குழந்தைகள்... ஸ்மார்ட்போன்கள்!

ஸ்மார்ட் போன்கள் பெரியவர்களுக்கு ஏராளமான நன்மைகள் வழங்கினாலும், அவற்றுக்கு அடிமையாகும் குழந்தைகளுக்கு தீமையே இழைக்கின்றன
குழந்தைகள்... ஸ்மார்ட்போன்கள்!

ஸ்மார்ட் போன்கள் பெரியவர்களுக்கு ஏராளமான நன்மைகள் வழங்கினாலும், அவற்றுக்கு அடிமையாகும் குழந்தைகளுக்கு தீமையே இழைக்கின்றன. அதனால் குழந்தைகளிடம் இருந்து ஸ்மார்ட்போன்களைப் பிரிக்க பெற்றோர் போராடி வருகின்றனர். இந்தப் பாசப் போராட்டத்தில் குழந்தைகள்தான் பெரும்பாலும் வெற்றி பெறுகிறார்கள்.
ஸ்மார்ட் போன்களை தொடர்ந்து கூர்ந்து கவனிப்பதால் அது குழந்தைகளின் கண்களுக்கும், மூளைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்தே பெற்றோர் அனுமதிக்கின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள இந்தப் பிரச்னைக்கு அமெரிக்காவின் சௌத் கரோலினா பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் ஜீசங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து தீர்வு கண்டுள்ளனர்.
இதற்கான அவர்கள் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துபவர்களின் வயதைக் கண்டுபிடிக்க புதிய அல்காரிதத்தை உருவாக்கியுள்ளனர். இந்த அல்காரிதம் குறிப்பிட்ட வயதானவர்களை மட்டும் ஸ்மார்ட்போன்களுக்குள் நுழைய அனுமதிக்கிறது. சிறுவர்களை ஸ்மார்ட்போன்களுக்குள் நுழைய அனுமதிக்காது. குறிப்பிட்ட ஆப்களை குழந்தைகள் பயன்படுத்தவும் அனுமதி கிடைக்காது.
இதற்காக ஆராய்ச்சியாளர்கள், தொடுதிரையில் குழந்தை விரல்களின் அழுத்தத்தின் அளவின் அடிப்படையில் வயதைக் கணக்கிடுகின்றனர். தொடுதிரையில் குழந்தைகள் ஸ்வைப் செய்யும்போது மெல்லிய விரல்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களால் ஸ்மார்ட் போனுக்குள் உள்ளே நுழைய முடியாதபடி இந்த புதிய அல்காரிதம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஆராய்ச்சியாளர்கள் மூன்று வயதுடைய குழந்தைகளின் விரல் அழுத்தத்தையும், இளைஞர்களின் விரல் அழுத்தத்தையும் சேகரித்தும் சோதனை நடத்தினர். இதில், 84 சதவீதம் குழந்தைகள் விரல் அழுத்தம் சரியாக கண்டுபிடிக்கப்பட்டு ஸ்மார்ட்போன்களுக்குள் நுழைவது தடுக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய கண்டுபிடிப்பு விரைவில் ஸ்மார்ட்போன்களில் இடம் பெற உள்ளது. இது வருங்காலங்களில் ஸ்மார்ட்போன்களை குழந்தைகளிடம் இருந்து பிரித்து வைக்க உதவினாலும், குழந்தைகளிடம் செல்போன்களையே காட்டாமல் வளர்க்கும் பக்குவம் பெற்றோர்களிடம்தான் உள்ளது.
அ.சர்ஃப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com