இந்தியக் கல்வி பற்றிய ஆய்வு: நம்பிக்கை தரும் மாற்றம்!

இந்தியாவில், ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவதாக, உலகளாவிய அளவில் சர்வதேச கல்வித் திட்டங்களை வழங்கி வரும் பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ்
இந்தியக் கல்வி பற்றிய ஆய்வு: நம்பிக்கை தரும் மாற்றம்!

இந்தியாவில், ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவதாக, உலகளாவிய அளவில் சர்வதேச கல்வித் திட்டங்களை வழங்கி வரும் பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் இண்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டுள்ள Global Education Census 2018 என்ற ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வில், சர்வதேச அளவில் பள்ளிகளில் உள்ள நடைமுறைகள், கல்விமுறை, மாணவர்கள், அவர்களின் ஆசிரியர்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு இந்தியாவில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 12 முதல் 19 வயது வரையிலான 3800 மாணவர்கள், 4400 ஆசிரியர்கள் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள 20 ஆயிரம் ஆசிரியர்கள், மாணவர்களிடம் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில், மாணவர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் கற்பித்தல் முறைகள் மாறிவருவதை இந்த ஆய்வு தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, மனப்பாட கற்றல் கலாசாரத்திலிருந்து, மாணவர்களின் தொழில்முறை முயற்சிகள் வெற்றியடைய ஆசிரியர்கள் உதவும் வகையிலான கற்பித்தல் முறைக்கு மாற்றமடைந்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதோடு, இந்திய மாணவர்கள் கல்வித் திட்டம் சார்ந்து மட்டும் பயிற்றுவிக்கப்படாமல், அவர்களின் ஆர்வம் சார்ந்து, பிற கற்றல்  வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதாகவும் ஆய்வு கூறுகிறது.

மேலும், இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் மருத்துவம், பொறியியல் துறை உள்ளிட்டவற்றிலும் கற்பித்தல் முறைகள்   மாற்றங்களைப் பெற்றுள்ளன. இந்திய மாணவர்கள் தங்கள் பாடங்களை கூடுதல் தனி வகுப்புகளிலும் கற்பதோடு, கூடுதல் கல்விசார் கற்றலிலும் (Extra - Curricular Activities) ஈடுபட்டு தங்களை வளர்த்துக் கொள்கின்றனர். இந்திய, சீன மாணவர்களே இதுபோன்ற கூடுதல் தனி வகுப்புகளில் கணிதம் (74%), இயற்பியல் (64%), வேதியியல் (62%) ஆகிய பாடங்களில் அதிக கவனம் செலுத்துகின்றனர். 

இந்திய மாணவர்கள் விவாத நிகழ்ச்சி (36%) (Debating), அறிவியல் மன்றம் (28%), கலை நிகழ்ச்சிகள் (25%), புத்தக மன்றம் (22%) போன்றவற்றில் தங்களை அதிகம் ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

இந்திய பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் கல்வியில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். 66 சதவீத இந்திய மாணவர்கள், தங்கள் பெற்றோர் நாள்தோறும் பள்ளிச் சம்பவங்கள் குறித்து விசாரிப்பதாகவும், 50 சதவீத மாணவர்கள், தங்கள் பெற்றோர் பள்ளி நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

விஞ்ஞானியாக வேண்டும் என்ற விருப்பத்தையும் இந்திய மாணவர்களே அதிகம் (8%) தெரிவித்துள்ளனர். இந்திய பள்ளிகள் தங்கள் மாணவர்கள் லட்சியத்தை அடைய தேவையான தொழில் ஆலோசனைகளையும், உடல்நலச் சேவைகளையும் வழங்குகின்றன. குறிப்பாக, அதிக அளவில் உடல்நலன் (55%), மனநலன் (35%) பேணப்படுவதாக தெரியவந்துள்ளது.

அதேநேரத்தில், உலக அளவில் ஸ்மார்ட் போர்ட் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் அதிக அளவில் இன்னும் கரும்பலகைகளையே (56%) பயன்படுத்தி வருவதாக ஆய்வு தெரிவிக்கிறது. பெரும்பாலான இந்திய ஆசிரியர்கள் மாணவர்களின் வெற்றிக்கு தங்கள் சக்தி முழுவதையும் பயன்படுத்தி உதவி வருகின்றனர்.

மாணவர்களை தேர்வுக்கு தயார்செய்வதில், இந்திய ஆசிரியர்கள் உலகின் பிற ஆசிரியர்களைக் காட்டிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவதாக ஆய்வு கூறுகிறது. இந்த சேவை பிறநாட்டுப் பள்ளிகளில் பெரும்பாலும் இல்லை என ஆய்வு தெரிவிக்கிறது.

தேர்வில் மாணவர்கள் பெறும் சிறப்பிடம், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வாயிலாக சிறப்பிக்கப்படுவதாக 60 சதவீத ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த HVB Global Academy-யின் Lynn Eldered Menezes கூறுகையில், ""இந்திய மாணவர்கள் உலகளாவிய மாணவர்களுக்கு இணையாக விளங்குகின்றனர். அதேநேரத்தில், ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் மற்றும் தனி வகுப்புகள் அவர்களுக்கு கூடுதல் சுமையாக அமையாததை உறுதிசெய்ய வேண்டும். கல்வியில் போட்டி என்பது முக்கியம். அதேசமயம், கற்றலை ஒரு விளையாட்டைப் போல மாற்ற வேண்டும். குறிப்பாக, மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது அவர்களின் உணர்வுபூர்வ குறியீட்டை (Emotional Quotient) உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அது மிக முக்கியம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com