முயற்சியே வெற்றிக்கு முன்னோடி! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.

ஸ்பெயின் நாட்டு மன்னர் சார்லûஸ ஓர் இளைஞர், கையில் ஒரு வரைபடைத்தோடு சந்தித்தார். மன்னரிடம் அவ் வரைபடைத்தைக் காட்டி, "தாங்கள் வசதிகள் செய்து தந்தால் கடல் கடந்து,
முயற்சியே வெற்றிக்கு முன்னோடி! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.

தன்னிலை உயர்த்து! 5
ஸ்பெயின் நாட்டு மன்னர் சார்லûஸ ஓர் இளைஞர், கையில் ஒரு வரைபடைத்தோடு சந்தித்தார். மன்னரிடம் அவ் வரைபடைத்தைக் காட்டி, "தாங்கள் வசதிகள் செய்து தந்தால் கடல் கடந்து, கிழக்கு இந்திய தீவுகளுக்கு சென்றுவர முடியும், அது உலகத்தின் புது முயற்சியாக இருக்கும்'' என்றும் விவரித்தார். மன்னரும் அவ்விளைஞரின் புதிய முயற்சிக்கு தலையசைத்தார். ஐந்து கப்பல்களில் 265 மாலுமிகளோடு, பல ஆயிரம் கிலோ உணவுப் பொருள்களோடு, அவர்களின் கடற்பயணம் துவங்கியது. பல செங்குத்தான மலைகளுக்கு நடுவிலும், ஆர்ப்பரிக்கும் கடல் அலையை எதிர்கொண்டதில் உணவு பொருள்களுடன் வந்த கப்பலும், மற்றொரு கப்பலில் வந்தவர்களும், அவ்விளைஞனிடம் சொல்லாமலேயே சொந்த நாட்டிற்கே திரும்பினர். உணவு பொருட்கள் தீர்ந்து போயின. பிளேக் நோய் தாக்கியது. கடல் ஒவ்வாமையால் சிலர் இறந்தனர். அவர்களுக்குள்ளே ஏற்பட்ட கலகத்தினால் சிலர் இறந்தனர். கடைசியில் மூன்று கப்பல்களில் இருந்தவர்கள் முதல் மணற்பரப்பை அடைந்தனர். 
இப்படி பல தீவுகளைக் கடந்தனர். பிலிப்பைன்ஸ் தீவினுடைய தலைவனுக்கு உதவியாய் இவ்விளைஞன் செல்ல, எதிரிப் படையினரால் கொல்லப்பட்டான். ஆனாலும் அவ்வீர இளைஞனின் முயற்சி தோற்றுவிடக்கூடாதே என்பதற்காக எஞ்சியிருந்தவர்கள் தொடர்ந்து பயணித்தனர். அவர்கள் பயணம் உலகத்தை ஒருமுறை சுற்றி வலம் வந்தனர் என்ற பெருமையைத் தந்தது. உலகம் உருண்டை என நிரூபிக்கப்பட்டது. அப்போது அந்த வீர இளைஞன் மெகல்லன் உயிரோடு இல்லை. ஆனாலும், மெகல்லனின் முயற்சிதான் இன்னும் வரலாற்றில் முதன் முதலில் உலகைச் சுற்றி வந்தவர் பெயரில் முன்னிறுத்தப்படுகிறது. ஏனெனில் அது ஒரு சாதாரண முயற்சி அல்ல. வரலாற்று முயற்சி. தட்டையானதுதான் உலகம் என உலகத்தில் ஒவ்வொரு பகுதியில் வாழ்ந்தவர்களெல்லாம் நம்பிக் கொண்டிருந்தபோது உருண்டை என்று சில அறிவு ஜீவிகளும், அறிஞர்களும் தங்களது கோட்பாடுகளால் சொல்லிக்கொண்டிருந்ததை, செயல்பாட்டின் மூலம் நிகழ்த்தி காட்டிய முயற்சி இது. மெகல்லன் சுற்றி வரவில்லை. ஆனால், அவரது முயற்சி வெற்றி கண்டது. "முயற்சிகள் தவறலாம்; முயற்சிக்கத் தவறாதே' என்ற வரிகளுக்கு உலகின் மிகச் சிறந்த உதாரணமாக மிளிர்ந்தவர் மெகல்லன். 
