மக்களே தெய்வங்களாகட்டும்! - த. ஸ்டாலின் குணசேகரன்

"காயமே இது பொய்யடா... வெறும் காற்றடைத்த பையடா' என்பது போன்ற வாசகங்களை அடிக்கடி பலர் சொல்லக் கேட்கிறோம்.
மக்களே தெய்வங்களாகட்டும்! - த. ஸ்டாலின் குணசேகரன்

இளைய பாரதமே...எழுக!-13
"காயமே இது பொய்யடா... வெறும் காற்றடைத்த பையடா' என்பது போன்ற வாசகங்களை அடிக்கடி பலர் சொல்லக் கேட்கிறோம். மனிதனின் நிலையாமைக் கோட்பாட்டை இலக்கியங்களிலும் ஆன்மீகப் படைப்புகளிலும் எத்தனையோ விதங்களிலும் வடிவங்களிலும் சொல்லியிருப்பதை வாசிக்கிறோம்.
"தூங்கையிலே வாங்குகிற மூச்சு சுழிமாறிப் போனாலும் போச்சு' என்பது போன்ற இறப்பை விளக்குகிற வரிகள் ஏராளமாக உள்ளன. 
இறப்பைப் பற்றிக் கூட, அது எப்படி இருக்க வேண்டும்... இறப்பிற்கு முன்பு செய்யப்பட வேண்டியது என்ன என்று எழுச்சிகரமாக விளக்கியுள்ளார் விவேகானந்தர்.
"எழுந்திடுங்கள், விழித்திடுங்கள்... இந்த அற்ப வாழ்க்கை போனால் தான் என்ன! தூயவன், தீயவன், ஏழை, பணக்காரன் என்று ஒருவர் விடாமல் அனைவரும் இறக்கத்தான் வேண்டும். யாருடைய உடம்பும் நிலைத்து நிற்பதில்லை. எழுந்திடுங்கள், விழித்திடுங்கள், அப்பழுக்கற்ற நேர்மையுடன் இருங்கள்.. இந்தியாவில் நேர்மையின்மை என்பது பயங்கரமாக இருக்கிறது. நமக்கு வேண்டியது நற்பண்பு!'' என்று குறிப்பிடுகிறார். 
"அத்தோடு இதைச் செய்வதற்கென்றே நீங்கள் அனைவரும் பிறந்திருக்கிறீர்கள். உங்களிடம் நம்பிக்கை வையுங்கள். திடமான நம்பிக்கைகளே பெரும் செயல்களுக்கு வழிவகுக்கின்றன. தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். ஏழைகளிடத்திலும் தாழ்த்தப்பட்டோரிடத்திலும் இரக்கம், மரணமே வந்தாலும் இரக்கம் - இதுவே நமது குறிக்கோள். வீரச் செல்வர்களே, முன்னேறுங்கள்'' என்று ஏதோ முழக்கமிடுவது போல... ஓர் அணிவகுப்பைத் தொடங்கி வைத்து எழுச்சியுரையாற்றுவது போல தனது உரையில் தெரிவித்துள்ளார் விவேகானந்தர். 
"உங்களிடம் நம்பிக்கை வையுங்கள்' என்ற வாசகத்தைத்தான் திரும்பத் திரும்ப அவரது எல்லா உரைகளிலும், உரையாடல்களிலும் பலமுறை உச்சரித்துள்ளார். உணர்ச்சிவசப்பட்டுக் காணப்படும் பலர் அறிவுமயப்பட்டவர்களாக இருப்பதில்லை. அறிவுமயப்பட்ட பலர் கூட சிந்தனைவயப்பட்டவர்களாக விளங்குவதில்லை. அவ்வாறு சிந்தனையில் மூழ்கிக்கிடக்கும் பலர் ஒட்டுமொத்த சமூகத்திற்காக தனது முழுச் சிந்தனையாற்றலையும் பயன்படுத்துபவர்களாகத் திகழ்வதில்லை. அறிவுவயப்பட்டும் சிந்தனை வசப்பட்டும் இருந்த விவேகானந்தர், சமூகத்தின் மேம்பாட்டிற்காகச் சிந்தித்ததோடு அத்தகைய சிந்தனைகளால் விளைந்த கருத்துகளை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வெளிப்படுத்தியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். 
