வாடா என் சிங்கக்குட்டி! - சுகி. சிவம்

விடுமுறைக்கு என் இரண்டு பெண் மக்களும் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்கள் இருவரும் பிள்ளை வளர்ப்புப் பெற்றோர்களாகவும் குலம், குடும்பம் காக்கும் குத்து விளக்கு நாச்சியார்களாகவும்
வாடா என் சிங்கக்குட்டி! - சுகி. சிவம்

நீ... நான்... நிஜம்! -22

விடுமுறைக்கு என் இரண்டு பெண் மக்களும் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்கள் இருவரும் பிள்ளை வளர்ப்புப் பெற்றோர்களாகவும் குலம், குடும்பம் காக்கும் குத்து விளக்கு நாச்சியார்களாகவும் காலம் கடத்துகிறார்கள் என்றும் எனக்கொரு கோபம் உண்டு. மெத்தப் படித்த இவர்கள் மேலும் பல பணிகள், தொழில்கள் செய்து தொழில் முனைவோராகவோ வணிகராகவோ கலை வளர்ப்பவர்களாகவோ வளர்ந்திருக்க வேண்டும் என்று எனக்கொரு கருத்துண்டு. மகிழ்ச்சியான உணவுக்குப்பின் நான் என் வழக்கமான குற்றப்பத்திரிகையைப் படிக்கத் தொடங்கியதும் சிரித்துக்கொண்டே என் பெரிய மகள் எனக்கொரு சவால் விட்டாள்.
"இன்று ஒரு நாள் முழுவதும் உன் பேரனுடன் மட்டும்தான் நீ செலவிட வேண்டும்'' என்றாள். இரண்டு மணிநேரத்தில் என் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டேன்.
பொதுவாகப் பெண் பிள்ளைகளைப் பருவ வயது வரை வளர்ப்பது அதிக சிக்கல் இல்லை. ஆண்மையின் வீச்சு அதிகமிருக்கும் ஆண்பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோர்களுக்குப் பெரிய சவால். இலக்கியச்சுவையோடு சொல்வதென்றால் பாரதியின் தீராத விளையாட்டுப்பிள்ளைப் பாடலைப் படித்தால் சிரித்துக் கொண்டே அழலாம். ஆண்மையின் வீச்சுமிக்க ஆண் குழந்தைகளின் உடல் மனஇயல்பு அப்படி. ஒரே மாதிரியான இரண்டு பொம்மைகளை வாங்கி ஒன்றை ஓர் ஆண் குழந்தையிடமும் இன்னொன்றை ஒரு பெண் குழந்தையிடமும் கொடுத்து விளையாடச் சொல்லிப் பாருங்கள். பெண் குழந்தை பொம்மையின் பரட்டைத்தலையைக் கொஞ்சம் பின்னிப் பார்த்திருக்கும். இருக்கிற கவுனுக்கு மேலேயே இன்னும் இரண்டு கவுன்களைப் போட்டிருக்கும். மடியில் போட்டு பொம்மையின் நெஞ்சைத்தட்டி "ஜோ ஜோ' சொல்லிக் கொண்டிருக்கும். தன் மெத்தையிலேயே தூங்க வைக்கும். அதே நேரத்தில் ஆண் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்ட பொம்மையின் அனுபவம் வித்தியாசமாக இருக்கும். பொம்மையின் கை, கால்கள் எல்லாம் தனித்தனியாகத் துண்டிக்கப்பட்டிருக்கும். அப்பாவிடம் கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்கு நடத்தப்பட்ட கொலையுண்ட பிணம்போல் போடுவான். பெருமையோடு அப்பாவைப் பார்த்து, "இந்த பொம்மை இடமும்; வலமும் தலையாட்டுவதாகச் சொன்னியே இனிமே ஆட்டாது. எப்படி ஆட்டுதுனு பிச்சுப்பார்த்தேன். உள்ளே எதோ மிஷின் வச்சிருக்காம்ப்பா. இந்தப் பொம்மை நல்லாவே இல்லை. வேற வாங்கு. என்னைக்கு வாங்கப்போலாம்?'' என்ற கேள்விக்கணைகள் வீசப்படும்.
