சிகரத்தைத் தொட வைக்கும் நேர்மறைச் சிந்தனைகள்!

இன்றைய இளையதலைமுறையினர் சிலரிடம் எதிர்மறை எண்ணங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. உதாரணமாக, " ஒரு நாளிதழில் ஒரு நிறுவனத்தின் வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரம் வந்துள்ளதே.
சிகரத்தைத் தொட வைக்கும் நேர்மறைச் சிந்தனைகள்!

இன்றைய இளையதலைமுறையினர் சிலரிடம் எதிர்மறை எண்ணங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. உதாரணமாக, " ஒரு நாளிதழில் ஒரு நிறுவனத்தின் வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரம் வந்துள்ளதே. அதற்கு விண்ணப்பித்து விட்டீர்களா?'' என ஓர் இளைஞனிடம் கேட்டால், "சார் அதெல்லாம் வெறும் கண்துடைப்பு விளம்பரம் சார். அந்த வேலைக்கு ஏற்கெனவே ஆட்களைத் தேர்வு செய்து விட்டு பேருக்கு விளம்பரம் கொடுத்துள்ளார்கள்'' என்ற பதில் வரும். இது ஒரு விதமான மறைமுக எண்ணம்.
"தம்பி, டிஎன்பிஎஸ்சி, வங்கி தேர்வு, ராணுவத் தேர்வெல்லாம் நடக்கப் போவதாக செய்தித்தாள்களில் செய்தி வந்துள்ளதே. நீ தான் பட்டம் பெற்றுள்ளாயே. அதற்கு அப்ளை செய்யலாமே. இன்னும் 5 நாள்தான் இருக்கிறது'' என கூறினால், "அட ஏன் சார் நீங்க வேற. உலகம் புரியாம பேசுறீங்க. மொத்தமே 50 போஸ்ட்தான். இதுவரை ஆயிரக்கணக்கானோர் அப்ளை பண்ணிட்டாங்க. நமக்கெல்லாம் எப்படி கிடைக்கும்?'' இப்படி பதில் வரும். இது ஒரு வகையான எதிர்மறை மனப்பான்மைதான்.
ஆனால், அந்தப் பணிக்காக ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களும் நம்மை போன்ற பட்டதாரிகள்தானே? என்ற எண்ணம் அவர்களுக்கு வருவதில்லை. இந்த பணிக்காக விண்ணப்பித்திருந்த சில ஆயிரம் பேர் நிச்சயம் நமக்கு கிடைக்கும் என்று நேர்மறை எண்ணத்தால்தான் விண்ணப்பித்துள்ளார்கள் என்பதும் புரிவதில்லை.
ஒரு நிறுவனம் தலைமை அதிகாரி ஒருவர் தேவை என்று விளம்பரப்படுத்தியிருந்தது. அதன் கீழே குறிப்பு என்ற தலைப்பிட்டு, "இந்த நிறுவனம் தற்போது பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. என்னால் முடியும் என்ற உத்வேகம் உள்ளவர்கள் மட்டும் நேரில் வரவும்' என்று குறிப்பிட்டு நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடாமல் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடத்தின் பெயரை மட்டும் குறிப்பிட்டு விளம்பரப்படுத்தியது.
அந்த விளம்பரத்தை ஏராளமானோர் பார்வையிட்டும், நஷ்டத்தில் இயங்கும் இதில் போய் நாம் தலைமை அதிகாரியாக இருந்து என்ன செய்ய? என நினைத்து அதை புறந்தள்ளி விட்டனர். ஆனால், நம்மால் நிச்சயமாக முடியும் என்ற நேர்மறை எண்ணம் கொண்ட ஓர் இளைஞன் நேர்முகத் தேர்வுக்கு சென்றார். அங்கே பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அது நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம் அல்ல. மிகப்பெரும் லாபத்தில் கொழித்து வரும் எம்என்சி நிறுவனம் அது. அந்த நிறுவனம் அந்த இளைஞனுக்கு தலைமை அதிகாரி பணியை வழங்கியது. என்னால் முடியும் என்ற பாசிட்டிவ் சிந்தனையுடன் சென்ற இளைஞன் வாழ்க்கையில் வெற்றி பெற்றான்.
ஒரு பணியைத் தொடர்ந்து செய்யும் போது களைப்பு ஏற்பட்டால் தேநீர் குடித்து களைப்பைப் போக்குவது போல், மனதில் சோர்வு ஏற்பட்டால் நமக்கு பிடித்த இசை, நடனம் போன்றவற்றை கேட்டு சோர்வை போக்குவது போல், மனதில் தோன்றும் நேர்மறை சிந்தனைகள் உற்சாகத்தை அளித்து நல்ல விஷயங்களை விரைவாக செய்து முடிக்க துணை புரியும்.
நாம் வாழ்க்கையில், சில வகையான மனிதர்களைப் பார்த்திருப்போம். ஒரு சாரார் தங்களுக்குக் கிடைத்த சாதாரண வெற்றியைக்கூட கொண்டாடி மகிழ்வார்கள். மற்றொரு தரப்பினர் பெரிய வெற்றியைக் கூட கொண்டாட மாட்டார்கள். உதாரணமாக தேர்வில் சராசரி மதிப்பெண் பெற்ற மாணவன், தான் தேர்வில் வெற்றி பெற்றதை மகிழ்ச்சியாக கருதி நண்பர்களுக்கு இனிப்புகளை கொடுத்து கொண்டாடுவான். அதே சமயம் மிக நல்ல மதிப்பெண் பெறும் சிலர் ஐயோ, 2 மதிப்பெண் போய் விட்டதே? என்ற வருத்தத்தில் யாரிடம் பேசக்கூட செய்யாமல் வருத்தத்துடனே இருப்பார்கள்.
இதில், பிரச்னை என்னவென்றால், சராசரி மதிப்பெண் பெற்ற நபர் உற்சாகமாக நண்பர்களின் துணை கொண்டு உயர்கல்வி கற்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கி வெற்றியும் காண்பான். இதுதான் பாசிட்டிவில் எனர்ஜியின் பலன்.
ஆனால், அதிக மதிப்பெண் எடுத்த மாணவன் மதிப்பெண் போய்விட்டதே என்ன செய்ய என்று கருதி யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்த காரணத்தால் முறையாக கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூட முடியாமல் உயர்கல்வி கற்க முடியாமல் போய் விடுவான். இதுதான் நெகட்டிவ் எனர்ஜியின் விளைவு.
இன்று பெரும்பாலான வீடுகளில் இத்தகைய எதிர்மறைச் சிந்தனைதான் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. பிள்ளைகள் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று விட்டால் போதும். "நீ எதுக்கும் லாயக்கில்லை. இப்படியே போனா எதிர்காலத்தில் உனக்கு எதுவுமே கிடைக்காது. போட்டி நிறைஞ்ச உலகத்திலே, திறமை இல்லாத உன்னை அப்படியே கீழே போட்டு மிதிச்சிருவாங்க'. இப்படியாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மனதில் எதிர்மறை எண்ணங்களை விதைத்து விடுவார்கள்.
பிறகென்ன அந்த விதை மரமாகி உண்மையிலேயே அந்த இளைஞன் தனக்கு எதிர்காலமே இல்லை என்று நினைத்து வாழ்க்கையில் தோல்வியை அடையும் சூழல் உருவாகி விடும். எனவே, பெற்றோர்கள் கூடுமானவரை நேர்மறை எண்ணங்களை மட்டுமே பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
- வி.குமாரமுருகன்




 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com