கண்டதும் கேட்டதும் 39 - பி.லெனின்

நாம் மீண்டும் 34வது அத்தியாயத்தில் பாரதிதாசனின் "சிரித்த முல்லை' கவிதையின் அழகினைப் பற்றி பேசி மகிழ்ந்திருந்த பரமேஸ்வரனுடன் இணைகிறோம். 
கண்டதும் கேட்டதும் 39 - பி.லெனின்

நாம் மீண்டும் 34வது அத்தியாயத்தில் பாரதிதாசனின் "சிரித்த முல்லை' கவிதையின் அழகினைப் பற்றி பேசி மகிழ்ந்திருந்த பரமேஸ்வரனுடன் இணைகிறோம். 
இடையில், "காஞ்சி பட்டுடுத்தி, கஸ்தூரி பொட்டு வைத்து, தேவதை போல நீ நடந்து வர வேண்டும்' என்ற பாடலின் வரிகளைப் போன்று நம் முன் வந்த பச்சை நிறமுடைய அத்திக்காயும், மாங்காயும் சில தொடர்களில் நம்மிடையே தன்னை முன்னிலைப்படுத்தி அசைந்தாடி மகிழ்வித்திருந்தது. இப்போது பொம்மாச்சி என்னும் பரமேஸ்வரன் பணிபுரிந்த AVM Lab விசயத்தைப் பார்ப்போம். 
அதோடு கூட அவரின் வயது 87 என்றும் (31), 92 என்றும் (32) தவறுதலாக இடம்பெற்று விட்டது. ஆனால் அவரது வயது 83 தான் ஆகிறது என்று போனில் சிரித்துக்கொண்டே கூறினார்.பொம்மாச்சி போன்ற பெரியவர்கள் பலரை நான் அறிவேன். அவர்களைப் பற்றிய தவறுதலான செய்திகள் வரும்போது அதனை ஒரு புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு நம்மிடம் எளிதாக மறுப்பு தெரிவிப்பார்கள். பொம்மாச்சி போன்ற மிகப்பெரிய ஃபிலிம் மேக்கர் இதனையும் அவ்வாறே எடுத்துக் கொண்டார்.
பரமேஸ்வரன் ஒருவித கவிதை லயத்துடன் இருந்தார். அவர் முன் இருந்த செளமீகன் அவர் மலையாளம் கலந்து பேசும் தமிழின் இனிமையாலும், அவர் அந்த கவிதையின் அர்த்தத்தைக் கூறி சிலாகித்த விதத்தாலும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார்.
பேசி கொண்டிருந்த பரமேஸ்வரன் செüமீகனைப் பார்த்து, "தம்பி என்னா... எங்க இருக்குற'' என்று கேள்வி எழுப்பியதும் செüமீகன் தன் நிலை வந்தான்.
"சார், நான் கவிதை படிச்சிருக்கேன். ஆனால் இவ்வளவு லயத்துடன் அதன் அர்த்தம் எனக்கு சரியாக விளங்கியது இல்லை. நீங்கள் கூறியபோது கதாகாலட்சேபம் பண்ணும் ஆழ்வார்களின் தொண்டரைப் போன்று விளங்குகிறீர்கள். ஆனால் உங்கள் பெயர் பரமேஸ்வரன் என்று இருக்கிறதே, அப்போது சிவனடியாரின் கூட்டத்தில் ஒருத்தர் என்று தானே நான் கூறவேண்டும்'' என்று மெதுவாகக் கேட்டான்.
பரமேஸ்வரன் செüமீகனைப் பார்த்து "சரி அதவிடு. நாம அப்புறமா நான் ஆழ்வார்களின் கூட்டமா, சிவனடியார்களின் கூட்டமா என்று பார்த்துக் கொள்ளலாம். லெனின் சார் நாம எப்ப பேட்டிய முடிப்போம்ன்னு அவரோட துடிப்பு மிகுந்த நிமிடங்களை நமக்காக கொடுத்துட்டு உக்காந்துட்டு இருக்காரு, அவருக்கான விஷயத்த நாம பேசுவோம்...''
"சரி சார் சொல்லுங்க...''
