நீ... நான்... நிஜம்! -14: நன்றி வேண்டாமோ? நன்றி!

நன்றியற்றவர்களால் உலகம் எத்தனை துர்நாற்றம் உடையதாக ஆகிவிட்டது என்பதற்கு இரண்டு சம்பவங்களைச் சொல்கிறேன். 
நீ... நான்... நிஜம்! -14: நன்றி வேண்டாமோ? நன்றி!

நன்றியற்றவர்களால் உலகம் எத்தனை துர்நாற்றம் உடையதாக ஆகிவிட்டது என்பதற்கு இரண்டு சம்பவங்களைச் சொல்கிறேன். 

2017இல் ஆகஸ்டு மாதத்தில் மும்பையில் உள்ள ஓஷிவாரா அடுக்குமாடிக் கட்டிடத்தில், தன் சொந்த வீட்டிற்குச் சிலமாதங்கள் கழித்து வெளிநாட்டில் இருந்து, திரும்பிய மகனுக்கு ஓர் அருவருப்பான அதிர்ச்சி காத்திருந்தது. தொலைக்காட்சி முன்பு, நாற்காலியில், அழுகிய நிலையில் அவரது தாயாரின் உடலை எலும்புக் கூடாகத் தரிசிக்கும் தவம் அந்தப்புத்திரனுக்குக் கிடைத்தது. அவர் இறந்து சில வாரங்கள் ஆகிவிட்டன. ஏதோ கோபத்தால் சில வாரங்கள் முன்பு தொலைபேசியில் தாயுடன் பேசுவதை அவர் நிறுத்தி இருந்தார். அதனால் தாயார் இறந்தது கூட தெரியவில்லை, அவருக்கு. தனிமையில் வாழ்ந்த கிழவியைப் பற்றி அக்கம் பக்கமும் அதிக ஆர்வம் காட்டவில்லை. இன்று இத்தகைய பணக்கார அநாதைகள் இந்தியாவில் பலர் இருக்கிறார்கள். மேலே சொன்ன பணக்கார பிணத்தின் மகன் பெயர் ரித்துராஜ் அகானி, துரதிருஷ்டம் பிடித்த தாயின் பெயர் ஆஷா என்றும் படிக்க நேர்ந்தது. 

சாட்சியில்லாத சாவு மனித இனத்தின் மகத்தான அவமானம். ஆனால் இன்று இது சர்வ சகஜம். இப்போது இன்னொரு சம்பவம்... இராமாயணத்தில் கண்ணிழந்த தன் தாய் தகப்பனை, தராசு மாதிரி இரண்டு கூடைகளில் மகன் சுமந்து போன கதை படித்திருப்பீர்கள். ச்ரவண் என்ற அந்த மகனை தசரதர் அம்பால் கொன்று சாபம் பெறுகிறார் என்றும் படித்திருப்பீர்கள். அதே ச்ரவண் குமார் பிறந்த நாட்டில் பிறந்த திருவாளர் சந்தீப் நத்வானி தன் 64 வயது தாயாரை நான்காவது மாடிக்கு இழுத்துப்போய் கீழே தள்ளிக் கொன்றுவிட்டார் என்று செய்தித் தாளில் படித்தேன். சம்பவம் நடந்த நாள் 2017 டிசம்பர் 27. தாயார் தற்கொலை செய்துகொண்டதாக சந்தீப் நத்வானி சொன்னாலும் CCTV கேமராக்கள் மெüன சாட்சிகளாக இருந்து நீதி வழங்கி விட்டன. ஒரு வேளை தாய் தொல்லை தருகிற நபராகவே இருந்திருக்கலாம், என்றாலும் கொல்ல நமக்கு ஏது உரிமை? சென்னையிலும் ஒரு மகன் தாயைக் கொன்ற வழக்கு நடந்தது. இளைஞர்கள் ஏன் இப்படி ஈரமற்ற கொலைகாரர்கள் ஆனார்கள்?

