சாதாரணமானதல்ல... தலைமைப் பொறுப்பு!

தலைமைப் பதவியில் இருப்பவர்கள் அதை ஒரு பதவி என நினைக்காமல் அதை ஒரு பொறுப்பு என உணர்ந்தால் மட்டுமே தேவையான இலக்குகளை எட்ட முடியும்.
சாதாரணமானதல்ல... தலைமைப் பொறுப்பு!

தலைமைப் பதவியில் இருப்பவர்கள் அதை ஒரு பதவி என நினைக்காமல் அதை ஒரு பொறுப்பு என உணர்ந்தால் மட்டுமே தேவையான இலக்குகளை எட்ட முடியும்.
உதாரணமாக ஒரு நிறுவனத்தில் தலைமையிடத்தில் இருப்பவர், தனக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் வேலை வாங்க மட்டுமே செய்தால் அவருக்கு உரிய பலன் கிடைக்காது. அந்த பணியாளர்கள் தாங்களாகவே உணர்வுப்பூர்வமாக வேலைகளைச் செய்யும்படி தலைமைப் பதவியில் இருப்பவர் அவர்களை மாற்றினால், இலக்குகளைத் தாண்டி வெற்றி நடை போட முடியும்.
தலைமையிடத்தில் இருப்பவருக்கு அசாத்திய பொறுமை அவசியம். பணியாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் பண்பு அவசியம். பணியாளர்கள் செய்யும் பணி சரி அல்லது தவறு என்பதை சரியாக சுட்டிக்காட்டும் திறமை அவர்களுக்கு வேண்டும். அப்படிப்பட்ட பண்பு, திறமைகள் இருக்கும்போது மட்டுமே பணியாளர்கள் முழு மனதோடு தலைமைப் பதவியில் இருப்பவரை ஏற்றுக் கொள்வார்கள்.
ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் உரிய நேரத்தில் பள்ளிக்கு வராவிட்டால், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், பிற பணியாளர்களை உரிய நேரத்தில் வராததற்காக கண்டிக்க முடியாது. எனவே ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் தலைமைப் பதவியில் உள்ளவர்கள் அந்த நிறுவனத்துக்கே முன்மாதிரியான ஒருவராக இருக்க வேண்டியது அவசியம்.
அது போல் தலைமையாசிரியர் - ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் எல்லாரையும் ஒரே மாதிரியாக கையாளக் கூடாது. அப்படிச் செய்தால், விளைவுகள் விபரீதமாகிவிடும். யாரை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை உணர்ந்து தலைமைப் பதவியில் இருப்பவர் செயல்பட வேண்டும்.
தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், உதவியாளர்கள் மட்டுமே அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். உதவியாளர்கள் விடுப்பில் சென்று விட்டால் நிறுவனத்தின் எந்தவொரு விஷயங்களும் தெரியாமல் சிரமப்படுவார்கள்.
தலைமையிடத்தில் இருப்பவர்கள் அனைத்துப் பணிகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் தனக்குக் கீழ் பணிபுரிபவர்களை முறையாக வேலை வாங்க முடியும். யார் வந்தாலும் வராவிட்டாலும் பதற்றமின்றி நிறுவனத்தை நடத்திச் செல்ல முடியும்.
இன்னும் சிலர் இதற்கு மாறாக, தனக்கு கீழுள்ளவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் தாங்களே செய்வார்கள். இதுவும் தவறு. முடிந்தவரை பணியாளர்களை வைத்தே வேலைகளைச் செய்ய வேண்டும். பணியாளர்களின் ஒத்துழைப்பில்லாமல் எந்த ஒரு நிறுவனமும் லாபகரமான பாதையில் நடைபோட முடியாது. பணியாளர்களின் முழு ஒத்துழைப்பை ஏற்படுத்துவதே தலைமைப் பொறுப்பில் உள்ளவரின் பணி.
ஆனால் யார் எந்தப் பணியைச் செய்தாலும் அந்தப் பணி முழுமைக்கும் தலைமைப் பொறுப்பில் உள்ளவரே பொறுப்பாளியாகிறார். ஆகவே அனைத்துப் பணிகளையும் முறையாக கண்காணிக்கும் வழிமுறைகளை தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் ஏற்படுத்த வேண்டும்.
அலுவலக நன்மை கருதி கூடுதலாக வேலை நேரத்துக்கு அப்பாலும் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு, தேவைப்படும் நேரத்தில் தாமத வருகைக்கோ அல்லது வேலை நேரம் முடிவதற்கு முன்னதாக வீட்டிற்குச் செல்வதற்கோ அனுமதி அளிப்பவர்கள் மட்டுமே சிறந்த தலைமைப்பண்பு உடையவர்களாக இருக்க முடியும். அவர்கள் எளிதாக பணியாளர்களிடம் வேலை வாங்கி நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்வார்கள் என்பது உறுதி.
கொடுத்த பொறுப்பை மட்டும் முடிப்பவர் தலைவர் அல்ல. கூடுதலான பொறுப்புக்களை தாமாகவே ஏற்றுச் செயல்படுபவர்களே தலைமைப் பதவிக்குத் தகுதியானவர்கள்.
தலைமைப் பதவிக்கு வர யார் வேண்டுமானாலும் விரும்பலாம். ஆனால் அதற்குரிய பண்புகளை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இப்போது சொல்லுங்கள்... தலைமைப் பதவி என்பது சாதாரணமானதா?
- வி.குமாரமுருகன்



 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com