கண்டதும் கேட்டதும் 35 - பி.லெனின் 

நான் அத்திமரத்தின் கீழே அல்லவா அமர்ந்திருந்தேன். அதில் சின்ன சின்ன காய்கள் காய்க்கும். அது அந்த மரத்தில் உடல் முழுக்க பச்சை முத்துகளைப் போன்று ஜொலிக்கும்.
கண்டதும் கேட்டதும் 35 - பி.லெனின் 

நான் அத்திமரத்தின் கீழே அல்லவா அமர்ந்திருந்தேன். அதில் சின்ன சின்ன காய்கள் காய்க்கும். அது அந்த மரத்தில் உடல் முழுக்க பச்சை முத்துகளைப் போன்று ஜொலிக்கும். நாம காணக் கிடைக்காதது அத்தி மர பூ தான். ஆனால் சின்ன போதுல அமாவாசை இரவுல இந்த மரத்துல பூ பூக்கும். அது ஜொலிக்கும்ன்னு சொல்ல கேள்விப்பட்டு அதை எப்படியாவது பார்த்துடணும்ன்னு நெனைச்சி வீட்டுப் பக்கத்துல இருக்குற அத்தி மரத்துக்கு சில பசங்க நண்பர்களோட அந்த 12 மணி இருட்டுல போய் பயந்து கொண்டே பூ பூக்கிறதா என்று பார்த்து காண கிடைக்காவிட்டாலும் வீட்டுக்கு வந்து நாலு நாள் ஜுரம் கண்டதுதான் மிச்சம்.
 நான் புரடக்ஷன் பாய் மணியிடம் கூறி அந்த காயினைப் பறிக்க கூறி வீட்டுக்குக் கொண்டு வருவேன். எல்லாரும் கேட்பார்கள். ""இதனை என்ன செய்யப் போகிறீர்கள். அத்தி பழமே சாப்பிட சகிக்காது. அதனைப் புட்டால் நிறைய பூச்சிகள் பறந்துவரும். அப்படி இருக்கும்போது காயில் என்ன செய்ய முடியும்?'' என்று கேட்பார்கள். நானும் "நாளை இந்த காயினை சமைத்துக் கொண்டு வருகிறேன் பாருங்கள்'" என்று கூறி எனது அம்மாவிடம் கொடுத்து அதனைச் சமைத்துக் கொண்டு வருவேன். அந்த காய் சமைக்கும்போது பச்சையின் நிறம் மாறி ஆட்டின் ஈரல் சமைக்கும்போது ஏற்படும் நிறத்தைக் கொண்டிருக்கும். பார்ப்பவர்கள், ""என்னப்பா நீ சைவமாச்சே.அசைவ உணவான ஈரலை எடுத்து வந்திருக்கே'' என்பார்கள்.
 "சரி சாப்பிடுங்க. உங்களுக்குப் பிடிச்ச ஈரலை'' என்று கொடுத்ததும் வாங்கி வாயில் போட்டு சாப்பிட்டுவிட்டு, "இது ஈரல் இல்லை சார். ஆனால் ஈரல் மாதிரிதான் இருக்குது. இது வேற சமாச்சாரம். சார் இது என்னாது சார். நல்ல சுவையா இருக்கே'' என்று எடுத்துச் சாப்பிடுவார்கள். அப்போது நான் கூறுவேன். நான் நேற்று எடுத்துக் கொண்டு சென்ற அத்திமர காய்கள்தான் இவை என்று கூறியதும் எல்லாரும் ஆச்சரியத்தில் திளைத்துப் போவார்கள். ""ஓ... இதனை இப்படிக் கூட சமைக்க முடியுமா? சார் நீங்க கொடுத்து வச்சவரு சார்... இத மாதிரி அம்மா உங்களுக்கு கெடைச்சி ருக்காங்க. நீங்க இவ்வளவு பெஸ்ட் ஆனதுக்கு உங்களுக்கு கெடைச்ச எல்லா பெஸ்ட்டும்தான் சார் காரணம்...''
 இன்னொரு பச்சை இருக்குது.
 மாம்பழத்து வண்டு
 வாசமலர் செண்டு
 யார் முகத்தைக் கண்டு
 வாடியது வண்டு
 படம்- சுமைதாங்கி
 பாடல்- கண்ணதாசன்
 இயக்கம்- ஸ்ரீதர்
 பாடியவர்கள்- பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி
 இசை- விஸ்வநாதன் ராமமூர்த்தி
 ஆண்டு- 1962.
