வேலைக்கேற்ற திறமை!

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நலனுக்காக பல்வேறு கல்வித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
வேலைக்கேற்ற திறமை!

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நலனுக்காக பல்வேறு கல்வித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அவற்றில் ஒன்று, வேலைவாய்ப்புக்கான திறன் திட்டம் (Employment Linked Skilling Programme-ELSP). மற்றொன்று ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி குறித்த சான்றிதழ் படிப்பு.
ELSP சிறப்பு என்னவென்றால், இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவர்கள் பயிற்சிக்கான கட்டணத்தை வேலையில் சேர்ந்த பிறகு செலுத்தலாம் என்பதுதான். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் க.பாஸ்கரன் நம்மோடு பகிர்ந்து கொண்டவை:
"நம் நாட்டில் உள்ள ஒரே முழுமையான திறன் பயிற்சித் திட்டம் ELSP மட்டுமே. வேலை வழங்குவோரின் எதிர்பார்ப்பு, தேவைக்கு ஏற்ற, முழுமையான திறன்களுடன் இளைஞர்களை உருவாக்குவதே இதன் நோக்கம். அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், வகுப்பறை பயிற்சியைக் காட்டிலும், வேலைக்கேற்ற செய்முறை அனுபவ அறிவைப் பெறுவதையே அதிகமாக வலியுறுத்துகிறது. இதன் முக்கிய குறிக்கோள், வளரும் தொழில் துறையின் தேவைக்கு ஏற்ப, வேலைத்திறன் மிக்கவர்களாகவும், ஒத்திசைந்து பணியாற்றுபவர்களாகவும் இளைஞர்களை உருவாக்குவதே ஆகும். 
வியாபார தகவல் தொடர்புத் திறன், மென்திறன், விற்பனைத் திறன், தரவு திறன், பேச்சுவார்த்தைத் திறன், கணினி பயன்பாட்டுத் திறன், வணிக உரிமைகள், தொழில் துறை குறித்த கள அறிவு போன்றவற்றில் தேவையான திறன்களைப் பெற மாணவர்களுக்கு இந்தத் திட்டம் உதவுகிறது. இது ஒரு செயலிவழி கற்றலாகும். எங்களுடைய புதுமையான Lurningo செயலி, மாணவர்கள் தங்கள் ஸ்மார்ட் போன் மூலம் தேவையான திறன்களைக் கற்கவும், பயிற்சி பெறவும் உதவுகிறது.
செல்லிடப்பேசி வழியாகவே மதிப்பீட்டுத் தேர்வுகளை எந்தவிதச் சிரமமுமின்றி மாணவர்கள் எழுத முடியும். 
எங்களுடைய களப் பயிற்சியின்போதே மாணவர்கள் தங்களின் திறனுக்கேற்ப ஊதியம் பெறுவதால், அவர்கள் படிப்பை முடிக்கும் முன்பே சம்பாதிக்கத் தொடங்கிவிடுகின்றனர். இந்த களப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இந்திய அரசின் திறன் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) அங்கீகாரம் பெற்ற பணி அனுபவச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சிக்கான கட்டணம் ரூ. 7000. இதை மாணவர்கள் களப் பயிற்சியின் போது கிடைக்கும் ஊதியத்தில் இருந்தோ அல்லது அவர்கள் தங்களுக்கு இருக்கும் வேலைவாய்ப்புகளில் விருப்பான துறையில் வேலைக்கான உத்தரவைப் பெறும்போதோ பயிற்சிக் கட்டணத்தைப் பெற்றுக் கொள்கிறோம். ஊதியத்துடன் கூடிய களப் பயிற்சி குறைந்தது 3 மாதங்களில் இருந்து, அதிகப்பட்சமாக 24 மாதங்கள் வரை இருக்கும். ஆனால், களப்பயிற்சி கட்டாயமானது அல்ல. அதேநேரத்தில், அதை மிக அதிகமாகப் பரிந்துரைக்கிறோம்.
