கிராமங்களைத் தேடி ஓர் ஐ.டி.நிறுவனம்!

பிலானியில் உள்ள பிர்லா அறிவியல், தொழில்நுட்பக் கழகத்தில் எம்.டெக். முடித்தவர் திராஜ் டால்வானி. தகவல் தொழில்நுட்பத் துறையிலும்,
கிராமங்களைத் தேடி ஓர் ஐ.டி.நிறுவனம்!

பிலானியில் உள்ள பிர்லா அறிவியல், தொழில்நுட்பக் கழகத்தில் எம்.டெக். முடித்தவர் திராஜ் டால்வானி. தகவல் தொழில்நுட்பத் துறையிலும், வெளி பணிகளைப் பெற்று முடித்து கொடுக்கும் (அவுட்சோர்சிங்) வணிக செயல்பாட்டுத் துறையிலும் பரபரப்பாக இயங்கியவர்.
அதேநேரத்தில், பெரும்பாலான கிராமப்புற இளைஞர்கள் படித்துவிட்டு, அதற்கேற்ற வேலையைத் தேடிக்கொள்ளாமல் அல்லது நகரங்களுக்குச் சென்று பணியில் சேர முடியாமல், தாங்கள் பெற்ற கல்வியை பயன்படுத்த முடியாத நிலையில் செயலற்று இருப்பதை திராஜ் பார்த்தார். கிராமங்களில் உழலும் இந்த இளைஞர்களின் அவலநிலையை மாற்ற வேண்டும் என்று நினைத்தார்.
இதன் விளைவாக கடந்த 2008-இல் தன்னுடைய பணியில் இருந்து விலகிய திராஜ், 2009, செப்டம்பரில் தன்னுடன் ஏற்கெனவே பணியாற்றிய சக ஊழியர் வெங்கடேஷ் ஐயர் என்பவருடன் இணைந்து B2R (Business To Rural) என்ற நிறுவனத்தை உத்தரகாண்ட் மாநிலம், ஒரகன் என்ற கிராமப் பகுதியில் 20 ஊழியர்களுடன் தொடங்கினார்.
இது மூன்று முக்கிய குறிக்கோள்களை உள்ளடக்கியதாக இருந்தது. ஒன்று, உத்தரகாண்ட் மாநிலத்தின் கிராமப்புறப் பகுதிகளை வெளியிடப் பணிகளை பெற்று முடித்துக் கொடுப்பதற்கான வணிக செயல்பாடுகள் கொண்ட மிகச் சிறந்த பகுதிகளாக உருவாக்குவது. இரண்டு, அதன்வழியாக ஓரளவு நல்ல வருவாய் கிடைக்கும் வகையில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, மூன்றாவதாக, இந்தப் பணிகள் மூலம் கிடைக்கக் கூடிய லாபத்தில் 33 சதவீதத்தை இதே கிராமங்களில் உள்ள பிற இளைஞர்களின் திறன்களை வளர்ப்பது, வேலைவாய்ப்பு அளிப்பது போன்றவற்றில் முதலீடு செய்து, அந்த கிராமம் வளர்ச்சி பெற பங்களிப்பது.
இந்த குறிக்கோள்கள், ஒத்த எண்ண ஓட்டம் கொண்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் துணையோடு, இந்தியாவில் உள்ள காப்பீடு, நிதி சேவை, பதிப்புத் துறையைச் சேர்ந்த வணிக நிறுவனங்களுக்கு குறைந்த கட்டணத்தில், மிகச்சிறந்த பணிகளைச் செய்து தரும் நிறுவனமாக விளங்குவதன் மூலம் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிறுவனம், அமெரிக்காவில் இருந்தும் வெளிப் பணிகளை பெற்றதன் மூலம் இதில் பணியாற்றும் கிராமப்புற இளைஞர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்தது.
இந்த வளர்ச்சி அங்கிருந்த கிராமப்புறச் சூழலில் மிகப் பெரிய சமூக மாற்றங்களை ஏற்படுத்தியது. கிராமப்புற இளைஞர்கள், குறிப்பாக பெண்கள், நகரங்களுக்குச் சென்று வேலை தேடாமல், தங்கள் வீட்டின் அருகிலேயே ஓர் அலுவலகச் சூழலில் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றனர். 
22 முதல் 25 வயது வரை உடைய பெண்கள் முதன்முதலாக வேலைக்குச் செல்வோராகவும், குடும்பத்தில் ஊதியம் ஈட்டும் முக்கிய உறுப்பினராகவும் மாறினர். சில குடும்பங்களில் அந்த வீட்டின் ஊதியம் ஈட்டும் ஒரே உறுப்பினராகவும் இந்த பெண்கள் உள்ளனர். இவர்களின் தொடக்க நிலை ஊதியம் மாதத்திற்கு ரூ. 3500 முதல் 4000 ஆக இருந்தாலும், 2 அல்லது 3 ஆண்டுகளில் அவர்களின் பணித் திறனுக்கு ஏற்ப ரூ. 10 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து B2R நிறுவனத்தின் வழிகாட்டியாக விளங்கும் "ஹிம்ஜோலி' நிறுவனர் பங்கஜ் வத்வா கூறுகையில், "இந்த பின்தங்கிய கிராமப்புற சமூகத்தில் தற்போது வெளியே தெரிவதைக் காட்டிலும் மிகப் பெரிய மாற்றங்கள் B2R நிறுவனத்தின் மூலம் ஏற்பட்டுள்ளன. பெண்கள் குடும்பத்தின் பொருளாதாரப் பங்களிப்பாளர்களாக மாறியுள்ளனர். மேலும், இந்தப் பகுதியில் ஆண்டுக்கு ரூ. 6000 வரை மட்டுமே வருமானம் கொண்டிருந்த குடும்பங்களுக்கு B2R, ஒரு சிறிய அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும்'' என்கிறார்.
கடந்த 2013-இல் 6 மையங்களில் 335 ஊழியர்களுடன் செயல்பட்ட இந்த நிறுவனம், முதலீட்டாளர்களிடம் இருந்து நிதியைப் பெறுவதில் பிரச்னையைச் சந்தித்தது. முதலீட்டாளர்கள் விரைவான லாபத்தை எதிர்பார்த்ததால் இந்தப் பிரச்னை ஏற்பட்டது. 
எனினும், திராஜ் நம்பிக்கையை கைவிடாமல், தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களில் பலரும், நிறுவனத்தை தொடர்ந்து நடத்த தங்கள் ஊதியத்தை குறைத்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர். 
இதையடுத்து, ஊதிய குறைப்புடன் பணியைத் தொடர்ந்த நிறுவனம், தன்னுடைய முதலீட்டாளர்கள் மீதான பார்வையை வாடிக்கையாளர்கள் மீது திருப்பியது. இது நல்ல பலனளித்ததை அடுத்து, அடுத்த 2 ஆண்டுகளில் (2015) மீண்டெழுந்த B2R நிறுவனம் கடந்த 2017-இல் நல்ல லாபம் ஈட்டியுள்ளது. தற்போது 6 மையங்களில் 300 ஊழியர்களுடன் வெற்றிநடை போட்டுவருகிறது. 
அண்மையில் இதுகுறித்து அறிந்த தென்கிழக்கு மெக்சிகோவில் உள்ள யுகாடன் ஆளுநர், தங்களுடைய மாகாணத்தில் இதுபோன்ற மையங்களை ஏற்படுத்த உதவுமாறு B2R நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து, இந்த நிறுவனத்தைச் சேர்ந்த, 5 கிராமப்புற இளைஞர்கள் மெக்சிகோ இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க சென்றுள்ளனர்.
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com