அச்சம் விடு... உச்சம் தொடு! - சுகி. சிவம்

அருவிகள் வைரத் தொங்கல் என்கிற கவிதையைப் படம் பிடித்த மாதிரி, அமெரிக்காவில் நயாகரா நீர்வீழ்ச்சி, பனியாக உறைந்து தொங்கியதை வாட்ஸ் அப் பகிர்வு ஒன்றில் பார்த்தேன். அருவி உறைந்து போனதிருக்கட்டும்
அச்சம் விடு... உச்சம் தொடு! - சுகி. சிவம்

நீ... நான்... நிஜம்! -8
அருவிகள் வைரத் தொங்கல் என்கிற கவிதையைப் படம் பிடித்த மாதிரி, அமெரிக்காவில் நயாகரா நீர்வீழ்ச்சி, பனியாக உறைந்து தொங்கியதை வாட்ஸ் அப் பகிர்வு ஒன்றில் பார்த்தேன். அருவி உறைந்து போனதிருக்கட்டும். 1933 - இல் அமெரிக்காவே உறைந்து போயிருந்தது. பனியால் அல்ல, பயத்தால் உறைந்து போனது. மனதில் படம் விரிந்தது. கடுமையான பொருளாதாரச் சரிவு... கோடிக்கணக்கான பேருக்கு வேலை இல்லை. மக்கள் பட்டினியால் தவித்தார்கள். மனச் சோர்விலும் கலக்கத்திலும் மக்கள் துவண்டு கிடந்தனர். காடு இருள் சூழ்ந்த கதைபோல் நாடு பயம் சூழ்ந்து நடுங்கியது, அடுத்தது என்ன என்று யாருக்கும் தெரியாது. மொத்தத்தில் அமெரிக்கா படுக்கையில் கிடந்தது.
அந்தக் காலகட்டத்தில் 1933 மார்ச் 4}ஆம் தேதி ஃபிராங்களின் டி.ரூஸ்வெல்ட் புதிய ஜனாதிபதியாகப் பதவி ஏற்கிறார். அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அமெரிக்கா முழுவதும் காத்துக் கிடந்தது. வறட்சியின் காரணமாக வரலாறு காணாத வகையில் ஒடுங்கிக் கிடந்த அமெரிக்கர்களின் துயர், முன்னிருக்கும் சவால், அனைத்தையும் அறிந்தவராகவே அவர் பேசத் தொடங்கினார். கடும் நிசப்தத்தை அவரது கம்பீரமான உறுதியான குரல் கிழித்தது. உத்வேகத்துடன் உற்சாகத்துடன் உரையைத் தொடங்கினார். அமெரிக்காவின் ஒவ்வொரு வீட்டிலும் அவரது குரலும் குரலில் இருந்த உறுதியும் எதிரொலித்தது.
"சவால்களை விட்டுவிட்டு ஓட இது நேரமில்லை; உண்மைகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது. நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும். மோசமான பிரச்னைகளை எதிர் கொள்ள வேண்டி உள்ளது. ஆனால் அந்தச் சோதனையைத் துணிவுடன் எதிர்கொள்வோம். இந்த நாட்டின் மீது நம்பிக்கை வையுங்கள். எதிர்காலம் பற்றி நம்பிக்கையுடன் இருங்கள்'' என்று முழங்கினார். "முன்பு போலவே சோதனைகளைச் சமாளித்து விடுவோம். மறுமலர்ச்சி பெறுவோம். முன்னேறுவோம்'' என்று நம்பிக்கையூட்டினார். அதன்பின் அவர் சொன்ன சொற்கள் அமெரிக்காவையே புரட்டிப் போட்டது. ஓர் உலுக்கு உலுக்கியது. அவர் அப்போது பயன்படுத்திய சொற்றொடர் அமெரிக்காவைத் தெளிவடைய வைத்தது. "நான் உறுதியுடன் சொல்கிறேன். நாம் பயப்பட வேண்டிய ஒரே விஷயம் பயம் மட்டுமே. பெயரற்ற, காரணமற்ற, தேவையற்ற பயங்கள் தேவையான முயற்சிகளை முடக்கிவிடுகின்றன. எனவே பின்வாங்குவதை நிறுத்துங்கள். முன்னேற வேண்டும்'' என்றார்.