வாழ்க்கை ஒரு லாபநஷ்ட வியாபாரமாகவே இன்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. நஷ்டம் தரும் தொழில்களை மூடி விடுவது போல, கஷ்டம் தரும் நபர்களையும் மூடி விட நம் நவீன புத்திரர்கள் முடிவு செய்து விட்டார்கள். செல்போனில்,கணினியில் DELETE பொத்தானை அடிக்கடி பயன்படுத்தி வாழ்விலும் மனிதர்கனை DELETE செய்கிறார்கள். பால் கொடுத்த தாயும் சரி, பசுவும் சரி பயனற்ற பிறகும் மதிக்கத் தகுந்தவர்கள் என்கிற பண்பாடு அன்பின் மொழி இரக்கத்தின் பாஷை. பசு மீது தாய் மரியாதை உண்டான பிறகு, கொல்ல மனம் வராது என்கிற உணர்ச்சிபூர்வமான பிணைப்பை மட்டுமே நான் சிலாகிக்கிறேன். நன்றி உணர்வு பண்பாடாக மனிதரிலிருந்து மாடு வரை விரிவடைவதாகவே நான் நினைக்கிறேன்.

நன்றியற்றவர்களால் சூழப்படுகிறவர்கள் நலிவடைகிறார்கள். நன்றி உள்ளவர்களால் பேணப்படுகிறவர்கள் சமூக அந்தஸ்து உடையவர்களாக வாழ்கிறார்கள். அதுமட்டுமல்ல முதுமையில் இயற்கையாக ஏற்படும் தூக்கமின்மை, DEPRESSION என்னும் மனச்சரிவிலிருந்து 35% மீள்வதற்கு நன்றி உடையவர்களது அன்பு உதவுவதாக ஓர் ஆய்வுத் தகவல் உள்ளது. இதற்கு மாறான எதிர்த்தரப்பையும் விளக்கி விடுகிறேன். முதியவர்கள் தம் பரம்பரை நன்றி செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அது தவறான எதிர்பார்ப்பு. ஆனால் இளைஞர்கள், கண்டிப்பாக நன்றியுடையவராகவே இருக்க வேண்டும். இதுவே உலகைச் சொர்க்கமாக்கும் வழி. முதியவர்கள் நன்றிக்கு ஏங்க, இளமை மறுதலித்தால் உலகம் நரகமாகிவிடும். இப்போது அதுதான் 
நடக்கிறது.

மும்பையில் இருக்கும் என் நண்பரின் நண்பர், தம் தாயின் கடைசிக்கால ஆசைகளை நிறைவேற்றும் பொருட்டு, தமது உயர்ந்த வேலையை விட்டு விட்டார். தமது சகல உறவினர்கள் வீடுகளுக்கும் போய்வருவதும் சில குறிப்பிட்ட கோவில்களில் சாமி கும்பிடுவதும் (ஆறுமாதத் திட்டம்) தாயின் அந்திம அவா. பிதுர்பக்தியை மெச்சி, ஆறுமாதம் விடுமுறை தரும் அலுவலக மடாலயங்கள் உலகின் எந்த மூலையிலும் இல்லை. ஓர் உணர்ச்சிப் பெருக்கால் மகன் உயர்ந்த பணியைத் துறந்தார். இன்று அவர் மனைவி மக்களுடன் ஒரு மூலையில் இருக்கிறார். சாதாரண வேலை... சபிக்கப்பட்ட ஒரு பணி... தாயோ தகப்பனோ அர்த்தமற்ற ஆசைகளுக்காகப் பிள்ளைகளின் எதிர்கால நலத்தைப் பலி கேட்பதை நான் நியாயப்படுத்தவில்லை. இன்னொரு வேதனையான சம்பவம் சொல்கிறேன். தம் மகனுக்குத் தமது சொந்த அண்ணன் மகளைக் கட்டி வைத்தார் ஒரு தாய். ஏதோ காரணங்களால் அவளைப் பிறகு ஒதுக்கியும் விட்டார். ""எங்களுக்கென்ன? எங்க சீமாச்சு பாத்துப்பான்'' என்று மகனைப் பற்றிப் பெருமை பேசி பெருமை பேசி சொந்த மகனது வாழ்வையே சூன்யமாக்கி விட்ட பெற்றோர்களையும் நான் பார்த்திருக்கிறேன்!

