தமிழ் பேச்சைக் கேட்கும் கருவிகள்!

மனிதனின் குரலைக் கிரகித்து அதன் உத்தரவுக்கு ஏற்றாற்போல் செயல்படும் வசதி கூகுளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
சுபோத் குமார், சஞ்சீவ் குமார், கிஷோர் முந்த்ரா
சுபோத் குமார், சஞ்சீவ் குமார், கிஷோர் முந்த்ரா

மனிதனின் குரலைக் கிரகித்து அதன் உத்தரவுக்கு ஏற்றாற்போல் செயல்படும் வசதி கூகுளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் இணையதளத்துக்குச் சென்று வார்த்தைகளை டைப் செய்வதற்கு பதில் நமது குரலில் ஆங்கிலத்தில் பேசினால் அதனை ஏற்றுக் கொண்டு, நாம் தேடும் விஷயங்களை அது காண்பிக்கும்.
ஆனால் ஆங்கிலம் தவிர, பிற மொழிகளைப் பயன்படுத்தி அதில் தேட முடியாது. ஆனால் 10 மொழிகளில் குரலுக்கு ஏற்றாற்போல் செயல்படும் தொழில்நுட்பத்தை ஒரு நிறுவனம் தயாரித்து அளித்து வருகிறது. செல்போன், லேப்டாப், கணினி, கருவிகள் என அனைத்திலும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மூன்று இளைஞர்களின் கூட்டணியின் மூலம் இந்தத் தொழில்நுட்பம் சாத்தியமாகியுள்ளது. கோரக்பூர் ஐஐடியின் முன்னாள் மாணவர்களான சுபோத் குமார், சஞ்சீவ் குமார் மற்றும் கிஷோர் முந்த்ரா ஆகியோர் இணைந்து Liv.ai என்ற நிறுவனத்தை நிறுவியுள்ளனர். இவர்களுக்கு மென்பொருள் தொழில்நுட்பம், மின்பொறியியல், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் அனுபவம் மிக்கவர்கள்.
இதுதொடர்பாக சுபோத் கூறுகையில், "கல்லூரிப் பருவத்தில் இருந்தே மூன்று பேரும் ஒன்றாக இணைந்து பல்வேறு தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு என்று கூறப்படும் கருவிகளுக்கான மொழிகள் ஆகியவை குறித்து பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளோம். 
அதன் தொடர்ச்சியாகவே இந்த தொழில்நுட்பத்தையும் உருவாக்கினோம். மனிதர்களுக்கு நெருக்கமான மொழிகளில் தாங்கள் உபயோகப்படுத்தும் கருவிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பிப்பதன் மூலம் செயல்பாடுகளை மேலும் எளிதாக்க முடியும். கருவிகளுடன் நமது சொந்த மொழியில் தகவல் தொடர்பை ஏற்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே, மனிதர்களுடன் இயற்கையாகவும் எளிதாகவும் தொடர்பு கொள்ளும் வகையிலான தொழில்நுட்பத்தை உருவாக்கினோம்.
நாங்கள் உருவாக்கியிருக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, பெங்காளி, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய பத்து மொழிகளில் செல்போன் அல்லது கணினிக்கு உத்தரவிட முடியும். அந்த பத்து மொழிகளையும் கிரகித்துக் கொள்ளும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். மேலும் இந்த தொழில்நுட்பத்தில் மொழிகளில் உள்ள பேச்சுவழக்குகள், உச்சரிப்புகளையும் இணைத்துள்ளோம். இதற்காக இந்தியாவின் பல இடங்களுக்குச் சென்று அதிக அளவிலான தரவுகளைத் திரட்டியுள்ளோம். பல நூறு வகையான பேச்சுவழக்குகள் மற்றும் உச்சரிப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.
மேலும் இரைச்சல்மிக்க இடங்களில் கூட மனிதர்களின் உத்தரவுகளை கருவிகளால் ஏற்றுக் கொள்ள முடியும்'' என்கிறார்.
இந்த நிறுவனத்தில் தற்போது 15 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் பணியாற்றுவோர் பொறியியல் வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஆவர். இணையதள வர்த்தகம், உற்பத்தி, பேச்சு பகுப்பாய்வு, ரோபோடிக் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தோர் இதனைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தத் தொழில்நுட்பத்தை பல்வேறு நிறுவனங்கள், தனிநபர் உள்ளிட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.

"எங்கள் தொழில்நுட்பத்தை ஒரு நாளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தத் தொழில்நுட்பம் மாதம் மாதம் 100 சதவீதம் வளர்ச்சியை அடைந்து வருகிறது. பல்வேறு செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் இதனைப் பயன்படுத்துவது குறித்து பேசி வருகிறோம்'' என்கிறார் சுபோத்.
வர்த்தகரீதியாகவும் இதுபோன்ற தொழில்நுட்பம் உச்சத்தைத் தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியை அதிகரிப்பதிலும், முதலீட்டாளர்களை ஈர்ப்பதிலும் இந்த நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
"தற்போது நாங்கள் இந்திய மொழிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். இந்திய மொழிகளைக் கையாள்வதில் கூகுள் இணையதளத்தைக் காட்டிலும் நாங்கல் சிறப்பாக செயல்படுகிறோம். எங்கள் குழுவினர் அனைவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் இதற்கு ஒரு முக்கியக் காரணம். ஒரு நாளைக்கு 10 லட்சம் பேர் பயன்படுத்தும் இந்தத் தொழில்நுட்பத்தை அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஒரு நாளைக்கு 100 லட்சம் பேர் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்த வேண்டும் என்பதே எங்கள் இலக்கு'' என்கிறார் சுபோக்.
- ஜெனி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com