வாங்க இங்கிலீஷ் பேசலாம் 122

குண்டுகள் போடும் விமானம், எதிரியின் பீரங்கித் தாக்குதல், ஜுரம், காயம், விசித்திர தொற்று வியாதிகள்...?
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 122

ஜூலி கணேஷிடம் chat எனும் சொல் எப்படி தோன்றியது என விளக்குகிறது.
ஜூலி: முதலாம் உலகப் போரின் போது வீரர்களை அரித்த ஒரு பெரிய பிரச்சனை இருந்தது.
கணேஷ்: குண்டுகள் போடும் விமானம், எதிரியின் பீரங்கித் தாக்குதல், ஜுரம், காயம், விசித்திர தொற்று வியாதிகள்...?
ஜூலி: ம்ஹும். அதெல்லாம் இல்லை. இது ஒரு சாதாரணமான அரிக்கிற பிரச்சனை. பேன்.
கணேஷ்: சுத்துமே அந்த fanஆ?
ஜூலி: எங்க வச்சிருக்க மூளையை? இது நம்மை கடிக்கிற பேன்.
கணேஷ்: ஓ...!
ஜூலி: இது தலையில் இருந்து அரிக்கிற பேன் அல்ல. உடம்பில ஊர்ந்து ரத்தத்தை உறிஞ்சும் பேன். இது எங்க வாழும் தெரியுமா?
கணேஷ்: சட்டைக் காலரில்?
ஜூலி: இல்லை. துணியோட தையல்களில்.
கணேஷ்: அடக்கடவுளே...
ஜூலி: ஆமா. அங்கேயே இருந்து முட்டையிட்டு குஞ்சு பொரித்து குடித்தனம் பண்ணும். சாப்பிடுற நேரத்தில் மட்டுமே வெளியே வரும். ராணுவ வீரர்களுக்கு போல் இல்லாத சமயம் வேலையே இருக்காது. அப்போது அவர்கள் பொழுது போக்குவதற்காக சேர்ந்து உட்கார்ந்து பேன்களைக் கொல்வார்கள். அந்த காலத்தில் ராணுவத்தினர் பேனை chats என்று அழைத்தார்கள். ஆகையால், கூடி இருந்து வெட்டிக்கதை பேசி, பேன்களைக் கொல்வதற்கு chatting என பெயர் வைத்தார்கள். இப்போது யார் வெட்டிக் கதை பேசினாலும் அது chat தான். ரொம்ப சீரியஸான விவாதத்துக்கு கூட having a chat என இப்போது சொல்கிறார்கள்.
கணேஷ்: ஐயகோ...
ஜூலி: என்ன?
கணேஷ்: இனி நான் எப்படி எனக்கு ரொம்ப பிடித்தமான சமோஷா சாட் சாப்பிடுவேன்? தட்டு முழுக்க பேன் ஊர்கிற மாதிரி கற்பனை தோன்றுமே?
ஜூலி: அட எனதருமை லூசே... அது சாட் அல்ல chaat. அ விகுதி
கணேஷ்: ஓ... நான் தான் தப்பா உச்சரிச்சிருக்கேனா. நான் இத்தனை நாளும் அரட்டை அடிச்சிட்டே கொறிக்கிற ஐட்டம் என்பதனால் chat என்று சொல்கிறார்கள் என நினைத்தேன்.
ஜூலி: அதன் ஸ்பெல்லிங் கூட வேற. ஒரு A கூடுதல். சரி நீ கவலைப்பட வேணாம். பேனுக்கும் பேல் பூரி, பானி பூரி, தஹி பூரி ஐட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இது வட இந்தியாவில் பல்லாண்டுகளாய் புழங்கி வரும் நொறுக்குத் தீனி. சாட் என்றால் இந்தியில் ஒன்று நக்கி சுவைத்து சாப்பிடுவது என அர்த்தம்.
கணேஷ்: அடடா பேல்பூரி என்றதும் என் நாவில் எச்சில் ஊறுதே.
ஜூலி: அப்படி நீயெல்லாம் சப்புக்கொட்டி சாப்பிடுறதனால தான் அந்த பேரே. டோண்ட் வொரி.
கணேஷ்: சரி... உனக்கு எதுக்கு ஜிலேபி கொடுத்தாங்க?
ஜூலி தன் வலது காலை தூக்கிக் காட்டி: இதைப் பார்த்தியா? அடிபட்டிருக்கு. என்னால இன்னிக்கு வேலை செய்ய முடியாது. ரொம்ப வலி. ரெஸ்ட் எடுக்கிறேன். என்னை ஆறுதல்படுத்துகிறதுக்காக மீனு ஜிலேபி கொடுத்தாங்க
கணேஷ்: எனக்கு எந்த காயமும் தெரியலையே?
ஜூலி: உன் கண்ணைக் கொண்டு கொள்ளியில வை
புரொபஸர் (குறுக்கிட்டு): அது உன் கண்ணுக்குத் தெரியாது. ஏன்னா அது ஒரு blighty wound.
கணேஷ்: அதென்ன சார்  blighty?
புரொபஸர்: அதுவா ஜூலி உங்கிட்ட சொன்னானே உலகப்போர் காலகட்டத்துக்கு உரித்தான சொலவடைகள். அப்படி ஒண்ணு தான் இது. நீயும் இதை சின்ன வயசில் பண்ணி இருப்பே.
கணேஷ்: இல்லியே
புரொபஸர்: எங்கியாவது விழுந்து லைட்டா அடி படுறது. அப்புறம் அதைக் காட்டி கொஞ்ச நாள் ஸ்கூலுக்கு போகாம மட்டம் போடுறது.
கணேஷ்: ஆமா... ஆமா... பண்ணியிருக்கேன்.
புரொபஸர்: முதலாம் உலகப்போரின் போது ராணுவ வீரர்களுக்கு உயிராபத்து இல்லாத வகையிலான காயங்கள் படும் போது அவர்கள் மருத்துவ சிகிச்சையும் ஓய்வும் பெற அவர்களை ஊருக்கு அனுப்புவார்கள். அத்தகைய காயங்களை blighty wounds என்பார்கள். இந்த blighty என்பது பிலைக் எனும் இந்திச் சொல்லில் இருந்து தோன்றியது. இச்சொல்லுக்கு நாடு என அர்த்தம். ஆங்கிலேய வீரர்கள் இதை "ஊருக்குப் போவது' எனும் பொருளில் புரிந்து கொள்ள, யாருக்காவது லேசான அடிபட்டு அதைக் கொண்டு போருக்குப் போகாமல் தப்பிக்கும் வாய்ப்பு அமைந்தால் அவர்களை நோக்கி லேசாய் கிண்டலும் பகடியுமாய் you received a blighty wound. Did you? என்றார்கள். அப்படித் தான் இச்சொல் புழக்கத்துக்கு வந்தது.
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com