"என்னடா இவன்.. பிள்ளைகளுக்குப் புத்தி சொல்லிவிட்டுப் போக வேண்டியது தானே.. பெற்றோர்கள் தெய்வம் என்று மெய்சிலிர்க்க வைப்பதோடு நிறுத்தக் கூடாதா?' என்று உங்களில் சிலர் என்மீது கோபப்படலாம். நன்றி என்பது ஏதோ மக்களின் கடமை என்று பெற்றோர் புரிந்து கொண்டு விட வேண்டாம்.

இன்னும் சொல்வதானால் பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு நன்றியாக இருக்கப் பழக வேண்டும் என்கிறேன். நன்றியா? பிள்ளைக்கா? தகப்பனா? என்று என் மீது பாய வேண்டாம். "தந்தை மகற்காற்றும் நன்றி' என்கிற திருக்குறள் ஞாபகம் வரவேண்டாமா? நன்றி என்பது கொஞ்சம் பெரிய விஷயம். என் கச்சேரியில் அதுபற்றி கொஞ்சம் விஸ்தாரமாக ஆலாபனை செய்யப் போகிறேன். 

தமிழ்நாட்டுத் திருக்கோவில்களில், திருவிழாக் காலங்களில், இன்று யார் நாதஸ்வரம்? சிறப்புத் தவில் யார்? என்ற கேள்வி எழும். ஒரு சில இசை மேதைகளின் பிரதாபங்கள் ஊர் மக்களால் காலம்காலமாகப் பேசப்படும். ஒரு சம்பவம் சொல்கிறார் டாக்டர் சுந்தரம்: "" கற்பனை மிக்க ராக ஆலாபனை, பல்லவி - ஸ்வரம் முதலியவற்றில் மேம்பாடுடையவர் காளிதாஸ் பிள்ளை. ஒரு ராகத்தை எடுத்துக் கொண்டாரேயானால், நான்கு மணி நேரமாவது ஆலாபனை செய்தால்தான் இவருக்கு மனநிறைவு ஏற்படும். தொடர்ந்து வாசிப்பதில் இவர் சிறிதும் சோர்வுற மாட்டார். திருச்செந்தூரில் ஒரு சமயம் காளிதாஸ் பிள்ளையின் மேளம். முத்துபாகவதர் என்பவரின் வேண்டுகோளுக்கிணங்கி நடைபெற்றது. காளிதாஸ் பிள்ளை, நடபைரவி ராகத்தை ஆலாபனை செய்யத் தொடங்கினார். ராகம் முடிவதற்குள் பொழுது புலர்ந்துவிட்டது. ஸ்வாமியோ, ஆலயத்துக்குள்ளே செல்ல வேண்டியிருந்ததால், பாகவதர், பிள்ளையிடம், "" இன்றைக்கு இத்துடன் நிறுத்திக் கொண்டால், ஸ்வாமி கோயிலுக்குள் பிரவேசமாகும்... மீதியை நாளைக்கு வைத்துக் கொள்ளலாமே'' என்று கூறியதால், மேளம் முடிவுற்றது. 
மறுநாள் ஸ்வாமி புறப்பாட்டின்போது, மல்லாரிக்குப் பின்பு, காளிதாஸ் பிள்ளை நடபைரவி ராகத்தை, முதல்நாள் எந்த இடத்தில் நிறுத்தியிருந்தாரோ, அங்கிருந்து தொடங்கி அங்கிருந்து தொடங்கி விடியும் மட்டும் வாசித்த சிறப்பினைப் புகழ்ந்து கூறும் கலாபிமானிகள் திருச்செந்தூரில் 
இன்றுமிருக்கின்றனர்''

