திட்டமிடு... தொட்டுவிடு! - சுகி. சிவம்

நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன், மயிலாப்பூரில் சில சில எருமைகள் படுத்திருக்கும். ரொட்டிக்காரத் தெருவில், ஓட்டு வீட்டில் குடியிருந்தோம். என் அப்பா கலைமாமணி டி.என். சுகி. சுப்ரமணியன் எழுத்தாளர்,
திட்டமிடு... தொட்டுவிடு! - சுகி. சிவம்

நீ... நான்... நிஜம்! -19
நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன், மயிலாப்பூரில் சில சில எருமைகள் படுத்திருக்கும். ரொட்டிக்காரத் தெருவில், ஓட்டு வீட்டில் குடியிருந்தோம். என் அப்பா கலைமாமணி டி.என். சுகி. சுப்ரமணியன் எழுத்தாளர், அகில இந்திய வானொலி நாடகத் தயாரிப்பாளர் என்கிற வெளிச்சங்கள் பெற்றவர். என் அப்பாவை அமரர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு கதை விஷயமாகப் பேச தமது ராமாவரம் தோட்டத்திற்கு, காலை உணவுக்கே வரும்படி அழைத்திருந்தார். ஆனால் முதல்நாள் இரவு ஏழுமணி அளவில் அம்பாஸிடர் கார் ஒன்று எங்கள் வீட்டுவாசலில் வந்து நின்றது. இறங்கிய ஓட்டுநர் ஒரு சிறிய பழக்கூடையைக் கொடுத்துவிட்டு, "ராமாவரம் தோட்டத்தில் இருந்து வந்திருக்கிறேன்'' என்றார்.
அப்பா பதற்றமாகிவிட்டார். மறுநாள் காலை எட்டா? அன்று இரவு எட்டா? தாம் தவறுதலாகக் காதில் வாங்கிவிட்டோமோ என்று பதட்டத்துடன், "நாளை காலை எட்டு மணி என்று தானே சொன்னார்கள்?'' என்றார். ஓட்டுநரோ "ஆம்... ஐயா.. காலையில் வருகிற வழி தெரியாமல் நான் தாமதமாகிவிடக் கூடாதல்லவா? வீடு தெரிய வேண்டுமே.. முன்கூட்டியே உங்களுடன் நாம் அறிமுகமாவது நல்லதல்லவா? சின்னவரைக் காக்க வைக்க முடியாதல்லவா.. அதனால் நேரில் வந்து எல்லாவற்றையும் முன்கூட்டியே உறுதி செய்து கொண்டேன். தோட்டத்தின் நடைமுறை அப்படி'' என்றார். முன்னேற்பாடு, திட்டமிடுதல் பற்றி நான் படித்துக் கொண்ட முதல் பாடம் இந்தச் சம்பவம். அதனால்தான் எம்.ஜி.ஆர் அவர்களை வாத்யார் என்றார்களோ? இருக்கலாம்.
திருப்பத்தூரில் ரகுநாயகம் என்றொரு இலக்கிய ஆர்வலர் வாழ்ந்தார். செல்வமிக்கவர். பண்பாளர். அவரது வீட்டில் எங்களுக்கு (சிலபேச்சாளர்கள்) மதிய உணவு. உணவு முடிந்து பேசிக் கொண்டிருக்கும் போதே ஒவ்வொருவர் கையிலும் ஒரு கவர் கொண்டு வந்து கொடுத்தார்கள். பேச்சு முடிந்த பின் சன்மானக் கவர் தருவார்கள். உள்ளங் "கவர்' கள்வன் என்பது எங்கள் பரிபாஷை... அதுதான் முன்னாலேயே தருகிறார்களோ என்று பார்த்தால்... இல்லை இவை பழைய தபால் கவர்கள். உள்ளே எதுவுமில்லை... காலி கவர்.. ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை. ரகுநாயகம் அவர்களுக்கு வந்திருந்த கடிதங்களின் வெற்றுக் கவர் நமக்கு எதற்கு என்று திகைத்தோம். பின்னாலேயே தட்டு நிறைய திராட்சைகள் கொத்துக் கொத்தாகக் கொண்டு வந்து வைத்தார்கள். இப்போது மாதிரி விதையில்லா திராட்சை (சுவையில்லா வாழ்க்கை) அப்போது கிடையாது. ஒரு விநாடியில் மின்னலடித்தது.. திராட்சை விதைகளைத் துப்புவதற்குத் தான் அந்தக் காலி கவர்கள். அடேயப்பா என்னமாதிரியான திட்டமிடல்... முன்னேற்பாடு...
