மந்திரத்தில் காய்க்கும் மாங்காய்கள்! - சுகி. சிவம்

உய்யக் கொண்டான் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. கடலே லட்சியம் என்று ஒவ்வொரு துளியும் லட்சியத்தை நோக்கி ஓடும்போது கழுத்தளவு தண்ணீரில் கால்பரப்பி நின்றபடி கந்தர்வ கானம் இசைத்துக் கொண்டிருந்தான்
மந்திரத்தில் காய்க்கும் மாங்காய்கள்! - சுகி. சிவம்

நீ... நான்... நிஜம்! -31
உய்யக் கொண்டான் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. கடலே லட்சியம் என்று ஒவ்வொரு துளியும் லட்சியத்தை நோக்கி ஓடும்போது கழுத்தளவு தண்ணீரில் கால்பரப்பி நின்றபடி கந்தர்வ கானம் இசைத்துக் கொண்டிருந்தான் அந்தச் சிறுவன். மற்றைய சிறுவர்கள் நீந்திக் குளித்த நேரத்திலும் சங்கீதத்தை ஏந்திக் களித்தான் அந்தச் சிறுவன். மணிக்கணக்கில் பாடுவான். "கணீர்' என்று குரல் மெருகேறியது. பிற்காலத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் அந்தக்குரல் வளத்தில் சொக்கிப் போனார்கள்... அவ்வளவு கடுமையான சாதகம் செய்த சிறுவன் யார் தெரியுமா? மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜன். சுருக்கமாகச் சொன்னால் M.K.T. பாகவதர். சினிமா உலகமே அந்த கந்தர்வக் குரலுக்குத் தலை சாய்த்தது. ஆற்றில் பாடிவிட்டு வீட்டுக்கு வந்தாலும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பாடுவார்... பாடுவார்... பாடிக் கொண்டே இருப்பார். அதனால் உயர்ந்தார்.
வாழ்வில் உயரப் பறந்தவர்கள், உச்சாணிக் கிளை தொட்டவர்கள், சிகரம் ஏறிய சிறந்த மனிதர்கள், மந்திரக் கோல் கொண்டு மகத்துவம் பெறவில்லை. அதிர்ஷ்டக் காற்று அள்ளிக் கொண்டுபோய் கோபுரகலசத்தில் குடியமர்த்தியதில்லை. மிக நேர்த்தியான கனவுகளும் அந்தக் கனவுகளை நனவாக்கும் மிகக்கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், விடா முயற்சியும் கொண்டுதான் மேலே வந்திருக்கிறார்கள். சினிமாவில் வருகிற மாதிரி, முதல் சீனில் காக்கிச் சட்டையுடன் ஆட்டோ ஓட்டுகிறவர் அடுத்த சீனில் ஆடிகாரில் ஆடிப்பாடி காதலியின் கழுத்தில் கைபோட்டு உலா வர முடியாது. சினிமா இதை அனுமதிக்கும். வாழ்க்கை இதனை நிராகரிக்கும். அரை அங்குல முன்னேற்றம் என்பது கூட அசுர சாதனை இல்லாமல் நடப்பதில்லை. அரசியலிலும், சினிமா தொலைக்காட்சி ஊடகங்களிலும், ரியல் எஸ்டேட், மற்றும் கொள்ளை வணிக வட்டங்களிலும் சிலர் குறுகிய காலத்தில் முன்னேறி பிரகாசிப்பது அருவருத்தக்க உண்மைதான். மறுப்பதற்கில்லை. அவர்கள் வாழ்வு அசிங்கமானது... இந்த முன்னுதாரணங்களை நம்பி முன்னேற நினைப்பது நல்லதல்ல.
பீத்தோவன் உலகப்புகழ்பெற்ற பியானோ இசைக் கலைஞர். அவரது கச்சேரி முடிந்ததும் ஒரு பெண்மணி ஓடிவந்து பியானோ வாசித்த அவரது இருகரங்களையும் இறுகப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டாள். பின்னர் ஆ... இந்தக் கைகள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட விசேஷமான கைகள் என்றபடி கைகளை முத்தமிட்டாள். பீத்தோவன் சிரித்தபடி, "அம்மணி... ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் வீதம், நாள் கணக்கில், மாதக்கணக்கில், ஏன் வருடக் கணக்கில் வாசித்துப் பழகினால் உங்கள் கைகளும் கடவுளின் ஆசி பெற்ற கைகள் ஆகிவிடும்'' என்றார்.

