உலக விஞ்ஞானிகள் மதிக்கும் துகள் இயற்பியல் நிபுணர்!

ஜெனீவாவிலுள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனமான செர்ன் (CERN), அணுவியல் விஞ்ஞானிகளின் தலைமையகமாகத் திகழ்கிறது. அணுவின் மிகச் சிறு துகள்களை முடுக்கி மோதவிட்டு அதன் விளைவுகளை அறியும்
உலக விஞ்ஞானிகள் மதிக்கும் துகள் இயற்பியல் நிபுணர்!

ஜெனீவாவிலுள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனமான செர்ன் (CERN), அணுவியல் விஞ்ஞானிகளின் தலைமையகமாகத் திகழ்கிறது. அணுவின் மிகச் சிறு துகள்களை முடுக்கி மோதவிட்டு அதன் விளைவுகளை அறியும் சோதனைகளை இந்நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் இந்தியாவின் பிரதிநிதியாகப் பங்கேற்றவர்,
அடிப்படைத் துகள் ஆராய்ச்சி நிபுணரான ரோஹிணி கோட்போலே. இத்துறையில் உலக அளவில் மதிக்கப்படும் விஞ்ஞானியாக அவர் திகழ்கிறார். 
துகள் இயற்பியலின் தர மாதிரிக்கு அப்பால் அணுத்துகள்களின் நிலை (ஆநங), அவற்றின் தோற்ற நிகழ்வுக் கொள்கை (Phenomenology) ஆகியவற்றில் ரோஹிணியின் கருத்துகள் அணுவியல் விஞ்ஞானிகளால் கூர்மையாகக் கவனிக்கப்படுகின்றன. உயர் ஆற்றல் ஃபோட்டான்களின் ஆட்ரான் கட்டமைப்பு, அடுத்த தலைமுறை எலக்ட்ரான் - பாஸிட்ரான் வடிவமைப்பு ஆகியவை தொடர்பாக குறிப்பிடத் தக்க கருத்துகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார். விஞ்ஞானியாக மட்டுமல்லாது, சிறந்த கல்வியாளராகவும் அவர் விளங்குகிறார்.
1952, நவ. 412-இல் புணேவில் பிறந்தார் ரோஹிணி மதுசூதன் கோட்போலே. இளம் வயதிலேயே அவர் படிப்பில் முத்திரை பதிப்பவராக இருந்தார்.புணே பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட சர் பரசுராம்பாபு கல்லூரியில் படித்து,
முதலிடத்துடன் இயற்பியலில் பி.எஸ்சி. தேர்ச்சி பெற்றார் (1972). அடுத்து கல்வி உதவித்தொகையுடன், மும்பை ஐ.ஐ.டி.யில் படித்து எம்.எஸ்சி. பட்டம் (1974) பெற்றார். அப்போது முதலிடத்துடன் வெள்ளிப் பதக்கமும் பெற்றார். 

