கண்டதும் கேட்டதும் 14 - பி.லெனின்

"நிச்சயமா, 1950-இல் பாலசுந்தரம்ன்னு ஒருத்தரு ஒரு கதையைக் கொண்டு வந்து ரத்தினம் அண்ணன்கிட்ட கொடுத்தாரு. அதுதான் கலைஞர் வசனம் எழுதிய "பராசக்தி'.
கண்டதும் கேட்டதும் 14 - பி.லெனின்

பல வருடங்களுக்கு முன் கூறியவற்றை நான் பதிவு செய்து வைத்து இருந்தேன். அதையே இக் கட்டுரையில் எழுதுகிறேன்:

"நிச்சயமா, 1950-இல் பாலசுந்தரம்ன்னு ஒருத்தரு ஒரு கதையைக் கொண்டு வந்து ரத்தினம் அண்ணன்கிட்ட கொடுத்தாரு. அதுதான் கலைஞர் வசனம் எழுதிய "பராசக்தி'.

அது 1951ல தேவி நாடக சபாவில அரங்கேற்றம் ஆச்சு. அப்பெல்லாம் பொம்பளைங்க நடிக்க வர மாட்டாங்க. ஆம்பளைதான் பொம்பளை வேஷம் போடுவாங்க. அந்த பராசக்தி நாடகத்திலேயும் ஒரு ஆம்பளதான் கதாநாயகியா நடிச்சாரு. அந்த நடிகர்தான் ஏ.கே. வீராச்சாமி. இவரு  யாருன்னா முதல் மரியாதை படத்துல, "எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்னு', சொல்வாரே அவர்தான்.  அவரை உங்களுக்கு எல்லாம் நல்லாவே தெரியும். சிவாஜி கணேசன் ஆக்ட் பண்ணின குணசேகரன் கேரக்டரை டி.எம். சாமிக்கண்ணுங்கிறவரு ஆக்ட் பண்ணினாரு. அவரு அப்பவே காமெடியனாகவும் நடிச்சாரு. குணச்சித்திர பாத்திரத்திலயும் ஸ்கோர் பண்ணினாரு. இயக்குநர் பி. மாதவன் படத்துல, "ஏணிப்படிகள்', "ராஜபார்ட் ரங்கதுரை' போன்ற படத்துல எல்லாம் நடிச்சாரு. கோமல் சுவாமிநாதன் ட்ரூப்ல இவரு, வீராச்சாமி, பீலி சிவம், அச்சச்சோ சித்ரா போன்ற திறமையான நடிகர்கள் எல்லாம் நடிச்சிருக்காங்க. இவங்க எல்லோருக்கும் குருகுலம், சகஸ்ரநாமம் அவர்களோட சேவா ஸ்டேஜ் நாடகமன்றம்தான்.

அதுக்கு முன்னாடி எங்க தேவி நாடக சபா "பராசக்தி' படம் சூப்பர் ஹிட் ஆகக் காரணம் கிருஷ்ணன் பஞ்சு டைரக்ஷன்தான். அனதர் (Another) பிளஸ், புதுமுகம் சிவாஜி கணேசனையும் அவர் நடிப்பையும் ஜனங்க ரசிச்சாங்க. அதுல மூத்த சகோதரர் ரோல்ல ஜட்ஜ் சந்திரசேகரனா ஆக்ட் பண்ணினது எஸ்.வி. சகஸ்ரநாமம். கதாநாயகி கல்யாணியா ஆக்ட் பண்ணினது ஸ்ரீரஞ்சனி. தேவி நாடக சபாவுல இன்னொரு ப்ளஸ் பாயிண்ட் என் பிரதர் கே.என். ரத்தினம். அவர் ஒரு கதையைத் தேர்ந்தெடுத்தா அது நிச்சயமா திரைப்படமாகும். "நால்வர்'; "பெண்', "முதலாளி', எம்.எஸ்.சோலைமலை எழுதிய "நீதிபதி', கலைஞரின் "பராசக்தி', "மந்திரகுமாரி', கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் (போஸ்ட்மேன்) தபால்காரன் தங்கை என்ற பெயரில்  ரிலீஸ் ஆகியது. என் பிரதர் ரத்தினத்துக்கு இப்படி பல படங்கள். அப்படி ஒரு ராசி. கதை நல்லா இருந்தாதான் நாடகம் நடத்த சம்மதிப்பாரு. ஒரு தடவை என் பிரதர் ரத்தினத்துக்கு அரசு கலைமாமணி விருது வழங்கப் பரிந்துரை செய்யப்பட்டு அறிவிப்பும் வந்துவிட்டது. அப்போ ஒரு பெரிய நாடக நடிகர் டிரஸ் மேனுக்கு எல்லாம் கலைமாமணி விருதா? என்று ஒரு எளிய எதிர்ப்பை தெரிவித்து இருந்தார். இந்த விஷயம் சகஸ்ரநாமம் காதுக்குப் போயிருக்கு. உடனே அவர், "ரத்தின அண்ணனுக்கு கலைமாமணி விருது கிடைக்க யாராவது தடையா இருந்தா அவுங்க இந்த சகஸ்ரநாமத்தோட உண்மையான கோபத்தைச் சந்திக்க நேரிடும். அவர் வெறும் டிரஸ்மேன் மட்டும் இல்லடா, ஒரு பெரிய நாடகக் கம்பெனிக்கு முதலாளி. இந்த விஷயத்துல மறைமுகமா எதிர்ப்பு தெரிவிச்சாக் கூட நான் சும்மாயிருக்க மாட்டேன். வீணா, என் கோபத்துக்கு ஆளாகாதீங்க'' என்றார் கடும் கோபத்துடன். ஒரு வாரத்திற்கெல்லாம் கலைமாமணி விருது ரத்தின அண்ணன் கழுத்துல பதக்கமா மின்னுச்சு. அந்தப் பெருமை சகஸ்ரநாமத்தைச் சாரும்.

