கண்டதும் கேட்டதும் - பி.லெனின்

நான் எனது நண்பன் கபாலி என்னும் ராமகிருஷ்ணனுடன் அடிக்கடி கடப்பா அல்லது திருப்பதி போன்ற இடத்துக்கு நடந்து செல்லேன்.
கண்டதும் கேட்டதும் - பி.லெனின்

நான் எனது நண்பன் கபாலி என்னும் ராமகிருஷ்ணனுடன் அடிக்கடி கடப்பா அல்லது திருப்பதி போன்ற இடத்துக்கு நடந்து செல்லேன். அங்கிருக்கும் கல்வெட்டுகளையும், சிலைகளையும் பார்த்து அனுபவிப்பதற்காகவே பல தடவை சென்றிருக்கிறேன். அதோடு கூட அந்த கோயில் வெளிப்புறத்தில் லட்டு செய்யப்படும் இடத்திலிருந்து வரும் வாசனை அப்படியே மனதை மயக்கும். அந்த வாசனையை அனுபவிப்பதற்காகவே நான் இதுவரை திருப்பதி சென்று வருகிறேன். அங்கு அளிக்கப்படும் வடை, அப்பம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றின் சுவை அடுத்த முறை திருப்பதி வரும் வரை என்னுள் மகிழ்ச்சி தந்து கொண்டிருக்கும். என்னைப் பார்த்து, "சாமிய கும்பிட்டியா?''ன்னு கேட்டா, "யார் சாமிய பார்த்தது, லட்டு வாசனையை புடிக்க அல்லவா நான் போனேன்''னு சொல்லுவேன். "சரியான பைத்தியக்கார புள்ளப்பா இவன்' என்று ஒரு பட்டம் கிடைக்கும்.
நான் எனது 16 - வது வயதிலேயே ஊர் சுத்தும் படலத்தை ஆரம்பித்து விட்டேன். எல்லா பெற்றோருக்கும் நான் கூறுவேன்: "குழந்தைகளை வெளியே விடுங்கள். நான்கு சுவர்களுக்குள் அவர்களை வைத்து மூச்சு முட்ட வைத்து விடாதீர்கள்''. 
வெளியில் பரந்து விரிந்த உலகம் இருக்கிறது. எத்தனை மனிதர்கள், எத்தனை மனிதர்கள், எத்தனை பறவைகள், விலங்குகள், பாம்புகள், எத்தனை வகையான நிலங்கள். அதன் மேலே எழுந்து நின்று சிரிக்கும் பயிர்கள், வெயில், காற்று, மழை, இருட்டு, குறுக்கிடும் ஆறுகள் இதையெல்லாம் வீட்டை விட்டு வெளியே வந்தால் மட்டுமே அனுபவிக்க முடியும். 
நான் செல்லும் இந்த நடைப்பயணத்தை ஒரு பந்தயம் மாதிரி அமைத்துக் கொள்வேன். செருப்பு அணிந்து கொல்வது கிடையாது. ஒரு வேட்டி, ஒரு சட்டை, மேலே ஒரு துண்டு, உள்ளாடைகள் இது தான் உடை. 
கையிலே பத்து பைசா கூட வைத்துக் கொள்வது கிடையாது. அப்படியே நடந்து போய் கொண்டே இருக்க வேண்டியது தான். நடுவிலே எப்படிச் சாப்பிடுவீர்கள் என்று கேட்பது எனக்குக் கேட்கிறது. நடந்து செல்லும் போது அங்கிருக்கும் விவசாய கூலிகள் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். எங்களைப் பார்த்ததும் கையை நீட்டி அழைப்பார்கள். நாங்கள் அருகில் சென்றதும் எங்களைப் பற்றி விசாரித்து எங்களது நடைப்பயணத்தைப் பற்றி தெரிந்து கொள்வார்கள். 
"யார் பெத்த புள்ளையோ... இப்படி வேகாத வெயில்ல கால்ல செருப்புக் கூட இல்லாம நடந்து போகுதுங்க' ன்னு நெனைச்சிருக்க வேண்டும். அதில் ஒரு பெண் என்னைப் பார்த்து, "செருப்பு போட்டுக்க வேண்டியது தானே?'' என்று கேட்டார். நான் அவர்களைப் பார்த்து கேள்வியால் பதில் சொன்னேன் "நீங்களும் வயல்ல செருப்பில்லாம தான வேலை செய்றீங்க?''
