இந்திய மருந்து ஆராய்ச்சித் துறையின் முன்னோடி!

நாட்டின் சுகாதார மேம்பாட்டில் மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சித் துறை முக்கிய இடம் வகிக்கிறது
இந்திய மருந்து ஆராய்ச்சித் துறையின் முன்னோடி!

நாட்டின் சுகாதார மேம்பாட்டில் மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சித் துறை முக்கிய இடம் வகிக்கிறது. இன்று உலக அளவில் மருந்து உற்பத்தியிலும், மருந்து ஆராய்ச்சியிலும் இந்தியா முன்னேறி வருகிறது.  இதற்கு அடித்தளமிட்டவர், மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்த டாக்டர் நித்யா ஆனந்த்.

பிரிக்கப்பட்டாத இந்தியாவின் மேற்கு பஞ்சாப் மாகாணத்தில் (தற்போதைய பாகிஸ்தான்) லாயல்பூரில் 1925, ஜனவரி 1-இல் பிறந்தார் நித்யானந்த். அவரது தந்தை, பாய் பாலமுகுந்த் லாயல்பூரில் உள்ள வேளாண் கல்லூரியில் இயற்பியல், கணிதவியல் பேராசிரியராக இருந்தார். இவரது தாய், ஆதரவற்ற பெண்களுக்கு கைவினைப் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் முதல்வராக இருந்தார். பெற்றோர் இருவருமே சுதந்திரப் போராட்ட வீரர்கள்.

நித்யானந்தின் பள்ளிக் கல்வி, லாயல்பூரில் இருந்த தன்பத்மல் ஆங்கிலோ- சமஸ்கிருத உயர்நிலைப் பள்ளியில் கழிந்தது. அங்குள்ள அரசு இடைநிலைக் கல்லூரியில் இடைநிலைக் கல்வி (1941) முடித்த அவர், லாகூர் அரசு கல்லூரியில் படித்து, முதல் வகுப்பில் பி.எஸ்சி. தேர்ச்சி பெற்றார் (1943). 

1942-43-இல் மேற்கு மாகாணங்களில் பாகிஸ்தான் பிரிவினை கோஷம் உரக்க ஒலிக்கத் தொடங்கியது. அப்போது தில்லி வந்தது பாலமுகுந்த் குடும்பம். 

தில்லி பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. பட்டம் பெற்ற நித்யானந்த் (1945), மும்பை பல்கலைக்கழகத்தின் வேதியியல் பிரிவில் (யுடிசிடி), பேராசிரியர் கே.வெங்கட்ராமனின் வழிகாட்டலில் "பைரோன் குழுமத்தில் ஜென்டிசின் உள்ளிட்ட ஆய்வுகளின் தொகுப்பு' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆய்வு வழிகாட்டி வெங்கட்ராமனால் அவரது பெயர்  "நித்யா ஆனந்த்' என்று மாற்றப்பட்டது.  அன்றிலிருந்து, ஆய்வு வட்டத்தில் நித்யா ஆனந்த் ஆகவும், பிறருக்கு நித்யானந்த் ஆகவும் அவர் அழைக்கப்படுகிறார்.

பிறகு லண்டன் சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புனித ஜான் கல்லூரியில் இணைந்து மருந்தியலில் ஆய்வு செய்து மேலும் ஒரு பிஹெச்.டி. பட்டம் பெற்றார் (1950). அவரது ஆய்வுத் தலைப்பு, "ஐஸோகுவானைன் மற்றும் சில நியூக்ளியோடுகளின் தொகுப்பு' என்பதாகும்.  அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர் பேராசிரியர் லார்ட் அலக்ஸாண்டர் டோட்.

பிறகு நாடு திரும்பி நித்யா ஆனந்த, 1950-இல் தில்லி பல்கலைக்கழகத்தில் இணைந்தார். சில காலமே அங்கு பணிபுரிந்தார். இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிய வருமாறு அதன் நிறுவன இயக்குநர் டாக்டர் எட்வர்ட் மெல்லன்பி நித்யாவுக்கு அழைப்பு விடுத்தார். அதையேற்று, 1951-இல் அதில் சேர்ந்தார் நித்யா.

நாடு சுதந்திரம் பெற்ற உடனேயே, 1947, ஆக. 22-இல் மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் (Central Drug Research Institute - CDRI) நிறுவப்பட்டது. ஆயினும், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் (சிஎஸ்ஐஆர்) ஒரு பிரிவாக 1951, மார்ச் 27-இல்தான் லக்னோவில் தனது பணியை அது தொடங்கியது.  