"இந்த மக்களே உன் தெய்வங்கள் ஆகட்டும். இவர்களைப் பற்றி சிந்தனை செய். இவர்களுக்காக வேலை செய். இவர்களுக்காக இடையறாமல் பிரார்த்தனை செய். இறைவன் உனக்கு வழி காட்டுவார். யாருடைய இதயம் ஏழைகளுக்காக ரத்தம் வடிக்கிறதோ அவனையே மகாத்மா என்பேன்; இல்லாவிட்டால் அவன் ஒரு துராத்மாவே. பிறர் அறியாமல் பிறருடைய அனுதாபத்தைப் பெறாமல், பிறர் நன்மைக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடாமல், எதையுமே சாதித்து முடிக்காமல் நாம் இறந்து போகலாம். ஆனால் நமது சிந்தனை ஒன்றுகூட வீண் போகாது. இன்றோ நாளையோ அது பயன்தரவே செய்யும். எனது இதயம் உணர்ச்சிவசப்பட்டு விம்முகிறது. என்னால் அதை எடுத்துக் கூற முடியவில்லை. ஆனால் உனக்கு அது புரியும்...'' என்று முழுக்க முழுக்க உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசியுள்ளார். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிய எந்த மனிதனின் பேச்சிலும் பூச்சு இருக்காது ; அலங்காரம் இருக்காது. உள்ளத்திலுள்ள உண்மைகள் அனைத்தும் உள்ளது உள்ளபடியே வெளிவரும். அவைதான் விவேகானந்தரின் உரைகள் பலவற்றிலும் காணப்படும் காரசாரமான கருத்துகளாகும். 
வெறும் உணர்ச்சி என்பதையும் தாண்டி, சில சமயங்களில் கொப்பளிக்கும் கோபமும் விவேகானந்தரிடம் வெளிப்பட்டுள்ளதை அவரது உரைகளை ஆழ்ந்து வாசித்தால் உணர்ந்து கொள்ள முடிகிறது. 
"மற்றவர்களின் காலால் உதைபட்டு உதைபட்டு அடிமையாக வேலை செய்து இன்று நீங்கள் மனிதர்களாகவா இருக்கிறீர்கள்? குண்டூசி அளவு கூட பயனற்றவர்கள் நீங்கள்?இவ்வளவு தண்ணீரும் மண்வளமும் நிறைந்த இந்த நாட்டில், மற்ற எந்நாட்டையும் விட இயற்கை பல ஆயிரம் மடங்கு விளைச்சலை உற்பத்தி செய்யும் இந்த நாட்டில் பிறந்த உங்கள் வயிற்றுக்கு உணவில்லை. உடம்பில் போர்த்திக் கொள்ளத் துணியில்லை. மற்ற நாட்டில் நாகரீகங்கள் பரவுவதற்குக் காரணமான பொருட்கள் உற்பத்தியாகும் இந்த நாட்டில், அன்னபூரணியின் நாட்டில்... உங்களுக்கு இந்த இழிநிலை. உங்கள் நிலைமை நாயின் நிலைமையை விடக் கேவலமாக இருக்கிறது. இந்த லட்சணத்தில் உங்கள் வேதங்களையும் வேதாந்தங்களையும் பற்றிப் பெருமையடித்துக் கொள்கிறீர்கள். சாதாரணத் தேவையான எளிய உணவும் உடையும் கொடுக்க முடியாத நாட்டிற்கு, எதற்கெடுத்தாலும் மற்றவர்களை எதிர்பார்த்து நிற்கின்ற ஒரு நாட்டிற்கு... பெருமை என்ன வேண்டிக் கிடக்கிறது? மதம், கர்மம் எல்லாவற்றையும் கங்கையில் வீசியெறிந்துவிட்டு, முதலில் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற உன்னைத் தயார் செய்து கொள். 
உங்கள் நாட்டிலுள்ள மூலப்பொருட்களைப் பயன்படுத்தி அயல்நாட்டினர் பணமாகக் குவிக்கிறார்கள். நீங்களோ பொதி சுமக்கிற கழுதைகளைப் போல் அவர்களின் மூட்டைகளைச் சுமக்கிறீர்கள். இந்தியாவின் மூலப் பொருட்களை இறக்குமதி செய்து, தங்கள் அறிவைப் பயன்படுத்தி, பலவகையான பொருட்களை உற்பத்தி செய்து அவர்கள் பெரிய பணக்காரர்கள் ஆகிறார்கள். நீங்களோ உங்கள் புத்தியைப் பூட்டி வைத்து விட்டு, உங்கள் சொத்தையும் மற்றவர்களுக்குக் கொடுத்து விட்டு "சோறு, சோறு' என்று பரிதாபமாக அலைகிறீர்கள்'' என்று மக்களை ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் வகையில் ஆவேசம் மிக்க உரை நிகழ்த்தியுள்ளார், விவேகானந்தர். 
"நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்' என்ற திருக்குறளின் கருத்திற்கேற்ப நாட்டில் நிலவுகிற பிரச்னைகளை மட்டும் சொல்லாமல் அவ்வாறான பிரச்னைகளுக்கான காரணகாரியங்களையும் சரியாகப் படம்பிடித்துக் காட்டியிருப்பது தான் விவேகானந்தரின் தனிச்சிறப்பு. 
