இளைய பாரதமே...எழுக!-18: தேசபக்த மெய்ஞானி

இந்திய ஆன்மீகத்தின் விஸ்வரூபமாக விளங்கிய விவேகானந்தரை "இந்திய சுதந்திரப் போராட்டம்' என்ற வட்டத்திற்குள் மட்டும் அடக்க முடியாதென்பது உண்மையானாலும் இந்திய சுதந்திரப் போராட்ட எழுச்சிக்கு விவேகானந்தரின்
இளைய பாரதமே...எழுக!-18: தேசபக்த மெய்ஞானி

இந்திய ஆன்மீகத்தின் விஸ்வரூபமாக விளங்கிய விவேகானந்தரை "இந்திய சுதந்திரப் போராட்டம்' என்ற வட்டத்திற்குள் மட்டும் அடக்க முடியாதென்பது உண்மையானாலும் இந்திய சுதந்திரப் போராட்ட எழுச்சிக்கு விவேகானந்தரின் கருத்து விதைகளும் காரணமாக இருந்திருக்கிறதென்பதும் மறுக்க முடியாததாகும். தெய்வீகத்தோடு தேசியத்தையும் விட்டுக்கொடுக்காமல் தனது ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டவர் விவேகானந்தர்.

ஆங்கிலேய ஆட்சியினர் விவேகானந்தர் நிகழ்த்திய உரைகளின் உள்ளடக்கத்தை உன்னிப்பாகக் கவனித்ததோடு அவ்வாறான அவரின் எழுச்சிமிக்க உரைகள் சில இளைஞர்களை தேசபக்தர்களாக உருவெடுக்க வைத்ததையும் அத்தகைய இளைஞர்கள் சுதந்திரப் போராட்டக் களத்தில் உத்வேகம் பெற்றதையும் உளவுப்படை மூலமாக அறிந்து வைத்திருந்தனர்.

இந்திய விடுதலை இயக்கத்தின் மீது விவேகானந்தர் ஏற்படுத்திய தாக்கத்தை கல்கத்தா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் விவேகானந்தவியல் ஆய்வாளரும் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளருமான சங்கரி பிரசாத் பாசு ஓர் அழுத்தமான ஆய்வுக் கட்டுரை மூலம் பதிவு செய்துள்ளார். சங்கரி பிரசாத் தனது கட்டுரையில் ஆங்கிலேய அதிகாரி கார்மிக்கேல் பிரபு தனது தர்பார் உரையில் அன்றைய காலகட்டத்தில் செயல்பட்டுவந்த ராமகிருஷ்ண மடத்தின் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த ஆங்கிலேய அதிகாரியின் உரையின் காட்டத்தைக் கணக்கிடுகிறபோது மடாலயங்கள் நடத்துவதையே அச்சுறுத்துவது போலிருந்ததாகவும் தனது ஆய்வுக் கட்டுரையில் பதிவு செய்துள்ளார். 

"ஆங்கிலேய அதிகாரி கார்மிக்கேல் பிரபு தனது உரையில், வேதாந்தக் கழகத்தின் போதனைகள் அரசியலில் தேசீயவாதத்தை நோக்கிச் செல்கின்றன. சுவாமி விவேகானந்தர் தாமே பொதுவாக அரசியல் பகுதியைத் தவிர்த்து வருகிறார். ஆனால் பல இந்து தேசியவாதிகள் அவரைத் தங்கள் இயக்கத்தின் கருவாகக் கருதுகின்றனர்.

சற்றுத் திரிந்தாலும் விவேகானந்தரின் இந்தப் போதனைகள், அரவிந்த கோஷ் போன்ற புரட்சியாளர் கரத்தில் ஒரு வலிமைமிக்க ஆயுதமாக இருப்பதைத் தெளிவாகக் காணலாம். சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் பல பகுதிகள், அரசிற்கெதிரான கிளர்ச்சியினைத் தூண்டும் பொருளுடையவையாக இருக்கின்றன. அவற்றில் தீங்கு விளைவிக்கும் சாத்தியப்பாடுகள் குறித்து நன்கு உணரப்பட்டுள்ளது. புரட்சிகரக் கட்சியினால் அது மிகச் சாதகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது . பல அங்கீகரிக்கப்பட்ட மடாலயங்கள், அரசியல் அகதிகளுக்குப் புகலிடமளித்து வருகின்றன. இந்தப் போலி ஆசிரமங்கள், புரட்சிகரக் கொள்கையினைப் பரப்பும் மையங்களாக இருக்கின்றனவே தவிர, வேறொன்றுமில்லை. அவை கிழக்குவங்கத்தில் அச்சமூட்டுமளவிற்கு மிக வேகமாகப் பரவி வருகின்றன' என்று குறிப்பிட்டுள்ளதாக சங்கரி பிரசாத் பாசு பதிவு செய்துள்ளார். இந்த வரலாற்றுத் தகவல்கள் அனைத்தையும் பிரிட்டிஷ் உளவுத்துறைக் குறிப்புகளிலிருந்து இவர் எடுத்துள்ளார்.

