செல்ஃபியில் களவாடப்படும் கைரேகை!

படிக்காதவர்களை கைநாட்டு என்று கூறிய காலம்போய், தற்போது மெத்த படித்தவர்களே தங்கள் ரகசியங்களைக் காக்க கைரேகையைத்தான் திறவுகோலாக பயன்படுத்தி வருகின்றனர்.
செல்ஃபியில் களவாடப்படும் கைரேகை!

படிக்காதவர்களை கைநாட்டு என்று கூறிய காலம்போய், தற்போது மெத்த படித்தவர்களே தங்கள் ரகசியங்களைக் காக்க கைரேகையைத்தான் திறவுகோலாக பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட்போன், லேப்டாப், ஏன் ஆதார் போன்றவற்றுக்குள் நுழையவே ஒவ்வொருவரின் பிரத்யேக கைரேகைதான் பயன்படுகிறது.
 வருங்காலங்களில் கைரேகையின் அடிப்படையில் கடைகளில் பணப்பரிவர்த்தனை நடைபெறும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த அளவுக்கு முக்கியமான கைரேகையை இணையதள திருடர்கள் நமது சாதாரண செல்ஃபி மூலம் திருடிவிடுகிறார்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா?
 ஆம், இன்றைய அதிநவீன ஸ்மார்ட்போன்களில் உள்ள கேமராக்கள் துல்லியமாக படம் பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. அதுவும் செல்ஃபிக்கு அனைவரும் அடிமையாகி வருவதால், முன்பக்க கேமராக்களின் படம்பிடிக்கும் தரமும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
 இதுபோன்ற கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட் போன்களில் செல்ஃபி எடுக்கும்போது சிலர் விளையாட்டாக தங்களது விரல்களையும் சேர்த்து வெற்றிச் சின்னத்தை காண்பிப்பது உண்டு. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் இணையதள திருடர்கள், செல்ஃபிகளில் துல்லியமாக தெரியும் கைரேகைகளை எடுத்து அதைப் போல் போலியாக உருவாக்கி இணையதள மோசடி
 களில் ஈடுபடுகின்றனர். சுமார் மூன்று மீட்டர் தூரத்தில் இருந்து எடுக்கப்படும் செல்ஃபிகளில் இருந்து கைரேகைகளைத் துல்லியமாக எடுத்துவிடலாம் என்று ஜப்பான் நாட்டின் தேசிய தகவல் மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 மேலும் இந்தப் புகைப்படங்கள் இணையதளத்தில் எப்போதும் இருப்பதால், யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் புகைப்படத்தில் உள்ளவரின் கைரேகை மட்டுமன்றி, அவரது முகம், கருவிழி குறித்த விவரங்களையும் திருடிவிடலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இது இணையதள தகவலுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
 ஃபேஸ் புக் தகவல் திருட்டை தடுக்க முடியாமல் அந்த நிறுவனம் தடுமாறி வரும் நிலையில், சாமானிய மனிதர்களின் தகவல்கள், அதுவும் கைரேகை மூலம் திருடப்பட்டால் கண்டுபிடிப்பது கடினமாகும். கைரேகை திருட்டைத் தடுக்க விரல்ரேகைகளில் ஒட்டும் மெல்லிய டேப்பை சில நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ளன. எனினும், முன்னெச்சரிக்கையாக கைரேகைகளுடனான செல்ஃபிகளைத் தவிர்ப்பதே புத்திசாலித்தனம்.
 - அ.சர்ஃப்ராஸ்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com