வானொலியில் "மன் கி பாத்' ஒலிக்கத் தொடங்கியது - சுகி. சிவம்

மாண்புமிகு பிரதமர் உற்சாகமான தொனியில் குரலை உயர்த்தியும் இறக்கியும் பிசிறுதட்டாமல் பேசிக் கொண்டிருந்தார்.
வானொலியில் "மன் கி பாத்' ஒலிக்கத் தொடங்கியது - சுகி. சிவம்

நீ... நான்... நிஜம்! -1

மாண்புமிகு பிரதமர் உற்சாகமான தொனியில் குரலை உயர்த்தியும் இறக்கியும் பிசிறுதட்டாமல் பேசிக் கொண்டிருந்தார். அவரது கர்ஜனைகளும் கற்பனைகளும் காற்றில் கரைந்து கேட்பவர் மனதில் புகுந்து பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தின. நடுவில் ஓரிருமுறை "நான்' என்றும் கம்பீரமாகச் சொன்னார். அதே உரையை வானொலிப் பெட்டிமுன் உட்கார்ந்து கேட்ட ஆறேழு இளைஞர்களில் ஒருவர், ""நான் இவரை மாதிரி பேசமுடியும்.. ஆனா நான் இவராக ஆக முடியுமா என்ன?'' என்று அங்கலாய்த்தார்.
பிரதமரும் "நான்' என்றார். குடிமகனும் "நான்' என்றார். இரண்டு நானும் ஒரே நான் தானா? சம பலமா? இரண்டு நானுக்கும் பொருள் ஒன்றாகி விடுமா என்ன? பிரதமரின் "நான்' ஆழ, அகலம், பரப்பளவு வெகு அதிகம். குடிமகனுடைய "நான்' சுருக்கமான ஒற்றைப் புள்ளி. ஆனால் இந்த ஒற்றைப் புள்ளிக்குள் ஒரு பேரண்டம் ஒடுங்கி இருப்பதை இவர் உணர வேண்டும் என்கிறேன். பலரும் "நான்' என்பதை ஒரு சப்தமாகத்தான் பயன்படுத்துகிறார்கள். அதனுள் நிரப்பப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான அக்கினிக் குஞ்சுகளைப் பிரித்தறிய மாட்டார்கள்.
வாழ்வில் வென்றவர்கள் நானுக்கும், வெறுமனே நின்றவர்கள் நானுக்கும் வேறுபாடு என்ன? ஒற்றை நானில் ஒளிந்திருக்கும் கோடிக்கணக்கான நானின் தரிசனம். சரியான கண்டுபிடிப்பு... துல்லியமான உள்நோக்கு... முறையான பிரயோகம்... கவனமாகக் கையாளும் திறன் இவை நிச்சயம் ஒருவரை உயர்த்தும். 
ஒருமுறை கழுகு முட்டை ஒன்று கோழி முட்டைகளோடு தவறுதலாகக் கலந்துவிட்டது. விவரமறியாத தாய்க் கோழி அக்கறையோடு அடைகாக்க கழுகுக் குஞ்சும் கோழிக் குஞ்சுகளுடன் உலகத்தைப் பார்த்தது. கூடப் பிறந்த கோழிக் குஞ்சுகளுடன் குப்பையில் மேய்வதும் கூளத்தைக் கிளறுவதும், குதித்து ஓடுவதுமாக அதன் காலம் கழிந்தது. 
ஒரு சுபமுகூர்த்தத்தில் குப்பையில் மேயும் குஞ்சுக் கோழிகளைக் கபளீகரம் செய்ய வானத்துக் கழுகு ஒன்று தரையிறங்கியது. அந்தத் தருணத்தில் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கோழிக்குஞ்சுகள் தப்பித்துக் கொள்ள தலை தெறிக்க ஓடின. கூட்டத்தோடு கூட்டமாய் கழுகுக்குஞ்சும் ஓடியதைக் கண்ட வான் கழுகு கோபத்துடன், "ஏ முட்டாளே நீ ஏன் ஓடுகிறாய்?'' என்று கண்டித்தது. பாதுகாப்பான இடத்தில் பதுங்கிய பின்குஞ்சு கிரீச்சிட்டது. "உனக்கென்ன.. நீ.. கழுகு.. அப்படித்தான் பேசுவாய்.. கோழிக் குஞ்சாக இருந்தால்தானே எங்கள் கஷ்டம் உனக்குத் தெரியும்? நான் இந்நேரம் ஒரு கழுகுக் குஞ்சாகப் பிறந்திருந்தால் உன்னை மாதிரி ஒய்யாரமாக உறுமி இருப்பேன்'' என்று கழுகுக்குஞ்சு கண்ணீர் வடித்தது. "நான்' கழுகுக் குஞ்சு என்று உணராமல் கோழிக்குஞ்சு என்று குறுகிக் கிடக்கும் மனிதர்கள் நம்மிலும் இல்லையா என்ன? நான் யார்? நிஜத்தில் நான் யார்? என்னை விரட்டும் நீ யார்? இந்தத் தெளிவு, தன்னைப் பற்றிய தீர்க்கமான கண்டுபிடிப்பு ஏற்பட்டால் வானம் வசப்படும். பூமி நலம் பெறும். 