பேச்சாளர்கள் எழுத்தாளர்கள் வரிசையில் லேனா தமிழ்வாணன் மிகமிக நேர்த்தியான மனிதர். ஒருபோதும் விழாக்களுக்கு அவர் தாமதமாக வந்ததாகத் தகவல் இல்லை. 6.00 மணி விழா என்றால் 5.55 க்குச் சரியாக ஒரு கதாநாயகன் மிடுக்குடன் உள்ளே வந்துவிடுவார். இந்தச் சென்னை போக்குவரத்து நெரிசலில் "எப்படி சாமி Punctuality ஆக இருக்கிறீர்கள்?'' என்று கேட்டபோது, "பதினைந்து நிமிடம் முன்னரேயே வந்து மண்டபம் வாசலில் காரை நிறுத்திவிட்டு காத்திருப்பேன். குறித்த நேரத்தில் உள்ளே வருவேன்'' என்றார் அந்தக் கடிகார மனிதர். கடிகாரமுள்ளுக்குக் கால் கை முளைத்த மாதிரிதான் அவரை நான் ரசிப்பேன். Time Management என்பது தான் சரியான திட்டமிடலின் சாரம். வாழ்வின் சகல விஷயங்களையும் இப்படி மிக நேர்த்தியாகத் திட்ட மிட்டவர்கள் நிச்சயம் வெற்றியாளர்கள்.
வெளியூர், வெளிநாடு பயணிக்கும் பலரும் சரியான திட்டமிடல் இன்றி பெட்டி அடுக்காமல், டிக்கட், சில்லறைப் பணம், தண்ணீர் பாட்டில் எல்லாவற்றிலும் தடுமாறி தவிதவிப்பார்கள். நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று படுத்து தூங்கிவிட்டு, காலை புறப்படும்போது போரே நடத்துவார்கள். செல்போன் சார்ஜரைத் தூக்கில் தொங்கவிட்டு விட்டு மறந்து புறப்படுவார்கள். வழியெல்லாம் பிச்சை எடுப்பார்கள். 
சுவாமி சின்மயானந்தா அவர்கள் பற்றி சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று என் நண்பர் சொன்னார். சுவாமி அவர்கள் துல்லியமாகத் திட்டமிட்டுதான் எதையுமே செய்வார்... பேச்சு கூட படு Planned.. பேச்சின் நடுவே மூக்கடைப்பைத் தவிர்க்க சிலசமயம் பொடி போடுவார். அது கூட எப்போது என்பது திட்டமிடப் பட்டிருக்கும்... ஒரு நகைச்சுவையில் மக்கள் கட்டவிழ்ந்து சிரிக்கும் கணத்தில் கச்சிதமாகப் பொடிபோட்டு முடித்து விடுவார்.
அவர் மதுரையில் தம் உரைகளை முடித்துக் கொண்டு காலை விமானத்தில் கிளம்ப வேண்டும். இரவே எழுத்து, நிர்வாகம் போன்ற சகல பணிகளும் கச்சிதமாகத் திட்டமிட்டபடி முடித்து விட்டார். காலை உடுத்திச் செல்லும் துணிமணிகள் பெட்டியின் மேலேயே வைக்கப்பட்டிருந்தன. அவர் உடுத்தும் கெüபீனம் (உள்ளாடை) கூட மேலே பளிச்சென்று பலருக்குத் தெரியும் படி வைக்கப் பட்டிருந்தது. உதவி செய்யும் அன்பர், பலர் வந்து போகும் அறையில் பார்வையில் படும்படி கெüபீனம் இருக்க வேண்டாமே என நினைத்து அதை மட்டும் எடுத்து பெட்டிக்குள் வைத்து மூடினார். கவனித்து விட்ட சின்மாயனந்தா சிரித்தபடி, "அதை மேலேயே வை'' என்றார். நண்பர் சாமர்த்தியமாக, "அது உள்ளாடை.. வெளியே தெரியக்கூடாது. உள்ளேயே இருப்பதுதானே சரி'' என்றதும் சுவாமி நகைச்சுவையை ரசித்துவிட்டு, "நான் சந்நியாஸி.. சந்யாஸியின் கெüபீனம் வெளியே தெரியலாம்'' என்று பதிலடி கொடுத்துவிட்டு மேலே எடுத்து வைத்து விட்டார். காலை புறப்படும் போது பரபரப்பின்றி படபடப்பின்றி பயணம் போக துல்லியமான இந்தத் திட்டமிடல் அவசியம் என்கிறேன்.