வெற்றியாளர்கள் மட்டுமல்ல, எவருக்கும் முயற்சி இல்லை என்றால் வளர்ச்சி இல்லை. பிறந்த குழந்தை, தவழ முயற்சிக்கிறது; பின்னர் நடக்க முயற்சிக்கிறது; பேச முயற்சிக்கிறது; இப்படி ஒவ்வொரு முயற்சியும்தான் அக்குழந்தையை வளர வைக்கிறது. இவையனைத்தும் குழந்தைகள், தங்களது பெற்றோர்களைப் பார்த்து அப்படியே பிரதிபலிக்கின்றனர். Children learn by imitation என்பார்கள். ஆனால் வளர்ந்த பிறகும், வாழ்க்கை முழுவதும் பிறரின் பிரதிபலிப்பாயிருந்தால் தோல்வி. வாழ்வெல்லாம் முயற்சியானால் வெற்றி. 
இராபர்ட் ப்ரோஸ்ட் என்னும் அமெரிக்க நாட்டு கவிஞர் ஒரு முறை ஒரு காட்டினில் ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்றார். நடுக்காட்டில் அப்பாதை இரண்டாகப் பிரிந்தது. ஒரு பாதை மனிதர்கள் அடிக்கடி பயணித்த, தெளிவான பாதை. 
மற்றொன்று அடிக்கடி பயணிக்காத காய்ந்த சருகுகளால் மூடியிருந்த தெளிவற்ற பாதை. அதிகம் பயணிக்காத இரண்டாது பாதையில் பயணித்தார். அப்புதிய முயற்சியினால் புதிய அனுபவம் கிடைத்தது. அற்புதக் கவிதைகளை அகிலத்திற்கும் தந்தார். The Road Not Taken என்னும் அக்கவிதையில், "அதிகம் பயணிக்காத பாதைகளில் நடக்க கற்றுக்கொண்டவர் வாழ்க்கை, அதிகம் வாசிக்கப்படும்' என்கிறார். தனது புகழுக்கு காரணம் புது முயற்சியே என்கிறார்.
எவரெஸ்டில் முதலில் ஏறிய எட்மண்ட் ஹிலாரி, விண்வெளியில் முதலில் பயணித்த யூரி காகரின், அட்லாண்டிக் கடலை முதலில் நீந்திக் கடந்த பெனாய்ட் லோகம்ட், இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் சுசேட்டா கிர்ப்ளானி என முதல் முயற்சிகள் வரலாறாகிறது.
பாதைகளின் பயணங்கள் மட்டுமல்ல, முயற்சிக்க கற்றுக் கொடுத்தவை வாழ்வில் நிறைய இருக்கின்றன. ஆப்பிள் பழம் மட்டும் கீழே விழவில்லை. எல்லா மரத்திலிருந்தும் பழங்கள் கீழே விழுந்தன, விழுகின்றன, விழவிருக்கின்றன. அது ஏன்? எப்படி? எதற்கு? என்ற கேள்விக்கு நியூட்டன் விடை காண முயற்சி செய்தபோது புவியீர்ப்பு விசை கிடைத்தது. 
இதைப்போலவே, "பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்; எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்' என்ற வரிகளுக்கேற்ப இவ்வுலகில் நாம் முயற்சிப்பதற்கான சூட்சுமங்கள், கற்பாறைகளிலும், பறவைகளுக்குள்ளும், வெளித்தெரியாமல் படிந்திருக்கின்றன. உலகில் மறைந்துள்ள படிமங்களின் ஆற்றல்களை வெளிக்கொணர்கின்ற ஒவ்வொரு முயற்சியும் அரிய கண்டுபிடிப்புகளே.
முயற்சிகள் எல்லோரும் எடுப்பதுண்டு. முயற்சிகளை எவரும் திரும்பி பார்க்கவில்லையென்றால், அது சாதாரண செயல். சிலர் பார்க்க முற்பட்டால் அது வித்தியாசமானது. இது கடினம் என பேசத்தொடங்கினால், அது பெரும் செயல். இது முடியாதென்று உலகம் பேசினால் அது வரலாறு. 