1902-ஆம் ஆண்டு விவேகானந்தர் காலமாகி விட்டார். 1905-ஆம் ஆண்டு தான் ஆங்கிலேய ஆட்சியரின் சூழ்ச்சியால் வங்காள மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதைத்தான் "பிரித்தாளும் சூழ்ச்சி' என்று வரலாறு பதிவு செய்துள்ளது. 1905-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வங்கப் பிரிவினைக்குப் பிறகுதான் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. சுதேசி இயக்கம் ஒரு வடிவம் பெற்றது. மக்களிடம் கொந்தளிப்பும் எழுச்சியும் ஏற்பட்டது. காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட 1885-ஆம் ஆண்டிலிருந்து வங்கப்பிரிவினை நடைபெற்ற 1905-ஆம் ஆண்டு வரை இடைப்பட்ட வரலாற்றை ஆய்வு செய்தால், ஒரு மந்தமான காலகட்டமாகவும் இந்தியர்களுக்கான கூடுதல் சலுகைகளுக்கு வெள்ளையர்களிடம் விண்ணப்பம் போட்ட காலகட்டமாகவும் இந்த இருபதாண்டு கால வரலாறு இருந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 
இந்த வறட்சி நிறைந்த வரலாற்றுக் காலத்தில் தான் மக்களை ஆங்கிலேய ஆட்சிக்கெதிராக சிந்திக்க வைக்கிற, செயல்படத் தூண்டுகிற, நெருப்புச் சொற்களை உள்ளடக்கிய விவேகானந்தரின் உரைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பதை, வரலாற்று நிகழ்வுகளோடு ஆண்டுவாரியாகப் பொருத்திப் பார்க்கிறபோது நம்மால் கச்சிதமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. 
பின்னால் விடுதலைப் போராட்டத்தில் களம்கண்ட தலைவர்கள் பலர் விடுதலை ஒன்றே குறிக்கோள், ஆங்கிலேயரை அப்புறப்படுத்துவதொன்றே நோக்கம் என்ற கருத்தோட்டத்தில், நம் நாட்டில் நிலவும் ஏழ்மை, வறுமை, கல்லாமை போன்ற அடிப்படையான அம்சங்கள் பற்றிக் கவலைப்படாமல் ஆங்கிலேய ஆட்சியை அகற்றுவது பற்றி மட்டுமே பேசினார்கள். ஆனால் அவர்கள் காலத்திற்குப் பல வருடங்களுக்கு முற்பட்டவரான விவேகானந்தர், ஆங்கிலேய ஆட்சியின் கொடுமைகளைப் பற்றிப் பேசிய அதேவேளையில் நம் நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்னைகள், கல்லாமை போன்ற சமூகக் கொடுமைகள் பற்றி அதே அழுத்தத்துடன் பேசியுள்ளார். 
சமுதாயத்தின் வாழ்வில் தான் தனிமனித வாழ்வு அடங்கியுள்ளது. சமுதாயத்தின் இன்பத்தில் தான் தனிமனித இன்பம் அடங்கியுள்ளது. சமுதாயம் இல்லாவிட்டால் தனிமனிதன் இருப்பது முடியாதது. இது அழியாத உண்மை. இந்த அடித்தளத்தில் தான் உலகமே இயங்குகிறது. எல்லையற்றதான சமுதாயத்துடன் ஒன்றி, அதன் துன்பத்தில் துன்புறுவதுமாக படிப்படியாக முன்னேறுவது தான் தனிமனிதனின் ஒரே கடமை. கடமை மட்டுமல்ல; இந்த நியதியை மீறினால் மரணம். பின்பற்றினால் மரணமில்லாப் பெருவாழ்வு உண்டாகிறது. இயற்கையின் கண்களில் மண்ணைத் தூவ யாரால் முடியும்? 
நீண்டகாலம் தொடர்ந்து யாரும் ஏமாற்ற முடியாது. சமுதாயத்தின் மீது குப்பையும் மண்ணும் எவ்வளவுதான் மலையாகக் குவிந்திருந்தாலும் அந்தக் குப்பைக் குவியலுக்கு அடியில் அது அன்பு, தன்னலமற்ற வாழ்க்கை என்று தான் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்தையும் தாங்கும் நிலம் போல் சமுதாயம் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்றோ நாளையோ அது விழிக்கவே செய்யும். அந்த விழிப்பின் வேகத்தால் எத்தனையோ யுகயுகங்களாக அதன் மீது படிந்து கிடக்கின்ற சுயநலக் குப்பைகள் வெகுதூரத்தில் தூக்கியெறியப்பட்டு விடும்'' என்று சமூக அடிப்படைக் கோட்பாடுகளை வித்தியாசமான கண்ணோட்டத்துடன் விளக்குகிறார், விவேகானந்தர். 
சமூகம் குறித்த இத்தகைய ஆழ்ந்த பார்வையும் அடிப்படைக் கண்ணோட்டமுமே விவேகானந்தரின் வெள்ளையர் ஆட்சிக்கெதிரான கருத்துகளின் அடித்தளங்களாக விளங்கியுள்ளன.
ஆங்கிலேயர் வெளியேற்றப்பட வேண்டியது உடனடி இலக்கு என்பதும் அதற்குப் பின்னரும் ஏழ்மை ஒழிப்பு உள்ளிட்ட ஏராளமான ஏற்றங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்த வேண்டியது தொலைதூர இலக்கு என்பதும்தான் விவேகானந்தரின் விடுதலை குறித்த கண்ணோட்டமாக இருந்துள்ளது. 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com