கண்டதும் கேட்டதும் - 29

ஐய பேரிகை கொட்டடா!-கொட்டடாஐய பேரிகை கொட்டடா!
கண்டதும் கேட்டதும் - 29

ஐய பேரிகை கொட்டடா!-கொட்டடா
ஐய பேரிகை கொட்டடா!
--------------
காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம்

- மகாகவி சி. சுப்பிரமணிய பாரதி


""ஏன் உங்களது இந்தப் படத்தை நான் தடை செய்யக்கூடாது?'' "பாவ மன்னிப்பு' படத்தின் போது சென்சார் போர்டு தலைவராக இருந்த சாஸ்திரி டைரக்டர் பீம்சிங்கிடம் படத்தைப் பார்த்து முடித்தவுடன் கேட்டார்.
டைரக்டர் பீம்சிங் எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருப்பார். அவர் முகம் எப்போதும் எந்த விதமான கவலைக்குறிகளையும் வெளிப்படுத்துவது இல்லை. தான் நிற்கும் நிலம் தன்னுடையது, அது எந்த விதத்திலும் தன்னை வீழ்த்தி விடாது என்ற நம்பிக்கை அவருள் எப்போதும் இருக்கும்.
டைரக்டர் பீம்சிங் தனது ஒளிமிகுந்த கண்களால் சாஸ்திரியைப் பார்த்தார். புன்னகையினூடே, ""ஏன், இந்த படத்துல தடை செய்யற அளவுக்கு என்ன தவறுகள் இருக்குது'' என்று கேட்டார். 
சாஸ்திரி சிரித்துக் கொண்டே கூறினார், ""ஒன்றா ரெண்டா எடுத்துச் சொல்ல, நெறைய இருக்குது பீம்''.
டைரக்டர் தனது மென்மையான கன்னங்களை வருடிய படியே அவரைப் பார்த்துக் கொண்டு, ""சரி நீங்களே சொல்லிடுங்க, என்னென்ன தவறுங்க, உங்களுக்கு தெரிஞ்சது'' என்று கேட்டார்.
""பீம், இந்த கதையில வந்த ஆளவந்தார் கேரக்டர் ஓர் இந்து. உடல் முழுக்க சந்தனம் பூசிக் கொண்டு, நெற்றி முழுக்க விபூதி பூசிக் கொண்டும் இருக்கும் இந்து. அவர் செய்யும் கொடுமைகளை முஸ்லிம் மதத்து வாலிபனும், கிறித்துவ மதத்துப் பெண்ணும் அடைய வேண்டி இருக்குது. அப்படீன்னா, இந்து மதத்தவர் கொடுமை செய்யறாங்க என்று தானே அர்த்தம். அதுதான் உங்கள கேட்டேன்'' என்று டைரக்டரைப் பார்த்து சாஸ்திரி கேட்டார்.
டைரக்டர், சாஸ்திரியைப் பார்த்து, ""சார், உங்களுக்கு நல்லாவே தெரியும். நெறைய படங்கள்ல கிறிஸ்துவ கேரக்டரும், முஸ்லிம் கேரக்டரும் தவறு செய்யற மாதிரி காட்டி இருக்காங்களே, அது மட்டும் எதுல சேர்த்தி?'' என்று கேட்டார்.
""அது இல்ல பீம். கதையில வர்ற ஆளவந்தார் கேரக்டர் ஆசிட் ஊத்தறாரு, குடிசைக்கு தீ வைக்கறாரு. விஷம் தர்றாரு. கைத்துப்பாக்கியால சுடுறாரு... இதெல்லாம் ஓர் இந்து செய்யறதா தானே நெனைக்க தோணுது'', சாஸ்திரியின் பேச்சில் ஒரு கேள்விக்கான தொனி இருந்தது.
""சார் நீங்க அந்த படத்துல ஆளவந்தாரின் மனைவியை சரியாப் பார்க்கலைன்னு நெனைக்கிறேன். அவர்களின் பெயர் மரகதம். நவமணிகளில் (நவரத்தினங்கள்) உயர்ந்ததான மரகதத்தை அவர்களுக்கு சூட்டியிருக்கிறேன். அவங்கள ஒரு சிறந்த தாயாக, சிறந்த குணவதியாக காட்டி இருக்கிறேன். அதிலும் அந்த கேரக்டருக்கு சிறந்த நடிகையான ராஜம்மாவை நடிக்க வச்சிருக்கேன். அவங்க ஓர் இந்து பெண் தானே. எந்த நாடாகஇருந்தாலும் அதனை தாய்நாடுன்னு தானே சொல்றோம். ஆங்கிலத்தில் கூட "மதர்லேண்ட்'
என்று தாயை முன்வைத்து பேசறாங்க. அதனால தான் நான் இந்த படத்துல கணவன் கொடுமைக்காரனா இருந்தாலும் அவரோட மனைவிய நல்ல புனிதவதியா காட்டியிருக்குறேன்'' என்று பதில் அளித்தார்.