 நமக்கு சொந்தமாக கூறிக் கொள்ளப்படும் முக்கனிகளில் மாம்பழம் முதன்மையாக கூறப்படுகிறது. மா, பலா, வாழை என்று கூறும் நாம், ஏன் பலா, வாழை, மா என்றும், வாழை, மா, பலா என்றும் அழைப்பதில்லை என்ற கேள்வி என்னுள் எப்போதுமே இருந்தது. தமிழ் எழுத்து வரிசையில் பார்த்தால் கூட ப, ம, வ என்று தான் அமைந்துள்ளது. அப்படியிருக்க மா, பலா, வாழை என்று ஏன் அழைத்திருக்க வேண்டும்?
 இந்த முக்கனிகளில் நாம் மிகவும் இலகுவாக பறிக்க முடிந்தது மாங்காய் தான். சில மாமரத்தில் மாங்காய் தரை வரை தழுவி இருக்கும். அதனைப் பறிப்பதற்கு எந்த விதமான கஷ்டமும் படத் தேவையில்லை. மேலே இருந்தால் இவர்கள் கல் வீசி அதனை அடித்து விடுவார்கள். அதிலும் "ஒரு கல்லுல ரெண்டு மாங்கா' என்று சந்தோஷமாகக் கூட கூறிக் கொள்வார்கள். சில நேரத்தில் அந்த மாங்காய் கொத்தின் நடுவில் சரியாக கல்பட்டு விட்டால், மொத்த மாங்காயும் கீழே விழுந்துவிடும். ஆகவே சுலபமாக நமக்கு கிடைக்கும் மாங்காயை முதலில் வைத்து அழைத்திருக்க வேண்டும் என்று நம்புகிறேன். ஆனால் பலாவும், வாழையும் அவ்வாறு பறிக்க இயலாது. அவை மிகவும் கனமான சுமை கொண்டது. மரத்திலிருந்து கத்தி வைத்து வெட்டிதான் நாம் எடுத்துக் கொள்ள முடியும். ஆகவே சுலபமாக கிடைக்கும் மாங்காயை முதலில் வைத்து அழைத்து இருக்கிறார்கள்.
 எனது வீட்டில் இரண்டு மரங்கள் உண்டு. முன்னர் நிறைய இருந்தன. இப்போது இரண்டு மட்டுமே உள்ளன. இடது பக்கத்து மாமரக் கன்றினை டைரக்டர் பீம்சிங் ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கி வந்து நட்டார். வலதுபுறத்தில் உள்ள மாமரத்தில் விளையும் காய், காயாக இருக்கும்போது அப்படி ஒரு புளிப்பு புளிக்கும். வாயிலேயே வைக்க முடியாது. அது கொஞ்சம் பெரிதானதும் டைரக்டர் மிக நீண்ட கொம்பைக் கொண்டு அதன் முனையில் ஒரு வலையொன்றைக் கட்டி அந்த மாங்காயை அறுப்பார். அதனை அப்படியே பழுக்க வைத்து விட்டால் அந்த புளிக்கும் மாங்காய் எப்படித்தான் இனிப்பாக மாறுகிறதோ என்று தெரியாது. அப்படியொரு சுவை. அதனைச் சாப்பிடும்போது கைகளில் வழியும் அதன் சாறு அன்று முழுதும் கைகளை வாசம் மிகுந்ததாக ஆக்கிவிடும். ஒரு மணிநேரம் பொறுத்து எதேச்சையாக உதட்டினை நாக்கு தடவிவிட்டால் சுவை அப்படியே இருக்கும்.
 இடது மாமரத்தின் கதையே தனி. அது காயிலேயே சுவை மிகுந்ததாக இருக்கும். காயை கடிக்கும்போது தேங்காய் குருத்தினை கடிப்பது போன்று "நறுக் நறுக்' கென்று சத்தம் கொடுக்கும். பழமாகி விட்டால் அதன் சுவையோ சுவை.
 அந்த மரத்தில் ஒüவால்களும், அணில்களும், பச்சைக்கிளிகளும் பாதி பழுத்திருக்கும் மாங்கனிகளை கடித்து சாப்பிடும். அப்போது தவறுதலாக காம்பை கடிக்க அந்த பழம் கீழே வீழ்ந்து விடும். வெüவாலும், அணிலும், பச்சைக்கிளியும் கீழே வீழ்ந்ததை விட்டு விட்டு அடுத்த பழத்திற்கு சென்றுவிடும்.
