குண்டூசி முதல் விமானம் வரை...!

கட்டிடவியல், இயந்திரவியல் போல உலோகங்களைக் கையாள்வதற்கு உலோகவியல் பொறியியல் (மெட்டல்லர்ஜிக்கல்) படிப்பு உள்ளது.
குண்டூசி முதல் விமானம் வரை...!

கட்டிடவியல், இயந்திரவியல் போல உலோகங்களைக் கையாள்வதற்கு உலோகவியல் பொறியியல் (மெட்டல்லர்ஜிக்கல்) படிப்பு உள்ளது.
இந்த படிப்பின் நோக்கம், இதில் பயிலும் மாணவர்களுக்கு உலோகங்கள், உலோகக் கலவைகள் மற்றும் அலோகங்களை பற்றிய அறிவை வழங்குவதே. இந்த படிப்பு உள்ள கோயம்புத்தூர் பீளமேடு பகுதியைச் சேர்ந்த பி.எஸ்.ஜி.காலேஜ் ஆஃப் டெக்னாலஜி என்ற கல்லூரியின் துறைத்தலைவர் பி.கோபாலகிருஷ்ணன் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
"உலோகங்களை எவ்வாறு அவற்றின் தாதுக்களிலிருந்து பிரித்தெடுப்பது, சுத்தப்படுத்துவது, உருவாக்குவது, தரத்தை மேம்படுத்துவது மற்றும் சரியான உலோகங்களை அவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப எவ்வாறு பயன்படுத்துவது போன்றவற்றைக் கற்றுக்கொள்ள மெட்டல்லர்ஜிக்கல் பொறியியல் படிப்பு பயன்படுகிறது.
இந்த படிப்பில் சேருவதற்கு பிளஸ் டூ வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றை விருப்பப் பாடமாக எடுத்து படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தொடக்கத்தில் இதில் சேரும் மாணவர்களுக்கு கணிதம், வேதியியல், உலோகவியல் பாடங்கள் நடத்தப்படும். தொடந்து பிஸிக்கல் மெட்டல்லர்ஜி, உலோக கலவைகள், ஒவ்வோர் உலோகத்திலும் என்ன உள்ளது? உலோகம் எப்படி உருவாகிறது? அதன் தன்மை, மாற்றம் குறித்து பாடமும் பயிற்சியும் அளிக்கப்படும். பின்னர் இரும்பு உள்ளிட்ட தாதுக்களை கனிமங்களிலிருந்து பிரித்து எடுப்பது, தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றைக் கையாள்வது, அதன் தன்மைகள், பொறியியல் வரைகலை , தெர்மோடைனமிக், இரும்பை உருக்குவது, உலோகங்களின் தன்மை பற்றி ஆய்வு செய்வது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பாடமும் பயிற்சியும் அளிக்கப்படும். இறுதியில் வெப்பத்தினால் உலோகங்களில் ஏற்படும் மாற்றம், தண்ணீரினால் உண்டாகும் மாற்றம், ராக்கெட், பீரங்கி போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் உலோகங்கள் , எவர்சில்வர், அலுமினியம், செராமிக்ஸ் உள்ளிட்டவை குறித்து பாடமும் பயிற்சியும் அளிக்கப்படும். ராக்கெட்டின் வெளிப்புறத்தில் வெப்பத்தை தாங்கக் கூடிய ஒரு வகையான செராமிக்கை பயன்படுத்துவார்கள். அது குறித்தும் பயிற்சிஅளிக்கப்படும். வெல்டிங், பவுண்டரி பணி, சில உலோகங்களைக் கலவை செய்தால் என்ன கிடைக்கும் என்பது குறித்த பாடமும் பயிற்சியும் அளிக்கப்படும்.
இதில் படிக்கும் மாணவர்களுக்கு உலோகவியலைப்பற்றிய பாடங்கள் மற்றும் செய்முறை பயிற்சிகள் அளிக்கப்படுவதால் மாணவர்கள் நான்கு ஆண்டு படிப்புக்குப் பின்னர் உலோகவியல் துறையைச் சார்ந்த தொழில் முறை சிக்கல்களை அணுகுவதிலும், கையாள்வதிலும், அவற்றிக்குத் தீர்வு காண்பதிலும் பல புதுமைகளை முனைப்புடன் செயல்படுத்த இயலும். இங்கு பயிலும் மாணவர்கள் செயல்முறை பயிற்சிக்கு திருச்சி பாய்லர் தொழிற்சாலை, பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனங்கள், அணு ஆராய்ச்சி நிறுவனங்கள், அணு ஆராய்ச்சி நிலையங்கள், மற்றும் முன்னணி தனியார் உற்பத்தி ஆலைகளுக்கு சென்று வருவார்கள். இரும்பு உருக்காலைகள், வார்ப்பட தொழிற்சாலைகள், உலோக உருட்டாலைகள், இணைப்பு மற்றும் பற்ற வைத்தல் தொழிற்கூடங்கள், தானியங்கி தொழிற்சாலைகள், இந்திய பாதுகாப்பு மற்றும் அணு ஆராய்ச்சி கூடங்களில் வேலைவாய்ப்பினை பெறுகிறார்கள். உலோகவியல் படிப்பதால், குண்டூசி முதல் மருத்துவதுறைக்கு பயன்படும் ஊசி தயாரிப்பு, மிதிவண்டி, மோட்டார் சைக்கிள், கார், ரயில், ஆகாயவிமானம், கப்பல் கட்டும் ஆலைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகளிலும் வேலைவாய்ப்புகள்
உள்ளன'' என்றார்.
- எஸ்.பாலசுந்தரராஜ்



 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com