கழிவறையை உபயோகப்படுத்திவிட்டு... "அய்யய்யோ தண்ணீர் குழாய்ல வரலியே' என்கிற ஜனசமூகத்திடையே திட்டமிடுதலின் அவசியத்தை சொல்லித்தர வேண்டியுள்ளது. பாத்ரூமில் இருந்து சிலர் துண்டு எங்கே என்று கத்துவார்கள். இவர் என்ன அரசியல்வாதியா என்ன? போகிற இடத்தில் எல்லாம் யாராவது வந்து துண்டு போர்த்த. நாடு வளர மட்டுமல்ல.. வீடுவளர ... தனிமனிதன் முன்னேற ஐந்தாண்டு
திட்டங்கள் நாட்டுக்கு மட்டுமல்ல.. வீட்டுக்கும் அவசியம் தனிமனிதனுக்கும் அவசியம் என்கிறேன்.
வின்ஸ்டன் சர்ச்சில் தாம் பேசப்போகும் பேச்சை உதவியாளருக்கு ஈண்ஸ்ரீற்ஹற்ங் செய்யும் போதே இடை இடையே ‘டஹன்ள்ங்’ என்பாராம். எதற்கு இடைவெளி என்று உதவியாளர் கேட்டபோது.. இங்கெல்லாம் மக்கள் கைதட்டுவார்கள்.. அதற்கு நேரம் கொடுக்க வேண்டும் என்றாராம். இவருக்கு என்ன துல்லியமான கணிப்பு.. திட்டமிடல்.. பல தேசத்தலைவர்கள் உலகத்தலைவர்களாக உயர்த்தப்படவில்லை. தாமாகவே உயர்ந்தார்கள். வளர்ந்தார்கள். உருவாகினார்கள். தங்களைத் தாங்களே உளியும் வலியும் கொண்டு செதுக்கிக் கொண்டார்கள்.
ஏப்ரல் 27,1971 இல் இந்திய அமைச்சரவை பாரதப் பிரதமர் இந்திரா அம்மையார் தலைமையில் கூடியது. அப்போது பாகிஸ்தான் கிழக்கு, மேற்கு என்று இந்தியாவுக்கு இரட்டைத் தலைவலியாக நோய் கொடுத்த நேரம். பங்களாதேஷாக கிழக்குப் பாகிஸ்தான் பருவமடைந்தால் நல்லது என்று நினைத்த இந்திரா இந்தியத் தலைமைத் தளபதியாக இருந்த சாம் மானெக்ஷா அவர்களை உற்றுநோக்கி ‘‘What can the army do General’’ என்று எதிர்பார்ப்புடன் கேட்டார். ‘Nothing at Present’ என்று மிடுக்குடன் சொன்னார் மானெக்ஷா. இந்திராஜியை எதிர்த்துப் பேச சக அமைச்சர்களே பயந்த கால கட்டம் அது. ஒரு தளபதி இப்படிப் பேசுவதா என்று அரசியல் ஜால்ராக்கள் ஓசை எழுப்பின.
மானெக்ஷா அசரவில்லை. "என் படைகளைப் பற்றி தலைவனான நான் அறிவேன். அவர்கள் பலசாலிகள். ஆனால் இப்போது, மழைக்காலம் வங்கதேசத்தில் தொடங்கிவிடும். அது சதுப்புநிலம். அதனால் தரைப்படை முன்னேறத் தடையாக இருக்கும். மேலும் என் படைகளில் பெரும்பகுதியை மேற்கு பாகிஸ்தான் எல்லையோரம் பாதுகாப்பு கருதி நிறுத்தி உள்ளேன். அவை வங்கதேசம் வந்துசேர எனக்கு 2மாத அவகாசம் தேவை. எனவே தற்போது போர் வேண்டாம். குளிர்காலத் தொடக்கத்தில் வைத்துக் கொள்வோம்'' என்றார். சொன்னபடியே கிழக்குப் பாகிஸ்தான் ராணுவத் தளபதியைத் தமது 90,000 வீரர்களுடன் இந்தியாவிடம் சரணடைய வைத்தார். மானெக்ஷா கால மறிதல் இது. 
