உலகப் புகழ் பெற்ற எண் கோட்பாட்டு மேதை!

கணிதத்தின் மிகப் பழமையான பிரிவு, எண் கோட்பாடு ஆகும்.  19-ஆம் நூற்றாண்டிலிருந்து
உலகப் புகழ் பெற்ற எண் கோட்பாட்டு மேதை!

கணிதத்தின் மிகப் பழமையான பிரிவு, எண் கோட்பாடு ஆகும்.  19-ஆம் நூற்றாண்டிலிருந்து தூய கணிதத்தின் தனிப்பிரிவாகக் கருதப்பட்டு சிறப்புத் துறையாகவே வளர்ந்துள்ள எண் கோட்பாடு (Number Theory) அடிப்படையான கணித ஆய்வுகளை உள்ளடக்கியது.  

இத்துறையில் உலக அளவில் புகழ் பெற்றவர், இந்தியாவின் கணித மேதை குமாரவேலு  சந்திரசேகரன். எண் பகுப்பாய்விலும், எண் கோட்பாட்டில் கூட்டுமை (Summability) குறித்த ஆய்வுகளிலும் நிபுணராக அவர் கருதப்படுகிறார். 

முந்தைய சென்னை மாகாணத்தின் (தற்போதைய ஆந்திரப் பிரதேசம்) குண்டூர் மாவட்டம், பபட்லா கிராமத்தில்  1920, நவ. 21-இல் பிறந்தார் குமாரவேலு  சந்திரசேகரன். அவரது தந்தை பள்ளி ஆசிரியர். 

பபட்லா உயர்நிலைப் பள்ளியில் பயின்ற சந்திரசேகரன்,  சென்னை மாநிலக் கல்லூரியில் கணிதத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.  பிறகு,  சென்னை பல்கலைக்கழகத்தில் கணிதத்தின் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார். (1940- 43). அதேசமயம், சென்னை மாநிலக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளராகவும் சந்திரசேகரன் பணியாற்றினார். 

சென்னை பல்கலைக்கழகத்தில் அவருக்கு ஆய்வு வழிகாட்டியாக இருந்தவர், கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜத்துடன் லண்டனில் பணிபுரிந்த கே.ஆனந்த ராவ். 1943 -இல் பிஎச்.டி. பட்டம் பெற்ற அவர்,  அமெரிக்காவின் பிரின்ஸ்டன் மேம்பட்ட ஆய்வுகளுக்கான கழகத்தில் சேர்ந்தார்.

1945-இல் விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா, மும்பையில் டாடா அடிப்படை ஆய்வு நிறுவனத்தை (TIFR)துவக்கினார். அதன் கணிதத் துறையில் பணியாற்ற வருமாறு சந்திரசேகரனுக்கு பாபா அழைப்பு விடுத்தார். அதையேற்று,  நாடு திரும்பிய அவர், டாடா கணிதப் பள்ளியின் பொறுப்பேற்றார்.

தனது பணிக்காலத்தில் டாடா கணிதப் பள்ளியை உலக அளவில் பிரபலமானதாக அவர் மாற்றினார். அங்கு கணித ஆய்வுக்கான சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்திய அவர்,  சிறந்த ஆராய்ச்சியாளர்களைத் தேர்வு செய்து  பயிற்சி அளிக்கும்  முறையை உருவாக்கினார். தவிர, தனது தனிப்பட்ட நட்புறவைப் பயன்படுத்தி, உலகப் புகழ் பெற்ற எல்.ஸ்குவார்ட்ஸ், சி.எல்.சீகல் உள்ளிட்ட கணித மேதைகளை டாடா கணிதப் பள்ளியின் இரு மாத வகுப்புகளுக்கு வரவழைத்து விரிவுரையாற்றச் செய்தார். அவை கட்டுரைகளாகத் தொகுக்கப்பட்டன.

1950-களில் இந்திய கணிதக் கழகத்தால் நடத்தப்பட்ட சஞ்சிகையின் ஆசிரியர் பொறுப்பேற்ற சந்திரசேகரன், அதனை சிறந்த கணித ஆய்விதழாக வெளிக் கொணர்ந்தார்.  அதில் உலகப் புகழ் பெற்ற கணித மேதைகள் கட்டுரைகளை எழுதினர்.

பிற கணித வல்லுநர்களுடன் இணைந்து எழுதிய  ஃபோரியர் டிரான்ஸ்பார்ம்ஸ் (1949), டிபிகல் மீன்ஸ் (1952),  எண் கோட்பாடு பகுப்பாய்வு - ஓர் அறிமுகம் (1968) போன்ற நூல்கள் முக்கியமானவை.  "நோட்புக்ஸ் ஆஃப் ஸ்ரீநிவாச ராமானுன்' நூல், அவரது முயற்சியால் டாடா அடிப்படை ஆய்வுக் கழகத்தால் 1957-இல் வெளியிடப்பட்டது.

1965-இல் டாடா அடிப்படை ஆய்வுக் கழகத்திலிருந்து விலகிய அவர்,  ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரிலுள்ள இ.டி.ஹெச். பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக இணைந்தார். 1988-இல் அங்கு பணி ஓய்வு பெற்றபோதும், 2017, ஏப். 13-இல் காலமாகும் வரை  மதிப்புறு பேராசிரியராக அங்கேயே தொடர்ந்து பணிபுரிந்தார்.

சர்வதேச கணித மன்றத்தின் (IMU) செயற்குழு உறுப்பினராகவும் (1955- 61), செயலாளராகவும் (1961- 66), தலைவராகவும் (1971- 74) சந்திரசேகரன் பொறுப்பு வகித்துள்ளார்.  சர்வதேச கணித மன்றத்தால் 1956 முதல் நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் கணித ஆய்வரங்கத்துக்குக் காரணமாக இருந்தவர் சந்திரசேகரன் தான்.

சர்வதேச அறிவியல் சங்கங்களின் கூட்டமைப்புக்கு துணைத் தலைவராகவும் (1963- 66), பொதுச்செயலாளராகவும் (1966- 70) அவர் பணியாற்றியுள்ளார். மேலும், இந்திய அரசின் அறிவியல் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் 1961 முதல் 1966 வரை அவர் செயல்பட்டார்.

கணித நிபுணராக மட்டுமல்லாது,  கணித வளர்ச்சிக்கான அமைப்புகளைத் திறம்பட நிர்வகித்து உலக அளவில் புகழ் பெற்ற குமாரவேலு  சந்திரசேகரன், இந்திய அரசின் பத்மஸ்ரீ (1959), சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1963),  ராமானுஜன் பதக்கம் (1966),  அமெரிக்க கணித சங்கத்தின் உறுப்பினர் (2012) உள்ளிட்ட பல கெளரவங்களைப்  பெற்றுள்ளார். 
- வ.மு.முரளி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com