வாழ்வின் வெற்றியாளர்களைச் சிகரம் தொட்ட மனிதர்கள் என்பது வழக்கம். நிஜமாகவே எவரெஸ்ட் சிகரம் தொட்ட ஷெர்பா டென்சிங் மற்றும் எட்மண்ட் ஹில்லாரி இருவரும் கீழே வந்ததும் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்தனர். ஒரு பத்திரிகையாளர் டென்சிங்கிடம் கேட்டார்: "அத்தனை உயரத்தில், எவராலும் செய்ய முடியாத அந்தச் சாதனையை நிகழ்த்திய தருணத்தில் நீங்கள் என்ன நினைத்தீர்கள்..'' என்றார். பளிச்சென்று புன்னகைத்த டென்சிங், "மலைகளின் சிகரத்தை மனிதன் ஏறுவதைவிட, மிகமுக்கியமான விஷயம், ஒருவன் தன்னைத் தானே உணர்வது. தன்னை உணர்வதே முக்கியம். ஆனால் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள நான் எவரெஸ்ட் மீது ஏற வேண்டியதாகி விட்டது'' என்றார். தன்னை உணராத வரை தன்பலம் தெரியாத வரை நாம் எதைச் சாதிப்பது?
ஆனால் இது சுலபமான சங்கதி அல்ல. அனுமனால் கடல் கடக்க முடியும் என்பதை ஜாம்பவான்தான் சொல்ல வேண்டி இருந்ததே ஒழிய, அனுமனுக்கே அவன் பலம் தெரியவில்லை என்கிறது இராமாயணம். கடல் கடக்க வேண்டிய சவாலை நீங்கள் சந்திக்க வேண்டும் என்றால் கடல் கடக்கும் பலம் நம்மிடம் உள்ளது என்கிற தன்நிலை உணர்வின்றி எப்படிச் செய்ய முடியும்? அனுமனைப் போன்ற மகா மனிதர்களுக்கே இதுதான் நிலை என்றால், மெகாசீரியல் பார்க்கும் மெகா மனிதர்களின் நிலை இன்னும் சங்கடம் தானே? 
ஓர் ஆச்சர்யம் சொல்லுகிறேன். ஒரு லிட்டர் பால் 50 ரூபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து கொழுப்பைப் பிரித்தெடுத்து வெண்ணெய் ஆக்கி விற்றால் எஞ்சிய பாலைப் பாலாகவோ தயிராகவோ விற்றால் கூடுதல் பணம் பார்க்கலாம். வெண்ணெய் நெய்யாகப் பதவி உயர்வு பெற்றால் வரவு செலவு குட்டி போடும். பாலையே சீஸ் (பாலேடு), பன்னீர் என்று வேறு பல அவதார புருஷர்களாக ஆக்க முடியும். அதற்கேற்ப கஜானாவுக்குச் சதை வைக்கும். அதைவிட ஆச்சர்யம்... பன்னீர், சீஸ், தயாரிக்கும் போது பிரிந்து கிடக்கும் தண்ணீர் வெகு காலமாகக் குப்பையாகக் கொட்டப் பட்டது. ஒரு நாள் கூடுதலாக உள்ளே இருந்தால் ஊளை வாடை வீசி உலகையே குமட்டச் செய்யும் சக்தி பெற்றது. அதற்கு வேவ்வாட்டர் (Wave water) என்பது தொழில் முறைப் பெயர். ஆனால் அதிலிருந்து ஒரு பவுடர் எடுக்கும் தொழில் நுட்பம் வந்த விட்டது. புரோட்டீன் சக்தி மிக்கது. ஆக விலை கூடியது. 