""பீம். நான் இதத்தான் நீங்களே சொல்லணும்னு எதிர்பார்த்தேன். அதோடு கூட அப்பு சாஸ்திரியா நடிக்கும் கொத்தமங்கலம் சுப்புவின் கேரக்டரும் எனக்கு பிடிச்சிருந்தது'' என்றார்.
""சார், கொத்தமங்கலம் சுப்பு சாதாரண நடிகர் மட்டும் அல்ல. அவர் ஜெமினியின் ஆஸ்தான கதாசிரியர், டைரக்டர், வசனகர்த்தா, பாடல் ஆசிரியர் எல்லாம் சேர்ந்த கலவையின் உன்னதம் சார். அவருடைய மனைவியின் பெயர் சுந்தரிபாய். அவர்களும் நல்ல நடிகை'' என்று மேலும் கூறினார்.
""பீம் ஒன்னு சொல்லட்டுமா? இந்த கதை நிச்சயம் உங்களுக்கு நேஷனல் அவார்டு வாங்கி தரும். இப்பவே எழுதி வச்சிக்குங்க'' என்று வாழ்த்தினார். அவருடைய தீர்க்க தரிசன வார்த்தை அப்படியே பலித்தது. 
""ஆனாலும் பீம், ஒரே ஒரு வரியை மட்டும் மாத்த வேண்டி இருக்குது. அது பாடல் வரி. அத என்னால காம்ப்ரமைஸ் பண்ண முடியல'' என்று அவரது பேச்சு கறாராக இருந்தது.
""சொல்லுங்க. என்ன வார்த்தையை பாடலில் இருந்து மாத்த சொல்றீங்க'' டைரக்டர் கேட்டார். 
""அது உங்களோட படத்தோட டைட்டில் சாங். "வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை' . இந்த பாட்டுல வர ஒரு வரியை நீங்க மாத்திடுங்க'' என்றார்.
""சார், நீங்களே அந்த வரியை சொல்லிடுங்க'' என்று டைரக்டர் கேட்க, சாஸ்திரி அவர்கள் ""எதனைக் கண்டான் மதம் தனை படைத்தான்' என்ற வரியில், "மதம் தனை' என்ற வார்த்தை எனக்கு நெருடலா இருக்குது. மதம் இங்க மிகப்பெரிய விருட்ஷம். அதன் வேர் எங்கெங்கு காணாதபடி எல்லார் வாழ்விலும் துளையிட்டு உள்ளே பாய்ந்து இருக்குது. நீங்க இந்த கதை மூலமா செவ்வாடை போடாத புரட்சிகாரனா எனக்கு தென்பட்றீங்க. இந்த கதையை பார்த்து நிச்சயம் நல்ல விடிவு இந்த சமுதாயத்துக்கு கெடைச்சா நல்லதுதான். ஆனாலும் இந்த வரியை மட்டும் மாத்திடுங்க'' என்று கேட்டுக் கொண்டார்.
டைரக்டர் பீம்சிங் தன்னுள்ளேயே கூறிக் கொண்டார். பாடல்கள் முதலிலேயே வெளிவந்து எல்லார் இதயத்திலும் குடி கொண்டு இசைத்தாளம் போட்டு கொண்டிருப்பது இவருக்கு எப்படித் தெரியாமல் போய்விட்டது?
"" சரி சார்... மாத்திடறேன். நீங்களே ஏதாவது வரியைச் சொல்லிடுங்க'' என்றார்.
""டைரக்டர் பீம்சிங்கிற்கு எப்போதும் ஒரு குணம். அவர் கதையில் வரும் எந்த காட்சியானாலும் மூன்று, நான்கு பேரை எழுதக் கூறுவார். அவர்களில் முக்கியமானவர்கள் சிறந்த வசனகர்த்தாக்களான பாசுமணி, சோலைமலை, இறைமுடிமணி ஆவார்கள்.
ஆனால் டைரக்டரின் படமான "அம்மை அப்பன்', "ராஜா ராணி' ஆகிய இரண்டு படத்திற்கும் கதை வசனம் கலைஞர் கருணாநிதி ஆகும். 
இந்த மூன்று பேர் எழுதுவது, அவர்களுக்கே மற்றவர்களும் அந்த காட்சிக்கு வசனம் எழுதுகிறார்கள் என்று தெரியாது. மொத்தமாக அவர்களிடம் எழுதி வாங்கி அதனைச் சரிபார்த்து அதில் சிறந்த வரிகளை டைரக்டர் பயன்படுத்திக் 
கொள்வார். 