படிப்பில் முதன்மை பெற்றதால் ஆய்வுப் படிப்புக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதைப் பயன்படுத்தி, அமெரிக்காவின் ஸ்டோனிபுரோக்கில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, கோட்பாட்டு துகள் இயற்பியலில் பிஹெச்.டி. பட்டம் (1979) பெற்றார் ரோஹிணி.
கல்வி, ஆராய்ச்சிப் பணிகள்: 1979-இல், மும்பையிலுள்ள டாடா அடிப்படை அறிவியல் ஆய்வு மையத்தில் (டி.ஐ.எஃப்.ஆர்.) வருகை ஆய்வாளராக இணைந்தார். 1982 வரை அங்கு ஆய்வுகளில் ஈடுபட்டார். அதையடுத்து, மும்பை பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையில் 1982-இல் விரிவுரையாளராக இணைந்தார். 1987-இல் முதன்மை விரிவுரையாளரான (ரீடர்) அவர் 1995 வரை அங்கு பணிபுரிந்தார்.
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எஸ்சி.) 1995-இல் உதவிப் பேராசிரியராக இணைந்த ரோஹிணி, அங்கேயே 1998- 2002 காலகட்டத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
இதனிடையே, ஜெனீவாவிலுள்ள செர்ன் ஆய்வகத்தில் வருகை விஞ்ஞானியாகப் பணியாற்றத் தேர்வான ரோஹிணி, 2002- 2003-இல் அங்கு சர்வதேச விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
முன்னதாக, ஜெர்மனியின் டோர்ட்பண்ட் பல்கலைக்கழகத்தின் வருகை விஞ்ஞானியாகவும் (1986- 1988), இந்திய அறிவியல், தொழிலக ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் (சி.எஸ்.ஐ.ஆர்.) கூட்டு ஆய்வாளராகவும் (1982) அவர் செயல்பட்டுள்ளார்.
டி.ஐ.எஃப்.ஆரின் துணை அமைப்பான கோட்பாட்டு இயற்பியல் சர்வதேச மையத்தில் இணைப்புப் பேராசிரியராக 2005 முதல் 2011 வரை அவர் பணிபுரிந்தார். கூடவே, ஜெனிவாவின் செர்ன் ஆய்வகத்திலும் இணை விஞ்ஞானியாக (2010- 2011) அவர் செயல்பட்டார்.
நெதர்லாந்தில் உள்ள உட்ரெச்ட் பல்கலைக்கழகத்தின் வருகைப் பேராசிரியராகவும் (2011), இத்தாலியின் டிரைஸ்டில் உள்ள ஐ.சி.டி.பி நிறுவனத்தில் இணை ஆராய்ச்சியாளராகவும் ரோஹிணி பணியாற்றினார்.
தற்போது, பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எஸ்சி.யின் உயர் ஆற்றல் இயற்பியல் மையத்தில் பேராசிரியராக ரோஹிணி கோட்போலே பொறுப்பு வகிக்கிறார்.
அறிவியல் பணிகள்: International Detector Advisory Group- இல் பேராசிரியர் ரோஹிணி கோட்போலே அங்கம் வகித்தார். அந்தக் குழு தான் "ஹிக்ஸ் போசான்' துகள்களின் இயக்கத்தை வரையறுத்து, கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தது (2012, ஜூலை 4) . இத்துறையில் ஆய்வுகள் தொடர்கின்றன. அணுவின் மீச்சிறு துகள்களின் இயக்கம் துல்லியமாக உணரப்பட்டால், அதன்மூலமாக அணுவியலிலும் பிரபஞ்சவியலிலும் புதிய மாற்றங்கள் நிகழும் என்பது சர்வதேச விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு.
இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது. அதற்கு இந்திய கலாசாரத்தில் பெண்களுக்கு இருக்கும் குடும்பப் பொறுப்பே காரணமாக உள்ளது. இந்த நிலையை மாற்ற இந்திய அறிவியல் அகாதெமி பல முயற்சிகளை மேற்கொண்டது. அத்திட்டத்துக்கு ரோஹிணி தலைமை வகித்தார். அதற்காக சக விஞ்ஜானி ராம் ராமசாமியுடன் இணைந்து அவர் மேற்கொண்ட புதிய முயற்சியால் ஓர் அரிய ஆவணப் பதிவு கிடைத்தது. 
கணித மேதை இரண்டாவது பாஸ்கரரின் (பொ.யு. 1114- 1185) மகள் லீலாவதியும் சிறந்த கணித மேதையாவார். அவரது பெயரில்தான் பாஸ்கரர் "லீலாவதி' என்ற இயற்கணித நூலை எழுதினார். அந்த லீலாவதியை நினைவுகூரும் வகையிலும், இந்தியப் பெண்கள் அறிவியல் ஆராய்ச்சியில் சளைத்தவர்கள் அல்ல என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையிலும், "லீலாவதியின் மகள்கள்' என்ற தலைப்பில் 80-க்கு மேற்பட்ட இந்திய பெண் விஞ்ஞானிகளின் வரலாற்றை அவர் தொகுத்தார். அது 2008-இல் இந்திய அறிவியல் அகாதெமி நூலாக வெளியிட்டது. 
அது மட்டுமல்ல, 145 ஆய்வறிக்கைகளை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் 150-க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகளை அவர் பதிவு செய்துள்ளார். அவரது உயர் ஆற்றல் துகள்களின் தோற்ற நிகழ்வுக் கொள்கை குறித்த நூல் (Phenomenology of Super symmetric   Particles- 2005) இத்துறையில் பிஹெச்.டி. மாணவர்களுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ளது. 
பல்வேறு சர்வதேச ஆராய்ச்சிக் குழுக்கள், கல்வி நிறுவனங்களின் வழிகாட்டல் குழுக்களிலும் ரோஹிணி அங்கம் வகிக்கிறார். இந்திய அறிவியல் அகாதெமியின் "பிரமாணா' அறிவியல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் (1995- 1998), அதன் ஆசிரியராகவும் (1998- 2007) செயல்பட்ட அவர், "கரன்ட் சயின்ஸ்' இதழின் ஆசிரியர் குழுவிலும் (1997- 2008) பணிபுரிந்தார். இந்திய மாணவர்களிடையே- குறிப்பாக பெண்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதை அவர் நோக்கமாகக் கொண்டுள்ளார். 
கெüரவங்கள்: 1985- 1988-இல் இந்திய அறிவியல் அகாதெமியால் தேர்வு செய்யப்பட்ட இளம் விஞ்ஞானி ரோஹிணி ஆவார். டிரைஸ்டில் உள்ள சர்வதேச கோட்பாட்டு இயற்பியல் மையத்தின் இணை உறுப்பினராகவும் (1984- 1992, 1995- 2001), மூன்றாம் உலக நாடுகளின் அறிவியல் அகாதெமி (டி.டபிள்யூ.ஏ.எஸ்.) கூட்டு ஆய்வாளராகவும் (2009) ரோஹிணி செயல்பட்டுள்ளார். 
இந்திய அறிவியல் அகாதெமி (1992 முதல்), இந்திய தேசிய அறிவியல் அகாதெமி (2003 முதல்), தேசிய அறிவியல் அகாதெமி (2007 முதல்) ஆகிய இந்தியாவின் மூன்று அறிவியல் அகாதெமிகளிலும் ரோஹிணி கூட்டு ஆய்வாளராக உள்ளார். 
ருஸ்தம் சோஹ்லி விருது (2006), மேகநாத் சஹா பதக்கம் (2007), சத்யேந்திரநாத் போஸ் விருது (2008), சி.விராமன் மஹிளா விஞ்ஞான புரஸ்கார் விருது (2010), தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் தேவி விருது (2015) உள்ளிட்ட பல விருதுகளையும், கெüரவங்களையும் ரோஹிணி கோட்போலே  பெற்றுள்ளார். 
அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்ட காரணத்தால் தாமதமாகவே ரோஹிணி திருமணம் புரிந்தார். ஆயினும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. "ஆய்வகங்களில் குழந்தைப்பராமரிப்பு சேவை மையம் இருந்திருந்தால் குழந்தை பெற்றிருப்பேனோ என்னவோ' என்று சொல்லிச் சிரிக்கிறார், 75 வயதை அண்மையில் பூர்த்தி செய்த ரோஹிணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com