"நாங்க இந்த ஏவிஎம் லேப்பில் 150 பேருக்கு மேல வேல செய்தோம். இப்ப நான் (பரமேஸ்வரன்), ஆர்தர் மனோகர், ஜி.மனோகரன் (இவருடைய தாத்தா பஞ்சவர்ண சேர்வை ஏவிஎம் லேப்ல டெவலப்பரா இருந்தவரு. இவர்கள் மூணு தலைமுறையா ஏவிஎம் லேப்ல வேலை செய்கிறார்கள்), சந்திரசேகரன் ஆக நாலு பேர் தான் இருக்குறோம். ஆபிஸ்ல மூணு பேர் ரவிசங்கர், வசந்தன், ராஜசேகரன் இவ்வளவு தான் இப்ப இருக்குறவங்க. எல்லோரும் வேற வேலைக்கு போயிட்டாங்க. நிறைய பேருக்கு வயசாயிடுச்சி.
டிஜிட்டல் வந்ததும் இந்த ஃபிலிம்ல வேல செய்யறது கொறைஞ்சி போயி, எங்கள மாதிரி வேலை செய்யறவங்களுக்கும் சுத்தமா வேலை இல்லாம போயிடுச்சி. ஆனா பூனாவுல இருக்குற பிலிம் ஆர்கீவ்ஸ் லேப்ல இருந்து வேல கொடுக்கறாங்க. பழைய படங்கள் "ரம்பையின் காதல்' அது 1939-ஆம் ஆண்டு வந்தது. அந்த படத்தை நாங்க புதுசு பண்ணி கொடுத்தோம். அது நைட்ரேட் பிலிம். கொஞ்சம் பிசகினா கூட அப்படியே பத்திக்கும். உள்ளே நீ பார்த்த இல்ல, சந்திரன் சார்ன்னு. அவர் இத மாதிரி வேல செய்யறதுல கில்லாடி. எப்படிப்பட்ட அரதபழசான பிலிமா இருந்தாலும் உயிர் கொடுத்துடுவாரு. 
பூனாவுல இருக்குற "நேஷனல் ஆர்கீவ்ஸ்' தான் பழைய சினிமாவெல்லாம் சரிசெய்து ஆவணப்படுத்தி வச்சிருக்கு. அதுக்காக வருஷத்துக்கு இவ்வளவுன்னு அரசாங்கம் அவங்களுக்கு பணம் ஒதுக்கி தராங்க. அவங்க எங்ககிட்ட வேல தராங்க. நாங்களும் அத சரி பண்ணி கொடுத்துட்டு இருக்குறோம். மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள், டைரக்டர் பீம்சிங் சாரோட படங்கள், டைரக்டர் கிருஷ்ணன் பஞ்சு படங்கள்ன்னு மேஜர் படங்கள் எல்லாத்தையும், ஏவிஎம் படங்கள் எல்லாத்தையும் பண்ணி கொடுத்துட்டோம்.
நான் 90-ஆம் வருஷம் ரிட்டயர்ட் ஆயிட்டேன். ஆனா இங்க வேலை இருக்கும் போது வந்து செய்து கொடுத்துட்டு போவேன். நான் 1998-இல் ஒரு ஃபிலிம் லேபாரேட்டரி நடத்தினேன். அது 2013 வரைக்கும் ஓடிச்சி. ஆனா அதுல லாபம் இல்ல. அதனால அத விட்டுட்டோம். சில படங்களை டப் செய்து வெளியிட்டோம். அதுலயும் லாபம் இல்ல. 
உனக்குத் தெரியுமா? அப்ப வெறும் 25,000/- ரூபாய் வச்சிக்குனு சினிமா எடுத்தவங்கள எல்லாம் எனக்குத் தெரியும். அப்புறமா கொஞ்சம் கடன் வாங்கிக்குவாங்க. அத மாதிரி 2 அல்லது 3 லட்சத்துல படத்தோட செலவு முடிஞ்சிடும். ஆனா இப்ப அப்படி இல்ல. டிஜிட்டல் நிறைய பேர கனா காண வச்சி அவங்கள ஏழையாக்கிட்டு இருக்குதுன்னு தான் நான் நெனைக்குறேன். 
என் பிள்ளைகள நான் இந்த தொழிலுக்கு விடல. அவங்க வேற தொழிலுக்குப் போயிட்டாங்க... அது சரி. நீ பாரத விலாஸ் சினிமா பார்த்திருக்கியா?'' என்று பரமேஸ்வரன் திடீரென கேட்டார். 
""சார், நான் பார்த்து இருக்கேன். சிவாஜி சார்தான் ஹீரோ. "சக்கப் போடு போடு ராஜா, உன் காட்டுல மழை பெய்யுது'ன்னு பாட்டுப் பாடுவாரு...''
