வேலைக்காக ஒரு செயலி!

நாட்டில்  பொறியியல் படிப்பு,  கலை, அறிவியல் பட்டப் படிப்புகள்  உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை  முடித்த பல லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர்.
வேலைக்காக ஒரு செயலி!

நாட்டில்  பொறியியல் படிப்பு,  கலை, அறிவியல் பட்டப் படிப்புகள்  உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை  முடித்த பல லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர். இவர்கள் தங்களது சுய விவரங்களைப் பல்வேறு வேலைவாய்ப்பு இணையதளங்களில் பதிந்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இதே போல, நிறுவனங்கள் பலவும் தகுதியுள்ள வேலை ஆள்களைத் தேடி வருகின்றன.

பெருநகர கல்லூரிகளில் பயின்று சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில் சிலருக்கு படித்துக் கொண்டிருக்கும் போதே, நிறுவனங்கள் நடத்தும் கல்லூரி வளாகத் தேர்வில் பங்கேற்று  வேலை கிடைத்துவிடுகிறது. ஆனால் சிறு நகரங்களில் உள்ள கல்லூரிகளில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த பலருக்கு இதுபோன்ற வேலைவாய்ப்புகள் கிடைப்பது அரிது.  இதனால்  சிறு நகரங்களில் இருக்கும் அதிக அறிவுள்ள, தகுதியுள்ள பணியாளர்கள் பலர்  நிறுவனங்களுக்குக் கிடைப்பதில்லை.

சில பெரிய நிறுவனங்கள் வேலைவாய்ப்பு இணையதளங்கள் மற்றும் வெளி நிறுவனங்களைப்  பணிக்கு அமர்த்தி, தங்களுக்குத் தேவையான தகுதியுள்ள பணியாளர்களைத் தேர்வு செய்கின்றன. இதற்காக அந்நிறுவனங்களுக்கு பெருந்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த வேலை வாய்ப்பு நிறுவனங்கள், இணையதளங்கள்  அதிக அளவில் பணம் கேட்பதால் சிறிய நிறுவனங்களால் இவை போன்ற நிறுவனங்களைப் பணிக்கு அமர்த்த முடிவதில்லை. 

சில தனியார் வேலைவாய்ப்பு  நிறுவனங்கள்,  வேலை தேடுபவர்களிடம் குறிப்பிட்டத் தொகையைக்  கமிஷனாகப் பெற்றுக் கொண்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருகின்றன.

பணம் கொடுக்க முடியாதவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் மாணவர்களையும், பணியாளர்களைத் தேடும் தொழில் நிறுவனங்களையும் இணைக்கும் வகையில் "ஹையர் மீ' என்ற நிறுவனம் புதிய இலவச செல்லிடப்பேசி செயலியை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இச்செயலி மூலம்  இளைஞர்கள் எந்த ஒரு கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக வேலை தேடலாம்.  நிறுவனங்களும் இலவசமாக தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து "ஹையர் மீ' நிறுவனர் சொக்கு வள்ளியப்பா கூறியது:
"லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பற்ற நம் நாட்டு மாணவர்களுக்கு வேலை கிடைக்க ஏதுவாக எங்களது நிறுவனம் இலவச செல்லிடப்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலி வேலை தேடுபவருக்கும், வேலை அளிப்போருக்கும் பாலமாக விளங்கும்.

பொறியியல், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு  உள்ளிட்ட படிப்புகளைப்  படித்து முடித்து, முதன் முறையாக வேலை தேடும் மாணவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இந்த "ஹையர் மீ'  செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.  இதில்  இலவசமாக தங்களது பெயர், முகவரி, புகைப்படம், தாங்கள் பேசும் வீடியோக்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதைத் தொடர்ந்து எங்களது நிறுவனத்தின் சார்பில்,  ஒரு பகுதிக்கு ஒரு கல்லூரியில் என்று வேலைவாய்ப்புக்கான தேர்வு, இலவசமாக நடத்தப்படும். 

குறிப்பிட்ட துறைகளுக்குத் தகுந்தவாறு கேள்விகள் உள்ள 100 நிமிஷங்களுக்கான தேர்வு நடத்தப்படும். கேள்வித்தாள்கள் நாட்டின் சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. 

இதில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விவரங்கள், எங்களது செயலியில் வீடியோ, புகைப்படம் உள்ளிட்ட தகவல்களுடன் இடம்பெறும். இதனை வேலைஅளிக்கும் நிறுவனங்கள் பார்த்து தங்களுக்குத் தேவையான நபர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கு எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.

இதற்காக நாங்கள் நாடு முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். இதன் மூலம் நிகழாண்டில்  10 லட்சம் மாணவர்களை தேர்வெழுத வைத்து, 1 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க வழிவகை செய்ய உள்ளோம்'' என்றார்.

"ஹையர் மீ  செயலியில் வேலை தேடுபவர்களுக்காக தனியான போர்ட்டலும், வேலை அளிப்பவர்களுக்கான தனி போர்ட்டலும் உள்ளன. 

மேற்கண்ட போர்ட்டல்களில் மாணவர்கள் தங்களது விவரங்களைப் பதியலாம். தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் தனியாக வெளியிடப்படும். இதன் மூலம் நிறுவனங்களுக்கும், வேலை தேடும் மாணவர்களுக்கும் தேவையற்ற காலவிரயம், பண விரயம், அலைச்சல் தவிர்க்கப்படும்.

மேலும் விவரங்களை https://hiremee.co.in/  என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்'' என்றார்  "ஹையர் மீ'  நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் கே. கிருஷ்ணன்.
- க.கோபாலகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com