ஒருகாலத்தில் பெரிய பால் நிறுவனங்களில் இருந்து விவசாயிகளின் கால்வாய்களில் கொட்டப்பட்ட வேவ்வாட்டர் (Wave water) என்ற குப்பை நீர் நிஜமான பாற்கடலாக இன்று அடையாளம் காணப்பட்டு விட்டது. இத்தனை தகவல்களும் மில்க்கிமிஸ்ட் நண்பருடன் உரையாடிய போது கறக்கப்பட்டவை. எல்லோரும் பால் கறப்பார்கள். நான் பால் பற்றிய தகவல்களைக் கறந்துவிட்டேன். பாலில் இத்தனை ஆழமான பணம் இருக்கிறது என்று எந்த எருமைக்கும் தெரியாது. ஆனால் புத்திசாலியான அதன் எஜமானன் தெரிந்து வைத்திருக்கிறான். நாம் எருமையா? எஜமானனா? இப்போது சொல்கிறேன்.. நம்முடை "நானுக்குள்' ஒரு பாற்கடல் இருக்கிறது. கடைந்து பார் கண்ணா.. மாலையோடு ஏழெட்டு மகாலட்சுமிகள் எழுந்து வருவார்கள். பலருக்கும் தனக்குள் இருக்கும் பாடகரைத் தெரியாது.. ஒவியரைத் தெரியாது.. நிர்வாகியைத் தெரியாது.. தலைமைப் பண்பு தெரியாது.. சாதனையாளரைத் தெரியாது.. பால் திரிந்து பன்னீர் ஆனதும் வேவ் வாட்டரை வெளியே கொட்டியது போல் தன்னைத் தானே குப்பைத் தொட்டிக்குள் கொட்டிவிடுகிறார்கள். இதில் கண்விழியுங்கள் என்பதே என் அறைகூவல். 
கறுப்பு திராட்சைகளைக் கன்னியர்களின் கண்களுக்குக் கவிஞர்கள் உவமை சொல்லி போதை ஊட்டிய போது, "அட முட்டாள் உலகமே.. அது மது மட்டுமல்ல; மருந்து'' என்றது விஞ்ஞானம். அந்தக் கறுப்புத் திராட்சையின் இனிப்பும் புளிப்பும் போதை கொடுத்த போது அதன் விதைகளின் துவர்ப்பும் கசப்பும் வாயை வருத்தமடையச் செய்தன. உடனே விஞ்ஞானம் விதையில்லா திராட்சையை விருத்தி செய்தது. ஆனால் பின்னாளில் ஓர் ஆய்வை நிகழ்த்தியது. தொல்லை எனத் துப்பப்பட்ட விதைகளுக்குள் ஓர் அமிர்த சாகரம் அடங்கி இருக்கிறது என்று கண்டறிந்தார்கள். திராட்சை விதைகள் இரத்தக் குழாய்களின் சதை அடைப்பைச் சீர் செய்கின்றன. கூடுதல் கொழுப்பின் கொட்டத்தை ஒடுக்குகின்றன. சர்க்கரை நோயின் இலவச இணைப்பான கண் குறைகளைக் களையக் கூடியவை. முதுமையைக் குறைத்து இளமையில் நிறுத்தும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் Anti oxidants அதிகம் உடையவை என்று கண்டறிந்துள்ளனர். வாயைக் குவித்து "தூ' எனத் துப்பும் திராட்சை விதைக்குள் "ஆ' என்று வாய்பிளக்க வைக்கும் அமிர்த சாகரம் அடங்கி இருப்பதை அறிந்ததால் அதனை இன்று மருந்தாக்கிப் பணமாக்கி விட்டார்கள். உங்கள் நானையும் உற்றுப் பாருங்கள்.. ஊடுருவுங்கள். உள்ளே உள்ள ஆற்றல் சாகரத்தைக் கொஞ்சம் கடைந்து பாருங்கள். 
நாம் எப்போதும் "நீ' யில் நிற்கிறோம். யாரையோ புகழ்வது.. யாரையோ தலைமேல் தூக்கி வைத்து ஆடுவது.. யார் திறமையையோ வாய்பிளந்து பார்ப்பது.. யாராகவோ நாம் இல்லையே என்று ஏங்குவது.. பிறர்புகழ்.. பிறர் செல்வம்.. பிறர் திறமை பிறர் அழகு குறித்த வியப்பு, திகைப்பு, பொறாமை, அவற்றை அழிக்கும் அசுரவெறி அல்லது அதை ஆராதிக்கும் அடிமைப் புத்தி இவற்றால் சீரழிகிறோம். 
ஓயாமல் பிறரை ஆராதிக்கும் அடிமைத்தனமும் வேண்டாம். அதனை அழிக்க நினைக்கும் அசுர வெறியும் வேண்டாம். உனக்குள் போ.. உன்னைக் கடைந்துபார்.. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பாற்கடல் உள்ளது. ஆகாயத்தின் பாற்கடலில் (Milky way) அண்டம் மிதக்கிறது என்றனர் விஞ்ஞானிகள். அண்டத்துள் இருக்கும் பிண்டத்துள்ளும் அதே பாற்கடல் அடங்கிக் கிடக்கிறது என்றனர் மெய்ஞ்ஞானிகள்.
"உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்' என்பது ஒரு சினிமா சங்கீதம் மட்டுமல்ல, வேதரிஷிகள் பாணியில் காதல் ரிஷி கண்ணதாசன் கொடுத்த கலிகால உபநிஷத்.. "நீ' யிலிருந்து 
"நானு' க்குள் வா... நிஜத்தை உணர். வா... புறப்படலாம்.


(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com