படிப்பதை நிறுத்தாதே! - சுகி. சிவம்

எழுபது, எண்பது வயதாகி விட்டால் அவர்களிடம் புதிதாக எதையும் புரிய வைக்க முடியாது என்று சலித்துக் கொள்ளுவோம்.
படிப்பதை நிறுத்தாதே! - சுகி. சிவம்

நீ... நான்... நிஜம்! -9
எழுபது, எண்பது வயதாகி விட்டால் அவர்களிடம் புதிதாக எதையும் புரிய வைக்க முடியாது என்று சலித்துக் கொள்ளுவோம். ஆனால் பத்திரிகை உலகின் ஜாம்பவானாகத் திகழ்ந்த அந்தப் பெரியவர் இந்த விதிக்கு மிகப் பெரும் விதிவிலக்கு. எழுத்தாளர் சுஜாதா கணினியில் படிக்கும் "மின்னம்பலம்' இதழைத் தொடங்கிய போது பிரமிப்புடன் கணினியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் ஏ.என். சிவராமன் தம் பக்கத்திலிருந்த திருப்பூர் கிருஷ்ணனிடம் சொல்கிறார்: "இதைக் கத்துக்கனுமே.. சுஜாதாவைக் கேளு.. அவருக்கு வசதியான டைம் சொல்லச் சொல்லு.. நான் அவரண்டே போய் படிச்சுக்கறேன்'' என்கிறார். "இரவு பன்னிரண்டு மணியானாலும் காத்திருப்பேன்... அவர் வரலாம்...'' என்று அந்த உயர்ந்த சிறந்த, மாணவருக்காகச் சுஜாதா தாம் தவமிருப்பதாக வாக்களித்தார்.
வாழ்நாளில் கல்வி ஒரு குறிப்பிட்டகாலம் மட்டுமே என்று முட்டாள்கள் தான் முடிவு செய்கிறார்கள். அது மூச்சு விடுவது போல் ஒரு வாழ் நாள் பணி.. உண்ணுவதில் உடலும் உயிரும் ஆர்வம் காட்டுவது போல் மனமும் அறிவும் கல்வி, பயிற்சி என்று ஆர்வம் காட்ட வேண்டும். "ஏ.என்.எஸ் நினைவலைகள்' என்றொரு புத்தகம் கீழாம்பூர் எழுதியுள்ள செய்திகள், படிக்க வேண்டிய பாடத்திட்டங்கள். பத்திரிகை பீஷ்மர் A.N.S அவர்கள் வாழ்நாள் மாணவராக வாழ்ந்தமைக்கு ஒரு வலுவான காரணம் உண்டு.
1921-இல் அவர் இன்டர்மீடியட் படிக்கும் போதே திருநெல்வேலி ஹிந்துக் கல்லூரி முதல்வர் முன் போய், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க விரும்புவதால் படிப்பை இடையில் நிறுத்துவதாகக் கூறி டி.ஸி கேட்டாராம். "படிப்பில் சிறந்த நீ... ஜெயிலில் இருந்தாலும் சுதந்திரத்திற்குப் போராடினாலும் படிப்பதை நிறுத்த மாட்டேன் என்று எனக்குச் சத்தியம் செய்து கொடு'' என்று ஆசிரியர் பெற்ற சத்தியம் தான் அந்த ஜாம்பவானை வாழ்நாள் மாணவராக்கிவிட்டது. நான்கு வேதங்கள் நன்கு கற்ற அந்த மாமனிதர், ஹீப்ரூ மொழியில் பைபிளும், அரபு மொழியில் குரானும், தம் தொண்ணூறுகளில் படித்தவர்... படிப்பை நிறுத்துவது வேறு. படிப்பதை நிறுத்துவது வேறு. படிப்பதை நிறுத்தாதே ஒரு போதும் நிறுத்தாதே.


