கண்டதும் கேட்டதும் - 44

ராசுவும் முத்துவும் தனது அண்ணன் மேல் கடுங்கோபம் கொள்கின்றனர். அவரின் எதையும் நம்பும் வெகுளித்தனத்துக்கு தாங்கள் பலியாக விரும்பவில்லை என்று இருவரும் அவரைப் பிரிந்து மெட்ராஸ் செல்கின்றனர்.
கண்டதும் கேட்டதும் - 44

ராசுவும் முத்துவும் தனது அண்ணன் மேல் கடுங்கோபம் கொள்கின்றனர். அவரின் எதையும் நம்பும் வெகுளித்தனத்துக்கு தாங்கள் பலியாக விரும்பவில்லை என்று இருவரும் அவரைப் பிரிந்து மெட்ராஸ் செல்கின்றனர். அதிலும் ராசுவுக்கும் காவேரிக்கும் அன்றுதான் திருமணம் நடந்து இருந்தது.
தனது தம்பிகளின் பிரிவு கண்டு மிகவும் துயரம் அடைந்த பழனி, "இதயம் இருக்கின்றதே' என்ற பாடலைப் பாடுகின்றார்.

"இதயம் இருக்கின்றதே... - தம்பி
இதயம் இருக்கின்றதே...
(இதயம்)
ஒரு மரத்துக் கிளிகள் ஒன்றைவிட்டு ஒன்று
எங்கோ பறக்கின்றதே - தம்பி
எங்கோ பறக்கின்றதே...
கூட பிறந்துவிட்ட கொடுமையால் மேனி
கனலாய் கொதிக்கின்றதே - தம்பி
கனலாய் கொதிக்கின்றதே..
(இதயம்) 

ராசுவும் முத்துவும் மெட்ராஸ் வந்து ஒரு தொழிற்சாலையில் சேர்ந்து பணம் சம்பாதிக்கின்றனர். அவர்களின் குறிக்கோள் பணம் சேர்த்துக் கொண்டு தமது கிராமத்துக்குச் சென்று அங்கு நிலம் வாங்கி அண்ணனுக்குத் தர வேண்டும் என்பதே. ஆகவே அவர்கள் உணவுக்குக் கூட அதிகம் செலவு செய்யாமல் டீ, பன்னும் சாப்பிட்டு மீதமுள்ள காசினை உண்டியலில் சேர்க்கின்றனர். அந்தப் பணம் கொள்ளை போய்விடுகிறது. ராசு கலவரம் செய்ததாகக் கூறி போலீசாரால் சிறையில் அடைக்கப்படுகிறார். அப்போது பழனி தனது தம்பிகளைப் பார்க்க வர தம்பி ஜெயிலுக்குச் செல்வதும், தம்பி கிறித்துவ பெண்ணைத் திருமணம் செய்யும் சேதியைக் கேள்விப்பட்டதும் "அண்ணன் என்னடா... தம்பி என்னடா... அவசரமான உலகினிலே...'' என்ற பாடலைப் பாடுகிறார். 

"அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே...
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே...
...பணத்தின் மீதுதான் பக்தி என்றபின்
பந்தபாசமே ஏதடா...
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா'

இரண்டு தம்பிகளையும் பார்க்க முடியாத நிலையில் பழனி தனது வீட்டினை இடித்துவிட்டு, அந்த இடத்தில் ஏரினை தனது தம்பியர்களின் மனைவியர் மேல் சுமத்தி உழுகிறார். அப்போது அவரது தம்பி ராசு ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியில் வந்து பண்ணையாரிடம் நடந்த கொடுமைக்கு நியாயம் கேட்கச் செல்ல பண்ணையார் அவரின் துப்பாக்கியால் ராசுவைக் கொல்ல முயல, ராசு அவரின் துப்பாக்கியைப் பிடுங்கும் நிலையில் பண்ணையார் தப்பித்து வந்து கோயிலுக்குள் புகுந்து மறைந்து கொள்கிறார். ஆனால் ஊரே அவரைக் கொல்ல கூடி நிற்கிறது.