இப்படிப்பட்டவர்களுக்கும் "பாவ மன்னிப்பு' படத்தின் கடைசி காட்சியில் எப்படி வசனம் வைத்து முடிப்பது என்று தெரியாமல் மிகவும் சிரமப்பட்டார்கள். ஆனாலும் டைரக்டர் எப்போதும் எந்த ஒரு காட்சியையும் தன்னுள்ளேயே வடிவமைத்து வைத்திருப்பார். இவர்களிடத்தில் சரியான வசனம் கிடைக்காத பட்சத்தில் அவர் உள் வைத்துள்ள வரிகளையும், காட்சிகளையும் அவர்களிடம் கூறுவார். அது நிச்சயம் பழுதில்லாத முத்தாக இருக்கும். அப்படியே ஏற்கப்படும்.
அதனைப் போன்றே டைரக்டர் பீம்சிங் தான்வடிவமைத்திருந்த அந்த கடைசிக் காட்சியினை விவரித்தார். அதுவே ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அந்த காட்சி இதுதான்:
முஸ்லிமாக வரும் ரஹீமும் (சிவாஜி கணேசன்) கிருத்துவ பெண்ணாக வரும் மேரியும் (தேவிகா) பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ராஜாவும் (ஜெமினி கணேசன்), ஏழை பெண்ணான தங்கமும் (சாவித்ரி) அவரவர்களுக்கான திருமண உடையில் நிற்பார்கள், அதாவது ரஹீம் முஸ்லிம்கள் திருமணத்தின் போது போடும் உடையிலும், கிருத்துவ பெண்ணாண மேரி கிருத்துவ திருமண உடையிலும், பணக்கார பையனான ராஜா வேட்டி சட்டையிலும், ஏழை பெணணாக வரும் தங்கம் ஏழைகள் உடுத்தும் கூறைப் புடவையிலும் தோன்றுவார்கள். அப்போது இவர்களின் பின்பக்கத்தில் ஆர்ட் டைரக்டரிடம் கூறி, இந்துகளுக்கான கோயிலும், முஸ்லிம்களுக்கான மசூதியும், கிருத்துவர்
களுக்கான சர்ச்சும் வரைய வைத்திருந்தார்.
அதற்கு முன் இவர்கள் நடந்து வந்து கொண்டிருப்பார்கள். அப்போது முஸ்லிமாக நடிக்கும் சிவாஜி கணேசன் கூறுவார். ""மனம் மாறினால் போதும், மதம் மாற தேவையில்லை''.
இந்த வசனத்தை டைரக்டர் பீம்சிங் இன்றும் சினிமா பார்க்கும் அனைத்து மக்களுக்கும் தனது உன்னத கருத்தாக, சென்சார் போர்டு அதிகாரி சாஸ்திரி கூறியதைப் போன்று புரட்சிகரமான  கருத்தாக அப்போதே அளித்து மகிழ்ந்தார். 
மீண்டும் சாஸ்திரி அவர்களும், பீம்சிங் அவர்களும், அந்த பாடல் வரிகளைப் பற்றி பேசும்  இடத்துக்கு வருவோம்.
""பீம், நீங்கள் எப்படிப்பட்ட கதாசிரியர். மக்களின் உள்ளத்தைப் படித்துப் பார்க்கும் திறன் உங்களிடம் எவ்வளவு அதிகமாக இருக்குதுன்னு எனக்குத் தெரியாதா?
அப்படியிருக்கும் போது அந்த பாடல்ல வரும் வரியை உங்களால மாத்த 
முடியாதா?'' என்று சிரித்தபடி கேட்டார். 
""சரி சார் மாத்திடறேன். உங்களுக்கு பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க'' என்று டைரக்டர் பீம்சிங் கூறி, ""எதனைக் கண்டான், பணம்தனை படைத்தான் என்று மாற்றிடலாமா சார்'' என்று கேட்டார்.
சாஸ்திரி டைரக்டர் பீம்சிங்கினை ஆரத்தழுவிக் கொண்டார். ""பீம் உங்களப் போன்றவங்க இன்னும் நெறைய பேர் தோன்றணும்ன்னு நெனைக்கிறேன். நீங்க சினிமாவுலயே நின்னுட்டீங்க. இன்னும் கொஞ்சம் வெளிய வந்து அரசியல்ல இருந்திருந்தீங்கன்னா இன்னொரு பீம் இந்த நாட்டுக்கு கெடைச்சிருப்பாரு'' என்று மீண்டும் ஒருமுறை வாழ்த்திவிட்டுச் சென்றுவிட்டார்.
டைரக்டர் பீம்சிங் அவரைப் பார்த்துக் கொண்டே தனக்குள் கூறிக் கொண்டார்.
""எதனைக் கண்டான், பணம் தனை படைத்தான்!''

படங்கள் உதவி: ஞானம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com