தேவை... திறனாளிகள்!

மேற்கத்திய நாடுகளின் ஒன்றான கனடா,  சர்வதேச அளவில் உள்ள உயர் திறன் கொண்ட  பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளதென
தேவை... திறனாளிகள்!

மேற்கத்திய நாடுகளின் ஒன்றான கனடா,  சர்வதேச அளவில் உள்ள உயர் திறன் கொண்ட  பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளதென அறிவித்துள்ளது.   திறன்மிக்க பணியாளர்கள் என்றால், அவர்களுக்கு உடனடியாக பணி விசா வழங்கவும், குடியுரிமை வழங்கவும் அந்நாடு தயாராக உள்ளது.  

இதற்கு முன்பு,  கனடா நாட்டினருக்கும் அல்லது அங்கு குடியுரிமை பெற்றவர்களுக்கும் மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நடைமுறை  இருந்தது. 

தற்போது அங்கு சில துறைகளில்  திறமைவாய்ந்த பணியாளர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.   ஆனால், அந்த துறைகளில் சர்வதேச வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.  

உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியையும்  அந்நாடு கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே  கனடா தனது பணி விசா வழங்கும் முறைகளை சற்று தளர்த்தியுள்ளது. இதனால்,  கடந்த சில ஆண்டுகளில் கனடாவுக்கு வேலைக்கு செல்லும் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை  மிகவும் அதிகரித்துள்ளது. 

கனடாவின், தொழிலாளர் சந்தை தாக்க மதிப்பீட்டின் (Labour Market Impact Assessment) அனுமதி மற்றும் கடுமையான விசா நடைமுறைகளைக் கொண்ட தற்காலிக வெளிநாட்டு பணியாளர்கள் திட்டத்தின் கீழ் 2,190 இந்தியர்கள் பணி விசா பெற்றுள்ளதாக கனடா அரசின் குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமைத்துறை அண்மையில் தெரிவித்துள்ளது. 

அதோடு, இண்டர்நேசனல் மொபிலிட்டி திட்டத்தின் கீழ், கடந்த 2016-இல் மட்டும் 30,850 இந்தியர்கள் கனடாவில் பணி விசா பெற்றுள்ளனர். இது அதற்கு முந்தைய 2015 ஆம் ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, நிகழாண்டு (2017) ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் முடிய கடந்த 6 மாதங்களில் மட்டும் 13,670 இந்தியர்கள் பணி விசா பெற்றுள்ளனர். 

இந்த நிலையில் உயர் திறன் கொண்ட பணியாளர்களை மேலும் ஈர்க்கும் வகையில்,  "உலக திறன்கள் விசா திட்டத்தை' (Global Skills Visa Program) கடந்த ஜூன் 12 ஆம் தேதி கனடா அரசு தொடங்கியுள்ளது. 24 மாதங்கள் கொண்ட இந்த சோதனை திட்டத்தின் மூலம் கனடாவில் உள்ள பெரிய நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான உயர் திறன் கொண்ட பணியாளர்களை Labour Market Impact Assessment அனுமதி, கடுமையான விசா நடைமுறைகள் இல்லாமல் 2 வாரங்களில் தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்திக் கொள்ள முடியும். 

Global Talent Stream என்ற இந்தத் திட்டத்தின் மூலம் தேர்வாகும் பணியாளர்கள் ஓராண்டுக்கு 30 நாட்கள் அல்லது 6 மாதங்களுக்கு 15 நாட்களுக்கு எளிதாக பணி விசா பெறமுடியும். அந்த நிறுவனங்களுக்குப் பிடித்திருந்தால், கனடா அரசின் அனுமதியுடன் குடியுரிமை பெற்று அங்கேயே பணியில் நீடிக்க முடியும்.  GTS திட்டத்தில் பணியில் அமர்த்தப்படும் வெளிநாட்டு உயர் திறன்மிக்க இளைஞர்களைக் கொண்டு, கனடா பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து திறன் பற்றாக்குறையைச் சரி செய்து கொள்வது கனடா அரசின் நோக்கமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவ்வாறு திறன் பற்றாக்குறை நீடிக்கும் தொழில்களில் வெளிநாட்டினரைப்  பணியில் அமர்த்தி குடியுரிமை அளித்து தக்கவைத்துக் கொள்வதும் அதன் திட்டமாக இருக்கலாம்.

1.Computer and information systems managers.  2. Computer Engineers.  3. Information systems analysts and consultants.  4. Database analysts and data administrators.  5. Software engineers and disigners. 6. Computer programmers and interactive media developers.  7. Web designers and developers. 8. Electrical and electronics engineering technologists and technicians.  9. Information systems testing technicians.  10. Digital Media and Design ஆகிய தொழில்களில் தங்கள் நாட்டில் திறன் பற்றாக்குறை உள்ளதாக கனடா  கண்டறிந்துள்ளது. இந்தத் தொழில்களில் 5 ஆண்டுகள் அனுபவம் மிக்க சர்வதேச இளைஞர்களைப் பணியில் அமர்த்தும் நடவடிக்கையை கனடா தொடங்கியுள்ளது.

மேலும், 2 வகையான வேலை அனுமதிக்கான விதிவிலக்குகளும் கடந்த ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, கனடாவின் தேசிய தொழில் வகைப்பாட்டில் 0 (ஜீரோ) அல்லது அ என வகைப்படுத்தப்பட்ட பணிகளில் ( 0-Restaurant managers, mine managers, shore captains (fishing), A-Doctors, Dentists, Architechts) வேலை அனுமதி பெறாமல் ஆண்டுக்கு 30 நாட்கள் பணியாற்ற முடியும்.

அதேபோல, ஆய்வு நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆண்டுக்கு 120 நாள்கள் வேலை அனுமதி பெறாமல் ஆய்வு மேற்கொள்ளலாம். 

எனவே, இந்தியாவைச் சேர்ந்த உயர் திறன் கொண்ட கணினி, மருத்துவம், ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பைப்  பயன்படுத்திக் கொள்ளலாம். 
- இரா.மகாதேவன்                                 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com