்காவில் கள்ளச்சாராய கடத்தலின் போது அதை வழிப்பறிப்பவர்கள் கடத்தல்காரனை நோக்கி துப்பாக்கியை காட்டி , "டேய் பொறுக்கி,
ஓடுடா” என பொருள்பட "Hi jack'' என்றார்கள். சரி தானே?
புரொபஸர்: ஆனால் இந்தக் கதையை நிறைய ஆய்வாளர்கள் ஒத்துக்கிறதில்ல. இச்சொல்லுக்கு பின்னால் வேறு ஒரு கதை இருக்கு. சொல்றேன் கேள்…
(இனியும் பேசுவோம்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com