நிலை குலையாமல் நில்! - சுகி. சிவம்

"வில் வித்தையில் நான் தான் மிகப்பெரிய வீரன்... எனக்கு நிகராக எவனும் இல்லை. என்னை இந்தநாட்டின் தலையாய வில் வீரன் என்று அறிவிக்க வேண்டும் அரசே'' என்று ஆர்ப்பரித்தான் ஓர் இளைஞன்.
நிலை குலையாமல் நில்! - சுகி. சிவம்

நீ... நான்... நிஜம்! -6
"வில் வித்தையில் நான் தான் மிகப்பெரிய வீரன்... எனக்கு நிகராக எவனும் இல்லை. என்னை இந்தநாட்டின் தலையாய வில் வீரன் என்று அறிவிக்க வேண்டும் அரசே'' என்று ஆர்ப்பரித்தான் ஓர் இளைஞன். ஆனால் அரசரோ, "என் குரு, வில் வித்தையில் எனக்கு வழிகாட்டி, காட்டில் இருக்கிறார்... அவரிடம் சான்றிதழ் வாங்கி வா'' என்று காட்டிற்கு அனுப்பினார்.
அலட்சியமாக காடு சென்ற இளைஞன் அங்கிருந்த குருவின் அபார வித்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். "கற்க வேண்டியது கடலளவு' என்று கண்டறிந்தான். அடக்கமாக அங்கேயே தங்கி மூன்றாண்டுகளில் முழுவித்தையையும் பயின்று , குருவின் சகல திறமைகளையும் உள்வாங்கிக் கொண்டான். ஊர் திரும்பும் முன் அவனது உள்ளம் பிறழ்ந்தது. குரு, தன்னுடைய சகல வித்தைகளையும் அடுத்தவனுக்கும் அளித்து விட்டால்... அதற்கு முன் அந்தக் குருவை அழித்து விட்டால்... ஈடு இணையற்ற வில்லாளி தான் மட்டுமே என்று அல்பபுத்தி ஆலோசனை சொன்னது. இதுதான் மனிதனின் கெட்ட குணம்.
ஒரு மரத்தின்பின் மறைந்தபடி குருவை நோட்டம் விட்டான் குரு துரோகி. சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்தவரைக் குறிவைத்து தன் வில்லை வளைத்தான். கணையை விட்டான். ஆனால் அரைநொடியில் குரு சுதாரித்துக் கொண்டார். விறகுச் சுள்ளியால் அம்பை மடைமாற்றி குரு துரோகிக்கே திருப்பி விட்டார். கையில் காயத்துடன் அவன் துடித்தான்.
"இந்த வித்தையை உனக்கு இதுவரை சொல்லித் தரவில்லை. காரணம்... என்றாவது உன் புத்தி இப்படிப் போகும் என்று தான் மறைத்து வைத்தேன்'' என்றார்."உங்களுக்கு நிகரான வில்வீரன் எவனும் உலகில் இல்லை'' என்று அவரது காலில் வீழ்ந்து வணங்கினான்.
குருவோ சிரித்தபடி "உளறாதே... இதே காட்டில் என் குரு இருக்கிறார். நான் அவரது கால் தூசுக்குச் சமம். அவரிடம் போ... சில வித்தைகள் கற்றுக் கொள்... பின் நகரம் போய் சிறந்த வீரன் என்று மன்னரிடம் பட்டம் பெறு. எங்களுக்கு இந்தப் பட்டங்களில் ஆர்வம் இல்லை'' என்று தம்முடைய குருவிடம் அனுப்பினார்.
கண்முடி கூட நரைத்துத் தொங்கிய மூத்த உருவில் இருந்த குருவின் குருவைச் சந்தித்து தான் ஒரு வில் வீரன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான் இளைஞன். அதிர்ச்சியான கேள்வி எழுப்பினார் பெரியவர்.
