அளவுக்கு மிஞ்சினால்... சமூக ஊடகமும் நஞ்சு!

சமூக ஊடகங்களைப்  பயன்படுத்துவது இப்போது அதிகரித்திருக்கிறது. அதிலும்  டீன் ஏஜ் பருவத்தினர் பலர் அதிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர்.
அளவுக்கு மிஞ்சினால்... சமூக ஊடகமும் நஞ்சு!

சமூக ஊடகங்களைப்  பயன்படுத்துவது இப்போது அதிகரித்திருக்கிறது. அதிலும்  டீன் ஏஜ் பருவத்தினர் பலர் அதிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர்.   அவர்கள் ஒருவித மன அழுத்தத்துக்கு ஆளாவதாக ஆராய்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.  சமூக ஊடகங்களில் பங்கேற்பது எந்த அளவுக்கு நன்மையைத் தரும்?  எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்?

மன அழுத்தம் அதிகரிக்கிறது 
13 வயதான சிறுவர்கள், சிறுமிகளின்  சமூக ஊடக பழக்கவழக்கம் குறித்தும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின்மூலம்,  முகநூல் அல்லது பிற சமூக ஊடகங்களை நாளொன்றுக்கு 50 மற்றும் 100 முறைக்கு மேல் பார்வையிடுவோர், அந்த ஊடகங்களை சில முறை மட்டும் பார்ப்போரை விட 37 சதவீதத்துக்கும் அதிகமாக மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுவது தெரிய வந்திருக்கிறது. நாளொன்றுக்கு 100 முறைக்கும் மேல் சமூக ஊடகங்களைப் பார்வையிடுவோர், 47 சதவீதத்துக்கும் மேல் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, சமூக ஊடகத்தில் அதிக நேரத்தை செலவிடுவது என்பது நல்லதல்ல.

அதிகம் பயன்படுத்தினால்... அடிமை!
சமூக ஊடகத்தில் ஏதேனும் ஒரு பதிவையோ, காட்சியையோ வெளியிட்டு, அதற்கு பிறர் விருப்பம் (லைக்) தெரிவித்து பாராட்டினால், பின்னர் அதே பாராட்டுக்காகவும், லைக்குகளுக்காகவும்  தொடர்ந்து பதிவிடும் பழக்கம் - போதை - ஏற்பட்டுவிடுகிறது.   சமூக ஊடகத்துக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

செயல்படும் திறன் பாதிப்பு
சமூக ஊடகங்களைத் தொடர்ந்து பயன்படுத்தினால்,  துரிதமாக முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படும்.  முக்கிய விவகாரத்தில் உடனடியாக முடிவெடுக்காமல், அந்நேரத்தில் சமூக ஊடகத்தில் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருப்போம். பணிபுரியும் இடத்தில் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சமூக ஊடகத்தில் உரையாடிக் கொண்டும், பதிவுகளை வெளியிட்டுக் கொண்டும் இருப்போம். இதனால் பணிபுரியும் இடத்தில் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியிருப்பதுடன், அங்கு எந்த முன்னேற்றமும் நமக்கு கிடைக்காது.  இதனால்  வேலையில் எந்த  முன்னேற்றமும் இல்லாமல்  பல தோல்விகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். 

நிஜ வாழ்க்கையிலிருந்து  விலக வழிவகுக்கும்
சமூக ஊடகத்தில் நேரத்தைச் செலவிடுவோர், தங்களது நிஜ வாழ்க்கையில் இருந்து விலகிச் செல்ல வேண்டியிருக்கும். சமூக ஊடகத்தில் வெளியிடப்படும் பதிவுகளுக்கு பதில் அளித்துக் கொண்டும், முகம் தெரியாத நபர்களுடன் பேசிக் கொண்டும் நேரத்தை வீணடிப்பதால், தங்களைச் சுற்றி நடப்பதையே அவர்கள் மறந்துவிடுவர்.  தேர்வு சமயங்களில் கூட  படிப்பில் கவனம் செலுத்தாமல், சமூக ஊடகத்தில் நேரத்தைச் செலவிடுவதால் தேர்வில் தோல்வியடைபவர்களும்  உண்டு. அதாவது,  சமூக ஊடகத்தில் வெளியிடப்படும் கற்பனையான கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து, நிஜ வாழ்க்கையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பார்கள். 

எப்படித் தடுக்கலாம்?
சமூக ஊடகத்துக்கு தங்களது டீன் ஏஜ் குழந்தைகள் அடிமையாவதைத் தடுக்கவும், சமூக ஊடகத்தில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அவர்கள் செய்யவும் பெற்றோர் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்.

டீன் ஏஜ் குழந்தைகள், சமூக ஊடகத்தில் வெளியிடும் பதிவுகளைக் கண்காணிப்பதுடன், தேவை ஏற்பட்டால் அதை படித்து அவர்களின் உணர்வுகளைப்  புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அப்போது எதிர்மறையான எண்ணங்கள் குழந்தைகளிடையே தோன்றியிருப்பது தெரிந்தால், அவர்களுடன் பழகி அதைக்  களைய முயற்சிக்க வேண்டும். சமூக ஊடகம் குறித்து குழந்தைகளுடன் பேசி, அதை பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத்  தெரிந்து கொள்ள வேண்டும்.

முக்கியமாக குழந்தைகளுக்கு தெரிவிக்கும் அறிவுரையை  பெரியவர்கள்  கடைப்பிடித்து, முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

நன்மையே இல்லையா?
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் அன்றாட வாழ்க்கைக்கு -  சமூகப் பணிகளுக்கு உதவும் விதமாக  நடைமுறையுடன் அவற்றை இணைத்துப் பயன்படுத்த வேண்டும். அப்படிப் பயன்படுத்தும்போது,  உண்மையில் பல சிறப்பான இலக்குகளைத் தொட முடியும். 
- வீ.சண்முகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com