சேவை... விருது... சேவை!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்த இளைஞர்கள் மத்திய அரசு வழங்கிய சிறந்த மன்றத்திற்கான விருது வழங்கிய பணத்தில் மலைவாழ் மக்களுக்கு கழிப்பறை கட்டிக் கொடுத்துள்ளனர்.
சேவை... விருது... சேவை!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்த இளைஞர்கள் மத்திய அரசு வழங்கிய சிறந்த மன்றத்திற்கான விருது வழங்கிய பணத்தில் மலைவாழ் மக்களுக்கு கழிப்பறை கட்டிக் கொடுத்துள்ளனர்.
 பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்த 15 இளைஞர்கள் "விழுதுகள் இளைஞர்கள் மன்றம்' எனப் பெயரிட்டு அதன் மூலம் பிளாஸ்டிக் அப்புறப்படுத்துதல், கண்மாய் தூர்வாருதல், வனப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக்குகளை வனத்துறையினர் உதவியுடன் அப்புறப்படுத்துதல் மற்றும் மரக்கன்றுகள் நடுவது போன்ற பல்வேறு சேவைகள் செய்து வந்தனர்.
 மன்றத்தை மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திராவில் முறையாகப் பதிவு செய்து பல்வேறு சேவைகள் செய்து வந்தனர். தங்களது பகுதியில் உள்ள கழிப்பறைகளை பராமரிப்பு செய்து, அதனை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் உதவி புரிந்து வருதல் மற்றும் அப்பகுதியில் உள்ள முதியவர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உதவி புரிந்து வந்தனர்.
 இந்த நிலையில் மத்தியஅரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திரா மூலம் மாவட்ட அளவில் சிறப்பாகப் பணிபுரியும் மன்றங்களுக்கு ஆண்டுதோறும் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம், ரூ. 25,000-க்கான காசோசலை வழங்கி வருகிறது.
 இதனையறிந்த விழுதுகள் இளைஞர் மன்றத்தின் சார்பில் 2017ஆம் ஆண்டு விருதுக்கு விண்ணப்பித்தனர். அதனை பரிசீலனை செய்த அலுவலர்கள் விழுதுகள் இளைஞர்மன்றத்தை தேர்ந்தெடுத்தனர்.
 இந்த விருது கடந்த ஜனவரி மாதம் தேனி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் வழங்கினார்.
 இதில் வழங்கப்பட்ட ரூ. 25,000-க்கான காசோலை வங்கியில் உள்ள கணக்கில் செலுத்தப்பட்டது. மேலும் பரிசு தொகை ஏழைகளுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் ஆலோசனை நடத்தப்பட்டது.
 அதில் கழிப்பறை வசதி இல்லாத ஏழைகளுக்கு கழிப்பறை கட்ட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
 இது குறித்து விழுதுகள் இளைஞர் மன்றச் செயலாளர் செயலாளர் எ.சங்கிலித்துரை பேசியதிலிருந்து...
 "நாங்கள் பல்வேறு இடங்களை ஆய்வு செய்தோம். போக்குவரத்து வசதி இல்லாத மற்றும் கழிப்பறை வசதி இல்லாத சொக்கன்அலை கிராமத்தைத் தேர்ந்தெடுத்தோம். இந்த கிராமம் தேனி மாவட்டம், போடி ஒன்றியம், அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் ஆகும். ஆனால் இக்கிராமம் பெரியகுளத்தில் இருந்து மட்டுமே சாலை வசதி உள்ளது. அங்கிருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ளது. பெரியகுளத்தில் இருந்து 14 கி.மீ தூரம் ஜீப்பில் செல்லவேண்டும். அங்கிருந்து 2 கி.மீ செங்குத்தான மலைப்பகுதியில் நடந்து செல்ல வேண்டும்.
 எங்கள் இளைஞர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள், கடந்த ஜூலை 7ஆம் தேதி கழிப்பறை கட்ட தேவையான கோப்பைகள், பைப், தகரம், கதவுகள் மற்றும் எலக்ட்ரிக் சாமான்கள் ஆகியவற்றை சேகரித்து கண்ணக்கரைக்கு டிராக்டரில் சென்று, அங்கிருந்து பொருள்களை தலைச்சுமையாக 2 கி.மீ தூரம் நடந்தே பொருள்களை எடுத்துச் சென்றோம்.
 எங்களுடன் கொத்தனார் மற்றும் எலெக்ட்ரீசியனை அழைத்து சென்றோம். அங்கு உள்ள கட்டடத்தில் பராமரிப்பு செய்து கழிப்பறைக்கான கோப்பையைப் பதித்து கழிவுநீர்த் தொட்டி கட்டப்பட்டது . மேலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் செல்லும் வகையில் மின்சார வசதி செய்யப்பட்டு, கழிப்பறைக்கு குழாய் மூலம் தண்ணீர் எந்தநேரம் செல்லும் வகையில் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்தோம்.
 இப்பணிகள் முடிவடைந்தவுடன் அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களை அழைத்து கழிப்பறை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கிக் கூறினோம். அதன் பின் அவர்களிடம் கழிப்பறை ஒப்படைக்கப்பட்டது.
 விழுதுகள் இளைஞர் மன்றத்தை சேர்ந்த எங்களுடைய 15 இளைஞர்கள் கலந்து கொண்டு இந்தப் பணியில் ஈடுபட்டனர்.
 மேலும் எங்கள் மன்றத்தின் மூலம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது.
 அதோடு மட்டுமல்லாமல் பள்ளிகளில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மரக்கன்றுகள் நடுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கி கூறப்படுகிறது.
 இன்றைய இளைஞர்களை கவரும் முகநூல், கட்செவி அஞ்சல், சுட்டுரை போன்றவற்றில் கணக்கு தொடங்கப்பட்டு அதன் மூலம் தூய்மை இந்தியா மற்றும் மரக்கன்றுகள் நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்.
 அதோடு மட்டுமல்லாமல் தினமும் ஒரு திருக்குறள் சமூக வலைத்தளங்களில் பகிர்கிறோம்.
 தேனி மாவட்டம் இயற்கை எழில்நிறைந்த பகுதி. எங்கள் மாவட்டம் பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாகவும், தனிநபர்கழிப்பறை இல்லா மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்'' என்றார்.
 - ச. பாண்டி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com