இளைய பாரதமே... எழுக!-8: மதம்... மனிதம்!

அமெரிக்க நாட்டிலுள்ள "நியூ இங்கிலாந்து' பகுதியில் "அனிஸ்குவாம்' என்ற ஊரிலிருந்த பேராசிரியர் ரைட்டின் வீட்டில் சிலர் மட்டும் பங்கேற்ற கூட்டத்தில் விவேகானந்தர் ஆற்றிய அனல்பறக்கும் உரைகளையும் பலரிடம்
இளைய பாரதமே... எழுக!-8: மதம்... மனிதம்!

அமெரிக்க நாட்டிலுள்ள "நியூ இங்கிலாந்து' பகுதியில் "அனிஸ்குவாம்' என்ற ஊரிலிருந்த பேராசிரியர் ரைட்டின் வீட்டில் சிலர் மட்டும் பங்கேற்ற கூட்டத்தில் விவேகானந்தர் ஆற்றிய அனல்பறக்கும் உரைகளையும் பலரிடம் விவேகானந்தர் நடத்திய கலந்துரையாடல்களையும் அருகிலிருந்து உன்னிப்பாகக் கேட்கும் வாய்ப்பைத் தொடர்ந்து பெற்றவர் பேராசிரியர் ரைட்டின் மனைவி மேரி தப்பன் ரைட் ஆவார். இவர் இத்தகைய பொது நிகழ்வுகளில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர்.
இவர் , தனது தாயாருக்கு எழுதிய கடிதமொன்றில், "விவேகானந்தருக்கு காலக் கணக்கின் படி முப்பது வயதிருக்கும். பண்பில் யுக யுகாந்தரமானவர்' என்று கூறியிருப்பதுடன், "இந்த ஊரே அவரைக் காண வேண்டுமென்ற பேரார்வத்தில் உள்ளது' என்று உற்சாகமாக எழுதி தனது கடிதத்தை நிறைவு செய்துள்ளார். மேரி தப்பன் ரைட் பின்னர் எழுதிய கட்டுரையொன்றில், ""இந்தியாவிலுள்ள ஆங்கிலேய அரசாங்கம் என்னைக் கைது செய்து அழைத்துச் சென்று சுட்டுக் கொல்வதற்கு கூடத் தயங்காது. அவ்வாறு ஆங்கிலேய அரசு செய்யுமெனில் அதுவே அவர்களது ஆட்சியின் சவப்பெட்டிக்கு அடிக்கப்படும் முதல் ஆணியாகும்'' என்று விவேகானந்தர் அவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்ததாகப் பதிவு செய்துள்ளார்.
மிகுந்த சிரத்தையெடுத்து பல தடைகளையும் இன்னல்களையும் தாண்டிய பிறகு 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை பதினேழு நாட்கள் நடைபெற்ற சர்வமத சபை மாநாட்டின் முதல் நாள் நிகழ்விலேயே சொற்பொழிவாற்றும் வாய்ப்பு விவேகானந்தருக்குக் கிடைத்தது. பார்வையாளர்களாக பல்வேறு சமயச் சார்புள்ள சுமார் ஏழாயிரம் பேர் அந்த பிரம்மாண்டமான அரங்கத்தில் கூடியிருந்தனர்.
காலை அமர்விலேயே விவேகானந்தர் உரையாற்ற தலைமைக் குழுவினரால் அழைக்கப்பட்டார். பேசத் தயங்கிய நிலையில், ""பிறகு பேசுகிறேன்... தற்போது வேறு பிரதிநிதியைப் பேச அழையுங்கள்'' என்று விவேகானந்தர் கேட்டுக் கொண்டார். இவரது வேண்டுகோளை ஏற்று மற்றவர்களைப் பேச அழைத்தனர். பிற்பகல் அமர்விலும் நான்கு பேச்சாளர்கள் பேசிய பிறகே வற்புறுத்தலுடன் கூடிய தலைமையின் அழைப்பையேற்று உரை நிகழ்த்தத் தொடங்கினார் விவேகானந்தர். 
அதுவரை பேசியவர்கள் அனைவரும் "கனவான்களே! சீமாட்டிகளே!' என்பது போன்ற வழக்கமான பாணியில் உரையைத் தொடங்கிய போது விவேகானந்தர் மட்டும் "அமெரிக்கநாட்டு சகோதரிகளே! சகோதரர்களே!' என்று தனது சொற்பொழிவைத் தொடங்கிய விதம் பார்வையாளர்களுக்குப் பரவசமூட்டிய செய்தி உலகறிந்ததாகும்.
""பிறருடைய கொள்கையை வெறுத்து ஒதுக்காத பண்புடைமை, அக்கொள்கைகளை ஏற்றுக் கொள்கின்ற பொதுநோக்கு என்ற இரண்டினையும் உலகிற்குக் கற்பித்த சமயத்திற்கு நான் உரியவனெனப் பெருமை பாராட்டுகிறேன். எல்லாச் சமயங்களையும் உண்மை மார்க்கங்களென நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.'' என்று எடுத்த எடுப்பிலேயே தனது உரைக்கே ஒரு முன்னுரையை வழங்கினார் விவேகானந்தர்.