அங்கு மருந்து வேதியியல் பிரிவில் இளநிலை அறிவியல் அலுவலராக இணைந்த நித்யா, 1954-இல் விஞ்ஞானியாக உயர்ந்தார். 1973 வரை பல நிலைகளில் விஞ்ஞானியாகப் பணிபுரிந்த அவர், 1974 முதல் 1984 வரை அதன் இயக்குநராக வழிகாட்டினார். 1985-இல் பணி ஓய்வு பெற்றபோதும், சிடிஆர்ஐ-அமைப்புக்கும், நாட்டின் முன்னணி மருந்து  தயாரிப்பு நிறுவனங்களுக்கும் கெüரவ ஆலோசகராக, லக்னோவில் இருந்தபடி உதவி வருகிறார்.

இதனிடையே, ராக்பெல்லர் அறக்கட்டளை கூட்டு ஆய்வுக்குழு உறுப்பினராக 1958-59-இல் அமெரிக்கா சென்ற நித்யா, பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் பாக்டீரியாலஜி துறையில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணிபுரிந்தபோது, ஸ்டிரெப்டோமைஸின் மருந்தின் விளைவுகள் குறித்தும், அதன் கட்டுப்பாடான பயன்பாடுகள் குறித்தும் கண்டறிந்தார். அவருடன் பணியாற்றிய பேரா. பெர்னார்ட் டி.டேவிஸ், மருந்தியல் வேதியியலாளர்களில் நித்யாவின் நிபுணத்துவம் மிகவும் அரிதானது என்று பாராட்டுகிறார். 

சிடிஆர்ஐ நிறுவனத்தில் நித்யா ஆற்றிய பணி அளப்பரியது. அந்த நிறுவனத்தின் தற்போதைய வளர்ச்சிக்கு வித்திட்டவர் அவரே. ஆரம்பத்தில் தொழுநோய்க்கு மருந்து கண்டறியும் ஆய்வில் ஈடுபட்ட நித்யா, சல்போன்கள் சல்போனமைட்களின் தொகுப்பால் அந்நோயைக் குணப்படுத்த முடியும் என்று நிரூபித்தார். 

மருந்து வடிவமைப்பு, மருந்து வேலை செய்வதில் உடலின் வளர்சிதை மாற்றத்தின் பங்கு, கிருமியியல், நோய்க் குறியியல், நோய்த் தடுப்பியல் உள்ளிட்ட பல்துறை அறிவு, மருந்து ஆராய்ச்சியில் தேவைப்படுகிறது. அவற்றில் நித்யா வல்லுநராகத் திகழ்ந்தார். அவரது ஆய்வுகளின் இறுதியில் பல வெற்றிகரமான மருந்துகள் உருவாக்கப்பட்டன. தொழுநோய், மலேரியா, எலும்புருக்கி நோய், புற்றுநோய், தைராய்டு பிரச்னைகள், நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உள்ளிட்டவற்றுக்கு அவர் மருந்து கண்டறிந்தார். அவர் உருவாக்கிய மயக்கவியல் மருந்தும் குடும்பக் கட்டுப்பாட்டு மருந்தும் மிகவும் பிரபலமானவை. 

அவற்றில் சில:
சென்டிமிஸோன் என்ற மருந்து - இதன் சர்வதேசப் பெயர் (INN): மிபினாஸோல்(Mipinazole)- 1972), தைராய்டு பிரச்னைக்கு மருந்தாகும். 

சென்ட்புக்ரிடைன் என்ற மருந்து (Bucricaine- 1987),  புறவழியில் செலுத்தப்படும் மயக்கவியல் மருந்தாகப் பயன்படுகிறது.

சென்ட்ப்ரோபஸின் என்ற மருந்து (Centpropazine- 1974),  மன அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுகிறது.

சென்ட்பியூடின்டோல் (Birperone- 1987) என்ற மருந்து, நரம்புத் தளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

குகுலிபிட் என்ற மருந்து (Gugulip- 1987) ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. 

சென்ட்குரோமன் என்ற மருந்து (Ormeloxifene- 1989, Saheli- 1991) கருத்தடை மாத்திரையாகவும், செயல்படா கருப்பை உதிரப் போக்கிற்கு மருந்தாகவும், மார்பக- கருப்பைப் புற்றுநோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

சண்டோனியம் ஐயோடைட் என்ற மருந்து (Chandonium Iodide-1995) நரம்பு அடைப்பு பாதிப்புகளுக்கான மருத்தாகப் பயன்படுகிறது.