விவேகானந்தரால் நிறுவப்பட்ட ராமகிருஷ்ண மடங்கள் பிரிட்டிஷ் உளவுத் துறையில் ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டதற்கும் அம்மடங்களின் அன்றாடச் செயல்பாடுகள் உளவு பார்க்கப்பட்டதற்கும் இம்மாதிரியான பல ஆவணச் சான்றுகள் உள்ளன. தீவிரவாதத்தையோ, ஆயுதம் தாங்கிய போராட்டங்களையோ, வெளிப்படையான அரசியற் செயல்பாடுகளையோ நேரடியாகவோ மறைமுகமாகவோ ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு விவேகானந்தர் பேசவில்லையானாலும், அவரது பேச்சும் செயல்பாடும் அன்றைய துடிப்பும் சமூக உணர்வும் கொண்ட இளைஞர்கள் மத்தியில் அழுத்தமான தேசபக்தியை உருவாக்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கெனவே தேசபக்த அடிப்படையுள்ள இளைஞர்கள் மத்தியில் எழுச்சியையும் உற்சாகத்தையும் மேலோங்க வைப்பதற்கும் " செயல்படவேண்டும்' என்ற சிந்தனையை உருவாக்குவதற்கும் விவேகானந்தரின் உரைகள் உரமாக விளங்கியுள்ளன என்பதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன.

பாரதியின் "ஆத்திச்சூடி' விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் எழுதப்பட்டது உண்மையேயானாலும் அது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களைத் தட்டியெழுப்புவதற்கும் வெள்ளையனுக்கெதிரான வீரச்சமரில் களமிறங்க வைப்பதற்கும் பாரதியின் ஆத்திசூடிகள் ஆயுதங்களாக விளங்கியுள்ளன என்பதை உணர முடிகிறது. அச்சம் தவிர், ஆண்மை தவறேல், ஏறுபோல் நட, ஒற்றுமை வலிமையாம், கீழோர்க்கு அஞ்சேல், குன்றென நிமிர்ந்து நில், கேட்டிலும் துணிந்து நில் , கொடுமையை எதிர்த்து நில், சரித்திரத் தேர்ச்சிகொள், சாவதற்கு அஞ்சேல், சிதையா நெஞ்சு கொள், செய்வது துணிந்து செய், தீயோர்க்கு அஞ்சேல், தேசத்தைக் காத்தல் செய், நினைப்பது முடியும், நேர்படப் பேசு, நையப் புடை, புதியன விரும்பு, பூமி இழந்திடேல், பெரிதினும் பெரிது கேள், பேய்களுக்கு அஞ்சேல், போர்த் தொழில் பழகு, ரெüத்திரம் பழகு, வீரியம் பெருக்கு, வெடிப்புறப் பேசு, வையத் தலைமை கொள் போன்ற பாரதியின் புதிய ஆத்திச்சூடிகள் மேலோட்டமாகப் பார்க்கிறபோது இளைஞர்களுக்குப் பொதுவான துணிச்சலையும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் மேலோங்கச் செய்வதற்காக கிட்டித்துச் சொல்லப்பட்ட வலுவான வரிகளாகத் தோற்றமளித்தாலும் பாரதி ஆத்திச்சூடிகளை எழுதிய காலகட்டத்தையும் பாரதியின் பிற படைப்புகளையும் முழுமையாக ஆய்வு செய்து அவற்றோடு இந்த ஆத்திச்சூடிகளையும் இணைத்துப் பார்க்கிறபோதுதான் இவற்றின் வீரியமும் நோக்கமும் நமக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரிய வருகிறது.

இதைப் போலவேதான் விவேகானந்தரின் ஒட்டுமொத்தக் கருத்துக்களையும் அவை சொல்லப்பட்ட சூழலையும், அந்த காலகட்டத்தையும், சொன்னவிதத்தையும், வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு ஆய்வுசெய்து பார்க்கிறபோதுதான் அவரது கருத்துக்கள் எந்த அளவுக்கு விடுதலைப் போராட்டத்திற்கு உரமாக விளங்கியிருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

பாரதியின் காலம் முழுக்க முழுக்க விடுதலைப் போரட்ட காலம் என்பதால் அப்போராட்டக் களத்தை மையப்படுத்தியும் மனதில் வைத்தும் பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி போன்ற அவரது படைப்புக்களும் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் போன்ற அவரது பிற படைப்புக்களும் பிரவாகமாக உருவெடுத்தன.

விவேகானந்தரின் காலம் தேசபக்த முயற்சியின் தொடக்க காலம். விடுதலைப் போரட்டமே ஒரு வடிவமாக உருவெடுக்காத இருண்ட காலம். ஒரு துறவி என்ற அடிப்படையில் தெய்வபக்தி, ஆன்மீகம் போன்றவையே விவேகானந்தரின் அடிநாதமென்றாலும் தேசபக்தியை தெய்வபக்தியோடு இணைத்து ஆங்கிலேயர்களுக்கெதிராகப் பிறர் சொல்லத் துணியாத அந்தக் காலத்திலேயே பல ஆழமான கருத்துக்களை அழுத்தமாகவும் உணர்ச்சியும் உயிரோட்டமும் கலந்த விதத்திலும் சொல்லியிருப்பது விவேகானந்தரின் தனித்தன்மையாகும்.