பழனி அனைவரையும் சமாதானப்படுத்துகிறார். அவருக்குத் தண்டனை தர நமக்கு என்ன இருக்கின்றது என்று கூறி, வேண்டுமானால் என்னைக் கொன்றுவிட்டு அவரை அதன் பின் கொல்லுங்கள் என்று நிற்கிறார். அப்போது போலீசார் வந்து பண்ணையாரைக் கைது செய்கின்றனர். அவர் இவ்வளவு நாட்கள் அனுபவித்து வந்த நிலங்கள் எல்லாம் கோயில் நிலங்கள் என்றும், மீதி உள்ளவை விவசாயிகளை ஏமாற்றி பறித்த நிலங்கள் என்றும் கூறுகின்றனர். அந்த நிலங்கள் கூட்டுறவு சங்கம் வசம் ஒப்படைக்கப்படுகிறது. அந்த நிலங்களை ஏழை விவசாயிகளுக்குப் பங்கிட்டு அளிக்கப்படுகிறது. 

பழனி படப்பிடிப்பு முடிந்ததும் பிலிம் ஏவிஎம் கஹக்ஷ க்கு பிரிண்டுக்கு வரும். அதனை கஹக்ஷ இல் பிரிண்ட் எடுத்து படத்தைப் பார்ப்பதற்கு அங்குள்ள தியேட்டருக்கு அனுப்புவார்கள். அப்போது சர்துல் சிங் சேத்தி எனது தந்தையாரிடம் அந்தப் படத்தினைப் பற்றி ""ஜனங்கள் விரும்புகிற மாதிரி இக்கதை அமையவில்லையே...'' என்று கூறினார்.

அதற்கு என் தந்தை அவரிடம் ""இது விவசாயிகளின் கதை. கிராமங்களில் விவசாயம் அழிவதால் என்னென்ன விளைவுகள் நகரத்தில் ஏற்படும் என்பதான கதை அம்சம் கொண்டது'' என்று கூறினார். 

""சரி நீங்கள் கூறுவது எனக்குப் புரிகிறது. ஆனால் இது ஜனங்கள் மத்தியில் எடுபடுமா?'' என்று கேட்டார்.

பழனி பின்னனி இசையின் போதுதான் "எங்க வீட்டுப் பிள்ளை' படத்திற்காக பின்னனி இசை அமைப்பும் நடந்து கொண்டிருந்தது. காலையில் வாகினி ஸ்டுடியோவில் "எங்க வீட்டுப் பிள்ளை' படத்துக்காக இசை அமைத்துவிட்டு, மதியம் பழனி படத்திற்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் வந்து இசை அமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மியூசிக் டைரக்டரும் அவரது இசைக் குழுவினரும், ""இந்தப் படம் பிரமாதமாக இருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கின்றன. ஆகவே இந்தப் படம் "எங்க வீட்டுப் பிள்ளை' படத்தைவிட நன்றாக ஓடும்'' என்றார்கள்.

ஆனால் "எங்க வீட்டுப் பிள்ளை' படம் நன்றாக ஓடியது. பழனி படம் சரியாக ஓடவில்லை. இதிலிருந்து படத்தினைப் பற்றி கஹக்ஷ இல் உள்ளவர்களின் கணிப்புதான் சரியாக அமையும் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால், அவர்கள் கதை அம்சத்தை மட்டுமே பார்ப்பார்கள். அதுவே சரியான கணிப்பாக இருந்தது. 

கதையில் ஒற்றுமையாக இருக்கும் அண்ணன் தம்பிகள் பிரிந்து நகரத்திற்கு வந்துவிடுவதும், அவர்களைத் தேடி பழனி நகரத்திற்கு வரும்போது அங்கு ரேசன் அரிசிக்காக மக்கள் வரிசையில் காத்திருப்பதைப் பார்த்த பழனி, "" நில்லுங்கடா நில்லுங்க... கிராமத்தைவிட்டு வந்துட்டீங்க இல்லையா அதுதான்டா உங்களுக்கே இந்த உணவுப் பஞ்சம்'' என்று கூறுவார். 

