தூய்மைப் பணியில் முகநூல்  நண்பர்கள்!

முகநூல்  (பேஸ்புக்) இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையில் ஒன்றிவிட்டது எனக் கூறலாம். அந்த அளவுக்கு முகநூல் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது
தூய்மைப் பணியில் முகநூல்  நண்பர்கள்!

முகநூல்  (பேஸ்புக்) இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையில் ஒன்றிவிட்டது எனக் கூறலாம். அந்த அளவுக்கு முகநூல் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது.

இந்த முகநூலை சிவகாசியில் உள்ளவர்கள் சிலர் இணைந்து சமூக சேவைக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பது ஆச்சரியம்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முகநூல் நண்பர்கள், சுமார் 70 பேர் குழுவாக இணைந்துள்ளனர்.

இவர்கள் அதை "சிவகாசி முகநூல் நண்பர்கள்' என்ற பெயரில்   பதிவு செய்துள்ளனர். இவர்கள் பொதுஇடங்களில் துப்புரவுப் பணியைச் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

சிவகாசி முகநூல் நண்பர்கள் குழுவின் செயல்பாடுகள் குறித்து நிர்வாகி சி.சண்முகரத்தினம், பி.சரவணகாந்த் ஆகியோர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
"முகநூல் நண்பர்கள் சிலர் ஒருநாள் சந்தித்து ,
ஏதாவதுசமூக சேவை செய்தால் என்ன என பேசிக் கொண்டிருந்தோம். என்ன செய்யலாம் என யோசித்தபோது துப்பரவுப்பணியை மேற்கொள்ளலாம் என முடிவு செய்தோம்.

இதையடுத்து சிவகாசி பகுதியில் சுமார் 70 பேர் இதில் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர்.

தற்போது இதில் சுமார் 40 பேர் செயல்பாட்டில் உள்ளார்கள். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசி நகராட்சியிடம் ஒப்புதல் பெற்று, சிவகாசி பேருந்துநிலையத்தை சுத்தம் செய்யும் பணியைத் தொடக்கினோம்.

இதில் உள்ளவர்கள் தொழில் செய்பவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுநர் என பல தரப்பினர் உள்ளனர். எனவே விடுமுறைநாளான ஒரு சனிக்கிழமை இரவு சிவகாசி பேருந்துநிலையத்தைச் சுத்தம் செய்யத் தொடங்கினோம். அப்போது 40 பேர் அப்பணியில் பங்கேற்றனர்.

பேருந்துநிலையத்தில் உள்ள சுவர்களில் உள்ள சுவரொட்டிகளை, அகற்றி, தரையைச் சுத்தம் செய்து, ஒவ்வொரு பேருந்தும் நிற்கும் இடத்தை பெயிண்டினால் வரைந்தோம். இந்த பணி அதிகாலை  3 மணிவரை நீடித்தது.

பின்னர் சிவகாசி பகுதியில் உள்ள பல பயணிகள் நிழற்குடைகளில்  சுவரொட்டிகளை ஒட்டி பாழாக்கியிருப்பது தெரிய வந்தது.

இந்த பயணிகள் நிழற்குடையைச் சுத்தம் செய்து பராமரித்தால் என்ன என யோசனை தோன்றியது.

இதையடுத்து முதன்முதலாக பூவநாதபுரம் புரத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையைச் சுத்தம் செய்து, வெள்ளை அடித்தோம். இது எங்கள் அனைவருக்கும் மனதிருப்தியைத் தந்தது.

இந்தப் பணியை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டோம்.

செயல்பாட்டில் இருக்கும் 40 பேரில் வாரா வாரம் மாறி மாறி பணி செய்து வருகிறோம்.

அய்யனார்காலனி, மணிநகர், ரிசர்வ்லயன், இரட்டைப்பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பயணிகள் நிழற்குடைகளைச்  சுத்தம் செய்தோம். அனைத்து பயணிகள் நிழற்குடைகளிலும் ஏராளமான மதுபாட்டில்கள் கிடந்தன. சுத்தம் செய்த பின்னர் "பராமரிப்பு, சிவகாசி முகநூல் நண்பர்கள்' என எழுதிவிடுவோம். இதனால் மேலும் யாரும் அதில் சுவரொட்டியை ஒட்டுவதில்லை. சிவகாசியில் உள்ள இ.எஸ்.ஐ.மருந்தக வளாகத்தில் புதர் மண்டிக் கிடந்தது. ஜே.சி.பி.இயந்திரம் மூலம் அங்கு துப்பரவுப்பணி செய்தோம்.

இந்த பணிக்கு யாரிடமும் நாங்கள் பணம் வாங்குவது கிடையாது.  எங்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவரும் வாரம் ரூ 50 கொடுக்க வேண்டும் என முடிவு செய்து, அதன்படி பணம் வசூல் செய்கிறோம். இதனால் வெளிநபர்களிடம் பணம் வசூல் செய்வதில்லை.

எங்கள் பணியைப் பார்த்து தற்போது ராஜபுரம், பேராபட்டி உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு பள்ளியில் துப்பரவுப்பணி செய்ய அழைத்துள்ளார்கள். விரைவில் அப்பணியை மேற்கொள்ள உள்ளோம். இந்த துப்பரவுப்பணியால் விடுமுறைநாளில்  எங்கள் குழுவில் உள்ளவர்கள் யாரும்  சும்மா இருப்பதில்லை. இந்தப்பணி செய்வதின்மூலம் உடல் நலமும் , மனதிற்கு திருப்தியும் கிடைக்கிறது'' என அவர்கள் கூறினார்கள். 
- எஸ்.பாலசுந்தரராஜ் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com