கொங்கு நாட்டில் ஒரு சொலவடை உண்டு. "நோகாம நோம்பி கும்பிட்றியா?'' என்பார்கள். அதாவது கஷ்டப்படாமல் பண்டிகை கொண்டாட ஆசைப்படுகிறாயே என்கிற கண்டனம் தான் அந்தச் சொலவடை. நோன்பு என்பது தவம், முயற்சி, வழிபாட்டைக் குறிக்கும். நோதல்.. வருந்துதல் இன்றி நோன்பு இல்லை என்பது வலுவான செய்தி.
மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார்கண் துஞ்சார் 
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி 
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்
என்கிற குமரகுருபரர் அருளிய நீதிநெறி விளக்கம் இன்று பலருக்கும் தெரியவில்லை. இந்த உலகில் இலர் பலரான காரணம் நோற்றார் சிலர்... நோலாதார் பலர் என்பார் வள்ளுவர். நோற்றல் என்பது சாமிகும்பிடுவது மட்டுமல்ல. எடுத்த காரியத்தில் மனஒருமை... உடல் வலி கருதா உறுதிநிலை... கஷ்டநஷ்டங்களைப் பொருட்படுத்தாது லட்சியத்திற்காக உழைத்தலே நோற்றல். நோற்றால் தான் வெல்ல முடியும் என்பது வள்ளுவர் வகுத்தவழி. நோகாமல் நோன்பு நோற்றல் ஆகாத காரியம்.
ஆப்ரகாம் லிங்கன் புத்தக ஆர்வலர். அறிவு பெற அதுவே அதிகம் உதவும் என்று வெறி கொண்டு புத்தகங்களைத் தேடுவார். ஒரு முறை ஆங்கில இலக்கணம் பற்றிய நூல் ஒன்றைப் படிப்பதற்காக, கிர்காம் என்ற ஊருக்கு இருபது மைல்கள் நடந்தே சென்று வாங்கி வந்தார் என்று படித்திருக்கிறேன். நேரில் சென்று வழக்குகளைக் கவனித்தால் தான், சிறந்த வழக்கறிஞராக ஆக முடியும் என்று வீட்டிலிருந்து பதினேழு மைல் தொலைவிலிருந்த நீதிமன்றம் வரை நடந்து போய் கவனமாக, வழக்குகளை, விவாதங்களை உள்வாங்கும் உழைப்புடையவர் லிங்கன். ஒருமுறை ஜான்பெக்கன் ரிட்ஜ் என்கிற புகழ்பெற்ற கிரிமினல் வழக்கறிஞர் வாதத்திறனை நேரில் காண முப்பத்து நான்கு மைல்கள் நடந்து போய் பார்த்தார், என்று அவரது வாழ்க்கை வரலாறு சொல்கிறது. நோகாமல் நோன்பு கும்பிட முடியாது என்பது அமெரிக்கனுக்கும் பொருந்தும். 
தமது இருபத்து மூன்றாம் வயதில், சென்னையில் சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து, யானைகவுனி தாண்டி பீபிள்ஸ் பார்க் வரை கையில் வீணையைத் தூக்கிக் கொண்டு - கவனிக்க - கையில் வீணையைத் தூக்கிக் கொண்டு, வீணை ஆசிரியர் ப்ரம்மஸ்ரீ தென்மடம் வரதாச்சார்யார் வீடு வரை தினம் தோறும் நடந்துபோய் ஓர் இளைஞர் வீணை பயின்றார். பின்னாளில் கதாகாலட்சேபத்தில் அவருக்கு ஈடு இணை இல்லை என்றுயர்ந்த திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் தான் அவர்கள். 
உலகின் மிகப் பழமையான மக்கள் வாழும் இடம், ஆப்பிரிக்க கண்டம். அங்கு வாழும் பழங்குடி மக்கள் வேட்டையாடிப் பிழைப்பதை யூ ட்யூப் வழி பார்த்தேன். குடிநீர் கூட அவர்களுக்குப் பெரும் பிரச்னை. கடும் வெயிலில் பல மைல்கள் நடந்து அந்தப் பாலைவனக் காடுகளில் இரை தேடுகிறார்கள். ஏதோ ஒருவகை செடியை வேரோடு பிடுங்கி அதிலுள்ள வேர்க்கிழங்கை எடுத்து தோல் சீவி, கத்தியால் கிழங்கைச் சீவி தங்கள் வலிமையான கைகளால், அப்படிச் சீவியதைப் பிழிந்து, சொட்டுச் சொட்டாகக் கிடைக்கும் நீரை அருந்துகிறார்கள். வாழ்வாதாரம் பெற எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதைப் பார்த்து நான் மலைத்துப்போனேன்.
