கண்டதும் கேட்டதும் 31 - பி.லெனின்

ஜெயகாந்தனின் "எத்தனைக் கோணம் எத்தனைப் பார்வை' என்ற படத்தை நான் இயக்கினேன்.
கண்டதும் கேட்டதும் 31 - பி.லெனின்

ஜெயகாந்தனின் "எத்தனைக் கோணம் எத்தனைப் பார்வை' என்ற படத்தை நான் இயக்கினேன். ஆனால் இந்தப் படம் வெளிவரவில்லை. அதில் அவர் எழுதிய வசனம் ஒன்று வரும்:
"அப்போ விதியிங்குறீங்களா?''
"விதியை நம்புவோருக்கு அது விதி. விதியை நம்பாதவர்களும் நம்பக் கூடிய விதி ஒன்று இருக்கு. அதுதான் சமூக விதி. அதையும் மீறுபவர்கள் நாங்கள், கலைஞர்கள்...''
நான் தற்போது கூறப் போவது AVM Lab-இல் பணிபுரிந்த தொழிலாளர்கள். அவர்கள் தொழிலாளர்கள் மட்டும் அல்ல. கலைஞர்களும் தான். அனைத்து கலை நுணுக்கங்களும் தெரிந்தவர்கள் அவர்கள். உண்மையான மனிதர்கள். சமூக விதியை மீறிய கலைஞர்கள்.
படப்பிடிப்பு முடிந்ததும் படம் அப்படியே சினிமா தியேட்டருக்கு வந்து விடுகிறது என்றுதான் எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் அந்த வயதில் அப்படிதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
திருமலை மகாலிங்கம் என்பவர் எனது தாய்மாமன். அவர் ஒரு ஸ்டில் போட்டோகிராஃபர். அவரது வீட்டில் ஒரு டார்க் ரூம் இருந்தது. அதில் அவர் எடுக்கும் ஸ்டில் படங்களை அந்த டார்க் ரூமில் வைத்து டெவலப் மற்றும் பிரிண்ட் போட்டுக் கொண்டிருப்பார். நானும் அவருடன் உள்ளே சென்று அவருக்கு உதவி செய்து கொண்டிருப்பேன். 
இந்த ஸ்டில் போட்டோக்கள் ஏன் எடுக்கப்படுகிறதென்றால் அடுத்து வரும் காட்சிக்கு எந்த பொருள் எந்த இடத்தில் இருந்தது என்று தெரிந்து கொள்வதற்கும், படத்தின் தொடர்ச்சியைத் தெரிந்து கொள்வதற்கும்தான். சில ஸ்டில்ஸ் நடிகர்கள் நடிக்கும்போதே எடுக்கப்படும். அதோடு கூட நடிகர், நடிகைகளை வைத்தும் படம் எடுத்துக் கொள்வர். ஏனென்றால் இந்தப் படங்கள் வடிவமைப்பாளரிடம் கொடுக்கப்பட்டு அந்த ஸ்டில்கள்தான் படத்தின் போஸ்டர்களாகவும், விளம்பரப் படங்களாகவும் பத்திரிகை விளம்பரமாகவும் மாறுகிறது.
"சினிமா என்பது படப்பிடிப்போடு முடிந்து அப்படியே திரைக்கு வருவது இல்லை. அதைப் பதப்படுத்தி வெளியில் அனுப்ப பல லேப்கள் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், பம்பாய், புவனேசுவர் போன்ற இடங்களில் எல்லாம் இருக்கின்றன. நீ இதையெல்லாம் சென்று பார்க்க வேண்டும். அங்குள்ள தொழிலாளர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை நீ காண வேண்டும்'' என்று என் தாய் மாமா திருமலை எனக்கு அறிவுரை கூறினார். அதன்படியே நானும் அந்த இடங்களில் உள்ள அனைத்து லேப்களுக்கும் சென்று பார்த்தேன். அப்போது அங்கிருந்த தொழிலாளர்கள், "இந்தியாவில் உள்ள மற்ற லேப்களை விட ஏவிஎம் லேப் தான் கருப்பு வெள்ளை படத்துக்கு சிறந்ததாக உள்ளது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மிக சிறந்த முறையில் படத்தினை டெவலப் செய்து வெளியில் தருகிறார்கள். அவர்களையும் நீ போய் பார்க்க வேண்டும்'' என்று கூறினார். அதன்படி சென்னையில் இருந்த ஏவிஎம் லேப்-க்கு வந்தேன்.
இங்கு ஒரு சித்தரின் பாடல் நினைவுக்கு வருகிறது.
"இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி 
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே- அவர் 
ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே...''
"ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது' என்று எழுத்தில் படிப்பதற்கும், அவள் குழந்தை பெற்றுக் கொள்ளும்போது அருகில் இருந்து பார்ப்பதற்கும் அந்த வலியை நாம் அனுபவிக்க அந்த உயிராக நாம் உணர வேண்டும்.
இதனை கவிஞர்கள், தாடி வைத்துக் கொண்டிருக்கும் யோகிகள், மடாதிபதிகள், சொன்னால் எவ்வளவு உத்தமமான வார்த்தைகள் என்று கூறுவார்கள். ஆனால் அவர்கள் வீட்டில் இருக்கும் தனது மனைவி அடைகின்ற வேதனையை அவர்கள் உணர மாட்டார்கள்.
அதற்கு ஒரு சினிமா பாடல்
சரணம்
தன் முதுகு ஒரு போதும், தனக்கே தான் தெரியாது
- பிறரைத் தான் நையாண்டி பேசுகின்ற உலகமது
பல்லவி
சொல்லட்டுமா சொல்லட்டுமா
ரகசியத்தைச் சொல்லட்டுமா
துள்ளி வரும் காளைகளா
உள்ளபடி சொல்லட்டுமா?
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடல்: ஏ. மருகதாசி
படத்தில் காளைகளை ஓட்டி செல்லும்போது அந்த காளைகளுக்குச் சொல்வதாக இந்த பாடல் இருக்கிறது. இந்தப் பாடல் வந்தபோது இளங்காளையாக இருந்து கேட்டேன். அப்போது இப்பாடல் என்னுள் உணர்வுப் பூர்வமாக புகுந்தது. இப்போதுள்ள மனித காளைகளுக்கும் இது பொருந்தும்.
அதனைப் போன்றுதான் லேப் தொழிலாளர்களும். நாம் ஆனந்தமாக சினிமா பார்ப்பதற்காக எவ்வளவு சிரத்தையோடு எப்படியெல்லாம் மெய் வருத்தம் பாராது வேலை செய்தார்கள் என்பதை நாம் நேரிடையாகக் காண வேண்டும்.
பல மருத்துவமனைகளில் இப்போது லேப் இருக்கிறது. அங்கு இரத்தம், மலம், சிறுநீர், தைராய்டு என்று பல பரிசோதனைகள் செய்கிறார்கள். அந்த லேபின் உள்ளே சென்றால் பல கெமிக்கல்களின் வாசனையை நாம் உணருவோம். அதனைப் போன்றது தான் ஏவிஎம்-மின் லேப்பும். ஒரு மனித உடலினை எவ்வாறெல்லாம் பரிசோதனை செய்யும் இடமாக மருத்துவமனையில் லேப் இருக்கிறதோ, அதனைப் போன்றே சூட்டிங் முடிந்து வரும் ஃபிலிம்மை இந்த லேப்பில் செய்து, சவுண்ட், பிக்சர் என்று தனித்தனியாக இருந்ததை ஒன்றாக்கி Combained Film அல்லது married print-ஆக மாற்றி நீங்கள் காணும் படமாகத் தருவார்கள்.
பல ஆண்டுகளாக நேரம் காலம் கருதாமல் 24 மணி நேரமும் 150 பேருடன் இயங்கிக் கொண்டிருந்த ஏவிஎம் லேப்-பில் இப்போது 4 பேருடன் வேலை நடந்து வருகிறது.
முதலில் கொடாக் என்ற கம்பெனி சினிமா பிடிப்பதற்கான ப்ளாக் அண்ட் ஒயிட் ஃபிலிம்மை தயாரித்துக் கொண்டிருந்தது. பின்னர் ORWO ஒரியண்டல் ஒல்ஃபைன் என்ற ஜெர்மனி நிறுவனம் இந்த ஃபிலிம்மை தயார் செய்தது.
கேமரா மூலமாக படத்தை எடுக்க பயன்படுத்தப்படும் பிலிம் பிக்சர் நெகட்டிவ் ஆகும். அதோடு கூட சவுண்டினை இணைக்க பயன்படும் பிலிம்மின் பெயர் சவுண்ட் நெகட்டிங் ஆகும்.
