மூன்று அளவுகோல்கள்!

நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக வாழ முயற்சிக்கிறோம் என நினைத்துப் பார்க்க வேண்டிய சூழலில் உள்ளோம்.
மூன்று அளவுகோல்கள்!

நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக வாழ முயற்சிக்கிறோம் என நினைத்துப் பார்க்க வேண்டிய சூழலில் உள்ளோம்.
தொழிலில் மொத்த உற்பத்தி, லாபம், செலவு, தொழிலாளர்களுக்கான செலவுகள் தொடர்பாக நாம் கணக்கிட்டுப் பார்க்க முடியும். ஆனால் நமது வாழ்க்கையை அளக்க எந்த அளவுகோலும் நம்மிடம் இல்லை.
பிறரை விட நாம் எவ்வளவு அதிகமாகச் சம்பாதித்து உள்ளோம் என்பது போன்ற அளவுகோல்களை சிலர் வைத்திருப்பார்கள். ஆனால் அது மட்டுமே வாழ்க்கையில் ஒருவரின் நிலையை மதிப்பிட போதுமான அளவுகோல் இல்லை.
ஆற்றல், வேலை, நல்லுறவு ஆகிய அளவுகோல்களை வாழ்க்கையில் உயர்ந்தநிலையில் உள்ளவர்கள் வைத்திருக்கிறார்கள். இவை மூன்றும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைவையாகும்.
நமக்கு ஆற்றல் அதிகம் இருக்கும் போது, நல்ல மனநிலையில் இருப்போம் என்பதால் செய்யும் வேலைகளையும் நன்றாகச் செய்ய முடியும். இதன்மூலம் நமது வாழ்க்கையில் நம்முடன் தொடர்புள்ள அனைவருக்கும் நன்மைகளைச் செய்யலாம். இதனால் உறவுமுறையும் வலுப்படும்.
நமது குடும்பத்தினர், உறவினர்களுடன் நமக்கு உள்ள உறவே நீண்ட கால மகிழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும். நிபந்தனையற்ற நல்ல உறவுகள் வளர நீண்ட காலமாகும். உண்மையான நட்பும், அன்புமே பலமான பிணைப்பை ஏற்படுத்தும்.
ஆற்றலை அளவிடுதல்: நமது ஆற்றலை அளவிடுதல் எளிமையானது. நல்ல உடல் தகுதியுடன் உள்ளோமா என்பதில் எப்போதும் நாம் கவனம் வைக்க வேண்டும். நமது ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் வழிகள் குறித்தும் நாம் கவனமாக இருக்க வேண்டும். நாள்தோறும் உடற்பயிற்சி செய்து, 30 நிமிடங்கள் வேகமாக நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சத்து நிறைந்த உணவை நன்றாக உண்ண வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு கிடைக்கும் ஆற்றல் பன்மடங்காகும். உடல் ஆற்றல் மட்டுமல்ல, சிந்திக்கும் ஆற்றல், பிரச்னைகளைக் கையாளும் ஆற்றல் எல்லாவற்றையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களிடம் உள்ள பல ஆற்றல்கள் உங்களை உயர்நிலைக்குக் கொண்டு செல்லும்.
வேலையை அளவிடுதல்: வேலை யை அளவிடுதல் என்பது நமது ஊதியம், அந்தஸ்து, போன்றவை குறித்து பார்ப்பதாகாது. நாம் நமது பணியில் புதிதாக எவற்றைக் கற்றோம், மேலும் கற்க வேண்டியவை எவை என்பதே முக்கியமானதாகும். உண்மையான மகிழ்ச்சியைப் பெற வேண்டும் என்றால் நமக்கான வாய்ப்புகளை நாம் தேட வேண்டும். புதியன குறித்து அறிந்து அதிக பொறுப்புகளைச் சுமக்க வேண்டும். நாம் செய்யும் வேலையைப் பொறுத்தே நமது வருவாய் ஈட்டுதலும் அமைகிறது. நடைமுறை வாழ்க்கையோடு தொடர்பில்லாத அறிவால் எந்தப் பயனும் இல்லை. நமக்கு தெரிந்தவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
உறவுகளை அளவிடுதல்: உறவுகள் நமது வாழ்க்கையில் ஒரு பகுதி. நமக்கு பிறர் என்ன செய்கின்றனர் என்பது குறித்து ஆராய்தல் கூடாது. நமது வாழ்க்கையில் தொடர்புடையவர்களுக்கு நாம் எவ்வாறு நேரத்தை செலவிடுகிறோம் என்பதைப் பொறுத்தே உறவுமுறைகளும் சிறப்பாக இருக்கும்.
நமக்கு ஏதேனும் பிரச்னை என்றால் எவ்வளவு பேர் நமக்கு உதவ முன் வருகிறார்கள் என்பதே நாம் நன்றாக வாழ்கிறோமா, இல்லையா என்பதற்கான ஓர் அளவுகோல்.
- பா.சுஜித்குமார்




 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com