அமெரிக்கா பிழைத்துக் கொண்டது. என்ன ஜுரம்? என்ன மருந்து? என்பது தெளிவாகி விட்டது. நோயாளி எழுந்து விட்டார். அமெரிக்கத் தொழிற்சாலைகளில் சக்கரங்கள் மீண்டும் சுழன்றன. மக்கள் நகர ஆரம்பித்தனர். சுவாசம் சீரானது. ஒரே காரணம் "நாம் பயப்பட வேண்டிய ஒரே விஷயம் பயம் மட்டுமே' என்கிற அவரது கண்டுபிடிப்பு. "கண்ஞ்ட்ற்ள் ச்ழ்ர்ம் ம்ஹய்ஹ் கஹம்ல்ள்' என்ற புத்தகத்தில் உள்ள தகவல் இது. தமிழில் பி.உதயகுமார் மொழிபெயர்த்துள்ளார். கண்ணதாசன் பதிப்பக வெளியீடு. பாரதரத்னா அடஒ அப்துல் கலாம் நேசித்த புத்தகம் இது.
"பயம் ஒன்றே நாம் பயப்பட வேண்டிய விஷயம்' என்கிற ஞானம் சாதாரணமான விஷயம் அல்ல. உலகப்பந்தை உருளவிட்ட உன்னத மனிதர்கள் யாவருமே பயமற்றவர்கள். பகவான் புத்தர் அங்குல்மால் என்கிற கொலைகாரனை நோக்கி அலட்சியமாக நடந்தார். அஞ்சவில்லை. அண்ணல் நபி தன்னை அச்சுறுத்திய எவருக்கும் அஞ்சியதில்லை. மரணம்தான் என்ற போதும் ஏசுவும் சாக்ரடீஸýம் அசரவில்லை.
ஒரு சம்பவம் படித்தேன். திப்புசுல்தானுக்குக் காட்டில் போய் வேட்டையாடுவதில் அதிக விருப்பம் என்கிறார்கள். ஒரு நாள் தமது ஃபிரெஞ்சு நண்பரோடு காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராமல் புலி யொன்று அவரை நோக்கிப் பாய்ந்து வந்தது. துரதிருஷ்டவசமாகத் திப்புவின் துப்பாக்கி வேலை செய்யவில்லை. புலிபாய்ந்த வேகத்தில் அவரது கத்தியும் கீழே விழுந்துவிட்டது. ஆனால் திப்பு அஞ்சவில்லை. தடுமாறவில்லை. கத்தியை மீண்டும் எடுத்து குத்தினார் என்றும், புலியைக் கொன்றார் என்றும் எழுதுகிறார்கள். "மைசூரின் புலி' என்பது இந்நிகழ்வின் எதிரொலியா அல்லது திப்புவின் புகழாராமா என்றொரு கேள்வி உள்ளது. 
இந்நிகழ்ச்சி நடந்ததா இல்லையா என்றொரு விவாதம் சரித்திர ஆசிரியர்களிடம் உண்டு. ஆனால் திப்புவின் மனதில் ஒரு புலி இருந்தது என்பதும் இந்தியாவை ஆள நினைத்த பரங்கியரை அது கடித்துக் குதறியது என்பதும் ஊரறிந்த உண்மை. இந்தக் கோணத்தில் நாகூர் ரூமி திப்புவை வர்ணிக்கிறார். பகத்சிங் என்பதன் பொருள் அதிர்ஷ்டக்காரன் என்று சொல்கிறார்கள். இருபத்து நான்கு வயதில் தூக்குக்கயிறை மகிழ்ச்சியாக மாலைபோல் சூடிக்கொண்ட துணிவுடைய அவன் பிறந்த மண்ணில் பிறந்த யாவருமே அதிர்ஷ்டக்காரர்கள். இவர்கள் எல்லோருமே அச்சம் விட்டவர்கள் உச்சம் தொட்டவர்கள்.
அச்சமின்மை என்றதும் போர், புரட்சி, ரத்தம் என்று பொருள் கொள்ளக் கூடாது. வீரம் உடலின் மொழி அன்று. அது உள்ளத்தின் ஒளி. மகாத்மா காந்தியின் மனத்தில் இருந்த மகத்தான சுடர். இன்று இளைஞர்கள் சாட்சி சொல்ல அஞ்சுகிறார்கள். நடுத் தெருவில் ஒரு பெண்ணுக்கு அவமானம் என்றாலும் நாசூக்காக நகர்ந்து விடுகிறார்கள். வேலை போய்விடுமோ என்று கலங்குகிறார்கள். அச்சம் இன்மையே இளமையின் சரியான விலாசம். 