தமிழகத்தின் ஜி.டி, நாயுடுவும், ஜப்பானியர் ஹோன்டாவும், தங்களது முயற்சியால் உலகைத் திரும்பிப்பார்க்க வைத்தவர்கள்.
வாழ்வின் தேடல் முயற்சியில் பிறக்கிறது. அது முட்டையிலிருக்கும் குஞ்சு, அதன் மேலுள்ள கடினமான ஓட்டினைக் தனது அலகால் கொத்தி, வெளிவருவதைப்போன்றது. முட்டையின் வெளி ஓடுகளை உடைத்து எந்தக் குஞ்சும் வெளிவந்ததாய் சரித்திரமில்லை. உள்ளிருக்கும் குஞ்சியின் முயற்சியில்தான் அதன் வாழ்க்கையே உள்ளது. 
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும் 
என்ற திருவள்ளுவரின் வரிகள் மூலம் நாம் மேற்கொள்ளும் செயல், நமக்கு சிறப்பினைத் தரும் என்று எண்ணும்போது முயற்சி ஆர்ட்டீசியன் போல் ஊற்றெடுக்கும். 
முயற்சி என்பது தொடங்கிவிட்டு முடிவு செய்வதல்ல. உயர உயர குதித்துப் பார்த்து, தன்னால் திராட்சைப் பழத்தைத் தின்ன முடியவில்லை என்றதும், அடுத்த முயற்சியைக் கைவிட்டு இந்தப் பழம் புளிக்கும் என்று கைவிடுவதல்ல முயற்சி. தன் அலகினால் குடுவையிலுள்ள நீரினைப் பருக முடியவில்லை என்றாலும், முயற்சியால் கற்களைக் குடுவையில் சேர்த்து, நீரினை மேலேறச் செய்து, பருகிய காக்கையின் வெற்றிதான் முயற்சி. மேலும், ஒரு செயலைத் தொடங்கி அது முடியாமல் போனதும் கைவிடுவது அல்ல, முயற்சி. செயலினை வெற்றியாக்க நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தான் முயற்சி.
1954- ஆம் ஆண்டு வரை உலகின் ஒட்டுமொத்த கட்டுரைகளும் மனித உடலமைப்பின்படி ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் ஓடி கடக்க முடியாது என்பதை உறுதியிட்டன. ரோஜர் பேனிஷ்டர் அவ்வாராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்தார். அவர் ஒரு ஓட்டப் பந்தய வீரர். குறைந்த தூரம் ஓடுபவர். தனது இலக்கினை நான்காகப் பிரித்தார். முதல் ஒரு மைல்கல்லினை ஒரு நிமிடத்திற்குள் ஓடி முடிக்க உறுதிகொண்டார். பல முயற்சிகளுக்குப்பின் 58 வினாடிகளில் ஓடி முடித்தார். சிறிது ஓய்வெடுத்து அடுத்த கால் மைல் கல்லினை அதே வேகத்தில் கடந்தார். வேகத்தைக் கூட்டி, ஓய்வினைக் குறைத்து கடைசியில் 3 நிமிடம் 59.6 விநாடிகளில் அந்த மைல் இலக்கினை கடந்தார்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
என்ற திருவள்ளுவரின் வரிகளுக்கு ரோஜர் பேனிஷ்டர் வாழ்க்கையானார்.
இலக்கு தெரியாமல் முயற்சிப்பதுதான் கடினம். இலக்கினைக் கணித்து, முயற்சிக்க ஆரம்பித்துவிட்டால் எல்லாம் எளிது. அது ஒரு செகண்டில் 11.2 கி.மீ. வேகத்தில் பயணித்து விண்ணில் செல்லும் ராக்கெட்டைப் போன்றது. தெளிவான இலக்கினை நோக்கிய வெற்றி எளிதில் விண்ணைத் தொடும்.
முயற்சிக்க மறுத்தால் மூச்சும் நின்றுவிடும்!
புதிய முயற்சிதான் வரலாற்றில் தடம் 
பதிக்கும்!
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: 
காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com