ஆண் பெண் வேறுபாடு என்பது ஆண் பெண் சமத்துவத்துக்குப் புறம்பானது என்ற அர்த்தத்தில் பலர் புரிந்து கொள்கிறார்கள். நமக்கிருக்கும் வேறுபாடுகளே நமது சமத்துவத்திற்குச் சான்றளிக்கிறது. இங்கு ஒவ்வொருவரும் வித்தியாசம் என்பதால் எல்லோரும் சமம். இயற்கையின் கொடையை ஆழமாக விளங்கிக்
கொள்ளவேண்டும். 
அண்மையில் ஒரு மருத்துவக் கட்டுரை படித்தபோது ஒரு சுவையான தகவல் ஒன்று கிடைத்தது. ரத்தப் புற்று நோய், தலிசீமியா போன்ற ரத்த நோய்களுக்கு இரத்தக்குருத்து மாற்றம் (stem cells) ஆரோக்கியமானவர்களிடம் இருந்து பெற்றுக் கொடுப்பது மட்டும்தான் தீர்வு என்கிறார்கள். இதில் சுவையான தகவல், இரத்தக் குருத்துப் பெற்றுக்கொண்டவரின் பழக்கவழக்கங்கள் ( நகம் கடித்தல் போன்ற), தோல் நிறம் போன்றவை கொடுத்தவருடைய சாயலைப் பெற்று விடும்.
இது மாதிரி ஆண் பெண்ணுக்கு இடையில் உடல் அமைப்பு வேறுபாடுகள் மட்டும் இருப்பதில்லை. இரத்தத்தில் உள்ள ரசாயனம் நாளமில்லாச் சுரப்பிகளின் நர்த்தனம் அதிசயத்தக்க வேறுபாடுகளை ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் நிகழ்த்துகிறது. அதனால்தான் சொல்கிறேன்: குழந்தை வளர்ப்பில் ஆண் குழந்தை வளர்ப்பு கூடுதல் சிக்கலாகும். 
ஒரு குடும்பத்தில் தந்தையிடம் கோபித்துக்கொண்டு ஆண் பிள்ளைகள் ஓடிப் போவதும், வளர்ந்த பின் தந்தையை ஓர் எதிரிபோலவே பாவிப்பதும் பேசுவதும் அதிகம் பார்க்க முடியும். தகப்பனை எதிரியாக உணர்வதற்குத் தாயாரின் கைங்கர்யமும் ஓரளவுக்கு உதவும். 
காடுகளில் சிங்கங்கள் நான்கு ஐந்து ஆண் குட்டிகளை ஈன்றாலும் அதே கூட்டத்தில் தன் வாழ்நாள் முழுதும் அவை வாழ முடியாது. ஆண் குட்டிகள் வெளியே விரட்டப்படும். முன்னின்று இந்த வேலையை நிகழ்த்துவது சிங்கத்தின் தந்தைதான். தனக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கிக் கொள்ளும் வரை ஆண் சிங்கக்குட்டி போராட வேண்டியிருக்கும். அது மட்டுமல்ல, இளமையும் வலிமையும் சிங்கக் குட்டிகளின் சுய சம்பாத்தியம். அதைக் கொண்டு வேறு ஒரு கூட்டத்தின் தலைமையில் இருக்கும் கிழட்டுச் சிங்கத்தை வென்று அல்லது கொன்று தலைமையைப் பிடிக்கும். சிங்க மகாராஜாவின் முதல் வேலை பழைய தலைவரின் மூலம் பிறந்த குட்டிச் சிங்கங்களைக் கொன்று தனது ரத்த வாரிசுகளை அங்குள்ள பெண் சிங்கங்கள் மூலம் உண்டாக்குவதுதான். வேறு வழியின்றிப் பெண் சிங்கங்கள் தன் குட்டிகள் கொலை செய்யப்படும் கொடூரத்தை வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கும். வேட்டைக்கு நல்ல உணவு கிடைக்கவும் வேறு மிருகங்களிடமிருந்து பாதுகாக்கவும் கொடூரமான வலிமை கூடிய ஆண் சிங்கம் அவற்றுக்கு அவசியம். பல மிருகக் கூட்டங்களிலும் இந்த அநீதி அரங்கேறுகிறது.