"வில்வீரன் என்கிறாய்... பிறகு ஏன் வில்லோடு அலைகிறாய்... இன்னும் நீயே வில்லாக மாற வில்லையா?'' என்று புதிரான கேள்வி கேட்டார் குருவின் குரு. "நீங்கள் அப்படி ஆகி விட்டீர்களா?'' என்றான். வானத்தை நிமிர்ந்து பார்த்த குரு அங்கு பறக்கும் பறவைக் கூட்டத்தைப் பார்த்து, "இதில் ஒன்றை வீழ்த்துவோமா?'' என்றார். மூன்றாவது வரிசையில் நடுப்பறவை என்றான் வில்வீரன். குருவின் குரு தன் கண்களால் அதை உற்று நோக்கினார். அடுத்த விநாடி அந்தப் பறவை தரையில் விழுந்தது. ""நானே வில்லாகி விட்டேன்'' என்றார் குருவின் குரு. பாடம் ஆரம்பமானது.
ஒரு நாள் ஆபத்தான, செங்குத்தான, மலையுச்சியில் நின்றபடி பெரியவர் வில் வீரனை அருகில் வரச் சொன்னார். ஒரு விநாடி சறுக்கினாலும் அதல பாதாளம். அங்கு முளைத்திருந்த மரக்கிளையின் உச்சிக்குச் சரசரவென்று நகர்ந்த பெரியவர் "வா... வா... இங்கிருந்து அம்புவிடு'' என்றார். இளைஞனோ, "என்னை மரணத்தில் தள்ளத் தீர்மானித்து விட்டீர்களா? அங்கு கால் பரப்பி ஆடாமல் எவ்வாறு நிற்க முடியும்? அங்கிருந்து நிமிர்ந்து மேலே பார்த்து வில் வளைத்து எப்படி கணைவிட முடியும்? அங்கு எதுவுமே சரியில்லை. உறுதியான நிலமில்லை... ஆடுகிற ஒன்றின் மீதேறி இலக்கை எங்ஙனம் வீழ்த்த முடியும்?'' என்றான்.
"எல்லாம் சரியாக இருக்கும் இடத்தில் நீ வீரனாய் இருப்பதில் என்னப்பா பெருமை இருக்கிறது? அது சாதாரண வெற்றி... அவமானகரமான வெற்றி... எதுவுமே சரியில்லாத இடத்தில் இருந்து உன்னால் இலக்கை வீழ்த்த முடிவதுதானே உண்மைத் தகுதி'' என்றார் குரு.
இதைத்தான் இன்றைய இளைஞன் உள்வாங்க வேண்டும். "சரியான குடும்பம், சரியான கல்லூரி, சரியான ஆசிரியர், சரியான சமூகம், சரியான அரசு இருந்தால் நான் ஜெயிப்பேன்' என்கிறார்கள். இதில் என்ன தம்பி ஆச்சரியம் இருக்கிறது? மோசமான கல்லூரியில், சரியில்லாத குடும்பத்தில் பிறந்து, திறமையற்ற ஆசிரியர்கள் பாடம் நடத்த, முதல் மதிப்பெண் பெற்றால் அதுதான் ஒரிஜினல் வெற்றி. அக்மார்க் திறமை இரவல் வெற்றிகளுக்கே இன்றைய இளைய தலைமுறை ஏங்குவதை நிறுத்த வேண்டும்.
இப்போதெல்லாம் அமெரிக்கா போய்வருவது சென்னை ஐஸ்ஹவுஸிலிருந்து ஐயனாவரம் போய் வருகிற மாதிரி எளிமையாகிவிட்டது. ஆனால் 1890 களில் அது பெரும் சிரமம். பொருட் செலவு... பணக்கஷ்டம்... அதை ஓர் இளைஞன் செய்ய முயன்றான். அமெரிக்க மாநாட்டில் உரை நிகழ்த்த அவன் போய் இறங்கிய பிறகு எல்லாமே தலைகீழாக இருந்ததை உணர்ந்தான். அவன் அங்கு சந்திக்க நினைத்த மனிதரின் முகவரி தொலைந்து போய்விட்டது. தட்டுத் தடுமாறி வழிகாட்டப் பட்டான். மாநாடு நடக்க இன்னும் சில மாதங்கள் இருப்பதால் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது... காசு... காசு... கரைகிறது. தனிமனிதன் மாநாட்டில் பங்கேற்க அங்கு அனுமதி இல்லை. ஏதாவது ஒர் அமைப்பின் சார்பிலும் அவன் செல்லவில்லை.
