கண்டதும் கேட்டதும் 30 - பி.லெனின்

தமிழ் எழுத்தான "ப'-வின் மேல் ஒரு சின்ன சுழி போட்டால் அது "பி' என்று ஆகி விடும். பணம் என்ற வார்த்தையில் உள்ள முதல் எழுத்தின் மீது எந்தக் குறியும் போடாத வரை அது பணம் தான்.
கண்டதும் கேட்டதும் 30 - பி.லெனின்

காசால ஆகாத காரியம் இல்லே
காசில்லன்னா கோயில் குளம் பூசையுமில்லே
ஆசைமிக்க அண்ணன் தம்பி ஒருத்தனுமே இல்லே
ஒருத்தனுமே இல்லே... போ..
கலையாட்டம், பொது கூட்டம், வெள்ளையப்பன்
இல்லேன்னா எதுவுமே இல்லே
பணம்... பணம்... பணம்... பந்தியிலே
குணம்... குணம்... குணம்... குப்பையிலே
படம்: மாமியார் மெச்சிய மருமகள்
பாடல்: கவிஞர் சுரபி
மியூசிக்: சுதர்சனம்

காசைப் பற்றிய மேலும் ஒரு பாடல்
காசேதான் கடவுளப்பா - அந்த 
கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கைக்கு கைமாறும் பணமே - உன்னை
கைப்பற்ற நினைக்குது மனமே
நீ தேடும் போது வருவதுண்டோ - விட்டு
போகும்போது சொல்வதுண்டோ
படம்: சக்கரம்
தமிழ் எழுத்தான "ப'-வின் மேல் ஒரு சின்ன சுழி போட்டால் அது "பி' என்று ஆகி விடும். பணம் என்ற வார்த்தையில் உள்ள முதல் எழுத்தின் மீது எந்தக் குறியும் போடாத வரை அது பணம் தான். ஆனால் அந்த "ப'-வின் மேல் ஒரு சுழி போட்டால் அந்த எழுத்து வாய் திறந்து பிணம் ஆகி விடுகிறது. அதைத்தான் பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்ன்னு சொல்லியிருப்பாங்களோ என்று 
நினைக்கிறேன்.
நான் நிறைய இறப்புகளுக்குச் சென்றிருக்கிறேன். எல்லா சடங்குகளும் முடிந்த பிறகு அந்த சடங்கினை செய்து கொண்டிருக்கும் தொழிலாளி அந்த பிணத்தின் மீது வெள்ளைத் துணியை வைத்து, "வாய்க்கரிசி போட்றவங்க எல்லாரும் போடுங்க' என்று குரல் கொடுத்துக் கொண்டே இருப்பான். சடங்குக்கு வந்தவர்கள் அங்கு இருக்கும் அரிசியை எடுத்துக் கொண்டு போடும்போது சில சில்லறைகளையும் போடுவார்கள். அப்படி அந்தப் பிணத்தின் வாய் மேல் அரிசியையும், காசினையும் போடும்போது பிணம் வாய் திறக்கிறதா என்று பார்த்துக் கொண்டே இருப்பேன். ஆனால் பிணம் இதுவரை வாய் திறந்தது இல்லை. இங்கு சில பழமொழிகள் அர்த்தமற்றதாகத் தான் விளங்கிக் கொண்டிருக்கின்றன. 
"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை' என்ற பழமொழியும் இதற்கு உதாரணம். கழுதைக்கு கற்பூர வாசனையின் அவசியம் என்ன இருக்கிறது? கழுதை ஒரு விலங்கு. கற்பூரம் என்பது ஒரு வேதி பொருள். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நான் கழுதையாக பிறந்து கற்பூர வாசனை எப்படி இருக்கும் என்று நுகர நினைக்கிறேன்.
"டைம்ஸ் ஆஃப் இந்தியா'வில் வரும் கார்ட்டூனில் வரும் "பொதுஜனம்' போன்று டைரக்டர் பீம்சிங்கிடம் நான் கேள்விகள் எழுப்புவது உண்டு.
"பாவ மன்னிப்பு' படத்தின்போதும் சில கேள்விகளைக் கேட்டேன். "மனிதன் பணத்தினை படைத்தானா? மதத்தினைப் படைத்தானா?''
"படையல் இல்லாவிட்டால் மதம் இல்லை. ஆகவே மதத்தினைப் படைத்தான். ஆனால் பணம் அப்படி அல்ல. மனித செயலுக்கு ஒரு கருவியாக பணம் அமைந்து விட்டது. ஆகவே பணத்தினை செய்தான் என்று தான் கூற வேண்டும்'' என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.
"தாங்கள் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுப்பதால் தான் தங்களது படம் வெற்றி அடைகிறது என்ற கணிப்பு நிலவுகிறதே. அது உண்மைதானா?'' 
