கண்டதும் கேட்டதும் 49 - பி.லெனின்

லோக்சிங்கின் மனைவி கீதா சொன்ன அந்த ரெட்ஹில்ஸ் (செங்குன்றம்) சென்னையிலிருந்து ஆந்திரா போகும் வழியில் வரும்.
கண்டதும் கேட்டதும் 49 - பி.லெனின்

லோக்சிங்கின் மனைவி கீதா சொன்ன அந்த ரெட்ஹில்ஸ் (செங்குன்றம்) சென்னையிலிருந்து ஆந்திரா போகும் வழியில் வரும். நான் பல நேரங்களில் எனது 16 ஆவது வயதில் செங்குன்றம் வழியாக நடந்து பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, நாகலாபுரம், பிச்சாட்டூர் அணைக்கெல்லாம் செல்வேன். அந்த பகுதியைச் சுற்றியுள்ள வயல்களும், மாந்தோப்புகளும், நிலச் சம்பங்கியும், கறிவேப்பிலை மரங்களாக இல்லாமல் சிறு புதர்களாகவும், மல்லிகைப் பூ, தென்னந்தோப்புகள், கரும்புத் தோட்டங்களும், வெள்ளரி கொடிகளும், சுரைக்காய் கொடிகளும், உருண்டை பாகற்காய் தோட்டங்களும் நிறைந்து பச்சை பசேலென்று தென்படும். அதற்காகவே நான் சென்னையிலிருந்து நடந்தே நாராயணவனம் வழியாக புத்தூர் சென்று திருப்பதி அடைந்து அங்கிருந்து கடப்பா செல்லுவேன்.
நாராயணவனத்தில் முன்பு வாழ்ந்த சுரைக்காய் சித்தர் சமாதி உள்ளது. கடப்பாவில் வீரபிரமேந்திரர் சமாதி உள்ளது. இந்த சமாதிகளைப் பார்த்து அங்கு ஓடும் ஆற்றில் குளிப்பதற்காகவே அந்த பயணத்தை மேற்கொண்டேன்.
லெனினுக்கு கடவுள் பக்தி அதிகம் என்று சொல்லும்போது நான் அவர்களை ஏமாற்றுகிறேனோ? என்று நினைத்து அவர்கள் சொல்வதை உள்வாங்கியதால், பல இடங்களை என்னால் அந்த வயதிலேயே பார்க்க முடிந்தது. இதெல்லாம் கட்டு கதைகளாகவோ புராணக்கதைகளாகவோ என்னால் இதுவரை நினைக்க முடியவில்லை.
பல நேரங்களில் நான் டைரக்ட் செய்த கிராமத்து கதைகளை அந்த பிச்சாட்டூரை சுற்றி எடுத்தேன். மற்ற இயக்குநர்களுக்கும் போய் காண்பித்தேன். 
என் தந்தை பீம்சிங், "கிராமத்து கதைகளுக்கு சென்னைக்கு 80 கி.மீ. அருகாமையில் உள்ள ஆந்திராவைச் சுற்றியே எடுக்கலாம்'' என்று சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. 
நானும் என் தம்பிகளான கண்ணன், லோக் சிங்கும் அந்த இடங்களிலேயே படப்பிடிப்பினை முடித்து இருக்கிறோம். 
இப்போது நான் அந்த வழியே போகும்போது லோக் சிங்கை நினைவில் நிறுத்திப் பார்க்கிறேன். 
லோக் சிங்கின் மகள் வீணா, "எனது அப்பா படப்பிடிப்பு செய்த அனைத்து இடங்களிலும் இருக்கிறார். அவரால் செதுக்கப்பட்ட ஒவ்வொரு ஃபிரேமிலும் அவர் உருவத்தைப் பார்க்கிறேன்'' என்று கூறுவாள்.
நானும் அவ்வாறே அவன் தோள்மேல் நின்று கேமரா சுழன்ற இடங்களில் எல்லாம் லோக் சிங் இருப்பதாக உணர்கிறேன். அவ்வழியே பேருந்தில் செல்லும்போதெல்லாம் அந்த இடங்களை என் கண்கள் உள்வாங்கிக் கொண்டே செல்லும். கீதா லோக் சிங்கை காரில் அழைத்து வந்துவிட்டுச் சென்ற இடம் ரெட்ஹில்ஸ். சிவப்பும், கறுப்பும் சரியாகாத நிறங்கள் என்பார்கள். அது மூடநம்பிக்கையாகவும் இருக்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை எதையும் நம்பி அதன் முன்னே மண்டியிட்டதால் (SURROUNDER) எல்லா உண்மைகளும் தெரிய வந்தது. கறுப்பும், சிவப்பும் நம் இந்தியாவின் சீதோஷ்ணநிலைக்கு ஏற்றது அல்ல. உஷ்ணத்தை அப்படியே உள்வாங்கி தேகத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கும். 
