பேக்கேஜிங் கோர்ஸ்...எல்லாருக்கும் வேலை!

இன்று சிறிய சாக்லேட் முதல் பெரிய டிவி, ஏசி, வாஷிங் மெஷின், சைக்கிள் வரை மிக அழகாக பேக் செய்யப்பட்டு நம் வீடுகளுக்கே வணிக நிறுவனங்களால் அனுப்பி வைக்கப்படுகின்றன.
பேக்கேஜிங் கோர்ஸ்...எல்லாருக்கும் வேலை!

இன்று சிறிய சாக்லேட் முதல் பெரிய டிவி, ஏசி, வாஷிங் மெஷின், சைக்கிள் வரை மிக அழகாக பேக் செய்யப்பட்டு நம் வீடுகளுக்கே வணிக நிறுவனங்களால் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதேபோல, பெரும்பாலான மளிகைக் கடைகளிலும் உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் வண்ணப் பைகள், அட்டைப் பெட்டிகள், பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டு கண்ணைக் கவரும் வகையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நோய்களைத் தீர்க்கும் மருந்து, மாத்திரைகள் கூட விதவிதமான உறைகளில் அடைக்கப்பட்டு, பளபளக்கும் அட்டைப் பெட்டிகளில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
இவையெல்லாம் பேக்கேஜிங் டெக்னாலஜி என்ற அறிவியல் தொழில்நுட்ப மேம்பாட்டால் சாத்தியமானவை. இதனால், பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பல நன்மைகள் இருந்தாலும், குறிப்பிடத்தகுந்தவை இரண்டு. ஒன்று, எளிதாக அடுக்கி, குறைந்தசெலவில் அதிக பொருள்களை விற்பனையகங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்வது. இரண்டு, பொதுமக்களைக் கவர்ந்து, தங்கள் பொருள் தரமானது, பாதுகாப்பானது என்ற உணர்வை ஏற்படுத்துவது. பொதுவாக, காற்றுப் புகாமல் அடைக்கப்பட்ட பெட்டிகளில் இருக்கும் பொருள்கள் கெட்டுப்போகாமல், அழுக்குப்படாமல், சேதமடையாமல், கலப்படம் இல்லாமல் இருக்கும் என்ற எண்ணம் மக்களிடம் மேலோங்கி இருக்கிறது.
இதையொட்டி, சர்வதேச அளவில் பேக்கேஜிங் தொழில்நுட்பமும் இந்தத் தொழில்துறையும் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்து வருவதோடு, எண்ணற்றோருக்கு வேலைவாய்ப்புகளையும் அளித்து வருகிறது. தற்போது உலக அளவில் ரூ. 15 லட்சம் கோடி சந்தை மதிப்புடன், சுமார் 7 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ள பேக்கேஜிங் தொழில்துறை, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 21 லட்சம் கோடி முதல் 25 லட்சம் கோடி வரையிலான சந்தை அளவைப் பெற்றிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப, உற்பத்தி பொருள்களின் எண்ணிக்கை உயர்வதும், அதற்கேற்ப தொழில்துறையில் தானியங்கி இயந்திரங்கள் நுழைவதும் தவிர்க்க முடியாததாகி வருகிறது. என்றாலும், தானியங்கி இயந்திரங்களை இயக்குவது, கண்காணிப்பதற்கான பொறியாளர்கள் முதல் பொருள்களை விற்பனையகங்களுக்கு கொண்டு சேர்க்கும் தொழிலாளர்கள் வரை இந்தத் துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உள்ளதை மறுக்க முடியாது. ஆனால், இன்றைய நவீன பேக்கேஜிங் முறையில் அதுகுறித்த முறையான கல்வி மற்றும் பயிற்சிகளைப் பெறாமல் திறம்பட பணியாற்ற முடியாது. எனவே, இளைஞர்கள் இந்தத் துறையில் அடிப்படை பயிற்சி முதல் உயர்கல்வி வரை ஏதேனும் ஒன்றை பெறுவதன்மூலம் தங்களது வேலைவாய்ப்பை உறுதி செய்து கொள்ள முடியும்.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் The Indian Institute of Packaging (IIP) நிறுவனம் இதுதொடர்பாக 4 விதமான கோர்ஸ்களை வழங்கி வருகிறது. இதில் 2 ஆண்டுகள் முழுநேர படிப்பான Post Graduate Diploma in 
Packaging (PGDP), 3 மாதங்கள் முழுநேர படிப்பான Certificate Course in Packaging-Intensive Training Course (ITC), 18 மாதங்கள் கொண்ட Diploma under Distance Education Programme in Packaging (DEP) ஆகிய கோர்ஸ்களில் இளநிலை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் படித்த இளைஞர்கள் சேரலாம். பேக்கேஜிங் தொழிலில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், தொழில்துறையினர் தங்களது பணி அறிவை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் Executive Development Programmes (EDP) என்ற ஒருநாள் முதல் ஒருவார காலம் கொண்ட குறுகிய கால பயிற்சியும் இங்கு வழங்கப்படுகிறது.
PGDP கோர்ஸில் சேர ஜூன் மாதம் அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். இந்த கோர்ஸ் மும்பை, தில்லி, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய மையங்களில் மட்டும் நடைபெறும். 3 மாதங்களைக் கொண்ட ITC கோர்ஸும், EDP பயிற்சியும் மும்பை, தில்லி, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை ஆகிய மையங்களில் நடைபெறும். ஐடிசி சான்றிதழ் கோர்ஸில் எந்த பாடத்திலும் பட்டம், டிப்ளமா பெற்றவர்கள் சேரலாம். IIP நிறுவனம் உலக பேக்கேஜிங் அமைப்பின் நிறுவனர் உறுப்பினராகவும், அதன் ஒப்புதல் பெற்ற நிறுவனமாகவும், ஆசியன் பேக்கேஜிங் ஃபெடரேஷன் }இன் அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் உள்ளதால், இதன் ITC கோர்ஸ் சான்றிதழ் தேசிய, சர்வதேச வேலைவாய்ப்புக்கான தகுதி அங்கீகாரம் பெற்றது.
இந்தியாவில் IIP அல்லாமல்  University college of Science and Technology- kolkata, Tezpur University- Assam, IIT-Delhi, LD College of Engineering- Ahmadabad, Lakshmi Narayan Institute of Technology-Madhya Pradesh, Anna University- TamilNadu, SIES School of Packaging- Mumbai உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 முடித்தவர்கள் முதல் இளநிலை பட்டம் பெற்றவர்கள் வரை பேக்கேஜிங் கோர்ஸ்களில் சேரலாம்.
பன்னாட்டு நிறுவனங்கள், KPO உற்பத்தி நிறுவனங்கள், மாற்றியமைக்கும் தொழில்கள், ஓடஞ நிறுவனங்கள், உணவு மற்றும் மருந்து நிறுவனங்கள், தீவிர பெரு நிறுவனங்கள் என பேக்கேஜிங் கோர்ஸ் முடித்த திறனாளர்களுக்கு உலகம் முழுவதும் 100 சதவீத வேலைவாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் தொடங்கி, ரூ. 8 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. படிப்பு, அனுபவம், திறமைக்கேற்ப வெளிநாடுகளில் ரூ. 25 லட்சம் தொடங்கி, ரூ. 55 லட்சம் வரை ஆண்டு ஊதியமாக கிடைக்கிறது.
- இரா.மகாதேவன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com