அதற்கு அவர், "நீ கேட்கும் கேள்வி மிகவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டியது தான். அதில் இருக்கும் சங்கடங்களை நீ உணர வேண்டும். பெரிய நடிகர்களை வைத்துப் படம் பண்ணுவது என்பது சாதாரண காரியமல்ல. ஒரு பெரிய நடிகர் நடிப்பதற்கு தயாராக இருப்பார். அவருடன் நடிப்பதற்கு வேறு சில பெரிய நடிகர்களும் வர வேண்டி இருக்கும். ஒருவர் மேக்கப் போட்டு கொண்டிருப்பார். வந்து கொண்டே இருக்கிறேன் என்று ஒரு நடிகை போனில் கூறுவார் (அப்போது செல்போன் இல்லை). ஆகவே இருக்கும் நடிகர்களை வைத்துக் கொண்டு படம் பிடிக்க ஆரம்பித்து விட வேண்டும். அப்போது டயலாக்கும், ஷாட் டிவிஷனும் (காட்சிகளைப் பிரித்து வைத்துக் கொள்வது) சரியாக அமைத்துக் கொண்டால் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் அப்போது இருக்கும் நடிகர், நடிகைகளை வைத்துக் கொண்டு அந்த காட்சி அமைப்பை குளோசப் ஷாட், லாங் ஷாட், மிடில் ஷாட் என்று எடுத்து முடித்துக் கொண்டு பின்னர் வந்தவர்களை அந்தக் காட்சியில் தொடர்பு படுத்தி படம் பிடிக்க வேண்டும்'' என்று எப்போதும் போல் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.
"பாவ மன்னிப்பு' படம் முடிவடைந்த பின் அப்படத்தை காண்பதற்கு நடிகவேள் எம்.ஆர்.ராதா வந்தார்.அவர் முடித்த படங்களைப் பார்க்க வந்ததில்லை.
அப்படத்தின் கடைசி காட்சியில்:
ஆளவந்தார் (எம்.ஆர்.ராதா) குடிசை தீயில் கருகிய நிலையில் தான் செய்த அனைத்து பாவ காரியங்களையும் எல்லோரிடத்திலும் அழுது கொண்டே சொல்லுவார். அப்போது ஆளவந்தாரின் மனைவி மரகதம் (எம்.வி.ராஜம்மா) இவ்வளவு நாள்கள் பூஜை செய்து கடவுள் பக்தியில் இருந்தவர் தனது கணவனின் நிலையைக் கண்டு, "கடவுளே நீ இருக்கியா?'' என்று உரத்தக் குரலில் கூறி கதறி அழுவார்.
அதற்கு ஆளவந்தார் தன் மனைவியைப் பார்த்து "மரகதம்... கடவுள் இருக்குறார்... இருக்குறார்...'' என்று கூறுவார்.
படத்தைப் பார்த்த எம்.ஆர்.ராதா, "நான் பெரியார் இயக்கத்துல இருக்குறவன். நானே கடவுள் இருக்குறார்ன்னு சொன்னா தியேட்டர்ல மக்கள் பார்க்கும் போது எனக்கு ஒண்ணும் பிரச்னை வராது. ஆனா உங்க படத்துக்கு ஏதாவது பிரச்னை வந்தா என்ன செய்யறது'' என்று கேள்வி எழுப்பினார்.
அங்கு இருந்த டைரக்டர்களின் உதவியாளர்கள், வசனகர்த்தாக்கள், "இது கடைசி காட்சி என்பதால் அது பெரிய விஷயமாகத் தெரியாது'' என்றார்கள்.
ஆனால் டைரக்டர் பீம்சிங், "அவர் சொல்றது சரிதாம்பா. படத்துக்கு பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ளணும்'' என்று கூறி எம்.ஆர்.ராதாவைப் பார்த்து, "இப்படி வசனத்தை வச்சிடுவோமா?'' என்று கேட்டார்.
"சரி சொல்லுங்க'' என்று எம்.ஆர்.ராதா கேட்டுக்கொள்ள, டைரக்டர் பீம்சிங், "மரகதம், கடவுள் இருக்குறார்... இருக்குறார். உனக்கு'' என்று "உனக்கு' என்ற வார்த்தையைச் சேர்த்துக் கூறினார்.
இந்த வசனத்தைக் கேட்டதும் எம்.ஆர்.ராதா, "பிரமாதம், பிரமாதம்'' என்று சந்தோஷத்துடன் கூறி அதனைப் போன்றே டப்பிங்கில் வசனத்தை மாற்றி, "கடவுள் இருக்குறார்... இருக்குறார்... உனக்கு'' என்று "உனக்கு' என்ற வார்த்தையை அழுத்திக் கூறினார்.
மீண்டும் எனது கேள்வி பதிலுக்கு வருவோம்.