இப்போது உள்ளது போல் அல்லாமல் அப்போதெல்லாம் திருப்பதிக்கு நடந்து செல்லும் கூட்டம் கம்மியாகத்தான் இருந்தது. இப்போது தான் சங்கம் அமைத்துக் கொண்டு நூறு பேர், இருநூறு பேர், நானூறு பேர் என்று அழைத்துச் சென்று ஒவ்வோர் இடத்திலும் அவர்களுக்கு சாப்பாடு போட்டு அதனை பாத யாத்திரை போவது என்று போர்டு வைத்திருக்கிறார்கள்.
வழியில் சில இடங்களில் கள்ளுக்கடைகள் இருக்கும். பாத யாத்திரை பக்தர்கள் மஞ்சள் ஆடை பூண்டு இருப்பார்கள். அவர்கள் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு அந்த கள்ளுக்கடையில் கள்ளினை மொந்தையில் வாங்கிக் குடித்துக் கொண்டிருப்பார்கள். நான் ஒருமுறை அவர்களைப் பார்த்து கேட்டேன் "நீங்க சாமி கும்பிட போகும்போது கள்ளினை குடிக்கிறீர்களே, அது தப்பில்லையா?''
அதற்கு அந்த குடும்பத் தலைவன் என்னைப் பார்த்து உரக்கச் சிரித்தான். தான் குடிப்பதற்கான காரணமாக ஏதேதோ கூறினான். இது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி, "தம்பி, நீயும் ஒரு மொந்தைப் போடேன்'' என்று என்னைப் பார்த்து கூறினான்.
எனக்கு அந்த சின்ன வயதிலேயே குடி ஓர் அருவருப்பான விஷயமாக எனது வீட்டாரால் கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது. என்னைப் பார்த்து, "நீங்கள் சினிமாவில் இருக்குறீங்க. எப்படி சிகரெட், குடி என எதுவும் இல்லாம இருக்கீங்க?'' என்று ஆச்சரியமாகக் கேட்பார்கள். ஆனால் நான் இப்போது கூறுகிறேன். சினிமாவில் இருப்பவர்களை விட, மற்றவர்கள் தான் அதிகமாக குடிக்கு அடிமையாகி இருக்கிறார்கள். பள்ளி மாணவர்களும் டாஸ்மாக் கடையில் அமர்ந்து கொண்டு குடிப்பது ஃபேஷன் ஆகிவிட்டது. கல்வி கற்றுத்தரும் வாத்தியார் கூட குடித்துவிட்டு கீழே வீழ்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. குடியினால் கல்லீரல் கெட்டுப்போய் வியாதியில் வீழ்ந்து அவதிப்பட்டவர்களை எனக்கு நிறைய தெரியும்.
ஆனாலும் அவர்கள் உதவி கேட்டு வரும்போது என்னால் உதவி செய்யாமல் இருக்க முடியவில்லை. ஒன்று மட்டும் அவர்களிடம் கூறுவேன். "மது ஓர் அரக்கன். அது நம் வாழ்வுக்கு தேவையில்லாத ஒன்று. அதனை நினைத்துக் கூட பார்க்காதீர்கள்.''
யி யி யி யி யி
பூந்தோட்ட காவல்காரா
பூப்பறிக்க இத்தனை நாளா
மாந்தோப்பு காவல்காரா
ஓய்... ஓய்... ஓய்... ஓய்...
மாம்பழத்தை மறந்துவிட்டாயா
மறந்து விட்டாயா...?
படம்- குங்குமம்
இயக்கம்- கிருஷ்ணன் பஞ்சு
வருடம்- 1963
பாடல்- கண்ணதாசன்
பாடியவர்- பி.சுசீலா
இசை- எம்.எஸ்.விஸ்வநாதன்
அந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் எங்களை அவர்களது பக்கத்தில் அந்த வரப்பின் மேல் உட்கார வைத்துக் கொண்டார்கள். பக்கத்தில் வளர்ந்திருந்த பெரிய இலை கொண்ட செடியில் இரண்டு இலைகளைப் பறித்து பக்கத்தில் ஓடும் வாய்க்கால் நீரில் கழுவி எங்களது கைகளில் வைத்தார்கள். அவர்கள் வைத்திருந்த கலயத்தின் மேல் கட்டப்பட்டிருந்த துணியை அவிழ்த்து அதில் இருந்த கோழ்வரகால் செய்யப்பட்ட களி உருண்டையில் 
இரண்டினை எடுத்து ஒவ்வொருவரின் இலையிலும் ஓர் உருண்டையை வைத்தார்கள். நாங்களும் அதனை வாங்கி கொள்ள அதில் ஒரு பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய் வைத்து "சாப்பிடுங்க தம்பி'', என்றனர். நாங்களும் அதனை சாப்பிட மிகவும் சுவையாக இருந்தது. "பசி ருசி பார்க்காது'', என்று கூறுவார்கள். ஆனால் எங்களுக்கு பசிதான், ஆனாலும் அந்த உணவு ருசியாகத் தான் இருந்தது. இந்த மாதிரியான உணவுகள் வழி நெடுக எங்களுக்கு கிடைத்துவிடும்.