இன்று இளைஞர்கள் பலரும் எதையும் திட்டமிடுவதில்லை. அதனால் பலராலும் சிகரங்களை எட்ட முடியவில்லை. என்ன படிக்கப் போகிறோம்? ஏன்? எவ்வளவு பணம் செலவாகும்? காலக் கணக்கு என்ன? டிரஸ்ஸுக்கு, சினிமாவுக்கு, பொழுது போக்குக்கு எவ்வளவு செலவழிக்கலாம்? நேரம் ஒதுக்கலாம்? எதிலும் பலருக்குத் தெளிவில்லை. பிள்ளைகளைக் கைநீட்டி அடிக்கக் கூடாது என்கிற மேலைநாட்டுச் சட்டங்களை இங்கே மேற்கோள் காட்டுகிற நீதிமான்கள் ஒன்றை மறந்து போகிறார்கள். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பதினைந்து வயதானதும் பிள்ளைகளை அவிழ்த்து விட்டுவிடுகிறார்கள். படிக்கவோ, வளரவோ அப்பனும் அம்மாவும் சல்லிக்காசு தருவதில்லை. காடுகழனி, வீடு நகை விற்று கலியாணம் கட்டித் தருவதில்லை. அடிக்காதபடி பிள்ளை வளர்ப்பதுதான் நல்லது.. ஆனால் உருப்பட மறுப்பதை அப்படியே விடுவதா என்ன? "சவுக்கின் நிழலைப் பார்த்து ஓடும் குதிரைகள் குறைவு' என்பதை மேலைநாட்டு மேற்கோள் மூளைகள் கொஞ்சம் உணர வேண்டும்.
தன்னுடைய நாட்டைப் பிரியக்கூடாது என்ற பாசத்தால் அவன் படிக்கும் சப்ஜெக்ட்டை. அவன் படிக்கும் கல்லூரியில் அவன் படிக்கும் வகுப்பில் தான் படிப்பேன் என்று அடம்பிடிக்கும் அசடுகளை, திட்டமிடுதலில் தெளிவில்லாத பிள்ளைகளை அப்படியே விட்டுவிட முடியுமா என்ன? கண்டிக்க வேண்டியது நம் கடமை.
ஏவுகணைகள் குறித்த இடத்தை மட்டும் எப்படித் தாக்குகின்றன? விண்கலன்கள் குறித்த பாதையில் எப்படிப் பயணிக்கின்றன? செவ்வாய் நிலப்பரப்பில் மங்கள்யான் கால் ஊன்ற எத்தனை மூளைகள் திட்டமிட்டிருக்க வேண்டும்? புறப்பட்ட நாளிலிருந்து சுமார் ஒரு வருடகாலம் இயங்கி 225 மில்லியன் கிலோ மீட்டர் பயணித்து, மணிக்கு 600 முதல் 700 கி.மீட்டர் வேகத்தில் பறந்து அது செவ்வாயின் கன்னங்களை வருடவேண்டி உள்ளது என்றால் எப்பேர்ப்பட்ட திட்டமிடல் தேவைப்படுகிறது விண்வெளி வீரர்களின் பாராட்டு விழா ஒன்றில் அவ்வை நடராஜன் அவர்கள் ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டினார். விண்வெளிப் பயணத்தை விவரிக்கும் குறள் என்றே சொல்லலாம். 
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் 
வானம் நணிய துடைத்து
-என்பது அந்தக்குறள்.
குறளை மோட்ச யோகத்தின் வழிகாட்டி என்கிறது பழைய உரை அது மெய் ஞானம். இலக்கு வானத்தில் இருந்தாலும் சரியான திட்டமிடலால் அடையாளம் என்பது புதிய உரை இது விஞ்ஞானம். இது பற்றி இன்னும் கொஞ்சம் பேச வேண்டி உள்ளது.
(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com