இந்த வசனத்தை சுட்டிக்காட்டிதான் சர்துல்சிங் சேத்தி டைரக்டர் பீம்சிங்கிடம் கூறினார்: ""சார்... இந்த வசனம் நீங்கள் எதிர்பார்க்குற நல்ல விளைவை ஏற்படுத்தாது. ஆனால் நிச்சயம் எதிர் விளைவைத்தான் நீங்கள் காண்பீர்கள். ஏனென்றால் உங்கள் படத்தைப் பார்க்கப் போகும் மக்களில் பாதிக்கு மேல் கிராமத்தைவிட்டு நகரத்தில் குடியேறியவர்களாகத்தான் இருப்பார்கள். எப்படி உங்களுடைய கதையில் சகோதரர்கள் விவசாயத்தை வெறுத்து அங்கு அவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தால், வஞ்சகத்தால் நகரத்துக்கு வந்தார்களோ... அதனைப் போன்றுதான் உங்கள் படத்தைப் பார்ப்பவர்களும் இருப்பார்கள்'' என்றார்.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட "பழனி' படம் சாந்தி தியேட்டரிலும், எம்.ஜி.ஆர். நடித்த "எங்க வீட்டுப் பிள்ளை' படம் காசினோ தியேட்டரிலும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆனது.

"ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்' என்பது போன்ற மிக அற்புதமான வரிகளைக் கொண்ட பாடலுடன் நல்ல இசை அமைப்புடனும், நல்ல காட்சி அமைப்புடனும் இருந்த அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆனது. 

விவசாயி என்பவன் வெயிலிலேயேதான் வாழ்வைக் கழிக்கிறார். அப்படி அவ்வாறு அவர் நிலத்தில் பாடுபடும்போது அவரது தோல் கறுத்து உடல் மெலிந்து விடுகிறது. ஆனால் பழனி படத்தில் வரும் நான்கு அண்ணன் தம்பிகளும் "கொழுகொழு' என்று நல்ல நிறத்தில் இருப்பதைப் பார்த்தவர்கள் இவர்கள் விவசாயிகளைப் போலவே இல்லையே என்று விமர்சனம் செய்தனர்.
அதோடு கூட பழனியின் குடும்பத்துக்கு பண்ணையார் பல கொடுமைகளைச் செய்தாலும் அவர் அந்தப் பண்ணையாரைத் தெய்வமாக மதிக்கும் வெகுளியாக கடைசிவரை காட்டப்பட்டிருந்ததும் மக்களால் நம்ப முடியாமல் போயிருக்கலாம். 

இத்தனை காரணங்களால் சர்துல் சிங் சேத்தி கூறிய கருத்தே உண்மையாக பழனி படம் அந்த காலகட்டத்தில் நன்றாக ஓடவில்லை. ஆனால் இன்றும் பொங்கல் பண்டிகை அன்று எல்லா டிவி சேனல்களிலும் அந்தப் படத்தின் பாடலோ அல்லது படமோ காண்பிக்கப்படுகிறது. 

தமிழ்ப் படமான ஆலயமணியை இந்தியில் "ஆத்மி' என்ற பெயரில் டைரக்டர் பீம்சிங் டைரக்ட் செய்தார். அந்தப் படத்தில் நடித்த மனோஜ்குமார் "பழனி' படத்தைப் பார்த்துவிட்டு, தானே அந்த படத்தை இந்தியில் செய்து கொள்கிறேன் என்று கேட்டுக் கொள்ள, அவருக்கு அனுமதியை டைரக்டர் வழங்கினார்.

மனோஜ்குமார், "உப்கார்' என்ற பெயரில் படத்தினை எடுத்து தானும் நடித்து டைரக்ஷனும் செய்தார். அது அவர் டைரக்ட் செய்த முதல் படம். அந்த கதையில் விவசாயியையும், போர்வீரனையும் மையப்படுத்தி எடுத்து இருந்தார். படம் மிகவும் நன்றாக ஓடியது.

பழனி படம் வியாபாரரீதியாக நன்றாக ஓடவில்லை. அதனைக் கண்டு அனைவரும் டைரக்டரிடம் இந்த படத்தில் நஷ்டம் விளைந்துவிட்டதே என்று கூற, ""சினிமாவில் வந்த லாபம் சினிமாவுக்குத்தானே சென்றது?'' என்று கூறினார்.

ஆனால் பழனி திரைப்படம் இந்திய அளவில் பிராந்திய மொழிகளில் தமிழில் நல்ல படமாக இந்திய அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனாதிபதி விருது அதற்கு கிடைத்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com