பசுமைக்கு உயிர் கொடுக்கும் சுவர் தோட்டங்கள்!

நாம் வாங்கும் ஒவ்வொரு பிளாஸ்டிக் உறை, பாட்டில்கள், பைகள் ஆகியவற்றின் மூலம் நம் நாட்டின் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
பசுமைக்கு உயிர் கொடுக்கும் சுவர் தோட்டங்கள்!

நாம் வாங்கும் ஒவ்வொரு பிளாஸ்டிக் உறை, பாட்டில்கள், பைகள் ஆகியவற்றின் மூலம் நம் நாட்டின் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதனால் ஏற்பட்டு வரும் பிரச்னைகள், வரவிருக்கும் அபாயங்களைத் தெரிந்திருந்தாலும், நம் அன்றாட வாழ்வில் ஒட்டிக்கொண்டுவிட்ட இந்த பிளாஸ்டிக்கை கைவிட முடியாமல் நாம் பரிதவித்துக் கொண்டிருக்கிறோம். 
ஆனால், பயனற்ற பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு நாட்டில் முதன்முறையாக பஞ்சாப் மாநிலம், லூதியானா ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தோட்டம் (Vertical Garden) பிளாஸ்டிக்கின் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது. ஆம், இந்த செங்குத்து தோட்டம் என்னும் சுவர் தோட்டம், காற்று மாசுபாட்டை குறைத்து ரயில் நிலையத்துக்கு ஒரு பசுமைப் போர்வையாக மாறியிருக்கிறது.
இந்திய ரயில்வேயின் ஃபெரோஸ்பூர் கோட்டம், லூதியானா வருமானவரித் துறை இரண்டும் இணைந்து கடந்த ஜூலை 24-ம் தேதி இதற்கான முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளன. 
உள்நாட்டு வருவாய் சேவை (Internal Revenues Service) அதிகாரி ரோஹித் மெஹ்ராவின் சிந்தனையில் உருவான இந்த செங்குத்து தோட்டம் திட்டத்தை, லூதியானா ரயில் நிலையத்தில், ரயில்வே கோட்ட மேலாளர் விவேக் குமார், வருமான வரித் துறை முதன்மை ஆணையர் பினய் கே ஜா (Binay K Jha) ஆகியோர் தொடக்கிவைத்துள்ளனர். 
இதுகுறித்து ரோஹித் மெஹ்ரா கூறுகையில், "சிங்கப்பூரில் செங்குத்து தோட்டங்கள் மட்டுமல்லாது, வீட்டின் மாடியிலும் தோட்டங்களை அமைத்துள்ளனர். ஆனால், அதற்காக அவர்கள் விலை உயர்ந்த தொட்டிகளைப் பயன்படுத்துகின்றனர். நான் இந்தியா வந்தபிறகு, அந்த விலை உயர்ந்த தொட்டிகளுக்குப் பதிலாக பயனற்ற பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்த முடிவுசெய்தேன். ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு முதன்முதலில் என் வீட்டில் செங்குத்து தோட்டத்தை அமைத்தேன். அதன் பிறகே, இதுபோன்ற தோட்டத்தை ஏன் என்னுடைய அலுவலகத்திலும் அமைக்கக்கூடாது என்ற சிந்தனை வந்தது. உடனடியாக அங்கேயும் இந்த தோட்டத்தை அமைத்துவிட்டோம்'' என்கிறார்.
மெஹ்ராவின் அலுவலகத்தில் தற்போது பயனற்ற 18 ஆயிரம் பிளாஸ்டிக் பாட்டில்கள், தாவரங்களை வளர்க்கும் பாட்டில்களாக மாறியிருக்கின்றன. அதோடு அவர் நிறுத்திவிடவில்லை. அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கோயில்கள், விடுதிகள், வீடுகள் போன்றவற்றில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் சுவர் தோட்டங்களை அமைத்து சுற்றுப்புறங்களை பசுமையாக மாற்றுவதில் அனைவருக்கும் உதவி வருகிறார். இவரது முயற்சியால், லூதியானாவில் உள்ள குருத்துவாராவில் 37 ஆயிரம் பாட்டில்களைக் கொண்டு செங்குத்து தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டால் அதிகமாகப் பாதிக்கப்படும் மாநிலங்களாக புதுதில்லியும், பஞ்சாப்பும் உள்ளன. இதுகுறித்து மெஹ்ரா கூறும்போது, "நம் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் கோடைக்காலம், மழைக்காலம் என 2 நீண்ட விடுமுறை நாள்களை மட்டுமே கொண்டுள்ளன. ஆனால், என் மகனுக்கு 3-வது நீண்ட விடுமுறை நாள்களாக உள்ளது "புகை விடுமுறை' (காற்று மாசு)'' என்கிறார். 
அவருடைய இந்த வார்த்தைகள் வேடிக்கையானதாகத் தோன்றினாலும், அது தீவிரமாக யோசிக்க வேண்டிய, மிக முக்கிய பிரச்னையை உள்ளடக்கியது என்பது அனைவருக்கும் தெரியும். 
கடந்த ஆண்டு சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் லூதியானா நகரைப் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது, அதன் காற்றுத் தர குறியீடு (Air Quality Index) 274 ஆக பதிவாகியிருந்தது. அதேநேரத்தில், அவர்கள் ரோஹித் மெஹ்ராவின் அலுவலகத்தில் ஆய்வுசெய்த போது, அங்கு காற்றுத் தர குறியீடு ஆச்சர்யமூட்டும் வகையில், 78 ஆக இருந்தது. மொத்த நகரமும் சுவாசிப்பதற்கான தூய காற்றுக்காக போராடிக்கொண்டிருந்த போது, மெஹ்ராவின் அலுவலகத்தில் இருந்த சுவர் தோட்டங்கள் காற்று மாசுபாட்டை எதிர்த்து அமைதியாகப் போராடிக்கொண்டிருந்தன. 
இதுகுறித்து மெஹ்ரா கூறுகிறார்... "பஞ்சாப் முழுக்க அமைக்கப்பட்டுள்ள 75 செங்குத்து தோட்டங்களில் இதுவரை 2 லட்சம் தாவரங்கள் நடப்பட்டுள்ளன. இதன்மூலம், 2 லட்சம் பயனற்ற பிளாஸ்டிக் பாட்டில்கள் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. நகரச் சூழலில் காடுகளை மீண்டும் கொண்டுவருவது, சுத்தமான, பசுமை பணியிடத்தைப் பெறுவது, சுற்றுச்சூழலைக் கெடுக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களையே இதற்குப் பயன்படுத்துவது, உடன் பணியாற்றுவோரை சூழல் உணர்வு கொள்ளச் செய்வது போன்றவையே என்னுடைய இந்த சுவர் தோட்டத்தின் நோக்கம். 
மிகவும் செலவு குறைந்த இந்தத் திட்டத்தால், தோட்டம் அமைக்கப்பட்ட சுவரின் உள் அறைகளில் 5-7.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைகிறது. மிகச் சிறந்த உயிரினப் பரவலுக்கும் இந்த சுவர் தோட்டங்களால் வாய்ப்பு ஏற்படுகிறது. நாம் மறந்துவிட்ட பல பறவைகளை இப்போது நம் கண்முன்னே காணமுடிகிறது'' என்கிறார் மெஹ்ரா.
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com