"சரி... உனக்கு புடிச்ச பாட்ட சொல்லிட்ட. அதுல முக்கியமான பாட்டு ஒண்ணு இருக்குது தெரியுமா? அது "இந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு', அந்த பாட்டுதான் அந்த படத்தோட ஹைலைட். அப்படிதான் எங்க ஏவிஎம் லேப்பும் இருந்தது. இந்தியாவுல உள்ள எல்லா மாநிலத்துல இருந்தும் இங்க வந்து வேலை செய்தாங்க. எல்லா மொழிக்காரங்களும் ஒண்ணா சேர்ந்து வேலை செய்தோம். ஒண்ணா சாப்பிட்டு, ஒண்ணா தூங்கி, ஒண்ணாவே வளர்ந்தோம். அவர்களைப் பற்றி சொல்றேன் கேளு'' என்று பரமேஸ்வரன் நிறுத்தினார்.
"இத நான் உனக்கு வரிசைவாரியா சொல்லல. அப்படியே சொல்றேன். ஆனா முதல் முதல் ஆளா சுதிர்குமார் டே (பெங்காலி) அவர்கிட்ட இருந்து ஆரம்பிக்கிறேன். அடுத்து சர்துல்சிங் சேத்தி (பஞ்சாபி), பரமேஸ்வரன் (பொம்மாச்சி) (மலையாளம்), சந்திரன் (எ) சந்திரசேகரன் (ஃபிலிம் டெவலப்பர்), தேவய்யா (கன்னடம்), கண்ணப்பன் (தமிழ்) சோலங்கி (நார்த் இந்தியன்) மனோகர் சிங் ராவத் (நேபாளி), ராமசாமி ஐயங்கார் (காரைக்குடி), டோனி மார்ட்டீன், அந்தோணி, கருப்பையா, சண்முகநாதன், ஆரோக்கியசாமி (மெக்கானிக்), சண்முகம் (கெமிக்கல் மிக்ஸர்), சோமசுந்தரம் செட்டியார், ராமலிங்கம், டி.ஆர்.பிச்சை, ந.பிச்சை (லேப் அசிஸ்டெண்ட்), பஞ்சாபகேச ஐயர், சீனிவாச ஐயர், டெல்லி ராஜி (தெலுங்கர்), ராமசாமி செட்டியார், முஸ்தபா (காரைக்குடி), யேசேப் (பராமரிப்பு), ஆர்.எம். பழனிசாமி (பாசிட்டிங் டெவலப்பர்), சிக்மகளூர் தேவப்பர், என். கணேசன், ஜோசப் (கொங்கணி), சீதாராம ஐயர், பஞ்சவர்ணம், பி.எஸ். சங்கர், பரஞ்சோதி, கல்யாணசுந்தரம், ஆர்தர் மனோகர், ராஜேந்திரன், மோகன் இன்னும் இன்னும் ஏவிஎம் லேபில் உழைச்சவங்களோட லிஸ்ட் பெரிசா ஆயிட்டே இருக்கும். எனக்குத் தெரிந்த வரை சொல்லிட்டேன். விடுபட்டவங்க என் மேல கோவிச்சிக்காம இருந்தா நல்லது. இத்தனை பேரையும் நான் ஏன் சொன்னேன்னா இதுல எல்லா மொழிக்காரங்களும் இருப்பது உனக்குத் தெரியும். எங்களப் பார்த்து தான் இந்த பாட்டையே எழுதி இருக்கணும்னு இந்த பாட்டை கேட்கும்போதெல்லாம் நெனைச்சிக்குவேன். அந்த நினைவுகள்தான் என்ன இன்னும் இங்க வேல செய்ய வைக்கும் டானிக்கா இருக்குது. இவர்கள் எல்லாம் சூப்பர்மேன்கள். கொஞ்சம் கூட உடம்பு அசதியப் பத்தி கவலையேபட மாட்டாங்க. 24 மணி நேரம் பத்தலையேன்னு நினைப்பாங்களே தவிர, என்னைக்குமே சோர்ந்து போனதே இல்ல. இந்த ஏவிஎம் லேப் இன்னைக்கும் தலை நிமிர்ந்து இருக்குதுன்னா இவங்கதான் அதனோட அஸ்திவாரமாகவும் தூணாகவும் இருந்தார்கள்''... பரமேஸ்வரன் மீண்டும் தொடர்ந்தார்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com