சமாளியுங்கள்... சவால்களை!

தற்கால இளைஞர்கள் சுதந்திரமாகவும், எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருப்பதையே விரும்புகின்றனர்.  
சமாளியுங்கள்... சவால்களை!

தற்கால இளைஞர்கள் சுதந்திரமாகவும், எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருப்பதையே விரும்புகின்றனர். 
அவர்கள் தங்களின் இலக்குகளை அடைய உரிய வழிகாட்டுதல்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் தங்கள் சொந்த அனுபவங்கள்,செயல்பாடுகள் மூலம் பாடம் கற்க விரும்புகின்றனர். அவர்களுக்கான பாதை எளிதானதாக இல்லாமல் கரடு முரடாக காணப்படுகிறது. 
பொதுவாக இக்கால இளைஞர்கள் அறிவுத்திறன் மிக்கவர்களாக உள்ளனர். பொறுப்பு உணர்வு மிகுந்தவர்களாக தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். பொறுமை, சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். இளமையின் வேகத்தில் தவறு செய்ய மனம் தூண்டும் போது, அதை கட்டுப்படுத்த பழகிக் கொள்ள வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் சிலர் தன்னை ஒரு "ஹீரோவாக' சித்திரித்து வாழ்கின்றனர். மொபைல் போன், நெட், பேஸ்புக் உலகில் வாழ்கின்றனர். வாழ்க்கையை அவர்கள் எதிர்கொள்வதில் 4 பிரதான சவால்கள் அவர்கள் முன் உள்ளன. 
1. வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம்: நமது நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இளைஞர்களுக்கு தற்காலிக நவீன தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்றவாறு கற்பிக்க முடியாத நிலை உள்ளது. வழக்கமான சோதனைகள், சிந்தனைகள், வழிமுறைகளைத் தாண்டி யோசிக்க வேண்டியுள்ளது. இந்த அணுகுமுறை மாற வேண்டும். நமது ஆசிரியர்கள், பேராசிரியர்களின் தகுதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும். அவர்கள் மாணவர்களுக்கு வெறும் கற்பிப்பவர்களாக மட்டுமின்றி, மாணவர்கள் சாதனையாளர்களாக மாற ஊக்கம் தருவோராகவும் திகழ வேண்டும். மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு, வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப இளைஞர்கள் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 
2. பிறரோடு ஒப்பிட வேண்டாம்: இன்றைய இளைஞர்கள் தங்கள் எதிர்காலம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை மற்றும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக அச்சத்திலும், பாதுகாப்பில்லாத உணர்வோடும் தவித்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை பல்வேறு வகைகளில் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. சமூகவலை தளங்களை எளிதில் காணும் வாய்ப்புகள் உள்ளதால், பிறரின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்கிறார்கள். பிறருடன் தம்மை ஒப்பிட்டு தங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று நினைத்துக் கொள்கின்றனர். இதனால் இளைஞர்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரித்து வருகிறது. யோசித்துப் பார்த்தால், இது முற்றிலும் தவறாகும்.
ஒவ்வொருவர் வாழ்க்கை நிலையின் தன்மைக்கும் பல்வேறு காரணங்கள் அடிப்படைகளாக அமைகின்றன. எனவே ஓர் இளைஞர் தன்னுடைய வாழ்க்கையில் தான் எந்த நிலையில் இருக்கிறோம்; அதற்கான காரணங்கள் எவை என்று பார்க்க வேண்டும். அச்சத்தைத் தவிர்க்க வேண்டும்.
3. உடல் பருமன்: தற்கால இளைஞர்களுக்கு போதிய உடல் உழைப்பு இல்லாத நிலையில் உடல் பருமன் முக்கிய பிரச்னையாக எழுந்துள்ளது. மாணவர்களை கல்வியில் மட்டுமே நாட்டம் செலுத்துமாறு பெற்றோர், ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தும் நிலை உள்ளது. மேலை நாடுகளில் மட்டுமே அதிக அளவில் காணப்பட்ட இப்பிரச்னை தற்போது நமது நாட்டையும் தீவிர வேகத்தில் ஆட்கொண்டுள்ளது. உடல் பருமன் பிரச்னையால் சிலர் உடல் இளைப்பதற்காக உணவு உண்ணுவதையே நிறுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இந்நிலை மாற இளைஞர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் அவர்கள் விரும்பியவற்றை செய்ய அனுமதிக்கும் சுதந்திரத்தை வழங்க வேண்டும்.
4. பிறரின் அனுபவம்: இன்றைய பெருவாரியான இளைஞர்கள் பலவீனமாக இருப்பதற்கு தைரியம் இல்லாமையே காரணம். நன்கு படித்து நன்மதிப்பெண் பெற்றிருந்தும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு தீர்வு காண முடியாமல் பலர் திணறுகின்றனர். இந்த நூற்றாண்டை நோக்கும்போது தவறு செய்பவர் பட்டியலில் அதிகம் இடம்பெறுபவர்கள் படித்தவர்களாகவே இருக்கின்றனர்.
இந்த நிலை மாற கடும் உழைப்பு, சரியான சிந்தனை போன்றவற்றின் மூலம் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறிய இளைஞர்களின் அனுபவ வரலாற்றைப் படிக்க வேண்டும். அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
- பா.சுஜித்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com