இந்தச் சம்பவம் மாதிரிதான் "நன்றி' என்ற மூன்றெழுத்து கீர்த்தனையை, மனிதகுலத்தின் மகாராகத்தை விஸ்தாரமாக ஆலாபனை செய்ய எனக்கு விருப்பம். நன்றி என்றால் நல்லது என்பது பொருள். எந்த நல்லதையும் நினைத்துப் பார்க்கிற குணத்தை விடக் கூடாது என்று தமிழ்நீதி நூல்கள் ஓயாமல் பேசுகின்றன. பசுவின் மடியை அறுத்தவனுக்குக் கூட பிராயச்சித்தம் இருக்கிறது. ஆனால் செய்நன்றி கொன்றவனுக்கு மன்னிப்பே இல்லை என்கிறது. திருவள்ளுவரும் நன்றி பற்றி பல இடங்களில் பாடுகிறார். நன்றி பற்றிய ஆலாபனையை அடுத்த வாரம் விரிவாகச் செய்ய இருக்கிறேன்.

"நன்றி' என்று ஒருவரிடம் சொல்வதன் மூலம் தான் நன்றியை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. கண் வணக்கம், கை கூப்பு, மனத்தளவில் மரியாதை, சொல்லில் பணிவு, கண்பனித்தல், பெயர் சூட்டல், வழிவகுத்தார் வழியில் ஒழுகல், மறவாது தன் வழிகாட்டியைக் கொண்டாடுதல், இப்படி ஒன்றல்ல... இரண்டல்ல... ஆயிரக்கணக்கான வழிகளில் நன்றி பாராட்டலாம். செயல்கள், வழிமுறைகள் இரண்டாம் பட்சமே. மனதில் உள்ள நன்றி உணர்வுதான் மிக முக்கியம்.

அரசியலில் மட்டும் நன்றி என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. பெருவாரியான அரசியல் வாதிகள் தாங்கள் யாரால் தலைமையிடத்திற்கு வருகிறார்களோ அவரது பெயர், படம், புகழ் இவற்றை முற்றிலுமாக அழித்தொழிக்க ஆசைப்படுவார்கள். என் நண்பர் ஒருவர், அவரது தலைமை மீது, அவருக்கு வெறிபிடித்த பக்தி. ஆனால் அந்தத் தலைமை மறைந்து அடுத்த தலைமை பொறுப்பேற்றதும் புதிய தலைமையால் அழைக்கப்பட்டார். அவரது லெட்டர் பேடில் உள்ள பழைய தலைமையின் படத்தை உடனடியாக எடுத்துவிட்டு, புதிய தலைமையின் படம் மட்டும்போடும்படி உத்தரவு பிறந்தது.
கனத்த இதயத்துடன் கண்ணீர் மல்க மறுத்தார். அவர் வீடு திரும்புமுன் அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. இந்த நன்றி கெட்டவர்கள்தான் உலகை நரகமாக்குகிறார்கள். இளைய தலைமுறை இந்த நன்றி கெட்டதனத்தை விட்டுவிட்டால் நாட்டுக்கு இன்னும் நல்லது என்றே கண்ணீருடன் சொல்கிறேன். அரசிய லில் என்றில்லை... சில மடாலயங்களில் கூட பழைய மடாதிபதிகளின் புதிய வாரிசுகள் பழைய மடாதிபதிகள் படங்களை அவசர அவசரமாக அப்புறப்படுத்தும் அசிங்கத்தை நான் பார்த்து வருந்தி இருக்கிறேன்.

(தொடரும்)    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com