இரண்டு நுட்பங்களைக் கவனிக்க வேண்டும். சிங்கத்தின் ஆண் குட்டியைத் தகப்பன் சிங்கமே விரோதியாக்கி வெளியேற்றுகிறது. வளர்ந்த சிங்கக் குட்டியோ வேறு ஒரு கூட்டத்தின் தகப்பனைக் கொல்கிறது. மனிதக் கூட்டம் இந்த ஆச்சரியத்துடன் ஒத்துப்போவதைத் தவிர வேறு வழியில்லை. 
இந்திய வரலாற்றை ஒருமுறை புரட்டிப்பாருங்கள். அரச அப்பாக்கள் பலர் அரச ஆசையுடைய பிள்ளைகளால் கொலை செய்யப்பட்டிருப்பார்கள். குறைந்த பட்சம் கொடுமையாவது படுத்தப்பட்டிருப்பார்கள். தாஜ்மகாலைக் கட்டிய ஷாஜகானை ஒளரங்கசீப் எப்படிப் பணியவைத்தார் என்பதைப் படித்தால் பிள்ளை பெறும் ஆசையே போய்விடும். தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடந்த கடிதப்போக்குவரத்துகளை வெ.சாமிநாத சர்மா தமிழில் புத்தமாகத் தந்திருக்கிறார். ஆக்ரா கோட்டை முற்றுகையிடப்பட்ட போது சிறைவைக்கப்பட்ட ஷாஜகானைப் பணிய வைக்க உள்ளேபாயும் யமுனைநதியின் கிளையைத் தடுத்து நிறுத்தினார் ஒளரங்கசீப். 
அதிகம் பேசப்பட்ட ராஜராஜசோழன் - ராஜேந்திர சோழன் தந்தை மகன் உறவு கூட கடைசிக் காலத்தில் வெகுவாகக் கசந்துபோனது என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். "தோளுக்கு விஞ்சியவன் தோழன்' என்று ஆண்மகனைப் பற்றி ஒரு பழமொழி இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். வளர்ந்த மகனைக் கை நீட்டி அடிக்கிற தந்தையையும் பதிலுக்குத் தந்தையை அடிக்கிற மகனையும் சர்வசாதரணமாகப் பார்க்க முடியும். படித்த மேல் தட்டு மக்களிடையே மிகக்குறைவாக இது நடக்கும் என்றாலும் மற்றைய மக்கள் மத்தியில் இது சர்வசாதாரணம். 
ஆண்பிள்ளைகளின் எல்லா இயல்புகளையும் நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் முரட்டுத்தனம், முன்கோபம், தகப்பனை எதிர்க்கத்துணியும் தைரியம், ஆசிரியருக்குக் கீழ்ப்படமறுக்கும் ஆவேசம் இவை எல்லாம் பெற்றோர் சந்திக்கும் பிரச்னைகள்.
ஆண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் விஞ்ஞானப்பூர்வமான விழிப்புடன் வளர்க்கவே நான் பல செய்திகள் சொன்னேன். வெறும் அடக்குமுறையால் மட்டுமே பிள்ளைகளை வளர்த்து விட முடியாது என்பதை இளைய பெற்றோர்கள் குறிப்பாக 15 வயது முதல் 22 வயது வரை உள்ள ஆண்மக்களை வளர்க்கும் பெற்றோர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். 