அதுவும் இல்லாமல் வழி நெடுக ஆறுகள் குறுக்கிடும். தண்ணீர் சலசலவென்று வெள்ளியை ஊற்றி விட்டதைப் போல ஓடும். எனக்கு நீச்சல் தெரியும். ஆகையால் அதில் இறங்கி குளிக்க ஆரம்பித்து விடுவேன். கபாலியும் குளிப்பான். அப்படியே குளித்துக் கொண்டே "பொன் ஒன்று கண்டேன். பெண் அங்கு இல்லை. என்னென்று நான் சொல்லலாகுமா?' என்று பாடுவேன். உடனே கபாலியும், "பெண் ஒன்று கண்டேன். பொன் அங்கு இல்லை. என்னென்று நான் சொல்ல வேண்டுமா?' என்று நீச்சல் அடித்தபடி குளிப்போம். தண்ணீரில் சிறுசிறு மீன்கள் இருக்கும். அவை கடிக்க கூடாத இடத்தில் கடித்து வைக்கும். அப்படியே தண்ணீரில் மல்லாக்க படுத்துக் கொள்வேன்.
இவ்வாறு நாங்கள் அடிக்கடி நடைபயணம் மேற்கொள்வோம். அப்படி போகும்போது புத்தூர் அருகே ஒரு முறை நடந்து கொண்டிருந்தோம். இரண்டு பக்கத்திலும் வேலி அமைத்து இடையே பாதை இருந்தது. அதில் தான் நடந்து செல்ல வேண்டும். அந்த முள்வேலிக்குள் கொத்து கொத்தாக பங்கனப் பள்ளி மாங்காய் காய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. அது தரையை தழுவும் நிலையில், அதன் அழகே தனியாக இருந்தது. இதனைப் பார்த்ததும் கபாலி, "லெனின், இந்த மாங்காய் மிகவும் அழகா இருக்கே, சாப்பிடணும் போல இருக்கு. பறிச்சிக் கொடேன்'' என்றான்.
நான் சின்ன வயதில் கொடுக்காய்புளி பழம் பறித்தது நினைவுக்கு வந்தது. அது வேறு பருவம். அதுவும் நம்ம ஊர். இது வேற ஊர். இங்கே மாங்காய் அறுக்க முடியுமா என்று நினைத்துக் கொண்டேன். ஆனாலும் அந்த மாங்கனிகளின் அழகு என்னையும் கிறங்கத் தான் வைத்தது. அதோடு கூட அந்த மாங்காயின் சுவை எனக்கு ஏற்கெனவே பரிச்சயம் ஆனது. அவனுக்காக பறித்துக் கொடுத்து நானும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. "கபாலி, இந்த மாங்காயின் பெயர் பங்கனப் பள்ளி, இது காயாய் இருக்கும் போதும் சுவைக்கும். பழமானாலும் இனிக்கும்'' என்றேன். கபாலிக்கோ அதனை உடனே பறித்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை கொழுந்து விட்டு எரிந்தது.
"லெனின்... சீக்கிரம் லெனின்... ஏதாவது செய் லெனின்'' என்று என்னைப் பார்த்து கெஞ்சினான். எனக்கோ இந்த வேலியின் உள்ளே எப்படிப் போவது என்ற எண்ணமே இருந்தது. அப்படியொரு நெருக்கமான கட்டமைப்பின் கூடிய முள்வேலி அது. அந்த வேலியின் மேல் கை பட்டாலே கையை முள் பதம் பார்த்துவிடும். நான் என்ன செய்வது என்ற யோசனையில் இருந்த போது கபாலி கத்தினான். 
(தொடரும்)

"

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com