கிராமப்புற மாணவர்களுக்கு... நடமாடும் ஆய்வகங்கள்!

அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு அறிவியல், கணிதம், கலை ஆகிய துறைகளில் படைப்பாற்றலை வளர்த்து அவர்களுக்கு
கிராமப்புற மாணவர்களுக்கு... நடமாடும் ஆய்வகங்கள்!

அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு அறிவியல், கணிதம், கலை ஆகிய துறைகளில் படைப்பாற்றலை வளர்த்து அவர்களுக்கு புரியும் வகையில் விளங்கச் செய்யும் சேவையை ஒரு நிறுவனம் செய்து வருகிறது. அறிவியல் அறிஞர்கள், கல்வியாளர்கள், தொழில் துறையினர் உள்ளிட்டவர்களை கொண்டு 1999 ஆண்டு பெங்களூரை தலைமையிடமாக கொண்டு துவக்கப்பட்டது, அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுன்டேஷன். 
ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில் சுமார் 172 ஏக்கர் பரப்பளவில் அறிவியல், கணிதம் ஆகியவற்றுக்கான ஆய்வகங்களுடன் அகஸ்தியா பவுன்டேஷன் வளாகம் இயங்கி வருகிறது. இவ்வளாகத்தில் உள்ள கட்டடங்கள், அமைப்புகள் உள்ளிட்டவை வித்தியாசமான படைப்பாற்றலுடன், இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன. குரு க்ருஹா என்ற அழைக்கப்படும் கோளரங்கமும் இங்கே இயங்கி வருகிறது.
இந்தியா முழுவதும் சுமார் 150 மொபைல் லேப்கள், 59 பைக் லேப்கள், 63 அறிவியல் மையங்கள், 300 இரவு நேர கிராம பள்ளி மையங்கள் ஆகியவை இயக்கப்படுகின்றன. 
அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டு இந்த பவுன்டேஷன் செயல்பட்டு வருகிறது. அறிவியலையும், கணிதத்தையும் எளிதாக புரிந்துக் கொள்ளக் கூடிய வகையில் இங்கு கணித, அறிவியல் (கெமிஸ்ட்ரி, பையோலஜி, பிசிக்ஸ்), கணினி அறிவியல் ஆய்வகங்கள், பட்டர்ஃப்ளை பார்க், படைப்பாற்றல் கற்பித்தல் மையம், நூலகம், கலை மற்றும் கண்டுபிடிப்பு மையம் உள்ளிட்ட பல்வேறு மையங்கள் இந்த வளாகத்தில் இயங்கி வருகின்றன.
குப்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 15இலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அகஸ்தியா பவுன்டேஷன் சார்பாக வாகனங்கள் அனுப்பப்பட்டு மாணவர்கள் குப்பம் வளாகத்திற்கு இலவசமாக அழைத்து வரப்படுகின்றனர். அவர்களுக்கு இவ்வளாகத்தில் உள்ள அனைத்து ஆய்வகங்கள், கோளரங்கம், மையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்படுகிறது. 
எந்தவித தொலைத் தொடர்புக் கருவிகளும் இல்லாது குறிப்பிட்ட சில அளவு இடைவெளியில் இருவர் தங்களுடைய தகவல்களை எவ்வாறு பரிமாறிக் கொள்வது என்பது குறித்த செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்படும் போது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதாவது ஒலி அலைகள் எவ்வாறு செல்கின்றன என்பதை விளக்கிக் காட்டுகின்றனர். நீர்நிலைகளில் சுழற்சி எவ்வாறு தோன்றுகிறது என்பது விளக்கப்படுகிறது. நிஜ கப்பலில் பயணம் செய்வதை உணரச் செய்வதற்காக கப்பல் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதில் நிஜ கப்பலில் உள்ள அனைத்து அம்சங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கணித, அறிவியல் கோட்பாடுகளின் செயல்முறை விளக்கங்களை நேரடியாக பார்க்கும் போது அவை மாணவர்களின் மனதில் தானாகவே பதிந்துவிடுகிறது. அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் சேவை நோக்கத்தோடு குறைந்த கல்வி கட்டணம் வசூலிக்கும் சில பள்ளிகள் என முன் அனுமதியுடன் இந்த மையத்தை பார்வையிட அனுமதிக்கின்றனர். 
மொபைல் லேப்கள் (வேன்கள்) மூலம் அரசு பள்ளிகளுக்கே சென்று இலவசமாக அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. மொபல் லேப்கள் (வேன்) செல்லமுடியாத அளவுக்கு சாலைகள் வசதி இல்லாத பள்ளிகளுக்கு பைக் லேப்கள் மூலம் இருசக்கர வாகனங்களில் சென்று அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், கணித செய்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்படுகின்றன. 
மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆசிரியர்களுக்கு இங்கு அவ்வப்போது பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. 
இதுகுறித்து இந்த அமைப்பின் பொதுமேலாளர் நிதின் தேசாய் கூறியது: "அகஸ்தியா பவுன்டேஷன் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த வளாகம் முழுவதுமே சூழலியல் ஆய்வகமாகவே (எக்காலஜி லேப்) அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பிகார், மேகாலயா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் அகஸ்தியா பவுன்டேஷன் மாணவர்களின் சேவைக்காக இயங்கி வருகிறது. மாணவர்களை எங்களுடைய சொந்த வேன்கள் மூலமாக அழைத்து வந்து சுற்றிக் காண்பித்த பிறகு மீண்டும் கொண்டு சென்று அவர்களை பள்ளியில் விட்டுவிட்டு வருகிறோம். ஒரு நாளைக்கு சுமார் 500 மாணவர்கள் வீதம் விடுமுறை நாட்களைத் தவிர அனைத்து வேலை நாட்களிலும் மாணவர்கள் எங்களுடைய வளாகத்தைப் பார்வையிட்டுச் செல்கின்றனர். ஆண்டுக்கு 2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மொபைல் லேப் மூலம் மாணவர்களின் பள்ளிகளுக்கே சென்று அவர்களுக்கு அறிவியல், கணிதத்தை புரிய வைக்கிறோம். எங்களுடைய சேவையை மேலும் தெரிந்து கொள்ள http://www.agastya.org/ என்ற எங்கள் இணையதளத்தைப் பாருங்கள்'' என்றார்.
- எம்.அருண்குமார் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com