மேடையில் வந்து பேசியவர்கள் அனைவரும் தன்னுடைய சமயமே மேம்பட்டது என்பது போலவும் மற்ற சமயங்களை விஞ்சும் 
கருத்துகளையும் கொள்கைகளையும் தனது சமயம் கொண்டுள்ளதாகவும் வலுவான சார்புத்தன்மையுடன் பேசியபோது, ""எல்லாச் சமயங்களையும் உண்மை மார்க்கங்களென நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்'' என்ற விவேகானந்தரின் முத்தாய்ப்பான வரிகள் அங்குள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
ரோமருடைய கொடுஞ் செயலினால் தமது பரிசுத்த தேவாலயம் சின்னா பின்னப்பட்ட ஆண்டிலேயே தென்னிந்தியாவுக்கு வந்து எங்களிடம் அடைக்கலம் புகுந்த கலப்பில்லாத இஸ்ரவேல் சாதியாரில் மிஞ்சியிருந்தவர்களை நாங்கள் அன்போடு அரவணைத்துக் கொண்டோம் என்று வரலாற்று உதாரணங்களை மேற்கோள் காட்டி இதே போன்று எந்தெந்த நாட்டிலிருந்து எந்தெந்தச் சமயத்தினர் இந்தியாவிற்கு எந்தெந்தக் காலக்கட்டத்தில் வந்தார்கள் என்றும் அவ்வாறு வந்தவர்களை அந்நியர்களாகவோ மாற்று மதத்தினர்களாகவோ கருதாமல் தாயுள்ளத்தோடு அரவணைத்து சகோதரத்துவம் பாராட்டும் மன
வளத்தோடு இந்தியா திகழ்ந்துள்ளது என்றும் அவ்வாறான நாட்டின் பிரதிநிதியாக , சமயத்தின் தூதுவராக தாம் அந்நிகழ்வில் பங்கேற்றிருப்பதாகவும் தனது உரையில் தெரிவித்தார் விவேகானந்தர்.
பிறநாடுகளிலிருந்து துரத்தப்பட்டு வந்த பிற மதத்தினரை அகதிகளாக்காமல், அகதிகளாக வந்த பிற சமயத்தினரை வரவேற்று வாழ்வளிப்பது இந்தியப் பண்பாடு என்றும் தனது உரையில் அழுத்தமாகப் பறைசாற்றினார்.
சர்வமத சபையில் விவேகானந்தர் முதல் நாள் நிகழ்த்திய உரை முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட உரையாக இருக்கவில்லை. உள்ளத்தின் அடியாழத்திலிருந்து பீறிட்டு வரும் பிரவாகம் போல அவ்வுரை கொஞ்சமும் செயற்கைத் தன்மையில்லாமல் இயல்பாக அமைந்தது.
"உள்ளத்தின் உண்மையொளி உண்டாயின் வாக்கினில் ஒளி உண்டாம்' எனும் பாரதியின் வாக்கிற்கு உயிர் கொடுத்ததைப் போல் அவ்வுரை திகழ்ந்தது.
காலை சரியாக பத்து மணிக்கு ஆரம்பித்த சர்வமதசபை தொடங்கிய போது வெண்கல மணியோசையோடு தொடங்கியது. சபை அரங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய மணி அச்சபை நிகழ்வில் பங்கேற்ற பத்து சமயங்களை நினைவுபடுத்திச் சிறப்பிக்கும் வகையில் பத்து முறை அடித்து ஒலியெழுப்பப்பட்டது.
இந்த மணியோசையை உன்னிப்பாகக் கவனித்து உள்வாங்கியிருந்த விவேகானந்தர் தனது எழுச்சிமிக்க உரையின் கடைசிப் பகுதியில், ""இன்று காலையிலேயே இந்த மகாசபை கூடும் பொழுது அடித்த மங்கல மணியானது மூடக்கொள்கைகளின் சாவு மணியாக விளங்கட்டும்! வாளினாலோ, எழுதுகோலினாலோ ஒருவரையொருவர் பகைக்கின்ற கொடுஞ் செயல்கள் முற்றிலும் அகலட்டும்! ஒரே நோக்கினைக் கொண்டு ஒன்றினையே நாடிச்செல்கின்ற மக்களிடையே அன்போடு கூடிய எண்ணங்கள் பெருகி நிறையட்டும் !'' என்று இடம், பொருள், ஏவலுக்கு ஏற்றவகையில் சமயோசிதத்தோடு சமய நல்லுறவை வலியுறுத்தி தனது உரையை நிறைவு செய்தார் விவேகானந்தர்.
"சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்' என்ற தமது நூலில் ஒவ்வொரு உரை பற்றியும் தனித்தனியாக விவரித்து எழுதியுள்ளார் ஆய்வறிஞர் பெ.சு.மணி. 