கன்னடப் பட உலகில் நடிகராகவும் இயக்குநராகவும் விளங்கிய சங்கர் நாக் கடைசியாக டைரக்ட் செய்து நடித்த படம் ACCIDENT. அதனைப் போன்றே அவர் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். அவருடைய அண்ணன் ஆனந்த் நாக் கன்னடத்தில் கதாநாயகனாக சிறந்து விளங்கினார். 
எனது தந்தை பீம்சிங் இயேசுவின் கதையை "கருணாமூர்த்தி' என்ற பெயரில் டைரக்ட் செய்தார். அதனைப் போன்றே மலையாளத்தில் தாமஸ், "ஜீஸஸ்' என்று எடுத்தார் . இருவரும் இறந்துவிட்டனர். 
இதனை நான் முன்பே கூறியிருக்கிறேன். கே.ஆர்.ராமசாமி நன்கு பாடக் கூடியவர். அவர் "செந்தாமரை' என்ற படத்தில் கடைசியாகப் பாடிய பாடல், "பாட மாட்டேன், நான் பாடமாட்டேன்'' . அதற்குப் பிறகு அவருக்குத் தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டு இறந்துவிட்டார். 
மறைந்த தேவபாரதியின் "செடியும் சிறுமியும்' என்ற சிறுகதையினை சென்னை தொலைக்காட்சி நிலையத்திற்காக குறும்படமாக்கி டைரக்ட் செய்தேன்.
எழுத்தாளர்கள் தங்களது எண்ணத்தை ஒரு வரியில் சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால் அதனைக் காட்சிப்படுத்துவது என்பது எவ்வளவு சிரமம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த குறும்படத்தில் மரண ஊர்வலத்தில் மலர்கள் எவ்வாறு வீணடிக்கப்படுகின்றன என்று காட்ட வேண்டி வந்தது. எனக்கு மலர்களை மரணத்திற்காக உபயோகிப்பது பிடிக்கவே பிடிக்காது. மரண ஊர்வலம் சென்றபின் தெருவில் இறைந்து கிடக்கும் மலர்கள் எவ்வாறெல்லாம் சிதைக்கப்படுகின்றன என்பதை வெளிப்படுத்த நானும் எனது குறும்படத்திற்காக தெருவில் பூக்களை இறைக்க நேர்ந்தது. அவ்வாறு செய்ய என் எண்ணம் சிறிதும் ஒப்பவில்லை என்றாலும் காட்சிக்காக அவ்வாறு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. 
மலர்கள் எவ்வளவு உன்னதமானவை. அதுதான் இவ்வுலகில் உயிர்களின் வித்தாக அமைந்து பூத்து சிரிக்கிறது. அதனை கடவுள்களுக்குச் சூட்டி மகிழ்கிறார்கள். பெண்கள் தங்கள் கூந்தலில் வைத்து அழகு பார்க்கின்றனர். பெரியோர்களை கெளரவிக்கும் வகையில் மலர்கள் மாலைகளாக தொகுக்கப்பட்டு சிறப்பு செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட மலர்கள் பிணத்தின் மேல் போடப்படுவதும் ஊர்வலத்தில் அதனைப் பிய்த்துக் கீழே எறிவதும், அதனை மிதித்துக் கொண்டு குத்தாட்டம் போடுவதும்...
என்னுடைய படப்பிடிப்பின்போதும் மலர்கள் கீழே வீசி எறியப்பட்டன. மேலே கூறியதைப் போன்று ஒரு வரியில் எழுத்தாளன் எழுதிய எழுத்தினை படமாக்கும் போது சில ஒவ்வாத விஷயங்களையும் செய்ய வேண்டி வருவது படம் எடுப்போர்களை பலவிதங்களில் துன்பத்தில் ஆழ்த்தும் செயலாக அமைந்துவிடுகிறது. அவ்வாறுதான் "செடியும் சிறுமியும்' என்ற அந்த குறும்படத்தில் அந்த மரண ஊர்வலத்தில் மலர்களைத் தூவும் காட்சியினை ஒரு வெள்ளிக்கிழமையில் எடுத்தேன்.
படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் எனக்கு வந்த செய்தி என்னுள் பேரிடியாக இறங்கி நான் கலங்கிய தருணங்களில் ஒன்றாக என் வாழ்வில் இணைத்துக் கொண்டது. அது... எனது அண்ணன் நரேந்திரனின் மனைவியான செளமித்ரா அண்ணி ( இவர் டைரக்டர் பஞ்சுவின் மகள்) இறந்துவிட்டதான துயர செய்தியாகும்.
லோக் சிங் கடைசியாக இறங்கிய இடம் செங்குன்றம். கடைசியாக படப்பிடிப்பு. செய்த படத்தின் பெயர்: வார்னிங் (எச்சரிக்கை) இப்போது நான் எழுதியதை முழுமையாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இவையெல்லாம் SUPERSTITION - MYTH என்று ஒதுக்க முடியுமா? ஆகவே நடந்ததை, நடப்பதை, நடக்கப் போவதை சொல்லுவதே உண்மையான இலக்கியம் என்று நான் கருதுகிறேன். 
நாம் இதுவரை லோக் சிங்கோட பயணப்பட்டதே இல்லை. அதனால் அவரை ஆந்திராவின் பட உலகம் எவ்வாறெல்லாம் கொண்டாடியது என்று நமக்குத் தெரியாமல் போய்விட்டது. 
லோக் சிங் தனது மனைவி கீதாவிடம் கூறிக் கொண்டு ஆந்திரா பஸ்ஸில் ஹைதராபாத் சென்றார். அங்கு கதாநாயகனாக ஓம் நிட் பரத்தும், கதாநாயகியாக அமாணியும் நடிக்கும் "வார்னிங்' என்ற படத்திற்கான பாடல் காட்சியினை ஹைதராபாத்தில் உல்ள ஜுபிலி ஹில்ஸ் மேல் பகுதியில் படமாக்க வேண்டி இருந்தது. 
இந்த பாடல் காட்சியுடன் அந்த படத்தின் வேலைகள் எல்லாம் முடிந்துவிடும். படம் ரிலீசுக்குத் தயாராகிவிடும். 
அந்தப் பாடல் காட்சியின் முன்புறத்தில் பரத்தும் , அமாணியும் நடனமாட பின்புறத்தில் தீ எரிவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடந்த பகுதி அந்த மலைப்பகுதியில் மிக உள் பக்கமாக, சாலையை விட்டு மிகத் தொலைவான தூரத்தில் இருந்தது. 
இந்த "வார்னிங்' படத்தினை "ஹடல வாடா பிரதர்ஸ்' - இன் அனுராதா பிலிம்ஸ் எடுத்தது. 
ஆந்திராவில் இருந்து வெளிவரும் "சித்தாரா' என்ற தெலுங்கு பத்திரிகை லோக் சிங்கை இவ்வாறு நமக்குக் காண்பித்து புகழ்கிறது. 
"லோக் சிங் கனகச்சிதமான உடையை அணிந்து கொண்டிருப்பார். அதில் அவரே ஒரு ஹீரோ போலத்தான் தோன்றுவார். அவரை யார் சந்திக்க வந்தாலும் முக மலர்ச்சியோடு வரவேற்று அவரிடம் உரையாடுவார். இந்த முகமலர்ச்சி அவருடைய குடும்பச் சொத்து என்றுதான் நம்புகிறோம். ஏனென்றால் அவருடைய தந்தை உகும் சிங்கின் தம்பிதான் தமிழ் உலகின் மிக பிரபலமான டைரக்டராக விளங்கிய பீம் சிங். அவரின் வழி தோன்றல்தான் எங்களுடைய அன்புக்கெல்லாம் பாத்திரமான எச்.லோக்சிங் ஆகும்.
மேலும் அந்தப் பத்திரிகை, "கஐஊஉ ஐந அச அஈயஉசபமதஉ - ஈஅதஉ ஐப(வாழ்க்கை ஒரு சாகசம் - எதிர்த்து நில்). இந்த பழமொழி சொல்வதை மட்டுமே சில மனிதர்களால் நிகழ்த்த முடியும். வாழ்வினைத் துணிவோடும், சாகசத்தை தைரியத்துடன் எதிர் கொள்ளும் மனிதராக லோக் சிங் திகழ்ந்தார்' என்று புகழ்ந்திருந்தது.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com