அவர் உருவாக்கிய கர்ப்பத் தடுப்பு மருந்து குடும்பக் கட்டுப்பாட்டுக்கு மிகச் சிறந்த கருவியாக அரசால் ஏற்கப்பட்டு பெண்கள் உட்கொள்ளும் "சாயா' என்ற மாத்திரையாக பிரபலமானது. பின் விளைவுகள் அற்றது என்பது அதன் மற்றொரு சிறப்பு.

- இவை சில உதாரணங்கள் மட்டுமே. 130-க்கும் மேற்பட்ட மருந்து வடிவமைப்புக்கான தேசிய, சர்வதேசக் காப்புரிமைகளை நித்யா ஆனந்த் பெற்றுள்ளார். அவரது 400-க்கு மேற்பட்ட ஆய்வறிக்கைகள் மருந்தியல் மாணவர்களுக்கு பிரதானமானவையாக உள்ளன. அவர் இணைந்து எழுதிய "Art in Organic Synthesis' என்ற தலைப்பிலான  நூல், மருந்தியலில் முதன்மையானவை. மேலும் இரு நூல்களையும் நித்யா தொகுத்து வழங்கியுள்ளார். 

நித்யா ஆனந்தின் சிறப்பு அவர் கண்டறிந்த மருந்துகள் மட்டுமல்ல. அவரது வழிகாட்டலில் உயர்ந்த மருந்தியல் ஆராய்ச்சியாளர்களின் பெரும் படையே, இன்று இந்திய மருந்தியல் துறையின் மூளையாகத் திகழ்கிறது. அவர்கள் மருந்து தயாரிக்கும் தொழில்துறை, கல்வித் துறை, ஆய்வகங்களில் பொறுப்பேற்றுச் செயல்படுகிறார்கள். அதன்மூலமாக சிடிஆர்ஐ நிறுவனம் உலகப் புகழ் பெற்றுள்ளது. 

புதிய மாற்றங்களை உடனுக்குடன் கிரகிப்பதில் நித்யா சிறந்து விளங்கினார். மூலக்கூறு உயிரியல் துறையின் ஆரம்ப நிலையிலேயே அதை மருந்தியலில் அவர் பயன்படுத்தினார். இந்திய அரசின் அறிவியல் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் (1981- 83), அரசின் மருந்து உற்பத்திக் கொள்கை வடிவமைப்பு குழுக்களில் உறுப்பினராகவும் (1956- 1990), சிஎஸ்ஐ ஆரின் மருந்தியல் குழுவின் செயலாளராகவும் (1950-60) நித்யா பணிபுரிந்துள்ளார். அப்போது, இந்திய மருந்து உற்பத்தித் துறையின் பாதுகாப்புக்கும் தேவைக்கும் ஏற்ப காப்புரிமைச் சட்டங்களை மாற்றினார். 

உலக சுகாதார அமைப்பின் (WHO) மலேரியா நோய்க்கான கீமொதெரபி குறித்த வழிகாட்டும் குழுவுக்கு தலைவராகவும் நித்யா இருந்துள்ளார் (1980- 86). ரான்பாக்ஸி உள்ளிட்ட பல மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களிலும், அரசின் குழுக்களிலும் அவர் மதிப்புறு ஆலோசகராகத் தொடர்கிறார். இந்திய தேசிய அறிவியல் அகாதெமி (1970), தேசிய அறிவியல் அகாதெமி (1972), இந்திய அறிவியல் அகாதெமி (1974) ஆகியவற்றில் அவர் சிறப்பு உறுப்பினராக உள்ளார். 

இந்திய வேதியியல் சங்கத்தின் பி.சி.ராய் பதக்கம் (1972), ஜே.சி.கோஷ் பதக்கம் (1976),  இந்திய தேசிய அறிவியல் அகாதெமியின் விஸ்வகர்மா விருது (1982), இந்திய அரசின் பத்மஸ்ரீ (2012) உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

இன்று இந்தியா மருந்து உற்பத்தியில் சாதனை படைத்து வருகிறது. அதன் பின்னணியில் இன்றும் வழிகாட்டி வருகிறார், நித்யா ஆனந்த். அறிவியல் மேதைமையும் தொழில்திறனும் கலக்கும்போது உருவாகும் அற்புதமான ரசாயன விளைவுக்கு ஓர் உதாரணமாக அவர் திகழ்கிறார்.
- வ.மு.முரளி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com