லெனின் இன்னொரு முக்கிய விஷயம் தெரியுமா?  நான் தங்கறதுக்கு ஒரு ரூம்கூட இல்லாம அவதிப்படும்போது உங்கப்பாவை அடிக்கடி ஆழ்வார்பேட்டையில் சந்திப்பேன். அப்படி தான் ஒருநாள் அவரை அந்தத் தெருவுல இருந்த படக் கம்பெனி வாசல்ல பார்த்தேன். சைக்கிள்ல வந்திருந்தார். நான் அவரைப் பார்த்து, "

"என்ன பீம் இந்தப் பக்கம்?'ன்னு கேட்டேன். அவரு அதுக்கு "கம்பெனியில கொஞ்சம் காசு தரணும் அதுக்காக வந்தேன்'னு சொன்னாரு. அப்போ "பூம்பாவை' படத்துல உங்க அப்பா அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்தாரு. நான்உடனே அவரிடம் "இல்லையே பீம் எல்லாருமே போயிட்டாங்களே'' என்று கூறினேன். உங்கப்பா அந்த கம்பெனி கட்டடத்தையே சிறிது நேரம் பார்த்துட்டு இருந்தாரு. அப்புறமா என்னப் பார்த்து, "இங்க எங்கயாவது ஒரு இரவு தங்க முடியுமா'ன்னு கேட்டாரு.

"என்ன சொல்றீங்க. இங்க தங்கறதா. நீங்க வீட்டுக்கு போயிட்டு காலைல வரலாம் இல்ல' என்று கேட்டேன்.

"இல்ல . வீடு புரசைவாக்கம் இல்லையா. நான் எடுத்துக்கொண்டு வந்திருக்கும் இந்த சைக்கிள் வாடகை வண்டி. இதுக்கு ரெண்டனா கொடுக்கணும். அதுவும் இல்லாம வீட்டுக்கும் செலவுக்கு வேணும்'ன்னு சொன்னாரு.

நான் அவரைப் பார்த்து, "கம்பெனி உங்களுக்கு எவ்வளவு கொடுக்கணும்'ன்னு கேட்டதுக்கு, அவர் "பதினைந்து ரூபாய்'ன்னு சொன்னாரு. நான் உடனே உங்கப்பாவைப்  பார்த்து "பீம் எங்கிட்ட நாலணா இருக்கு. அதுல நீ மூணணா எடுத்துக்கோ. வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு வா' என்று கூறினேன்.

இருவரும் பேசியபடியே ஆழ்வார்பேட்டை ரவுண்டானா அருகில் வந்து நின்றோம். அப்போதுதான் உங்கப்பா, "  என்னால வீட்டுக்கு போக முடியாது. நான் ஏன் இந்த ரவுண்டானா புல் தரையிலேயே படுத்துக்க கூடாது' என்றார். நான் உங்கப்பாவின் தீர்க்கமான கண்களை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

பின்னர், "ஏன் நீங்க மட்டும்தான் படுத்துக்க முடியுமா? நானும் உங்களோடவே படுத்துக்கறேன். வாங்க முதல்ல டீ குடிச்சிட்டு வரலாம்'ன்னு சொல்லி பக்கத்தில இருந்த டீக்கடையில டீயும், பன்னும் சாப்பிட்டுவிட்டு ரவுண்டானா உள்புறம் வந்து சைக்கிளைப் படுக்க வைத்துவிட்டு அந்த புல் தரையில் அருகருகே மல்லாக்க படுத்துக்  கொண்டோம்.

சிறிது நேரம் பொறுத்து நான் உங்கப்பாவைப் பார்த்து, "பீம் நம்ம வாழ்க்கை இப்படியே போகுமா' என்று கேட்டேன்.

"இல்ல, எல்லோருக்கும் காலம் கூடி வரும்'. உங்கப்பா தன்னோட கையை தென்திசை நோக்கி காட்டினார். "இந்த மர்ரேஸ் கேட் ரோட்டிலேயே நான் ஒரு வீடு கட்டுவேன். அதுல உனக்குன்னு ஒரு ரூம் சகல வசதிகளோட கட்டி தரேன். நீ எப்ப வேணும்ன்னாலும் வந்து தங்கிக்கோ' என்றார்.