பயிற்சியின் போது ELSP குழு, மாணவர்களின் அறிவு மற்றும் போட்டித் திறனை மதிப்பிடும். எங்களின் பெருநிறுவன பங்குதாரர்களுடன் இணைந்து, திட்ட வழிகாட்டுநர்கள் மாணவர்களை கள மதிப்பீடு செய்து அவர்கள் எந்தப் பகுதியில் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என வழிகாட்டுவார்கல்.
பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்த மாணவர்கள் அல்லது இறுதி ஆண்டில் பயிலும் மாணவர்கள் இந்தப் பயிற்சியில் சேரலாம். 18-35 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சிக் காலம் 3 மாதமும், அதைத் தொடர்ந்து வரும் களப் பயிற்சிக்கான காலத்தை கொண்டதாக இருக்கும். மாணவர்கள் முதல் கட்டமாக ரூ. 100 மட்டும் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மேலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வியில் தகவல் தொழில்நுட்பவழி திட்டம் (Information and Communication Technology-ICT) தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொலைநிலைக் கல்வியில் பயிலும் மாணவர்களின் உயர் சிந்தனை திறனை மேம்படுத்தும் விதமாகவும், வகுப்பறை கற்றல் உத்திகள் பயனளிக்காமல் தோல்வியடையும் மாணவர்களின் மேம்பாட்டுக்காகவும், சிறிய நகரங்களில் வாழும் மாணவர்களின் தரமான கல்வி பயிலும் கனவுகளை நிறைவேற்றும் விதமாகவும் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் சேர விரும்பும் மாணவர்கள், தமிழ்ப் பல்கலைக்கழக இணையதள கோர்ஸ் பக்கத்தில் தங்களின் விருப்பப் பாடத்தைத் தேர்வு செய்து, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து, உரிய கட்டணம் செலுத்தி சேர்ந்து கொள்ளலாம். சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தால் தனிப்பட்ட ID, Password வழங்கப்படும். மாணவர்கள் இதில் பயில்வதற்கான பிரத்யேக செயலியை தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். 
இதைத்தொடர்ந்து, பல்கலைக்கழகத்தால் முன்னறிப்புடன் நேரலையில் ஒளிபரப்பப்படும் பாடத்திட்டத்தை மாணவர்கள் தங்களுக்கு வசதியான இடத்தில் இருந்து செயலி வழியாகக் கற்கலாம். நேரலையில் பங்கேற்க முடியாத மாணவர்கள், பதிவுசெய்யப்பட்ட நிகழ்ச்சிகளை இணையதளம் வழியாக பயிலலாம். இணைய இணைப்பு இல்லாதவர்கள் பல்கலைக்கழகம் SD Card மூலம் வழங்கும் பாடத்திட்டங்களைப் பெற்றும் பயிலலாம். நேரலையின்போது பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது நிவர்த்தி செய்யவும், தேவையான போது நிவர்த்தி செய்யவும் தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ் வழங்கப்படும். இந்தத் திட்டம் பல்வேறு கற்பித்தல் உத்திகள் மற்றும் பல்வேறு பாடம் நடத்தும் முறைகளுடன் எளிய வகையில் புரிந்துகொள்ளுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது.
மேலும், Schoolguru மற்றும் மறைமுக வரிகள் குறித்த நிபுணர் மோனிஷ் பாலாவுடன் இணைந்து ஜிஎஸ்டி குறித்த படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் படிப்பு சரக்கு மற்றும் சேவை வரிகள் குறித்த பணி அறிவை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பணியில் உள்ளோர் சேரலாம். இதற்கென வரையறுக்கப்பட்ட தகுதி எதுவும் இல்லை. இதுவும் செயலிவழி கற்றல் முறையில் செயல்படுத்தப்படுகிறது. கட்டணம் ரூ. 1500 மற்றும் ஜிஎஸ்டி. காலம் ஒரு மாதம்.
இதுகுறித்த மேலும் விவரங்களை தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளம் மற்றும் www.tamiluniversity.ac.in, www.tamiluniversitydde.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்'' என்றார் துணைவேந்தர் க. பாஸ்கரன். 
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com