 அந்த மரம் சாலை ஓரத்தை ஒட்டி இருந்தது. நான் தினமும் காலையில் எழுந்து பறவைகளின் ஒலியை கேட்டபடி அதனுடன் பேசிக் கொண்டிருப்பேன். அங்கிருக்கும் செடிகளும், மரங்களும், கொடிகளும், பூக்க துடித்துக் கொண்டிருக்கும் மலர்களிடம் பேசுவேன். தூரத்திலிருந்து யாராவது பார்த்தால் என்னை, "பாவம் பைத்தியம் போல' என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அதனைப் பற்றியெல்லாம் நான் கவலைப்பட்டதில்லை. இதனை அனுபவிக்க தெரியாதவர்கள் என்ற அனுதாபம் தான் எனக்கு அவர்கள் மேல் வரும்.
 காலை நேரத்தில் ஒரு ஆயா கையிலே பையை வைத்துக் கொண்டு எங்கள் மரத்தின் கீழ் வருவார்கள். அங்கே அணில் மற்றும் பறவைகள் பாதி கடித்து கீழே வீழ்ந்திருக்கும் பழங்களை அவர்கள் எடுத்து தன் பையிலே போட்டுக் கொள்வார்கள். சில நேரத்தில் அந்த வழியே வரும் கார் போன்ற வாகனங்கள் அந்த கனியின் மேல் ஏறி அதனை சிதைத்து விடும். நான் இதனைப் பார்த்ததும் அந்த ஆயா வருவதற்கு முன் அந்த கனிகளை எடுத்து வீட்டின் மதில் சுவர் மேல் வைத்து விடுவேன். அந்த ஆயா அவற்றை எடுத்து வைத்துக் கொண்டு என்னைப் பார்த்து நன்றி கூறுவது போன்று சிரித்து சென்று விடுவார்கள். இயற்கை நமது தேவையை கொஞ்சமும் கருமித்தனம் காட்டாது அளிக்கிறது. அது நம்மிடம் கிடைக்கும்போது நாமும் ஒளித்து வைத்துக் கொள்ளாது உலகுக்கு அளிக்க பழக வேம்டும்.
 மாங்காயின் சுவை நாவில் எச்சில் ஊறுவதாக அமைந்துள்ளது. இளம் மாம் பிஞ்சினை காம்பில் இருக்கும் பாலினை கழுவி விட்டு அப்படியே சாப்பிட்டு விடலாம். அதனுள் உள்ளே இருக்கும் கொட்டையின் துவர்ப்போடு சேர்ந்து கொண்டு ஓர் அலாதியான சுவை கொடுக்கும். கொஞ்சம் பெரிதாகி விட்டால் அதனை கர்ப்பிணி பெண்கள் மட்டுமே சாப்பிட முடியும் போல இருக்கிறது. அவர்களால் எப்படி அந்த புளிப்பு சுவையை அனுபவிக்க முடிகிறது என்றே சில நேரங்களில் நினைத்துக் கொள்வேன். அவர்கள் அதனை கடித்து சாப்பிடும்போது பார்க்கும் எனக்கு வாய் கூசுவதாக நினைத்துக் கொள்வேன்.
 அந்த மாங்காயை சிறிது சிறிதாக ஒரு சட்டியில் வெட்டிப் போட்டு அதனுடன் உப்பினை சேர்த்து குலுக்கி ஒரு வாரம் வெயிலில் வைத்திருந்து பின்னர் அதில் கடுகு, வெந்தயம் போன்றவற்றை வறுத்து அரைத்து அதனை நல்லெண்ணெய் விட்டு தாளித்து விட்டால் அது ஊறுகாயாக மாறி அந்த சட்டியைத் திறக்கும் போதெல்லாம் மணம் அந்த வீட்டினை சூழ்ந்து கொள்ளும். எனது அம்மா என் அருகில் அமர்ந்து கொண்டு ஒரு மாங்காய் ஊறுகாயின் துண்டினை என் வாயில் வைத்து, "மாதா ஊட்டாத சோற... மாங்கா ஊட்டும்'', என்று கூறுவார்கள். நானும் அந்த சுவையில் மயங்கி இன்னும் கொஞ்சம் சாப்பாடு அதிகமாக சாப்பிடுவேன்.
 நமக்கு காரைக்கால் அம்மையாரை அளித்தது இந்த மாங்கனிதான். இமயத்தில் தாய் தந்தையரோடு மகிழ்ச்சியாக இருந்த முருக கடவுள் தென்திசை வந்து கோவணத்துடன் பழனி மலையில் நிற்க வைத்ததும் இந்த மாங்கனிதான் என்று கூறுகிறார்கள்.
 (தொடரும்)
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com