விவேகானந்தரது இரண்டாவது சொற்பொழிவில் இடம்பெற்ற "கிணற்றுத் தவளை' என்ற சுவாரஸ்யமான கதை சமயங்களுக்கிடையில் விசாலமான கண்ணோட்டம் தேவை என்பதை வலியுறுத்துவதாகும்.
ஒரு கிணற்றில் ஒரு தவளை வசித்து வந்தது. அது அங்கேயே பிறந்து வளர்ந்த போதிலும் அளவில் சிறு தவளையாகவே இருந்து வந்தது. ஒருநாள் கடலில் வசித்துவந்த மற்றொரு தவளையொன்று அந்த வழியாக வந்தபோது இந்தக் கிணற்றில் குதித்துவிட்டது.
"நீ எங்கிருந்து வருகிறாய்?' என்று கிணற்றுத் தவளை கேட்டது. "நான் கடலிலிருந்து வருகிறேன்' என்றது கடல் தவளை. "கடலா! அது எவ்வளவு பெரியது?' என்று கேட்டது கிணற்றுத் தவளை. காலை நீட்டி "உன் கடல்... இவ்வளவு பெரிதாக இருக்குமா?' என்று கேட்டது கிணற்றுத் தவளை.
"கடல் இன்னும் பெரியது' என்று பதிலளித்தது கடல்தவளை. உடனே கிணற்றின் ஒரு ஓரத்திலிருந்து மூச்சைப் பிடித்துக்கொண்டு மற்றொரு ஓரத்திற்கு தாவிக் குதித்துவிட்டு, "உனது கடல் இவ்வளவு பெரிதாக இருக்குமா?' என்று கேட்டது கிணற்றுத் தவளை. "கிணற்றை எப்படி கடலோடு ஒப்பிடமுடியும்?' என்று கேட்டது கடல் தவளை. சீற்றமடைந்த கிணற்றுத் தவளை, "எனது கிணற்றைக் காட்டிலும் பெரியது ஒன்றுமில்லை. இவன் பொய்யன். இவனை நம்பக்
கூடாது. கிணற்றை விட்டு விரட்டி விட
வேண்டும்' என்று சொன்னது.
இக்கதையை தனக்கே உரிய பாணியில் உயிரோட்டத்துடன் தனது "யாம் உடன்படாதிருப்பது ஏன்?' என்ற தலைப்பிலான சிகாகோ உரையில் உதாரணமாகக் குறிப்பிட்டார் விவேகானந்தர்.
இந்தக் கதையைக் கூறி முடித்தவுடன் இதைக் குறிப்பிட்டதற்கான காரணத்தைச் சுருக்கமாக தனது உரையின் கடைசிப் பகுதியில் எடுத்துரைத்தார்.
""எப்போதும் இத்தகைய இடையூறே இருந்து வருகிறது. நான் ஓர் இந்து. என்னுடைய சிறிய கிணற்றுக்குள்ளே இருந்துகொண்டு உலகம் முழுவதும் எனது சிறிய கிணறென்று நான் நினைத்துக் கொள்கிறேன். கிறித்துவர் தனது சிறிய கிணற்றில் இருந்துகொண்டு உலகம்முழுவதும் தனது கிணறென்று எண்ணிக்கொள்கிறார். ஓர் இஸ்லாமியர் தனது சிறிய கிணற்றினுள் இருந்துகொண்டு அதுவே உலகம் முழுவதுமென நினைத்துக் கொள்கிறார். நாங்கள் ஏற்படுத்திக்கொண்ட சிறு சிறு உலகங்களின் எல்லைகளை அழித்துவிடுகிற பெரிய முயற்சியிலே முற்பட்டு நிற்கின்ற அமெரிக்க வாசிகளாகிய உங்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்'' என்று தனது உரையை நிறைவு செய்தார் விவேகனந்தர். பொதுவாக அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கூறுவதோடல்லாமல் இதுவரை மதச்சண்டைகள் சச்சரவுகள் ஏதும் இல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பது பற்றிகூட வரலாற்று ஆய்வு நோக்கோடு சிந்தித்துள்ளார் விவேகானந்தர். 
""மத விரோதங்களும் மதச்சண்டைகளும் அவற்றினால் ஏற்பட்ட கொடிய பிடிவாதமும் அழகிய பூவுலகத்தை நீண்டகாலமாகப் பற்றியிருந்தன. இந்த மண்ணுலகத்தை அவை கொடுஞ்செயலினாலே நிறைத்துவிட்டன. மீண்டும் மீண்டும் மானிட உதிரத்தை எங்கும் பரவச்செய்து, நாகரிக வாழ்க்கையை அழித்து மக்கள் கூட்டத்தினரை அதிர்ச்சியடையச் செய்துவிட்டன. இந்தக் கொடிய பேய்கள் தோன்றாதிருந்திருந்தால் மக்கள் கூட்டமானது இப்போது இருக்கின்ற நிலையைவிட இன்னும் உன்னதமான நிலையில் இருந்திருக்கும்'' என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மதம் பற்றிப் பேசிய போதெல்லாம் விவேகானந்தர் மனிதம் குறித்துப் பேசாமல் இருந்ததில்லை. 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com