அவனுக்கான உணவு அங்கில்லை. குளிரைத்தாங்கும் கோட்டோ உடையோ கைவசம் இல்லை. அந்நியர்கள்... அந்நியர்கள்... அத்தனைபேரும் அந்நியர்கள்... ஆனாலும் அவன் அங்கே பேசினான். அவ்வளவுதான் அதன் பின் உலகமே அவனைப் பற்றிப் பேசியது. அந்த மகானுபாவன்தான் இந்தியாவின் கம்பீரம், பாரதத்தின் கெüரவம், சுவாமி விவேகானந்தர்.
அங்கு அவர் பலராலும் வஞ்சிக்கப்பட்டார். மஜும்தார் என்கிற இந்தியர் அவருக்கு ஏற்படுத்திய இடையூறுகள் கொஞ்சநஞ்சமல்ல. அவர் பேச்சுக்குப் பல இடங்களில் ஏற்பாடு செய்த அமெரிக்கன் பெருந்தொகை வசூலித்துவிட்டு சுவாமிக்குத் தராமல் ஏமாற்றினான். உணவும் உடையும் உறையுளும் அவருக்கு ஓயாத பிரச்சனை. நிலைகுலையவில்லையே அந்த மாமனிதர். அதனால்தான் இளைஞருக்குச் சொல்கிறேன்.
"நிலைகுலையாதே... நிமிர்ந்து நில்...' என்கிறேன். உலகம் உன்னைத் தலைகுப்புற கவிழ்க்கலாம். உறவும் நட்பும் கூட உருட்டிவிட்டு விடலாம். அதனால் என்ன? அதற்குப்புறமும் ஜெயிக்க வேண்டாமா? எல்லாம் சரியாய் இருந்தால் ஜெயிப்பேன் என்பதில் எந்தப் பெருமையும் இல்லையே.
வசதியான, கருவிகள் பல துணையுள்ள மருத்துவமனையில் நிகழும் அறுவை சிகிச்சையில் வெற்றிகாணும் மருத்துவனைவிட, யுத்தகளத்தில் எந்த வசதியுமின்றி உயிர்காக்கும் மருத்துவர் தானே பெரிய மருத்துவர். "என் பெற்றோர் ஓயாமல் சண்டை இடுகிறார்கள். என்னால் அமைதியாகவே படிக்க முடிவதில்லை'' என்று பல மாணவர்கள் என்னிடம் குறைபட்டுக் கொண்டதுண்டு. நாட்டில் நேர்மையில்லை... திறமைக்கு மதிப்பில்லை... லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது... எங்கும் ஜாதி... மதம்... பணம்... விளையாடுகிறது... என்று பரந்து விரிந்த சமூகத்தின் மீது பலர் குற்றப் பத்திரிக்கை படிக்கிறார்கள்.
உண்மைதான்... இது அப்பட்டமான உண்மைதான். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி ஜெயிப்பதும் முன்னுக்கு வருவதும் நம் கடமை என்பதை வளரும் தலைமுறைக்கு நான் அழுத்தம் திருத்தமாக ஓங்கி உரைக்கிறேன். இங்கே பஸ் தாமதமாகப் போய்ச்சேரும். ஆனால் நாம் பிடிக்க வேண்டிய ரயில் குறித்த நேரத்தில் புறப்பட்டுவிடும். ஊழியர்கள் பலரும் சொன்னால் சொன்னபடி நடந்து கொள்ளமாட்டார்கள்... சொல்லாமல் விடுப்பு எடுப்பார்கள். இஷ்டப்படி ஸ்டிரைக் செய்வார்கள்... மக்கள் வரிசைகளைப் புறக்கணிப்பார்கள்...மேலதிகாரிகள் வேண்டியவனுக்கு பிரமோஷன் கொடுப்பார்கள்... நேரம் பார்த்து காலைவாரி விடுவார்கள்... இத்தனைக்கும் மத்தியில்தான் நாம் ஜெயிக்க வேண்டி உள்ளது.
நாம் இந்த நாட்டில் தானே பிறந்திருக்கிறோம்... இங்கு தானே வாழ வேண்டி உள்ளது. இத்தனை குளறுபடிகளையும் தாண்டி ஜெயிப்பது நம் கடமை நண்பர்களே...
(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com