ஆண் பிள்ளைகளிடம் ஏகப்பட்ட குறைகள் உண்டு. அவற்றை அவனது நண்பர்களின் தயவால் புரிய வைக்கலாம். அல்லது அம்மாவின் EMOTIONAL  BONDING கொஞ்சம் வேலை செய்யும். இதற்கு மனைவி ஒத்துழைக்க வேண்டும். சரியான பெண்ணை மகன் காதலிப்பதாகக் கண்டறிந்துவிட்டால் ( முயற்சி செய்தால்தான் அதை அறிய முடியும்). அதனை எதிர்க்காமல் அவனது காதலி மூலம் அவனை ஏகப்பட்ட அளவு மாற்ற முடியும். ஜாதி, மதம், பணம் என்ற பழைய பத்தாம் பசலிப்பிடிவாதங்களால் மகனுடைய காதலுக்குக் குறுக்கே நிற்கும் தகப்பன்கள் நிரந்தர எதிரிகளாகி விடுவார்கள்.
ஆண் பிள்ளைகளின் அடாவடித்தனத்தையும் பட்டியலிடாவிட்டால் நான் திருப்தி அடையமாட்டேன். படிப்பை அலட்சியப்படுத்துவார்கள். வயதுக்கு மீறிய நண்பர்களுடன் பழகி வாழ்க்கையைப் பாழாக்குவார்கள். பிரச்னைகளையும் சண்டைகளையும் பகைமையையும் தேடித் தேடி கொண்டுவருவார்கள். அப்பா, அம்மா, குடும்பம் எல்லாவற்றையும் விட நண்பர்களே கடவுள்கள் என்று ஒற்றைக்காலில் தவம் செய்வார்கள். குறித்த நேரத்தில் புறப்பட மாட்டார்கள். குறித்தபடி சாப்பிட வரமாட்டார்கள். உணவு வீணாவதைப் பற்றியோ, வீட்டின் தேவைகள் கஷ்டங்கள் குறித்தோ ஒரு சிறிதும் கவலைப்படமாட்டார்கள். எவ்வளவு சாப்பிடுவார்கள் என்பதைப் பெற்று வளர்க்கும் மகராசியால் கூட கணிக்கமுடியாது. துணி துவைக்கமாட்டார்கள். ஆனால் துவைக்கவே முடியாத ஜீன்ஸ் பேண்ட்டாகவே வாங்குவார்கள். எல்லா வேலைகளையும் சம்பளம் வாங்காத வேலைக்காரி ( பாசக்கார அம்மாதான்) அல்லது சம்பளம் வாங்கும் வேலைக்காரர் யாராவது செய்யவேண்டும். வீட்டில் யாருடைய அவசரமும் பற்றி அவர்களுக்குக் கவலையே கிடையாது. ஆனால் அவர்களது அவசரத்தை அறிந்து குடும்பமே பரபரப்பாக இயங்க வேண்டும். அவர்களை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. ஆனால் அவர்கள் கேட்கும் கேள்விக்குக் குடும்பமே பதில் சொல்ல வேண்டும். அதுவும் உடனே சொல்ல வேண்டும். இத்தனைக் குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது சொன்ன நான் அவர்களுக்கான பதிலை ஒரு வரியில் சொல்லவேண்டும். இவர்கள் அப்பாவின் நிழல். அப்பாவின் ஜெராக்ஸ். இன்னொரு கோணத்தில் அப்பாவின் பகையாக இன்று இருந்து அவரையே உள்வாங்கி அவரது ஸ்தானத்திற்குத் தயாராகிக் கொண்டிருப்பவர்கள்.
உண்மையைச் சொன்னால் இவர்கள் அப்பாவின் பரம ரசிகர்கள். அவரை காப்பி அடிப்பதன் மூலம் அவரையும் கடந்து உயரமுடியும் என்று கனவு காண்பவர்கள். 
இந்த இளம் பிள்ளைகள் எப்போதும் இப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. மாறிவிடுவார்கள். அளவற்ற பொறுப்புள்ள நபராக மாறிவிடுவார்கள்.
பரிணாமம் அடைவார்கள் குடும்பத்தின் முழு பாரத்தையும் சுமக்கும் ஆச்சரியமான மனிதாராக வேதியல் மாற்றம் அடைவார்கள். இதற்கான தகுதி தயாரிப்பையும் பலத்தையும் சேகரிக்கும் காலத்தில்தான் இயற்கை அவர்களை அப்படி வைத்திருக்கிறது. இப்படியும் கருதலாம். 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com