வாய்ச்சொல்லின் மூலம் இயங்கும் ஸ்மார்ட் கார்!

வாய்ச்சொல்லின் மூலம் இயங்கும் ஸ்மார்ட் கார்!

ஓட்டுநர் இல்லாத கார்கள் சாலைகளில் செல்வதை மாயாஜால படங்களில்தான் பார்த்திருப்போம். இனி அது நிஜமாகவே நமது கண்களின் முன்பு நடைபெறுவதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை.

ஓட்டுநர் இல்லாத கார்கள் சாலைகளில் செல்வதை மாயாஜால படங்களில்தான் பார்த்திருப்போம். இனி அது நிஜமாகவே நமது கண்களின் முன்பு நடைபெறுவதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை.

அனைத்தையும் ஸ்மார்ட் ஆக்கிய அறிவியல் தொழில்நுட்பம், மனிதனின் கார் பயணத்தையும் ஸ்மார்ட் ஆக்கிவிட்டது.

ஓட்டுநர் இல்லை, ஸ்டீரிங் இல்லை, பிரேக் பெடல் இல்லை, கியர் இல்லை என்பதுதான் டாய்ம்லர் நிறுவனம் உருவாக்கி உள்ள ஸ்மார்ட் காரின் சிறப்பு அம்சங்களாகும்.

ஜெர்மனி நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச கார் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள இந்த ஸ்மார்ட் கார் காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அப்படி என்னதான் அந்த ஸ்மார்ட் காரில் உள்ளது என்பதைப் பார்ப்போம்.

இரண்டு பேர் மட்டும் அமர்ந்து செல்லக் கூடிய இந்தக் காரை வாய்ச் சொல்லாலோ அல்லது ஆப் மூலமாகவோ இயக்கலாம். காருக்குள்ளே அமர்பவரை வரவேற்பதில் இருந்து அவர்களது புகைப்படங்களைத் திரையிட்டு, அவர்களது கட்டளைக்குச் செயல்படுவதுமட்டுமின்றி, உள்ளே அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் திரையில் செய்திகள், வானிலை,  செல்லும் இடத்தின் தகவல் ஆகியவற்றைத் தெரிவிக்கிறது. அருகே செல்லும் வாகனங்களுக்கு அறிவுறுத்தல், பாதசாரிகளை எச்சரித்தல் என பல பணிகளை ஆளே இல்லாமல் கச்சிதமாகச் செய்கிறது இந்த ஸ்மார்ட் கார். 

முழுக்க முழுக்க நகர்புற போக்குவரத்துக்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் கார், மின்சாரத்தில் இயங்கக் கூடியது. 

ஸ்மார்ட் காரில் உள்ள தொழில்நுட்பம், வாகனத்தின் வேகத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்து, அருகே செல்லும் வாகனங்களையும் துல்லியமாகக் கண்காணித்து அதன் மீது மோதாமல் செல்லும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எந்தவிதமான வானிலையிலும், போக்குவரத்து நெரிசல்களிலும், குறைந்த வெளிச்சத்திலும் இந்த ஸ்மார்ட் கார் செல்லும். பயணிகள் யாரும் இல்லையென்றால், தன்னை சார்ஜ் செய்து கொள்ள தானாகவே சார்ஜிங் ஸ்டேஷனுக்கு செல்லும் தொழில்நுட்பமும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் காரை கால் டாக்ஸிபோல் பயன்படுத்தவும் டாய்ம்லர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  

2022-ஆம் ஆண்டுக்குள் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 10 வகையான சிறிய, பெரிய அளவிலான  ஸ்மார்ட்  கார்கள் உருவாக்கப்படும் என்று டாய்ம்லர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- அ.சர்ஃப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com