ஓர் எழுத்தாளரின் பேனா எழுது கோல் மட்டுமன்று. பலரையும் புரட்டிப் போடும் நெம்புகோலாகவும், தடுமாறும் மனங்களுக்கு ஊன்றுகோலாகவும், தலையங்கம் தீட்டும்போது வாசகர்களின் செங்கோலாகவும் இருக்க வேண்டும் என்பதன் அடையாளமாக வாழ்ந்த ஜாம்பவான் ஏ.என்.எஸ்., உலகின் ஆகச் சிறந்த மாணவர் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும். வெறும் பட்டங்கள், கல்வியின் முடிவாகாது. சிலம்புச் செல்வர் ம.பொ.சி., ஜெயகாந்தன் இவர்கள் பட்டம் பெற படித்தவர்கள் அல்லர். ஆனால் பட்டதாரிகளால் படிக்கப்பட்டவர்கள். படித்துக் கொண்டே இருந்தவர்கள். இவர்களைப் போல "தேடு... தேடு... திரட்டு...' என்கிற வேகம் மாணவனுக்கு வேண்டும். 
ஓர் உதாரணம் சொல்கிறேன்: திருவிளையாடல் புராண ஆசிரியர், தென்றலை கல்விகற்கும் இளைஞனுக்கு உவமை சொல்கிறார். தென்றலுக்கு வாசமுண்டா? சொந்தத்தில் காற்றுக்கு ஏது வாசம்? ஆனால் தென்றல் காற்று வீசும் போது அதனோடு மல்லிகை, தாமரை, தாழம்பூ எல்லா மணமும் வீசும். ஒரே காரணம்... சேகரிப்பு தான். புகுந்து புறப்படும் ஒவ்வொரு பூவின் வாசத்தையும் உறிஞ்சித் திரட்டிக் கொண்டு விதவிதமாக மணக்கிற தென்றலை, அங்கங்கே கலைகளைச் (அறிவை) சேகரிக்கும் மாணவனைப் போல் உலாவுகிறது என்பார் கவிஞர் பரஞ்சோதி முனிவர். 
பொங்கரில் நுழைந்து வாவி புகுந்து பங்கயந் துழாவி
பைங்கடி மயிலை முல்லை மல்லிகைப் பந்தர் தாவி
கொங்கலர் மலர் கூட்டுண்டு குளிர்ந்து மெல்லென்று தென்றல்
அங்கங்கே கலைகள் தேறும் அறிவன் போல் இயங்கும் அன்றே 
என்று பாடுவார். இளைஞன் எங்கெல்லாம் அறிவு கிடைக்குமோ அங்கெல்லாம் திரட்டிக் கொள்ள இயங்க வேண்டும். தென்றல் போல் அறிவு மணம் கமழ பரவ வேண்டும். 
வாரியார் சுவாமிகள் தாம் இசையறிவு பெற்றதை எழுதுகிறார் பாருங்கள். "எனக்கு வயது இருபத்திமூன்று. சென்னையில் பள்ளித் தெருவில் (ஆனைகவுனி) ப்ரம்மஸ்ரீ தென்மடம் வரதாச்சாரியாரிடம் என்னை வீணை கற்குமாறு தந்தையார் ஏற்பாடு செய்தார். நான் தினந்தோறும் காலை 11 மணிக்கு உணவு செய்து விட்டு வீணையைத் தூக்கித் தோள்மேல் வைத்துக் கொண்டு சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து பீபிள்ஸ் பார்க்கு ஆனைகவுனி வழியாக வீணை ஆசிரியர் வீட்டிற்கு நடந்தே போவேன். போனவுடன் ஆசிரியரை அஷ்டாங்க நமஸ்காரம் செய்வேன். புறப்படுமுன் மீண்டும் ஒருமுறை அஷ்டாங்க நமஸ்காரம் செய்வேன். ஒருநாள் ஆசிரியர் என்னைப் பார்த்து ஏன் இரண்டு முறை வணங்குகிறாய்? என்று கேட்டார். 
காபி பலமுறை குடிக்கிறார்களே! பெரியவர்களை எத்தனைமுறை வணங்கினால் என்ன? என்று பதில் சொன்னேன். 
