15 வயதில் விஞ்ஞானி... 18 வயதில் தொழில்முனைவோர்!

பார்கின்சன் என்றழைக்கப்படும் நடுக்க வாதம் நோய் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நோய். இந்நோய் வந்தால் மூட்டு விரைப்பு, உடலில் நடுக்கம் ஏற்படும். மனம் நினைத்தபடி உடல் செயல்படாது.
15 வயதில் விஞ்ஞானி... 18 வயதில் தொழில்முனைவோர்!

பார்கின்சன் என்றழைக்கப்படும் நடுக்க வாதம் நோய் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நோய். இந்நோய் வந்தால் மூட்டு விரைப்பு, உடலில் நடுக்கம் ஏற்படும். மனம் நினைத்தபடி உடல் செயல்படாது. நரம்பியல் மின் கடத்தியாகச் செயல்படும் டோபோமைன் என்ற வேதிப்பொருளின் அளவு மூளையில் குறைந்தால் பார்கின்சன் நோய் ஏற்படுகிறது. இதனால் உடலின் இயக்கம் மெதுவாகிவிடுகிறது. உலக அளவில் 1 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக வெளியே எங்கும் செல்ல முடியாது. அப்படியே சென்றால் வீட்டில் உள்ளவர்கள், அவர்கள் திரும்பி வரும்வரை அவர்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான். 

பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையை அவர்கள் எங்கிருந்தாலும் பிறர் உடனே தெரிந்து கொள்ள ஒரு கருவியை இந்திய - அமெரிக்க சிறுவன் ஒருவன் கண்டுபிடித்திருக்கிறான். இப்போது அந்தச் சிறுவனுக்கு 18 வயது. பெயர் உத்கர்ஸ் தாண்டன்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் உத்கர்ஸ் படித்துக் கொண்டிருந்தபோது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஓர் அறிவியல் கண்காட்சியில் தனது கண்டுபிடிப்பைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். உடனே அதற்கு அங்கீகாரம் கிடைத்தது. இப்போது அவர் ஓர் இளம் தொழில் முனைவோர்.

1996 இல் ஒலிம்பிக் போட்டி நடந்தது. உலகப்புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரர் முகமது அலி ஒலிம்பிக் விளக்கை ஏற்றுவதை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார் உத்கர்ஸ். முகமது அலியின் கை அந்த விளக்கை ஏற்றும்போது நடுங்கிக் கொண்டிருந்தது. இது ஏன்? என்ற கேள்வி மனதைக் குடைய அவருடைய தந்தையிடம் கேட்டிருக்கிறார். அவரோ அதைப் போன்று பார்கின்சனால் பாதிக்கப்பட்ட நடிகர் மைக்கேல் ஜே. ஃபாக்ஸ் பற்றியும் சொல்லியிருக்கிறார்.

உத்கர்ஸின் மூளை அப்போதே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. பார்கின்சன் நோய் என்றால் என்ன? அவற்றின் அறிகுறிகள் எவை? என்பதைப் பற்றி சொந்த முனைப்பில் இணையதளங்களின் மூலம் நிறைய தெரிந்து கொண்டார். அதற்குப் பின் அவர் கண்டுபிடித்ததுதான் ONERING மோதிர வடிவிலான கருவி. 

இந்த கருவி ஒரு சிறிய கணினியைப் போன்றது. இதை பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அணிந்து கொண்டவுடன் அந்த நோயால் உடலில் ஏற்படும் பல்வேறு அசைவுகளை இந்தக் கருவி அளக்க ஆரம்பித்துவிடும். பின்னர் அவற்றைத் தரவுகளாக மாற்றிவிடும். அந்தத் தரவுகள் பார்கின்சன் நோயாளியின் மருத்துவருக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அனுப்பப்பட்டுவிடும். மருத்துவர் அதைப் பார்த்துவிட்டு, நோய்க்குரிய சிகிச்சையை, கொடுக்கப்பட வேண்டிய மருந்துகள், அவற்றின் அளவுகள் எல்லாவற்றையும் தீர்மானிப்பார். நோயாளிகளும் தங்களுடைய செல்போனில் ஒவ்வொரு நாளும் கருவி பதிந்து வைத்திருக்கிற தகவல்களைப் பார்த்து நோயின் தன்மையைத் தெரிந்து கொள்ள முடியும். 

சாதாரணமாக, மாதத்துக்கு ஒருமுறையோ, மூன்று மாதத்துக்கு ஒருமுறையோ மருத்துவரை பார்கின்சன் நோயாளிகள் பார்க்க வருவார்கள். அப்படியே வந்தாலும் 30 நிமிடங்கள் மட்டுமே அவருடைய உடலின் இயக்கங்கள் மருத்துவரால் கவனிக்கப்படும். அந்த 30 நிமிடங்களின் தகவல்களை வைத்து நோயின் தன்மையை, மருத்துவத்தை, மருந்துகளின் அளவைத் தீர்மானிக்கும் முறை இதற்கு முன்பு இருந்தது. இதனால், நோயாளியின் உடலில் பார்கின்சன் நோயால் ஏற்பட்ட பாதிப்புகளை முழுமையாக மருத்துவர்களால் தெரிந்து கொள்ள முடியாமலிருந்தது. உத்கர்ஸின் இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்தக் கருவி கணினி போன்றது. இதற்காக உத்கர்ஸ் X Code, IOS Programming, Python உள்ளிட்ட பல கணினித் தொழில்நுட்பங்களையும் கற்றுக் கொண்டார். மோதிர வடிவிலான கருவி என்பதால் இன்னொரு பிரச்னையும் எழுந்தது. ஒவ்வொரு நோயாளியின் கைவிரல்களின் அமைப்பு, அளவு மாறுபடும். எனவே ஒவ்வொரு நோயாளிக்கும் பொருந்தும் வகையில் தனித்தனியாகவே இந்த கருவியை உருவாக்க வேண்டியிருந்தது. எல்லா அளவு விரல்களுக்கும் பொருந்துமாறு பிளாஸ்டிக் சார்ந்த பொருட்களில் மோதிரத்தைத் தயாரிப்பதற்கு அதிக செலவும், நீண்ட காலமும் தேவைப்படுவதால் அதுவும் சாத்தியமாகவில்லை. இந்தக் கருவி குறைந்த அளவிலான ப்ளூ டூத் ஆற்றல் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

எனவே உத்கர்ஸ் நிறைய பார்கின்சன் நோய் சார்ந்த மருத்துவமனைகள், அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருக்கிறார். கருவி தேவைப்படும் என்று கேட்கும் நோயாளிகளுக்குச் செய்து கொடுக்கிறார். 

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண் பார்வை பாதிக்கப்படாமலிருக்க அவற்றைப் பற்றிய தகவல்களைக் கண்டறிந்து தரும் கருவியைக் கண்டுபிடிப்பதுதான் உத்கர்ஸின் அடுத்த திட்டமாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com