"நீ என்னிடம் இந்தப் படத்தைப் பத்தி சில கேள்விகள் கேட்டதுக்கு நான் பதில் சொன்னேன். நான் உன்னை ஒரு கேள்வி கேட்கலாமா?'' என்றார்.
"என்ன?'' என்று கேட்டேன்.
"இந்த ஹீரோ யார்?''...
"சிவாஜி கணேசன்'' என்றேன்.
"நீ நெனைக்குற மாதிரிதான் எல்லோரும் நெனைக்குறாங்க. ஒரு படத்துக்கு ஹீரோன்னா அவருக்குத் தான் நெறைய சீன் படத்துல இருக்கும். அதுக்குத் தான் அவர் ஹீரோன்னு எல்லோரும் சொல்லுவாங்க. அப்படிதானே?'' என்று கேட்டார்.
"ஆமா'' என்றேன்.
"அப்படீன்னா இந்தப் படத்துல யாருக்கு நெறைய சீன் இருக்குது?''
"எம்.ஆர்.ராதா அவர்களுக்குத்தான் அதிக சீன் வருது'' என்றேன்.
"இந்தப் படத்துல ஹீரோ எம்.ஆர்.ராதா தான்''
"எனக்கு இன்னும் ஒரு கேள்வி இருக்குதே?'' என்றேன்.
"கேளு... இன்னைக்கு உங்கிட்ட நான் மாட்டிக்கிட்டேன்...''
"ஹீரோவா நடிச்சிட்டிருக்குற நடிகரை விட மத்த நடிகருக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் அமைஞ்சா அதப்பத்தி ஹீரோ எதுவும் டைரக்டரை கேக்க மாட்டாரா?'' என்றேன்.
"கேக்கவே மாட்டாங்க. ஏன்னா அவங்க டைரக்டர் மேலயும் அவங்களோட கதாபாத்திரத்தின் மேலும் முழு நம்பிக்கை வச்சிருப்பாங்க. இந்த கதை டைரக்டருடையது தான். அவர்தான் இந்த படத்தின் சிருஷ்டிகர்த்தான்னு நம்புவாங்க. அதனால டைரக்டர் சொல்ற மாதிரியே நடிச்சி கொடுப்பாங்க. அங்கே ஹீரோ யார், வில்லன் யார், சிரிப்பு நடிகர் யார் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. தன்னோட கதாபாத்திரப்படி தன்னோட நடிப்பும் மற்ற நடிகர்களுக்கான கதாபாத்திரங்களின்படி அவர்கள் நடிக்கறதா தான் நினைப்பாங்க. இங்க போட்டி பொறாமை என்பதே இருக்காது''.
"இதுதான் கடைசியோ கடைசியான கேள்வி. இத்தோட நம்ம பேட்டியை முடிச்சிக்கலாம்'' 
என்றார்.
"ம்... கேளுப்பா...''
"பாவ மன்னிப்பு படம் உங்களுக்கு நேஷனல் அவார்ட் வாங்கி கொடுத்தது. அப்படி இருந்தும் உங்களுக்கு இந்த படத்தப் பற்றியதான வருத்தம் ஏதாவது இருக்குதா?'' என்றேன்.
"கடைசியில சரியான இடத்துக்கு வந்துட்டியே. ஆமாம்; வருத்தம் இருக்குது. இந்த படத்துல நடிச்ச நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களுக்கு Best Actor Award ஆன தேசிய விருது கெடைச்சிருக்கணும். ஆனா கெடைக்கல... சிவாஜி கணேசனுக்கும் தேசிய விருது கெடைக்கல... சாவித்திரிக்கும் தேசிய விருது கெடைக்கல... இந்த வருத்தம் எனக்குள்ள இருந்துட்டு தான் இருக்குது'' என்றார்.
படத்தில் நீங்கள் பார்க்கும் நடிகர், நடிகைகள், உடை, சிகை அலங்காரம், மேக்கப் மூலமாக அழகாகவும் வித்தியாசமாகவும் காமிரா மூலமாக பல உருவ வேறுபாடுகளை காண்பித்தாலும் ஒவ்வொரு காட்சியையும் வேறுபட்ட ஒளி அமைப்பில் வேறுபட்ட ஒளி அமைப்பில் பல விதமாக செய்வதால் அந்த காட்சிகளில் உள்ள ஷாட்டுகளில் ஒளி வித்தியாசம் இருக்கும். அதையெல்லாம் ஒருங்கிணைத்து ஒரே விதமான ஒளி அமைப்பை தருபவர்கள் சினிமாவை Film-இல் பண்ணும் போது அந்த Lab தலைவரும் அந்த பிரிண்டரும் தான்.
தற்போது Digital Image (D.I.) என்ற தொழில்நுட்பத்தின் மூலமாக சரி செய்து விடுவார்கள். அப்படி அந்த Film Laboratory-Cp (AVM) வேலை செய்த தொழிலாளர்களின் பணியைப் பார்ப்போம். 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com