அதே ஆசிரியர் கைகாட்டியபடி ஜலதரங்கம் இரமணய்ய செட்டியார் வீட்டில் வெள்ளிக்கிழமை தோறும் வீணைதனம்மா வாசிக்கும் வீணைக் கச்சேரி தொடர்ந்து கேட்டு தம் இசைஞானம் வளர்ந்தது'' என்கிறார் வாரியார். "வீணை பயிலும் நேரம் போக மற்ற நேரங்களில் சதா தமிழ் நூல்களைப் படித்துக் கொண்டே இருப்பேன்'' என்று தம் வாழ்க்கை வரலாற்றில் வாரியார் எழுதுகிறார். மிகப் பெரிய சொற்பொழிவாளராக வாரியார் சுவாமிகள் விளங்கிய போதும் சொற்பொழிவு நேரத்திற்கு முன்பாக மேடை ஓரத்தில் ஏதேனும் புத்தகம் படித்துக் கொண்டே இருப்பதை என் சிறுவயதில் வியந்தபடி நான் ரசித்திருக்கிறேன். இடது கையில், பிடித்து புத்தகம் படித்துக் கொண்டே வலது கையால் விபூதி கொடுப்பார். நாதஸ்வர மேதை குழிக்கரை பிச்சையப்பா பிள்ளையைப் பற்றி "மங்கல இசைமன்னர்கள்' என்ற புத்தகத்தில் 
P.M.சுந்தரம் எழுதி இருப்பதையும் அப்படியே தருகிறேன். ஒருமுறைக்குப் பலமுறை படியுங்கள். நாதஸ்வர மேதை குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை அவர்கள் இசை கற்பதில் காட்டிய முயற்சியையும் ஆர்வத்தையும் அதனால் அவர் பெற்றிருந்த எல்லையற்ற திறமையையும் அவர் விளக்குகிறார்.
"ஒருமுறை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வீட்டுத் திருமணம் ஒன்றில் பிச்சையப்பா நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் நடைபெற்ற இசைக்கச்சேரியை முடிக்கும் கட்டத்துக்கு அவர் வந்தார். வெளியே, வருவோரை வரவேற்பதற்காக நின்றிருந்த என்.எஸ்.கே. வேகமாகக் கச்சேரி மேடையை நெருங்கி வந்து, "பிச்சையப்பா! இன்னும் கொஞ்சம் பிச்சை, அப்பா!' என்று இரு கரங்குவித்து வேண்டவே, கச்சேரி தொடர்ந்து, மேலும் சில மணி நேரம் நீடித்தது. தெரிந்ததை வைத்தே காலத்தை ஓட்டும் இன்றைய கலைஞர்கள் யாவரும் இதற்கு அடுத்து வரும் தகவலைக் கூர்ந்து கவனிக்கவும். பி.எம் சுந்தரம் அவர்கள் சொல்லுகிறார்.
தமக்குத் தெரிந்த கீர்த்தனைகளே போதுமானவை. அதற்குரிய தொழில் நடந்தால் போதும் என்றுதான், பல நாகஸ்வரக் கலைஞர்கள் நினைப்பார்கள். ஆனால், பிச்சையப்பாவோ, தேட வேண்டிய கீர்த்தி, பொருள் அனைத்தையும் பெற்றபின்னும், தன் கடைசி மூச்சு வரை, மேலும் கீர்த்தனைகளைப் பாடம் பண்ணுவதில் மிக அக்கறையும் பெருவிருப்பமும் கொண்டிருந்தார். 
அடிக்கடி கும்பகோணம் சென்று, வயலின் வித்வான், ராஜமாணிக்கம் பிள்ளையிடம் கீர்த்தனைகளை பாடிக் கேட்க நேர்ந்தால், அவரிடம் உடனே பிச்சையப்பா உட்கார்ந்துகொண்டு பேனாவையும், நோட்டையும், பாடஞ்செய்தாலொழியப் பிச்சையப்பாவுக்கு உறக்கம் கொள்ளாது. பாரத் ரத்னா எம்.எஸ். அம்மாவிடமும் இதே குணம் உண்டு. வெற்றியாளர்கள் ஒருபோதும் படிப்பதை நிறுத்துவதே இல்லை. 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com