கிராமப்புற வளர்ச்சி...படியுங்கள்... பங்கு பெறுங்கள்! 

மருத்துவம், பொறியியல், கணினி அறிவியல், தொழில்நுட்பம் என சில முக்கிய துறைகள் ஆரவாரத்தோடு முன்னேறி வரும் நிலையில், அமைதியாக, ஓசையில்லாமல் முக்கிய இடத்தை நோக்கி நகர்ந்து வருகிறது
கிராமப்புற வளர்ச்சி...படியுங்கள்... பங்கு பெறுங்கள்! 

மருத்துவம், பொறியியல், கணினி அறிவியல், தொழில்நுட்பம் என சில முக்கிய துறைகள் ஆரவாரத்தோடு முன்னேறி வரும் நிலையில், அமைதியாக, ஓசையில்லாமல் முக்கிய இடத்தை நோக்கி நகர்ந்து வருகிறது கிராம வளர்ச்சி மற்றும் மேலாண்மைக் கல்வி (Rural Development & Management Course). 
கிராமப்புறங்களில் உள்ள வாழ்வாதாரங்களை, வளங்களை திறம்பட கையாள்வதே இதன் முக்கிய குறிக்கோள்.
நம் நாட்டின் 60 சதவீத மக்கள் (சுமார் 70 கோடி பேர்) இன்னும் கிராமங்களில்தான் வாழ்கின்றனர். கிராமங்களின் வளர்ச்சி, முன்னேற்றம், விரிவாக்கம் என்ற அடிப்படையில் கிராமப்புற மக்களுக்கு உதவுவதற்காக தொழில்முறை மேலாளர்களை அரசு நியமித்துள்ளது. அதனால், கிராமப்புற வளர்ச்சி மற்றும் மேலாண்மைக் கல்விக்கு மிகுந்த தேவை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கிராமப்புறச் சூழலை முன்னேற்றும் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு இந்த கல்வி லாபகரமான வேலைவாய்ப்பாகவும் அமையும். அரசு, தனியார் துறைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பல தளங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
பிளஸ் 2 முடித்தவர்கள் கிராமப்புற வளர்ச்சி மற்றும் மேலாண்மை கல்வியில், டிப்ளமா, இளநிலை,முதுநிலை பட்டம், ஆராய்ச்சி திட்டங்களில் சேரலாம். Post Graduate Diploma in (Rural Management, Rural Development, Rural Finance, Rural Marketing) என்ற 4 வகையான ஓராண்டு முதுநிலை டிப்ளமா, BA Rural Development, Bachelor of
Rural Technology and Management என 3 ஆண்டு இளநிலை பட்டம், MA Rural Development, MBA Rural Management என 2 ஆண்டு முதுநிலை பட்டம்,  M.Phil. Ph.D. ஆராய்ச்சி படிப்புகள் இதில் உள்ளன.
பெரும்பாலும் நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும். Institute of Rural Management- Jaipur  , IIM-Calcutta, IRM-Anand  , Amity School of Rural Management- Noida  , Xavier Institute of Management- Bhubaneswar, National Institute of Management Technology-Ghaziabad) உள்ளிட்டவை கிராமப்புற வளர்ச்சி குறித்த கல்வி அளிக்கும் முக்கிய நிறுவனங்களாக அறியப்படுகின்றன. 
மேலும், University of Delhi, Jamnalal Bajaj Institute-Mumbai, Christ University- Bangalore, Department of Management Studies- Delhi, Symbiosis Institute-Pune, Bangalore, Bharathidasan Institute of Management - Trichy, Department of Management- Pilani, Amirta School of Business- Coimbatore உள்ளிட்டவற்றில் கிராமப்புற வளர்ச்சி மற்றும் மேலாண்மை கல்வியில் 2 ஆண்டு எம்.பி.ஏ. பாடங்கள் உள்ளன.
ஹைதராபாதில் உள்ள The National Institute of Rural Development and Panchayat Raj (NIRD-PR) நிறுவனம், மத்திய அரசின் கிராமப்புற வளர்ச்சி துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய அளவிலான சிறந்த தன்னாட்சி அமைப்பாகும். இது ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தால் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிறுவனம் 15 ஆவது Post Graduate Diploma in Rural Development Management (PGDRDM) என்ற ஓராண்டு கோர்ஸை
ஜனவரி-டிசம்பர், ஆகஸ்ட்-ஜூலை என 2 பேட்ஜாக நடத்தி வருகிறது. இதில், எந்த பாடத்திலும் இளநிலை பட்டம் பெற்றவர்கள் சேரலாம். கல்விக் கட்டணம், விடுதி, உணவுக் கட்டணம் மூன்றும் சேர்த்து பொதுப் பிரிவினருக்கு ரூ. 2.70 லட்சம். SC/ST பிரிவினருக்கு ரூ. 2.35 லட்சம்.
பெரும்பான்மையான கல்வி நிறுவனங்களில் இந்த பாடத்திட்டம் இருந்தாலும், நிறுவனங்களின் கல்வித் தரத்துக்கு ஏற்ப வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், அதிக ஊதியமும் கிடைக்கும். உதாரணமாக, புவனேஸ்வரில் உள்ள சேவியர் கல்வி நிறுவனத்தில் கடந்த ஆண்டு அங்கு வளாகத் தேர்வில் வென்ற (கிராமப்புற மேலாண்மை கல்வியில்) ஒரு மாணவரின் ஆண்டு ஊதியம் தொடக்க நிலையிலேயே ஆண்டுக்கு ரூ. 11.38 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்தியா சுமார் 6.50 லட்சம் கிராமங்களை உள்ளடக்கிய நாடு என்பதால், கிராம வளர்ச்சியில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, கிராம வளர்ச்சிக்காகப் பாடுபடும் தொண்டு நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் வேலைவாய்ப்புகள் பெறலாம். அல்லது, சுயமாக தொண்டு நிறுவனங்களைத் தொடங்கலாம். 
மேலும், கிராம கூட்டுறவு சங்கங்கள், வேளாண் வணிக நிறுவனங்கள், வேளாண் சந்தை, வேளாண் பொருள்கள், கருவிகள் உற்பத்தி நிறுவனங்கள் போன்றவற்றில் இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் உயர் ஊதியத்தில் வேலைவாய்ப்பு பெறலாம்.
இந்தியாவில்,  Tata Teleservices, Amul, Monsanto, Shriram Group, NABARD, ICICI Bank, Aditya Birla Group, Hero Group, Mahindra and Mahindra உள்ளிட்ட நிறுவனங்கள் கிராமப்புற வளர்ச்சி மற்றும் மேலாண்மை கல்வி முடித்த திறனுள்ள இளைஞர்களை தங்களது நிறுவனங்களில் Research Officer, Rural Excutive, Rural Manager, Senior Program Officer, Trainer, Researcher, Consultant, Project Co-ordinator போன்ற பணிகளில் நியமிக்கின்றன.
அரசு, தனியார் பணியில் சேருவோருக்கு கல்வி, திறன் சார்ந்து தொடக்கநிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூ. 2-3 லட்சம் தொடங்கி, ஆண்டுக்கு ரூ. 8 முதல் ரூ. 12 லட்சம் வரை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 
- இரா.மகாதேவன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com