"லெனின் அது மாலை துவக்க நேரம். மேலே நட்சத்திரங்கள் சூரிய ஒளியில் இருந்து மீண்டதால் பிரகாசத்தை மெல்ல பொழியத் துவங்கி இருந்தது. உங்க அப்பாவோட வார்த்தை வான் வரைக்கும் போயிருக்கும். அந்த அழகுமிகு நட்சத்திரங்கள் ஒன்றுகூடி உன் தந்தையின் வார்த்தைக்கு, "ததாஸ்து' என்று  சந்தோஷமாக கூறியுள்ளது. உன் தந்தையின் வாக்கு அப்படியே பலித்தது. பல ஆண்டுகள் கழித்து உங்கப்பா பீம் இதே தெருவுல வீடு கட்டி, என்னை கிரஹபிரவேசத்துக்கு அழைத்தார். நானும் மகிழ்ச்சியா கலந்துகொண்டேன். வீட்டினைச் சுற்றி காட்டிய உன் அப்பா ஓர் அறையைத் திறந்து, "  இதுதான் உன் ரூம். இதுல நீ எப்ப வேணும்ன்னாலும் தங்கிக்கலாம்'ன்னு கூறினார். நான் நெகிழ்ந்தேன். என் இரண்டு கரங்களால் அவரின் பூப்போன்ற கன்னங்களைத் தொட்டு "பீம் நீ ஒரு நல்ல நண்பன். இதெல்லாம் உன்னால மட்டும்தான் செய்ய முடியும்'ன்னு சொல்லி நின்றேன்.

அதே இடத்துலதான் நாம ரெண்டு பேரும் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். அப்போது நீ  மூணாவது ஃபாரம்  படித்துக் கொண்டிருந்தாய். துறுதுறுவென்று இருப்பாய்'' என்று கூறி என் தந்தையின் கன்னங்களை வருடி விட்ட அதே கரங்களால் என் கன்னத்தையும் வருடி விட்டார். எனக்கு என் தந்தையே  என் கன்னத்தை வருடி விட்டது போன்று இருந்தது.

இப்போது அந்த ரவுண்டானாவும் இல்லை. புல் தரையும் இல்லை. ஆழ்வார்பேட்டை மேம்பாலம்தான் இருக்கிறது. ஆனால் நான் அந்தப் பக்கம் வரும்போதெல்லாம் என் தந்தையும், வைத்தியநாதனும் புல்தரையில் படுத்துக்கொண்டு இருவரும் பேசிக் கொண்டிருப்பதாக என் கண்களுக்குக் காட்சி அளிக்கிறது. அந்த இடத்தில் நான் சிறிது நேரம் நின்று மீண்டும் நடக்கத் துவங்குவேன்.

வைத்தியநாதன் மிகவும் குள்ளமான உருவம் உடையவர். அவர் சைக்கிளில்தான் எங்கு வேண்டுமானாலும் செல்வார். அவருக்கு கால் பெடலில் தங்காது. பெடல் கீழே இறங்கிவிட்டால் கால் எட்டாது. மீண்டும் பெடல் மேலே வரும்போது ஓர் உந்து உந்திக் கொள்வார். சைக்கிள் ஓடும். அதனைப் பார்க்கும்போது சிறுவர்கள் Half peddale (ஆப் பெடல்) போட்டு சைக்கிள் மிதப்பது போன்று தோன்றும். ஒரு சில நாள்கள் அவரை என்னால் பார்க்க முடியல. ஆனா பத்திரிகையில ஒரு செய்தியைப் பார்த்தேன். சைக்கிள்லேயே சுற்றித் திரிந்து கொண்டிருந்த கே.என். வைத்தியநாதன் விபத்துல ஆழ்வார்பேட்டையிலேயே மரணம் அடைந்தார்ன்னு போட்டு அவருடைய சில தகவல்களும் போட்டிருந்தாங்க. பத்திரிகைகள்தான் பாரபட்சமில்லாமல் செய்திகளைப் போடுகிறார்கள். முத்தாய்ப்பாக ஒன்று சொல்ல வேண்டும். என் தந்தை அழைத்தும் கடைசி வரை வைத்தியநாதன் என்னும் அந்த மாமனிதர் அவருடைய அறைக்கு வரவே இல்லை. இதிலிருந்து நமக்கு நெருங்கியவர்களை பல நாள்கள் பார்க்காமல் இருக்கக் கூடாது என்று தெரிந்து கொண்டேன்.

பின்குறிப்பு:
என் தந்தை வைத்தியநாதரிடம் கூறிய   "எல்லோருக்கும் காலம் கூடி வரும்'  என்ற வாசகங்கள் பின் நாளில் என் தந்தை டைரக்ட் செய்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற "பாசமலர்' படத்தில் கண்ணதாசனால் பாடலாக எழுதப் பெற்று, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்து, டி.எம்.எஸ்.  சுசிலா பாடிய கோரஸ் பாடலாக திரையில் சித்திரம் தீட்டியது.
எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்.
வாழ்வு வந்தால் அனைவரையும்
வாழ வைப்போமே.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com