டைட்டானிக் கப்பல் விபத்தினால் மூழ்க நேர்ந்த அந்தச் சோகமயமான தருணத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் மரணத்தை ஏற்றுக் கொள்ளும் துணிவுடன், " இறைவா உனக்கு அருகே' என்கிற சாரா ஆடம்ஸ் எழுதிய பாடலைப் பாடியபடியே மூழ்கினார்கள் என்கிறார்கள். இப்படி மரணத்தை எதிர்கொள்வது இருக்கட்டும்... வாழ்வை எதிர்கொள்ளும் துணிவு எத்தனை பேரிடம் இன்று இருக்கிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி. இந்த நாட்டு இளைஞர்களின் முதுகெலும்புக்கு இன்னும் கொஞ்சம் கால்சியம் தேவைப்படுகிறது என்று தோன்றுகிறது. காதலை மறுத்துவிட்டால் தற்கொலையா தீர்வு? தேர்வில் பின்தங்கி விட்டால் பூச்சி மருந்தும் சாணிப்பவுடருமா சாப்பாடு? 
நான் மிக மதிக்கும் துறவிகளில் ஒருவர் சுவாமி சித்பவானந்தர். அவர் பற்றி ஒரு சம்பவம் சொல்கிறேன். துறவு பெற்று ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் இணைந்திருந்த காலம். தாம் படிக்க, எழுத, தனியறை ஒன்று கிடைத்தால் வசதியாக இருக்கும் என்று மடத்தில் தேடினார். இடம் கிடைக்கவில்லை. மாடியில் ஒரே ஓர் அறை பூட்டியிருந்தது. அதனைத் தமக்கு ஒதுக்கும்படி கோரினார். அதில் பேய் இருப்பதால் யாரும் அங்கு தங்க முடிவதில்லை என்று பதில் வந்தது. "ஆஹா... வசதியாகப் போய் விட்டது. எனக்குப் பேச்சுத் துணைக்கு வசதியாக இருக்கும். நானும் பேய்தான்'' என்று சிரித்தபடி அந்த அறையில் அச்சமின்றி குடியேறினார் அவர். உச்சம் தொட்டவர்கள் அச்சம் விட்டவர்கள் என்பதே உணர வேண்டிய செய்தி.
"சுதந்திரச் சுடர்கள்' என்றொரு புத்தகம். த. ஸ்டாலின்
குணசேகரன் எழுதியது. அதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் துணிவு பற்றிய செய்தி ஒன்று படித்து அசந்து போனேன். உலகையே ஆட்டிப் படைத்த முரட்டு ஹிட்லர் முன்பு உட்காரவே பலரும் பயப்படுவார்கள். காரணம் அவன் வீரன் என்பதல்ல மூர்க்கன், முரடன், கொலைக்கு அஞ்சாதவன். 
அவன் முன்பு கம்பீரமாகக் கைகுலுக்கிவிட்டு அமர்ந்தார் நேதாஜி. சிறிதும் தயக்கமின்றி, ""நீங்கள் எழுதி இருக்கிற "மெயின் கேம்ப்' என்ற புத்தகத்தில் ஒரு முழுப்பக்கமும் இந்தியாவை இழிவுபடுத்தி எழுதி இருக்கிறீர்கள். அது தவறானது. ஆதாரம் இன்றி எழுதி இருக்கிறீர்கள். முதலில் அவற்றை நீக்கிவிடுங்கள்'' என்று உறுதிபடச் சொன்னார். 
இதுதான் அச்சமின்மையின் அடையாளம். நெஞ்சுறுதி.. அதனால்தான் நேதாஜிக்கு நேசக் கரம் நீட்ட மறுத்த மகாத்மாவே ஆகஸ்ட் புரட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடும் போது, "இந்தக் காலகட்டத்தில் என் மகன் சுபாஷ் மட்டும் என்னிடத்தில் இருந்தால் உங்களில் யாரும் எனக்குத் தேவைப் பட்டிருக்க மாட்டீர்கள்'' என்று புலம்புவது போல் பேசினார். 
வாழ்க்கையை எதிர்கொள்ள அச்சமின்மை அவசிய குணம். 
அச்சம் விடு.. உச்சம் தொடு.
(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com