கூடுதல் குடிநீரை, அந்தப் பாலைவனக் காடுகளில் பெற, அவர்கள் கையாளும் யுக்திகளைப் பார்த்தால் ஆச்சர்யப் படுவோம். வேட்டைக்குப் போன ஒருவர் இரையைத் துரத்திக் களைப் படைகிறார். உயிருக்குப் பயந்து ஓடும் ஒரு மிருகத்தின் வேகத்தைச் சிறிது நேரம் தான் மனிதன் கைக் கொள்ள முடியும். தொடர்ந்து ஓட முடியாது. சுட்டெரிக்கும் வெயில் வேறு ... வியர்வை வழி இருக்கிற நீரும் வெளியேறி விடுகிறது... அவருக்கு இரை கூட இப்போது முக்கியமில்லை... தண்ணீர் அதி அவசியம். ஆப்பிரிக்கப் பழங்குடிகள் வறண்ட பூமியில் தண்ணீர் இருக்கும் இடத்தை அறிய அருமையான யுக்தியைக் கையாளுகிறார்கள்.
குரங்குகளைப் பிடிக்கிறார்கள். புற்றுபோன்ற மண்ணுள் மறைத்து வைக்கப்பட்டுள்ள பொறிமூலம் கைப்பற்றுகிறார்கள். கொஞ்சம் உணவை அதில் போட்டு விட்டு மரத்தின் பின் மறைந்து கொள்கிறார்கள். ஆர்வம் இயல்பில் (Curiosity) உள்ள குரங்குகள் அந்தப் பொருள் என்ன, என்று கைகளை உள்ளேவிட்டு அகப்பட்டுக் கத்துகின்றன. கயிற்றால் கட்டி குரங்கைச் சிறை வைத்துவிட்டு, அதிக தாகம் எடுக்கும் உணவை அதற்குத் தருகிறார்கள். பின் விளைவு அறியாத குரங்கு அதைத் தின்று விட்டு அசாத்தியமான தாகத்தில் தவிக்கிறது. சிலமணி கழித்து அதனை அவிழ்த்து விட்டதும், தலை தெறிக்கும் வேகத்தில் ஓடுகிற குரங்கு, பூமிப்பாறைக்குள் புதைந்துள்ள நீர் இருப்பை நோக்கிப் பாய்கின்றது. குரங்கைவிட வேகமாக ஓடி, குரங்கு நீர்குடிக்கும் மறைவிடத்தைக் கண்டுபிடித்துப் பயன்படுத்துவார்கள். வெற்றிபெற அல்ல.. உச்சம் தொட அல்ல.. உயிர் வாழவே வெறியுடன் பாடுபட வேண்டி இருக்கிறது. அப்படி இருக்க மந்திரத்தில் மாங்காய் காய்க்காதா என்று வாய்பிளந்து காத்திருப்பது அறிவுடமை ஆகுமா?
அண்ணாவின் "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' நாடகத்தில் நடிக்க எம்.ஜி.ஆர் மறுத்துவிட்டார். சங்கடப்பட்ட அண்ணா (சிவாஜி) கணேசனை அழைத்து, ""வீர சிவாஜியின் வசனங்களைப் படித்துவை... பார்ப்போம்'' என்று சொல்லி விட்டு வெளியே போய்விட்டு ஏழுமணி நேரம் கழித்துத் திரும்பும் சமயம் 90 பக்க வசனத்தையும், உணர்ச்சிப் பிழம்பாக ஏற்ற இறக்கத்துடன் நடித்துக் காட்டினார் சிவாஜி... ஒரு வெறி, ஆவேசம், விடாமுயற்சி இன்றி ஏழே மணி நேரத்தில் 90 பக்க வசனமும் ஒருவரால் மனப்பாடம் செய்ய முடியுமா என்ன?
இன்று இளையராஜா இசைஞானி.. ஆனால் பாவலர் வரதராசனின்ஆர்மோனியத்தை பாவலருக்குத் தெரியாமல் வாசித்தே தீர வேண்டும் என்று அவரது கைகள் ஆர்மோனியத்தில் நாட்டியமாடிய வெறி விவரிக்கக் கூடியதா? தூக்கத்தில் கூட அவரது விரல்கள் ஆர்மோனியம் வாசிக்கும் செயலையே செய்யும் என்று படித்திருக்கிறேன். பாவலரின் ஒப்புதலுக்கு அவர் பட்டபாடு, இன்று பலர் ஒப்புதலை வழங்க மூல காரணம் என்கிறார்கள். மந்திரத்தில் காய்த்த மாங்காய் புளிக்கும். தன் திறத்தில் பழுத்த வெற்றிக் கனிகளே இனிக்கும்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com