பயிற்சியாளராக பயிற்சி!

ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் பயிற்சியாளர் (Coach) என்பவர் மிக முக்கியமான நபராக உள்ளார். விளையாட்டு வீரர்கள் தங்கள் திறனை அடையஉதவும் கருவிகளாக பயிற்சியாளர்கள் உள்ளனர். 
பயிற்சியாளராக பயிற்சி!

ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் பயிற்சியாளர் (Coach) என்பவர் மிக முக்கியமான நபராக உள்ளார். விளையாட்டு வீரர்கள் தங்கள் திறனை அடைய
உதவும் கருவிகளாக பயிற்சியாளர்கள் உள்ளனர். 
விளையாட்டு பயிற்சியாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் ஃபிரான்ஸ் அருகேயுள்ள Monaco நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் தடகள கூட்டமைப்பு சர்வதேச சங்கம் (International Association of Athletic Federation - IAAF), இந்திய தடகள கூட்டமைப்புடன் (AFI) இணைந்து Coaches Education and Certification System (CECS) Level - I கோர்ஸை இந்தியாவில் நடத்தி வருகிறது. 
புதியவர்களுக்கு மட்டுமல்ல, முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கும் சாத்தியமான ஒரு வேலையை கண்டடைவதற்கான வாய்ப்பாக CECS கோர்ஸ்
கருதப்படுகிறது. அவர்கள் இந்த பயிற்சி திட்டத்தில் சேருவதில் முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது. 
12 நாட்கள் கொண்ட இந்த கோர்ஸ் சென்னையில் கடந்த மே 2 முதல் 13-ம் தேதி முடிய நடைபெற்றது. இதில், சர்வதேச தடகள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களான கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சஹானா குமாரி, திருச்சியைச் சேர்ந்த நல்லுசாமி அண்ணாவி உள்ளிட்ட 24 பேர் பேர் பங்கேற்றனர். 
இந்த கோர்ஸ் குறித்து அண்ணாவி கூறுகையில், "இந்தியாவில் கோச்-ஆக பணியாற்ற விரும்புவோர் தேசிய விளையாட்டு நிறுவனத்தில் (NIS), Diploma in Sports Coaching,  M.Sc. in Sports Coaching முடித்திருக்க வேண்டும். அவ்வாறு முடித்திருந்தாலும், அவர்கள் வெளிநாடுகளில் சென்று கோச்-ஆக பணியாற்ற முடியாது. இதற்கு தனியாக வெளிநாடுகளில் சென்று பயிற்சி பெறவேண்டும். இது அனைவருக்கும் சாத்தியமானது அல்ல.
ஆனால், IAAF, AFI இணைந்து இந்தியாவில் நடத்தும் CECS கோர்ஸில் பங்கேற்று சான்றிதழ் பெற்றவர்கள் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் கோச்-ஆக பணியாற்றலாம். 
என்றாலும், 3 லெவல் உள்ள இந்த கோர்ஸில், தற்போது லெவல் 1 மட்டுமே இந்தியாவில் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்றவர்கள் 16 வயதுக்கு கீழ் உள்ள
மாணவர்களுக்கு சர்வதேச அளவில் கோச் ஆக இருக்க முடியும்.
IAAF-இல் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான Kids Athletics Activator பயிற்சி, 16 வயதுக்கு கீழ் லெவல் 1 கோர்ஸ், 20 வயதுக்கு கீழ் லெவல் 2 கோர்ஸ், Senior Coach களுக்கான லெவல் 3 கோர்ஸ், 3 முதல் 12 மாதங்கள் கொண்ட Academy Coach-க்கான கோர்ஸ்கள் நடத்தப்படுகின்றன. இதில், லெவல் 1-க்கு அடுத்தபடியாக லெவல் 2 கோர்ஸை இந்தியாவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

விளையாட்டில் திறமையான மாணவர்களைக் கண்டறியும் உடற்பயிற்சி ஆசிரியர்கள், அவர்களுக்கு தாங்களே பயிற்சி அளிக்க முற்படாமல், உரிய பயிற்சியாளர்கள் (Coach) மூலம் அவர்களைத் தயார்செய்து போட்டிகளில் பங்கேற்கச் செய்ய வேண்டும். இதன்மூலம், மாணவர்களின் திறன் கூர்தீட்டப்பட்டு அவர்கள் சர்வதேச போட்டிகள் வரை எளிதில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்'' என்றார்.
தடகள வீரர் சஹானா குமாரி கூறுகையில், "தடகள கூட்டமைப்பு சர்வதேச சங்கத்தின் CECS கோர்ஸ், பயிற்சியின் தரத்தை அதிகப்படுத்த உதவும். இந்திய தடகள கூட்டமைப்பின் இந்த முன்னெடுப்பு முயற்சி, இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் Coach மூலமாக பயிற்சி பெறுவதற்கு ஊக்கமூட்டும்'' என்றார். 
இந்தியாவில் தடகள பயிற்சியாளர்களின் விகிதம் 100:1 என்ற அளவிலேயே உள்ளது. எனவே, ஒரு பயிற்சியாளரால் 100 தரமான தடகள வீரர்களை உருவாக்குவது சாத்தியம் இல்லை. இந்த நிலையில், இதன் சாத்தியகூறுகளை அதிகப்படுத்த CECS லெவல் 2 கோர்ஸையும் இந்தியாவில் நடத்த இந்திய தடகள கூட்டமைப்பு திட்டமிட்டு வருகிறது. 
திறமையை அடையாளம் காணுதல், செயல்திறன் வளர்ச்சி, செயல்திறன் மேலாண்மை ஆகியவை CECS கோர்ஸின் முக்கிய பகுதிகள். வழிகாட்டுநர் மற்றும் பயிற்றுநராக விரும்பும் தடகள வீரர்கள், தங்களை மேம்படுத்திக்கொள்ள விரும்பும் முன்னாள், இந்நாள் தடகள வீரர்கள், தங்கள் பயிற்றுநர் பணிக்கு இடையூறு இல்லாமல், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க விரும்பும் தற்போதைய தடகள வீரர்களுக்கு இந்த கோர்ஸ் மிகுந்த பயனுள்ளதாகும். 
வரும் செப்டம்பர் 16 முதல் 27-ஆம் தேதி முடிய சென்னை மற்றும் குவாஹாட்டியிலும், அக்டோபர் 6 முதல் 17 வரை ராஞ்சி மற்றும் பாட்டியாலாவிலும், அக்டோபர் 21 முதல் நவம்பர் 1 வரை குவாலியரிலும் இந்த கோர்ஸ் நடைபெறவுள்ளது.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, தடகள போட்டிகளில் ஆர்வமிக்க, 22 முதல் 50 வயதுவரை உள்ளவர்கள் இந்த கோர்ஸில் சேரலாம். ஆங்கில மொழித்திறன் இருக்க வேண்டும். மாநிலம், பல்கலைக்கழகம், பள்ளிகள் சார்பில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். அல்லது ஏதேனும் பள்ளிகளில் தகுதிபெற்ற உடற்கல்வி ஆசிரியராக இருக்க வேண்டும்.
ஓரிடத்தில் நடைபெறும் கோர்ஸில் 24 உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். மே 27-ஆம் தேதிக்குள் பதிவு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களை indianathletics.in, https://www.iaaf.org ஆகிய இணையதளங்களில் காணலாம்.
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com