"உத்தம குணம் வாய்ந்த நல்லோர்களே ! செயல், செயல் புரியத் தொடங்குங்கள். தேச முன்னேற்றம் என்னும் தேர்ச்சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள். பெயருக்காகவோ, புகழுக்காகவோ அவைபோன்ற பொருளற்ற வேறு எந்த அற்ப விஷயத்திற்காகவோ திரும்பிப் பார்க்க நில்லாதீர்கள்! சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள் !' 

"நெருப்புச் சுவாலை போன்றிருக்கும் இளைஞர் குழு ஒன்றிற்குப் பயிற்சி தந்து, அதனைத் தயார் படுத்துங்கள். உங்களிடம் இருக்கும் ஊக்கத் தீயை அவர்களிடம் செலுத்துங்கள்'

"நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்! என் நம்பிக்கையெல்லாம் சென்னையிடமே இருக்கிறது. தங்கள் பணியைச் செய்து முடிப்பதற்காகத் தீயில் குதிக்க வேண்டியது அவசியமானால் அப்படியே செய்வதற்கும் என் குழந்தைகள் தயாராக இருக்க வேண்டும்.'

"நெருப்புப் பிழம்பு போன்ற இலட்சியப் பணியாளர்களின் குழு ஒன்று இப்போது எனக்குத் தேவை அறிவாற்றல் பொருந்திய தூய்மைமிக்க ஒரு நூறு இளைஞர்கள் முன் வாருங்கள். இந்த உலகையே மற்றி அமைக்கலாம்' "இந்த நாட்டில் பேரிகைகள் செய்யப்படுவதில்லையா? தாரைகளும் தப்பட்டைப் பறைகளும் இந்தியாவில் கிடைக்காமலா போய்விட்டன? இத்தகைய கருவிகளின் பெரு முழக்கத்தை, நமது குழந்தைகளைக் கேட்கச் செய்யுங்கள்'
"மிகப் பெரிய உண்மை இது - வலிமைதான் வாழ்வு, பலவீனமே மரணம். வலிமையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை' "ஓ ! சிங்கங்களே ! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறியாடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்'

"என்னால் எந்தக் குறைபாட்டையும் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் கோழைத்தனத்தை மட்டும் தாங்க முடியாது. ஒருவர் ஓர் அடி அடித்தால் இரண்டு மடங்கு கோபித்துப் பத்து அடிகள் திருப்பித் தரவேண்டும். இதுதான் ஆண்மை'

"ஏ... கோழையே ! முட்டாள்தனமாக என்ன பேசுகிறாய் ? இப்படி "முடியாது, முடியாது' என்று அழுது அழுதுதான் இந்த நாட்டையே நீங்கள் நாசமாக்கி விட்டீர்கள். மனித முயற்சியில் செய்ய முடியாதது என்ன இருக்கிறது ? 

எல்லாத் தீமைகளையும் எதிர்த்துப் போரிடு. எண்ணத்தில் ஏற்படும் தீமைகள் முதலிய எல்லாத் தீமைகளோடும் போரிட்டுக்கொண்டே இரு !'

"இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.

தைரியமான சொற்கள், மிகவும் தைரியம் நிறைந்த செயல்கள், வீரர்களாக்கும் கொள்கைகள் இவையே நமக்கு இப்போது வேண்டும்'

"இரும்பு போன்ற தசைகளும், எஃகு போன்ற நரம்புகளூம், எதனாலும் தடுக்க முடியாத வஜ்ராயுதம் போன்ற அளவற்ற மன வலிமையும் வாய்ந்தவர்களே நம் நட்டிற்கு இப்போது தேவை. இந்த அண்ட சராசரங்களின் அந்தரங்க இரகசியங்களையெல்லாம் ஊடுருவி ஆழ்ந்து அறியக் கூடிய மனவலிமை, ஆழ்ந்த கடலின் அடியாழத்திற்குப் போக வேண்டியிருந்தாலும் மரணத்தை நேருக்கு நேரே சந்திக்க வேண்டி வந்தாலும் எடுத்த காரியத்தை எவ்வாறேனும் முடிக்கும் அஞ்சா நெஞ்சம் - இவையே நமக்கு இப்போது வேண்டும்'

விவேகானந்தரின் உரைகள் , கடிதங்கள், உரையாடல்கள் போன்றவற்றிலிருந்து இத்தகைய ஏராளமான உணர்ச்சி கொப்பளிக்கும் வைர வரிகளும் வாக்கியங்களும் தெறித்து விழுவதை அவற்றை உற்று நோக்குகிற எவராலும் கவனிக்காமல் இருக்க முடியாது.

விவேகானந்தரின் இத்தகைய வரிகள் யாவும் பாரதியின் புதிய ஆத்திச் சூடிக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு முழங்கப்பட்டவை. அதனால்தான் பாரதி, விவேகானந்தரை " தேசபக்த மெய்ஞானி' என்று வரையறுத்துள்ளார்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com