1000 அடி பிலிம் உள்ள பெட்டியை ஒரு கேன் என்று கூறுவார்கள். அதன்படியே 1000 அடி படத்தை முடித்ததும் அந்த பிலிம்மை லேப்புக்கு எடுத்து வருவார்கள். அதனை முதலில் டெவலப் (பதப்படுத்துதல்) செய்வார்கள். அடுத்து எடிட்டிங் ரூம் செல்லும். சவுண்ட் இணைக்கப்படும். மீண்டும் போட்டுப் பார்த்து ஏதேனும் தவறுகள் இருப்பின் சரி செய்யப்படும். இதனை இன்னும் வரும் வாரங்களில் உங்களுக்கு புரியும் மொழியில் அந்த தொழிலாளர்களை வைத்தே கூற போகிறேன்.
ஒரு காட்சி 10 டேக் (முறை) எடுத்திருந்து அதில் 10-ஆவது டேக் மட்டுமே சரியாக இருந்தால், 10 டேக்குகளில் உள்ள சவுண்டுகளை பதிவு செய்ய சவுண்ட் நெகட்டிவை பயன்படுத்தாமல், அப்போது ஃபுல் கோட்டட் மேகனெட்டிவ் டேப்பை பயன்படுத்தி அந்த 10 காட்சிகளுக்கான சத்தங்களையும் பதிவு செய்து வருவார்கள். 
பின்னர் சரியாக இருந்த சத்தத்தை மட்டும் எடுத்து சவுண்ட் நெகட்டிவில் பதிவு செய்து கொள்வார்கள். இதனால் சவுண்ட் நெகட்டிவ்க்கு ஆகும் செலவு குறையும்.
படம் எடுக்கும் பிலிம்மில் நாம் பார்க்கும் படத்தைப் போன்று ஒரே வரிசைகிரமமாக இருக்காது. 
சீன்களும் ஷாட்களும் வரிசையாக இல்லாதது ஏன்?
முதல் காட்சியும், 10-ஆவது காட்சியும், 20-ஆவது காட்சியும் என்று இருக்கும். காரணம் அந்த காட்சிகளில் இடத்துக்கு ஏற்றாற்போல் படத்தை எடுப்பார்கள்.
நான் உங்களுக்கு ஏற்கெனவே கூறி இருப்பதுபோல் ஒரு டைரக்டர், தான் எடுக்கப் போகும் காட்சிகளின் அனைத்து வசனங்களையும், காட்சிகளையும், அரங்கையும் சரியாக எழுதி வைத்துக் கொண்டால் இதனை முடிக்க முடியும்.
ஒரு வீட்டில் படத்தை எடுக்கிறார்கள் என்றால் அந்த வீட்டுக்கான அனைத்துக் காட்சிகளையும் எடுத்து வைத்துக் கொண்டு அதன்பின் அதனை பிரித்து ஒழுங்கான காட்சிகளில் எடிட்டிங்கில் செய்ய வேண்டும்.
நீங்கள் சினிமா உருவாகும் சரியான நடைமுறையை முழுவதுமாக இல்லாமல் சிறிதளவாவது தெரிந்து கொள்ள இந்த தொடரிலிருந்தே படிக்க வேண்டும். இடையில் படித்தால் ஒன்றும் புரியாது. அப்போதுதான் இங்கு பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்களைப் பற்றியும் அவர்களால் உருவான படப்பதிவுகளைப் பற்றியும் நீங்கள் உணர்வு பூர்வமாக உணர்ந்து அந்த உயிராக - தொழிலாளியாகவும் - மாற முடியும்.
24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருந்த அந்த லேப்பின் உழைப்பாளர்களின் எண்ண அலைகளை வாங்கி, அந்த லேப்பின் எதிரில் இருக்கும் அத்திமர நிழலில் அமர்ந்து கொண்டு அவர்களைப் பற்றிய தொடக்கத்தை எழுதி முடிக்க முடிந்தது.
காரைக்குடியில் 1942-ஆம் ஆண்டில் உருமான ஏவிஎம் லேப்பில் தனது 12-ஆவது வயதில் வேலைக்கு சேர்ந்து தற்போது 87 வயதாகியும் இந்நாள் வரை பணிபுரிந்து கொண்டிருக்கும் மிக சிறந்த பிலிம் டெவலப்பர், பிரிண்டர், கிரேடர் ஆன "பொம்மாச்சி' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் பரமேஸ்வரன், தன் அனுபவங்களைஅவரே தன் வாயில் இருந்து உதிர்க்கும் சொற்களை கொண்டும், நானும் அவரை 1965-ஆம் ஆண்டு முதல் அவரைப் பார்த்து அவரோடு பழகியதோடு அல்லாமல் அவருடனும் பல லேப் தொழிலாளர்களுடன் பழகி வேலையைக் கற்றுக் கொண்டதால் அவர்களிடம் கண்டதைச் சொல்லுகிறேன்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com