பணியிடத்தில் தனியிடம் பெற...!

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் உயரத்துக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் கட்டாயம் இருக்கும்.
பணியிடத்தில் தனியிடம் பெற...!

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் உயரத்துக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் கட்டாயம் இருக்கும். அதன் முதல்படியாக, பல போராட்டங்களைத் தாண்டி ஒரு பணியில் அமர்கிறோம். அது எந்த துறை, எத்தகைய பணியாயினும், பணிபுரியும் இடத்தில்  நமக்கென தனிப் பெயரையும்,  புகழையும் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் நம் அனைவருக்கும் இருக்கும். அதற்காக நமது தனித்துவத்தை உலகிற்கு உணர்த்த நினைத்து, கடினமாக உழைப்போம். பணிக்காக நம்மையே அர்ப்பணித்தும் கூட இருந்திருக்கலாம். என்னதான்  பணியில் சிரத்தையாகவும், உண்மையாகவும் இருந்தாலும், நமக்கே தெரியாமல் பணியிடங்களில் நாம் செய்யும் சில சிறிய தவறுகளால் நமது நற்பெயரை கெடுத்துக் கொள்கிறோம். அதனால் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்காக நாம் எடுத்த  அனைத்து முயற்சிகளும்,  நாம் கவனிக்க மறந்து செய்யும் சிறு தவறுகளால் வீணாகிப் போகிறது. எனவே பணி இடத்தில் பின்வரும் தவறுகள் நேராதவாறு கவனமுடன் செயல்பட வேண்டும்.

தேவையானதை மட்டுமே பேச வேண்டும்: நமது அலுவலகத்தில் நடைபெறும் கூட்டமும், கருத்தரங்கு நிகழ்ச்சிகளும்தான் நமது பெயரையும், புகழையும் பரப்பவோ, அழிக்கவோ செய்யும் சரியான மேடையாகும். நாம் நேரம் தவறி கூட்டத்தில் கலந்து கொள்வதும், பிறர் தனது கருத்தைப் பேசி முடிக்கும் முன்பாக,  அவருக்கு எதிர்வினையாற்றுவதும்,  அவரது கருத்தை பிறர் புரிந்து கொள்ள முடியாமல்  செய்வதும்,  சம்பந்தமில்லாத விஷயங்களை கூட்டத்தில்  பேசுவதும் நம் நற்பெயரை பணியிடத்தில்  கெடுத்து விடும்.  

பணி தொடர்பான விஷயங்களை நம்முடன் பணிபுரியும் பணியாளர்களுடனும், பிறருடனும்  பகிரும் போது, பேசும் வார்த்தைகளில் தெளிவும், ஆழ்ந்த கருத்தும் பொதிந்திருக்க வேண்டும். தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

அதே போல, கூட்டம், கருத்தரங்கு தொடர்பான பணி சார்ந்த விஷயங்களை குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாக பகிரும் போது, எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை ஏதேனும் இருக்கிறதா என்று ஒருமுறைக்கு இருமுறை பரிசீலித்து அனுப்புவதே உகந்தது. ஏனெனில், நம்மை அறியாமல் நாம் செய்யும் இந்த சிறு தவறு, நம்முடைய நற்பெயரைக் கெடுத்துவிடும்.

மனிதர்கள் முக்கியம்! இன்றைய நாகரிக உலகில் செல்லிடப்பேசியை நமது உலகமாகக் கொண்டு, அதைப் பயன்படுத்திக் கொண்டே பெரும்பாலான பொழுதுகளைக் கழிக்கிறோம். பணியிடத்தில் எதிரில் வரும் சக பணியாளரைக் கண்டு கொள்ளாது,  செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே செல்வோம்.

இவ்வாறு  செல்லிடப்பேசியை ஓயாமல் பயன்படுத்துவதைத் தவிர்த்து, சற்று தலை நிமிர்ந்து சகப் பணியாளர்களின் கண்களைப் பார்த்து ஒரு "ஹலோ' சொல்லி வரவேற்பது நம் நற்பெயரை பலப்படுத்தும்.

பணியிட நாகரிகம் அவசியம்: நமது வாழ்வின் பெரும்பாலான நேரத்தை நாம் பணியிடத்தில்தான் கழிக்கிறோம். அந்த நேரத்தில் நம்மை எப்போதும் ஒருவர் கண்காணித்துக் கொண்டே தான் இருக்கிறார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அந்த ஒருவர் கண்காணிப்பு கேமராவாகக் கூட இருக்கலாம். எனவே பணியிட நாகரிகம் வழுவாது நடந்து கொள்ள வேண்டியது அவசியம். 

சக பணியாளர் என்பவர் எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும், அலுவலக நேரத்தில் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது, அடுத்தவரை பற்றி புறம் பேசுவது போன்ற செயல்கள் நமது நற்பெயருக்கு களங்கத்தையே ஏற்படுத்தும். வேலையில் பிறரின் கவனம் சிதறும்படி போனில் சத்தமாகப் பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும்.  உங்களுடைய மதிப்பை அது குறைக்கவே செய்யும்.

அதிக நேரம் பணியிடத்தில் செலவிடுவது: நமது அன்றாட அலுவலகப் பணிகளை அதற்கான நேரத்திற்குள் முடித்து குடும்பத்துடன் மீதி நேரத்தை செலவிடுவதே நமது திறமையை சரியாக வெளிப்படுத்தும். அவசர காலங்களில் தவிர்த்து கூடிய விரைவில் குறித்த வேலைகளை முடித்துவிட வேண்டும். 

தனி வாழ்க்கைக்கும், பணி வாழ்க்கைக்கும் இடையே சரியான கோடு கிழித்துக் கொண்டு, ஒன்றில் ஒன்று குறுக்கிடாதவாறு  செயல்படுவதே நமக்கான நற்பெயரையும், புகழையும் நிலைத்து நிற்கச் செய்யும்.

பணிவே துணை! பணியிடத்தில் தனியிடம் பிடிக்க நினைக்கும் நாம், நம் மேல் அனைவரின் தனிக்கவனமும் இருக்கும் என்பதை ஒருபோதும் மறந்து விடக் கூடாது. நம்மைப் பார்ப்பவர்களுக்கு நாம் மனஉறுதியுடையவர்களாகவும், நம்பிக்கையானவர்களாகவும் தெரிய வேண்டும். இத்துடன் பணிவும், மரியாதையும் இன்றி நமக்கான நற்பெயர் நிலைக்காது என்பதை மறந்து விடக் கூடாது. எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும், சகப் பணியாளர்களிடம் நாம் பணிவுடன் நடந்து கொள்ளும் விதமே நமது நற்பெயரை காக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com